திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 005. இல்வாழ்க்கை

 

001 அறத்துப் பால்

01 இல்லற இயல்

      அதிகாரம்  005. இல்வாழ்க்கை

   குடும்ப வாழ்க்கையின் கடமைகளும்,
       அரும்பெரும் பொறுப்புக்களும், சிறப்புக்களும்.

  1. இல்வாழ்வான் என்பான், இயல்(பு)உடைய மூவர்க்கும்,
     நல்ஆற்றின் நின்ற துணை.

       பெற்றார், மனைவி, மக்களுக்கு,
       இல்வாழ்வான் நவவழித் துணைவன்.

  1. துறந்தார்க்கும், துவ்வா தவர்க்கும், இறந்தார்க்கும்,
     இல்வாழ்வான் என்பான் துணை.

       துறவியார், வறியார், ஆதரவிலார்க்கு,
       இல்வாழ்வான் நல்ல துணைவன்.

  1. தென்புலத்தார், தெய்வம், விருந்(து),ஒக்கல், தான்,என்(று)ஆங்(கு),
   ஐம்புலத்(து)ஆ(று) ஓம்பல் தலை.

       முன்னோர், தெய்வம், விருந்து, உறவோடு
       தன்னையும் இல்வாழ்வான் காக்க

  1. பழிஅஞ்சிப், பாத்(து)ஊண் உடைத்(து)ஆயின், வாழ்க்கை,
     வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

       பங்கிட்டு உண்பானது இல்வாழ்வில்
       எப்போதும் வருதுயர் இல்லை.

  1. அன்பும், அறனும் உடைத்(து)ஆயின், இல்வாழ்க்கை,
   பண்பும், பயனும் அது.

       அன்பும், அறனுமே, இல்வாழ்வின்,
       பண்பும், பயனும் ஆகும்.  



  1. அறத்(து)ஆற்றின், இல்வாழ்க்கை ஆற்றின், புறத்(து)ஆற்றின்,
    போஒய்ப் பெறுவ(து) எவன்?
       அறவழி இல்வாழ்வில் பெறுவதினும்
       பிறவற்றில் பெறுவது என்?

  1. இயல்பினான், இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்,
     முயல்வாருள் எல்லாம் தலை.

       இயல்பாய் இல்வாழ்வான், பிறவற்றை
       முயல்வார் எல்லாருள்ளும் தலைமையன்.

  1. ஆற்றின் ஒழுக்கி, அறன்இழுக்கா இல்வாழ்க்கை,
   நோற்பாரின், நோன்மை உடைத்து.
       அறவழி தவறா இல்வாழ்க்கை,
       தவத்தினும் வலிமை உடையது.

  1. ”அறன்எனப் பட்டதே” இல்வாழ்க்கை; அஃதும்,
   பிறன்பழிப்ப(து) இல்ஆயின் நன்று

       பிறர்தம் பழிப்புக்கு உள்ஆகா
       இல்வாழ்வே, அறம்நிறை நல்வாழ்வு.

  1. வையத்துள், வாழ்வாங்கு வாழ்பவன், வான்உறையும்
     தெய்வத்துள், வைக்கப் படும்.

       பூஉலகில் அறமுறைப்படி இல்வாழ்வான்,        
         வான்உலகில் தெய்வம் ஆவான்.
– பேராசிரியர் வெ. அரங்கராசன்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue