வெ.அரங்கராசனின் குறள்பொருள் நகைச்சுவை – குமரிச்செழியனின் நயவுரை
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவர் ஆண்டு சித்திரைத் திங்கள் 5 [18–-04—2015] அன்று திருக்குறள் எழுச்சி மாநாடு நடைபெற்றது.
அங்குத் தமிழ்மாமணி பேராசிரியர்
முனைவர் பா. வளன் அரசு அவர்களின் தலைமையில் திருக்குறள் தூயர் மிகச்சிறந்த
திருக்குறள் நுண்ணாய்வாளர் பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு
நல்வாழ்த்துகளுடன் பேராசிரியர் வெ. அரங்கராசன் எழுதிய குறள் பொருள் நகைச்சுவை என்னும் நூல் வெளியிடப்பட்டது.
நூலை வெளியிட்டவர் சென்னை மாநிலக்
கல்லூரியில் பணியாற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் முகிலை இராசபாண்டியன்.
முதல் படியைப் பெற்றுக்கொண்டவர் திருக்குறள் தூதர் சு. நடராசன்.
அந்நூலில் இடம் பெற்றுள்ள நயவுரை வருமாறு:
கலைமாமணி முனைவர் குமரிச்செழியன்
தலைவர், பாரதி கலைக்கழகம், சென்னை.
உலக இலக்கியங்களுள் ஒப்பற்ற அற
இலக்கியமாகத் திகழ்வது திருக்குறள். திருக்குறளுக்குக் காலந்தோறும்
புதுப்புது விளக்கங்களும், உரைகளும், ஆய்வுகளும் தோன்றிக்கொண்டே
இருக்கின்றன. பொருள் அடிப்படையில், சொல் அடிப்படையில், அறிவியல்
அடிப்படையில், ஆன்மிக அடிப்படையில், பகுத்தறிவு அடிப்படையில் சிந்தனைகள்
விரிந்து கொண்டே செல்வதைப் போலத், திருக்குறளின் கருத்துரைகளும் விரிந்து
கொண்டே செல்கின்றன.
எல்லயற்ற பரம்பொருள்
தொட்டனைத்து ஊறும்
மணற்கேணி போல, நவில்தொறும் நூல் நயமும் விரிந்து கொண்டே செல்கின்றது.
அதில் மூழ்க முயற்சி செய்து கிளிஞ்சல் பொறுக்கி ஒதுங்கியவர்களும் உண்டு.
மூழ்கி முத்தெடுத்து மீண்டர்வகளும் உண்டு. எனினும் மூழ்கும்தோறும் புதிது
புதிதாக முத்துகள் தோன்றிக்கொண்டே இருக்கும். அதுபோலத்தான் திருக்குறளும்
இருப்பதால், அதனை எந்த எல்லைக்குள்ளும் நிறுத்தி முடிவு கட்டிவிட முடியாது.
அது ஒரு பரம்பொருள்.
பாரதிவழி
சுவைபுதிது; பொருள்புதிது; வளம்புதிது;
சொற்புதிது; சோதிமிக்க
நவகவிதை; எந்நாளும் அழியாத
மாக்கவிதை……
என்பது பாரதியின் பதிவு. அது
மட்டுமா…? பாஞ்சாலி சபதம் முன்னுரையில் மேலும் சொல்வார், “எளிய பதங்கள்,
எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொதுசனங்கள் விரும்பும்
மெட்டு இவற்றினுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது
தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகிறான். ஓரிரண்டு வருடத்து
நூற்பழக்கம் உள்ள தமிழ் மக்கள் எல்லாருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி
எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்.”
என்பதற்கேற்பக் குறள் பொருள் நகைச்சுவை என்னும் இந்த நூலைப் பேராசிரியர் வெ. அரங்கராசன் அமைத்துள்ளார்.
சான்றுக்கு ஒரு குறள் என
எடுத்துக்கொண்டாலும், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலக்
குறள் விளக்கம் கோபுர தீபம் போல ஒளி வீசுகிறது. ஒரு குறளுக்கு இத்தனை
விளக்கங்களா…! இதுதான் அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகட்டிய திறம் போலும்
மேற்கொள்ளும் உத்திகள்
எடுத்துக்கொண்ட குறட்பாக்களைக்
கிடந்தவாறே பொருள் கொள்ளும் முறை, விரிவான பொருள் காணும் முறை,
சொல்லுக்குச் சொல் பொருள் காணும் முறை, தொடருக்குப் பொருள் காணும் முறை,
குறளுக்குப் பொருள் காணும் முறை, உருபுக்கும் பொருள் உண்டு என உணர்த்தும்
முறை, உரையாசிரியர்கள் அசை என விடும் இடைச்சொல்லுக்கும் பொருள் உணர்த்தும்
முறை, இலக்கண முறைகளைப் பொருத்திப் பார்க்கும் முறை, இலக்கணக்
குறிப்புகளுடன் புதுப்பொருள் காணும் முறை, உள்ளே நுழைந்து ஊடுபொருள் காணும்
முறை, மேற்கோள்களைச் சான்று காட்டி நிறுவும் முறை, அறிஞர் பெருமக்களுடைய
கருத்துகளுடன் பொருத்திக் காணும் முறை, பொருந்தா இடங்களில் புதுப் பொருள்
காணும் முறை, முரண்பாட்டு முறையில் அணுகும் முறை, ஒப்பவும் உறழவும்
நற்பொருள் காணும் முறை, நலமான நகைச்சுவைகளைச் சுட்டிப் பொருத்தும் முறை,
சிந்திக்க வைக்கும் சிறுகதைத் துணுக்குகளை இணைத்துக் காணும் முறை, அறிஞர்
உரைகளைத் துணைக்கொள்ளும் முறை, அருளார் கருத்துகளை எடுத்துக்காட்டித்
தெளிவுபடுத்தும் முறை, உணர்த்தும் பொருள் காட்டும் முறை, குறிப்புப் பொருள்
கண்டு சொல்லும் முறை, தற்காலக் கவிதைகளையும் சான்று காட்டும் முறை,
தேவையான இடங்களில் குறட்பாக்களும் பாடல்களும் எழுதிக்காட்டும் முறை, வலைத்
தளங்களிலிருந்தும் (WEB SITE), முகநூல்களிலிருந்தும் (FACEBOOK) ஒப்புமை காட்டும் முறை, எனக் குறள் பொருள் கண்டுரைக்கும் முறை. இத்தனை
முறைகளோடு பொங்கித் ததும்பும் புதுவரவாய்த், திருக்குறள் பேராசிரியர் வெ.
அரங்கராசன், இந்தக் ‘குறள் பொருள் நகைச்சுவை’ என்னும் நூலை அமைத்துப்
பெருவிருந்து அளிக்கின்றார்.
புதுப்பொருள் காணும் முயற்சி
‘கனவினும் இன்னாது மன்னோ’ (குறள் 819) என்னும்
தொடரில் கனவினும் என்பதற்கு அனைத்து உரையாசிரியர்களும் ஒப்புப் பொருளில்
கனவிலும் நனவிலும் எனப் பொருள் கண்டிருக்க, இந்நூலாசிரியர் அதனை உறழ்வுப்
பொருளாகக் கொண்டு கனவைவிடவும் எனத் தனித்து மிகுதுன்பம் எனக் காணும்
முயற்சி புதுப்பொருள் காணும் நுண்மாண் நுழைபுலத்தின் வெளிப்பாடு. அதனை
அணிசெய்யும் சான்றுகளைக் கம்பராமாயணம் உட்பட பல நூல்களைக் காட்டி நிறுவுவது
அருமை. இது போலக் குறள் 1119—இன் புதிய உரையையும் காணலாம்.
ஒழுக்கம் உயிர் வேறுபாடு
ஒழுக்கமானது
மேன்மை, சிறப்பு, பெருமை, புகழ், சமுதாய மதிப்பு அனைத்தையும் தரவல்லது.
ஆனால், உயிரானது அரியது; இனியது; இறுகப் பிடித்துப் பாதுகாக்கத் தக்கது;
பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. எனினும், நீங்கின் மீண்டும் வராது என
“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” (குறள் 131) என்று
வேறுபடுத்திக் காட்டுவது அருமை. போனால் திரும்பி வராத உயிரைவிடவும்
ஒழுக்கம் காக்கப்பட வேண்டிய அருமையை உணர்த்தும் முறை தனித்துவம் உடையது.
ஒழுக்கத்தை மன ஒழுக்கம், புற ஒழுக்கம், உடல் ஒழுக்கம் எனப் பிரித்துக்
காட்டி, ஒழுக்கம் இல்லாதவன் உயிர் இல்லாதவன் என ஒப்புமை காட்டி, ஒழுக்கக்
கேடுகள் குறித்துக் காவல் துறையினரின் அறிவிப்புகள், தொலைக்காட்சித்
தொடர்களில் வெளிப்படும் போக்குகள் இவற்றைப் பட்டியலிட்டு விழிப்புணர்ச்சி
ஊட்டும் முறை மனித நேயத்தின் அக்கறையாகும்.
ஆளுமை வெளிப்பாடுகள்
மனிதர்களுடைய
ஒவ்வொரு பண்பிலும், ஒவ்வொரு கணத்திலும், ஒவ்வொரு நிலையிலும் ஆளுமைத்
தன்மைகள் பல்வேறு வகைகளில் வெளிப்படும். அவை வெளிப்படும் குறட்பாக்களை
நூலாசியர் எடுத்துக் காட்டுவதைக் கண்டுணரலாம்.
விருந்தோம்பலில் வெளிப்படும் வேள் ஆண்மை (81), ஒப்புரவு மேலாண்மை (211), சொல்நய மேலாண்மை (489), கால மேலாண்மை (480) உளவியல் மேலாண்மை (819) என ஒவ்வொரு நிலையிலும் மேலாண்மை என்னும் ஆளுமை வெளிப்படுவதை உணர்த்திச் செல்கிறார்.
மறுபக்கக் குறட்பா
குறட் பாவை முரண்படக் காட்டிப் பொருளை விளக்கும் உத்தி இடம் பெற்றுள்ளது. ‘மலரன்ன கண்ணாள் முகம் ஒத்தி ஆயின்’ (1119) என்னும் குறட்
பாவில் ‘முகம் ஒத்தி’ என்பதை ‘முகம் ஒவ்வா’ என மாற்றிக் காதலியின்
முகத்திற்கு ஒவ்வாததால் பலர் காணுமாறு நிலவே..! நீ தோன்றாதே எனக் கட்டளை
இடுவதைப் போல அமைத்துக் காட்டுதல் குறளுக்கு மகுடமாகும். இக் குறளில்
சொல்லப்படும் மலர், குவளை என நிறுவுகிறார். நிலவுக்கும் காதலிக்கும் உள்ள
ஒற்றுமைகளைவிட, வேற்றுமைகளே அதிகம் எனப் பட்டியலிட்டுக் காட்டுவது
மதிநுட்பம் வாய்ந்தது.
குறளுக்குக் குறள் மறுபக்கக் குறள்,
இலக்கியச் சான்றுகள், திரைப்பாடல் சான்றுகள், உடன்பாட்டு மற்றும்
எதிர்மறைத் துணுக்குகள், நகைச்சுவைக் கோலங்கள், நேற்றைய காதல், இன்றைய
காதல், நாளைய காதல் என அடையாளம் காட்டும் உத்தியில், குறள் கருத்தை மேலும்
மேலும் தெளிவுபடுத்தும் பாங்கு மேலோங்கி நிற்கிறது. இப்படியே குறட்பாக்கள் 523, 655, 712, 831 போன்றவற்றையும் ஒப்பு நோக்கிக் காணலாம்.
நகைச்சுவை
நகைச்சுவை உணர்வு
இல்லாதவன் மனிதனாக இருக்க முடியாது. அன்றாடத் துன்ப, துயரங்களுக்கிடையே
நகைச்சுவை உணர்வுதான், மன்னிக்கவும், மறக்கவும், மதிக்கவும், துதிக்கவும்
உதவுகிறது. மெய்ப்பாடு பற்றி உரைக்கும் தொல்காப்பிய நூற்பாவில் நகை, உவகை
என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. நகை என்பது வாய்விட்டுச் சிரித்தலையும்,
உவகை என்பது அக மகிழ்ச்சியையும் உரைப்பதாகக் கொள்வர்.
நகை என்பது இகழ்தல், இளமை, அறியாமை, அறிந்தும் அறியாதது போல் இருக்கும் மடன் ஆகிய 4 நான்கு
நிலைகளில் தோன்றும் என்பார் தொல்காப்பியர். அதுபோல உவகை என்பது
செல்வத்தால் ஏற்படும் நுகர்ச்சி, புலமையால் ஏற்படும் அறிவு முதிர்ச்சி,
உள்ள இணைப்பு, உள்ளம் ஒத்தாரோடு கூடி ஆடும் விளையாட்டு என 4 நிலைகளில் ஏற்படும் என்பார் அவர்.
‘மதிநுட்பம் நூலோடு’ (636) என்னும்
குறட்பா விளக்கத்தில் எடுத்துக்காட்டப்படும் நகைச்சுவைகள் அனைத்தும்
உவகையின் அடிப்படையில் அமைந்த புலமையால் ஏற்படும் அறிவு முதிர்ச்சியின்
பாற்பட்டதாகக் கருதலாம்.
காதலர்களிடையே எடுத்துக்காட்டப்படும்
நகைச்சுவைகள் இகழ்தல், அறியாமை ஆகியவற்றால் அமைந்த நகை பற்றியவையாகக்
கருதலாம். ஒழுக்க நெறிகள் பற்றியவை இகழ்தல் குறிப்புடையனவாகவும் உள்ளன.
மூன்று அறசியல்வாதிகளின் சந்திப்பில்
முதல் அரசியல்வாதி மற்றும் இரண்டாம் அரசியல்வாதி கனவில் கடவுள் தோன்றி
“முதலமைச்சர் ஆவாய்.” என்று கூறியதாகவும், மூன்றாமவரோ, “நான் யாருடைய
கனவிலேயும் வரவில்லையே,,!” என்று கூறுவது அரசியல் அங்கதம்.
நயவுரைகள்
குறளுக்குப் பலர்
பொருளுரை கண்டிருக்கிறார்கள். பலர் குறிப்புரை கண்டிருக்கிறார்கள். பலர்
தெளிவுரை கண்டிருக்கிறார்கள். இலக்கிய உரை, இலக்கண உரை, மரபுரை, புத்துரை,
எனப் பல நிலைகளிலும் உரைகள் தோன்றியுள்ளன. இந்நூலாசிரியரோ நயவுரை எனத் தாம்
சுவைத்து மகிழ்ந்த மகிழ்வுரையைத் தந்திருப்பது தனித்துவம் உடையது.
‘எய்தற் கரியது……செய்தற் கரியது’ (489) என்னும்
குறளில் அரியது என்பது அஃறிணை ஒருமை என்றும், அரிய என்பது அஃறிணைப் பன்மை
என்றும் கொண்டு அரியது என்பது காலம், ஒருமை எனவும், அரிய என்பது செயல்கள்,
அவை பன்மை எனவும் விளக்கி ஒரு நேரத்தில் பல செயல்கள் எனக் காட்டுவார்
ஆசிரியர்.
குறட்பா 636—இல்
மதிநுட்பம் இயற்கையானது. அது மரபுவழி வருவது. அத்துடன் நூலறிவும் சேர்வது
மிகுநலமுடையது. அத்தகு அறிவு நலம் உடையார்முன் சூழ்ச்சிகளுக்குக்
காரணமாகும் அதிநுட்பமும் செல்லுபடியாகாது என்பது சிந்திக்கவைக்கும் சிறப்பு
நயம்.
முடிந்தவரை செய்வது அன்று முயற்சி,
முடிக்கும்வரை செய்வதுதான் முயற்சி. அப்படி ஒரு சாதனை படைக்க முயற்சி
செய்யும்போது கமுக்கமாகச் செய்ய வேண்டும். ஆர்வத்தின் காரணமாக வேண்டியவர்
என்று வெளிப்படுத்திவிட்டால், அச்செயல் கெட்டுப் போகும் என உட்பொருள்
காட்டும் நயம் (குறள் 663) சிறப்பு.
சொற்பொழிவாளர்களுக்கு உரிய இலக்கணமாகச்
சொல்லின் நடையினை நன்கு தெரிதல், நன்மையராய் இருத்தல், இடைவெளிகளை நன்கு
உணர்தல், நன்கு சொல்லுதல் எனக் குறள் 712—இல் உள்ளவற்றை நயமாக எடுத்துக்காட்டுவார்.
‘கனவினும் இன்னாது மன்னோ’ என்பதில்
எது, எப்படி, எங்கு, ஏன் என்னும் விளக்கங்களை வரிசையாக எழுப்புமாறு அமைந்து
ஆர்வத்தைத் தூண்டக் காணலாம்.
நுண்மாண் நுழைபுலம்
ஒவ்வொரு குறளின்
ஒவ்வொரு சொல்லையும் ஏன் எழுத்தையும் ஆய்வு செய்கிறார் நூலாசிரியர். குறளைத்
தொட்டுப் பார்க்கிறார்; உற்றுப் பார்க்கிறார்; உணர்ந்து பார்க்கிறார்;
ஒப்பிட்டுப் பார்க்கிறார்; உள்ளே கிடக்கும் புதையலைத் தோண்டி எடுக்கிறார்.
எடுத்த புதையலைப் பிறர் மனம் கொள்ளுமாறு உணர்த்தப் பார்க்கிறார்.
பொருள் கோள் நிலையில்
சொற்களை முன்பின்னாக இணைத்துப் பொருள் காட்டுகிறார்; விரிபொருள்
நாட்டுகிறார். தேவையெனின், அகநிலைப் பொருளுடன், புறநிலைப் பொருளும்
காண்கிறார். உவமப் பொருள் விளக்கத்துடன் உவமேயப் பொருளையும் விளக்கிப்
பொருத்தம் காண்கிறார். இலக்கணக் குறிப்பு உணர்த்துகிறார். ஒவ்வொரு
சொல்லுக்கும் எழுத்துக்கும் அசைக்கும்கூடக் குறிப்புச் சுட்டுகிறார்.
(சான்றாக 489—இல் ‘க்’ மிகுந்த ஒற்று எனக் காட்டுதல்)
விளக்கப் பொருள் காண்கிறார்; நயம்
உணர்த்துகிறார்; தொடர் விளக்கம் தருகிறார்; குறிப்பெச்சப் பொருள்
சொல்கிறார்; ஒப்புநோக்குச் சான்று காட்டுகிறார்; வாழ்வியல் நெறியும்,
வாழ்வியல் சான்றும் காட்டுகிறார்; காரண காரிய விளக்கம் தர முயல்கிறார்;
காலமும் காட்டுகிறார்; சான்றோர் கருத்துகளை அணியாக்குகிறார்; அறிஞர்கள்
வாழ்க்கை நிகழ்வுகளைச் சான்றுகளாக்கிக் குறளின் வாழ்வியல் தன்மையை
விளக்குகிறார்; பயன்பாடுகளைக் காட்டுகிறார்; தொடர்புடையனவாக நகைச்சுவைகளைப்
படைத்துக் காட்டுகிறார்;
தற்காலக் கவிஞர்களின் சான்றுகளையும்,
திரைப்பாடல் ஒப்புமைகளையும் தருகிறார். சொல்லிலோ எழுத்திலோ மறைந்து
கிடக்கும் கருத்தியலை மறுபக்கக் குறட்பாக்களாக வரைகிறார். அப்பப்பா…!
எத்தனை எத்தனை வகைகளாக வைரத்தைப் பட்டை தீட்டி ஒளிரச் செய்கிறார். அவர்
திறத்தை வியக்க முடிகிறதேயன்றி, விளக்க முடியவில்லை.
கல்லுக்குள் கடவுள்
மகாபாரதத்தில் கண்ணன்
வாயைத் திறந்தால், அவன் வாய்க்குள் உலகமே சுழன்றதாம். அணுப் போலும்
விதைக்குள் படைகள் தங்கும் அளவு நிழல் பரப்பும் ஆல மரம் வெளிப்படுகிறது.
அதுபோல் ஒவ்வொரு குறளும் உலக வாழ்க்கையின் உரைகல்லாக இருப்பதை உணர்த்தும்
முயற்சியின் வெளிப்பாடே, இந்தக் குறள் பொருள் நகைச்சுவை என்னும்
நூல் எனலாம். ஒவ்வொரு குறளும் பற்பல சுவைக் குறிப்புகளையும் திறமைகளையும்
கொண்டுள்ள சாரம் என்பதைச் சாதாரணமாகச் சொல்லிவிடும் அசாதாரணம் தெரிகிறது. ஒவ்வொரு குறளும் ஒரு வாழ்க்கைத் தகவல் களஞ்சியமாக உள்ளது.
கல் எல்லாருடைய கண்களுக்குத்
தெரிந்தாலும் சிலருக்குத்தான் அது ஒரு சிற்பக் கல், கடவுளாக வணங்கப்படும்
கல் எனத் தெரியும். அவரையே சிற்பி என்போம். அதுபோல எல்லாரும்தாம் குறளைப்
படிக்கிறார்கள். அதனை ஒளிரச் செய்யும் திறமை மிகச் சிலருக்கே உரியதாம்.
அந்த வகையில் திகழ்பவர் பேராசிரியர் வெ. அரங்கராசன் என்பவர், இந்நுலாசிரியர்.
அவருடைய வாழ்வியல் அனுபவமும், பன்னூல்
புலமையும், கவித்துவ மாண்பும், பாமரனையும், பற்றச் செய்யும் உத்தி
முறைகளும் அவருக்கே வாய்த்த அரிய பேறு. ‘சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்’
என்பது போல, ஆசிரியர் தலைப்பட்டுள்ளார். எல்லாக் குறள்களுக்கும் இதுபோல்
ஏற்றம் தர வேண்டும் எனக் கேட்டு, இன்னும் பல இவரால் கிடைக்கும் என்ற
நம்பிக்கையில் வாழ்த்துவாம்.
– முனைவர் குமரிச்செழியன்
4/5, முதல் குறுக்குத் தெரு
சானகிராமன் குடியிருப்பு
வில்லிவாக்கம்
சென்னை — 600 049
Comments
Post a Comment