இறந்தது நெல்லை இற்றதோ மனமே! – த.கு.கருணாநிதி
இறந்தது நெல்லை இற்றதோ மனமே!
இறந்தது நெல்லை
இற்றதோ மனமே
துறந்தது உடலை
தூயரோ கண்ணன்;
சற்றைப் போதில்
சடுதியில் பறித்தாய்!
சரிந்தது தமிழே!
சாய்ந்தது சரிதம்!
பாவியாம் காலன்
பறித்தான் உயிரை!
மேவிய புகழுடை
மேதினிப் புலவ!
நெல்லை கண்ணா
நெருநல் இருந்தாய்!
புல்லென எண்ணி
நெல்லைப் பறித்தான்.
அற்புதப் பேச்சினில்
அறிவாம் சுடரைக்
கற்பொதும் பிலும்தீச்
சுடர்ஏற் றிடுவாய்!
ஒப்பா ரில்லை
மிக்கா ரில்லை.
தப்பே இன்றித்
தமிழை வளர்த்தாய்!
போயினை அந்தோ
போயினை துடுப்பே
போயிடின் படகென்
செய்யும்?பரிதவிக்கும்
காரிருள் தன்னில்
கைவிளக் கணைத்த
காரிருள் காலனே!
கோபம் கொண்டேன்!
வடிந்திடும் கண்ணீர்
வருந்தி அழுகிறோம்!
தடியன் காலன்
தவிக்கவே செய்தான்!
தமிழே சாய்ந்திட
தவிக்கிறோம் நாளும்
அமிழ்தக் கண்ணா
அந்தோ அந்தோ!
த.கு.கருணாநிதி.
Comments
Post a Comment