தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ? – கவிவாணர் ஐ.உலகநாதன்
தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ?
வஞ்ச மனத்துடன் வந்து புகுந்தவர்
வாலை யறுத்திட வாராயோ-வரும்
வெஞ்ச மருக்கிது வேளை பொருட்குவை
மேலும் குவித்துடன் தாராயோ
சேரு மலேசிய சீர்மிகு நாட்டினை
சேரு மிடைப்பகை தீராயோ-உனை
வாரியணைத்தவள் வாழ்வு சிறந்திட
வாரி நிதிக் குவை தாராயோ
ஆறு மலைத்தொடர் அன்பு மனத்தொடர்
ஆர்ந்த கலைத்தொடர் தாய்நிலமே-உனை
வேறு நிலத்தவர் வெல்ல முனைந்திடின்
வேட்டி லவர்தலை போய்விழுமே!
வீடு விளங்கிட பெற்ற குழந்தையை
நாடு விளங்கிடத் தாராயோ-அவர்
பீடு விளங்கிடக் கேடு களாந்திடப்
பிள்ளையைப் பெற்றவர் வாரீரோ!
தங்க மெனத்தகும் துங்கு பொழிப்படி
சிங்கமெனப் புக கூறீரோ-நாம்
பொங்கி யெழுந்திடின் புல்ல ரிருப்பது
பூமியு னுள்ளெனக் கூறீரோ-நாம்
அப்படி இப்படித் தப்படி வைத்தனர்
எப்படி யும்படி ஏறிடவே-அவர்
ஒப்பிட வீரம் உணர்த்திடு; வைத்திடும்
ஒவ்வொரு காலடி கூறிடவே
- கவிவாணர் ஐ.உலகநாதன்
குறிப்பு :
இந்தக் கவிதை கவிவாணர் ஐ.உலகநாதன் அவர்களால் எழுதப்பட்டது. 1954 முதல் இவர் கவிதை எழுதி வருகிறார். கவிவாணர், பாவரசு என்பன இவரின் சிறப்பு அடைகளாகும். மேற்கண்ட “தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ” என்றக் கவிதையின் வாயிலாக விடுதலைக்கு முன் இந்நாட்டை ஆட்சி செய்ய வந்தவர்களைப்பற்றி எடுத்துரைக்கிறது. தப்பான எண்ணத்தோடு இம்மண்ணில் கால் வைக்க முயன்றவர்களைத் தப்பிக்க விடுவதில்லை என்பதுதான் இக்கவிதையின் முழு விளக்கம். மலேசிய நாட்டின் சிறப்பினையும் மிக அழகாகக் கூறியிருக்குறார் கவிஞர். மலைகள், ஆறுகள் என இயற்கை வளங்கள் நிறைந்த இந்நாட்டினைப் பிற நாட்டவர் கைப்பற்றாமல் இருக்க பெற்ற பிள்ளைகளை நாட்டின் வீரர்களாக அனுப்புங்கள் ஈன்றோர்களே என்கிறார் கவிஞர்.
மலேசியத் தமிழ்க் கவிதைகள்
மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் கவிதையும் அதன் திறனாய்வும்
Comments
Post a Comment