இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 4 : 2 மொழிகளும் மொழிக்குடும்பங்களும்
21 August 2022 No Comment
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 3 தொடர்ச்சி)
2. மொழிகளும் மொழிக்குடும்பங்களும்
உலகில் ஈராயித்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு (2796) வேறுபட்ட மொழிகள் உளவாம். இவற்றை எல்லாம் சில குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். அவை இந்தோ ஐரோப்பியன், செமிதிக்கு, சீனம், மலேயா, பொலீசியன், சிதியன் எனப்படும். சிதியன் குடும்பத்தில் திராவிட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் திராவிட மொழிகள் என்று கூறப்படுவனவற்றைத் தமிழ்க் குடும்பம் என்று பெயரிட்டுத் தனிக் குடும்பமாகக் கருதுவதே ஏற்புடையதாகும்.
இந்தோஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் எட்டுக் கிளைகள் உள்ளன; இன்றும் உயிருடன் வாழ்கின்றன.
1.செருமன் குழு: ஆங்கிலமும் இதில் சேரும்.
2. இலத்தீன், உரோமான்சு.
3. கிரீக்கு.
4. சிலேவிக்கு: இதில் உருசியம், போலீசு, செக்கு (Czech), யூகோசிலாவிய மொழிகள் முதலியன அடங்கும்.
5. கெல்டிக்கு: இதில் ஐரீசு மொழியும் வெல்சு மொழியும் அடங்கும்
6. அல்பீனிய மொழி.
7. ஆர்மினிய மொழி (6,7 இவை இரண்டும் சிறிய அளவினவே)
8. இந்தோ ஈரானியம் இது வட இந்தியாவிலும், நடு இந்தியாவிலும் பாகிஃச்தான், ஈரான், ஆப்கானிசுத்தான் ஆய இடங்களிலும் வழங்குவது. இந்துஃச்தானியும் பெரிசியன் மொழிகளும் யாவரும் அறிந்த இதன் கிளைகளாகும்.
இவை உலக மொழிகளில் பெரும் பகுதியைக் கொண்டிருந்த போதிலும், இவை மட்டும்தான் உலகின் மொழிகள் என்று எண்ணிவிடுதல் கூடாது. சிறியனவும் பெரியவனவுமாய பல குடும்பங்கள் உள்ளன.
செமிட்டிக்கு என்பது இன்னொரு முதன்மைக் குடும்பமாகும். இக்குடும்பத்தில் குறிப்பாகக் கூறக்கூடியன ஈப்ருவும் அராபியுமாகும். இவை இரண்டும் ஆங்கிலமும் செருமன் மொழியும் போல் நெருங்கிய உறவுடையன.
சீன மொழி உலகிலேயே மிகுந்த மக்களால் பேசப்படும் தனிப்பெரு மொழியாகும். இதனுடன் தாய்லாந்து, பருமா, திபேத்து ஆயநாடுகளில் வழங்குவனவற்றையும் சேர்க்கலாம். பின்லாந்திலும் அங்கேரியாவிலும் வழங்கும் மொழிகளை ஒன்றாக்கலாம். சப்பான் மொழியும் கொரிய மொழியும் உள. மலேயாபொலீனிசியக் குடும்பம் இந்திய அமைதிக் கடல் தீவுகளில் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையிலிருந்து மேற்குக் கரைவரை மலேயா, இந்தோனாசியா, நியூசிலாந்து, பிலிப்பையின் ஆவாய் உள்ளிட்ட பகுதிகளில் நிலவுகின்றது.
தென்னிந்தியாவிலும், வட இந்தியாவில் ஆங்காங்கும், இலங்கை, மலேயா, பருமா முதலிய இடங்களிலும் தமிழ்க் குடும்பமொழிகள் வாழ்கின்றன. இவற்றில் திருத்தமுற்றன ஆறு என்றும், திருத்த முறாதன ஆறு என்றும் அறிஞர் கால்டுவல் கூறியுள்ளார்.
திருத்தமுற்ற ஆறு என்பன: தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு, குடகு.
திருத்தமுறாத ஆறு என்பன : துதம், கோதம், கோண்டு, கூ, ஒரியன், இராச் மகால்.
அமெரிக்காவில் வடக்கிலும் தெற்கிலும் நடுவிலும் ஆயிரத் துக்கு மேற்பட்ட மொழிகள் வழங்கக் காணலாம். இம்மொழிகளையும் குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். என்றாலும் இந்தோஐரோப்பியக் குடும்பத்துடனோ செமிதிக்கு குடும்பத்துடனோ உறவுபடுத்த இயலவில்லை. ஆப்பிரிக்காவிலும் நூற்றுக்கணக்கான மொழிகள் அந்நாட்டு நீக்ரோ மக்களால் பேசப்படுகின்றன. ஆசிதிரேலியாவிலும் குறைந்தது நூறு மொழிகளேனும் வழங்குகின்றன என்று கூறலாம்.
நாம் குறிப்பிட்ட (2796) ஈராயிரத்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு மொழிகளும், மொழிக் குடும்பங்களிலும், வழங்கும் நிலப் பரப்பிலும் சம எண்ணிக்கையுடன் நிலவவில்லை. அவ்வாறு எல்லாம் சமநிலையில் வழங்குவனவாய் இருப்பின் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பத்து நூறாயிரம் மக்கள் உரியவர்களாய் இருப்பர். ஆனால் பெரும்பாலான மொழிகள் குறிப்பாக அமெரிக்க இந்திய, ஆப்ரிக்க, ஆசிதிரேலிய மொழிகள் நூற்றுக்கணக்கான மக்களையே பெற்றிருக்கின்றன. இன்னும் குறைந்த எண்ணிக்கையுடைய மக்கள் பேசும் மொழிகளும் உள.
மிகுதியான மக்களால் பேசப்படுகின்ற மொழிகளை வரையறுத்துக் கூறிவிடலாம். ஐந்து கோடி மக்களுக்கு மேல் பேசுகின்ற மொழிகள் பதின்மூன்றேதான்.
பேசும் மக்கள் எண்ணில், மொழிகளை வகுப்பது என்றால் முதலில் வருவது சீன மொழிதான். சீன மொழி அதன் கிளை மொழிகளுடன் (Dialects) நாற்பத்தைந்து கோடி மக்களால் பேசப்படுகின்றது. அடுத்து வருவது ஆங்கிலமாகும். ஆங்கில மொழி பேசுவோர் தொகை உலகமெங்கணும் இருபத்தைந்து கோடிக்கும் மேற்பட்டதாகும். இந்துஃச்தானி இருபதுகோடி மக்களால் பேசப்படுகின்றது என்பதனால் அடுத்து வருவது இஃதே. தமிழ்மொழியும் அதன் கிளைஇனமொழிகளுடன் பன்னிரண்டு கோடிக்கு மேல் பேசும் மக்களை உடையது என்று கூறலாம். ஆனால் அவற்றைத் தனித்தனி மொழிகளாகக் கருதிக் கணக்கிடுவதால் ஐந்து கோடிக்கும் குறைந்த மக்களால் ஒவ்வொன்றும் பேசப்படுவதாக மதிக்கின்றனர். ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே என்பது இங்கு முற்றிலும் உண்மையாகிவிட்டது.
உருசிய மொழி, சிபானிசு (Spanish) மொழி, செருமன் மொழி ஆகியன ஒவ்வொன்றும் பத்துக் கோடி மக்களுக்குரியனவாகும். உருசிய மொழியுடன் உக்ரேனிய மொழியையும் வெள்ளை உருசியர் மொழியையும் சேர்த்தால் அதனைப் பேசுவோர் தொகை பதினைந்து கோடியாகும். பிரெஞ்சு மொழி பேசுவோர் தொகையும் சப்பான் மொழி பேசுவோர் தொகையும் ஏழு கோடிக்கும் பத்துக் கோடிக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையாக இருக்கலாம்.
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்
Comments
Post a Comment