Skip to main content

தமிழ்நாடும் மொழியும் 2 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

 அகரமுதல






(தமிழ்நாடும் மொழியும் 1 தொடர்ச்சி)

1. தமிழ் நாடு

1. தமிழ் நாட்டு வரலாற்றுக் கண்ணாடி தொடர்ச்சி

வரலாற்றுப் பகுதிகள்

ஒரு நாட்டின் வரலாறே அந் நாட்டு மக்களின் நாகரிகத்தைக் காட்டுகிறது என்று கூறினால் அது மிகையாகாது. எந்த நாட்டு மக்களும் தனித்து வாழ்தல் இயலாது. பிற நாட்டினரின் படையெடுப்பு நிகழ்ந்து அயலார் கையகப்பட்டு ஒரு நாடு தவிக்குமேயாயின் அது அந்நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். வென்றவர் தம் மொழி, கலை, பண்பாடு, நாகரிகம் என்பன தோற்றவரிடையே கலத்தல் இயல்பு. இதன் காரணமாய் ஒவ்வொரு துறையிலும் பெரும் மாற்றங்கள் நிகழலாம். இதனை மனதிலே கொண்டு தமிழ்நாட்டு வரலாற்றை ஆராயப் புகுந்தால், வரலாற்றிற்கு முற்பட்ட காலம், சங்கக் காலம், பல்லவர் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம், பிற நாட்டார் ஆட்சிக் காலம், மக்களாட்சிக் காலம் எனத் தமிழ்நாட்டு வரலாற்றை ஏழு பிரிவின் கீழ் அடக்கலாம்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைப் பழைய கற்காலம், புதிய கற்காலம் என இரு வகையாகப் பிரிக்கலாம். பதப்படுத்தப்பெறாத கரடுமுரடான கற்களைப் பயன்படுத்தித் தமது வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்ட மக்கள் வாழ்ந்த காலமே கற்காலம் எனப்படும். புதிய கற்காலத்தில் மக்கள் கற்களை நன்முறையில் பதப்படுத்திப் பயன்படுத்தினர். மேலும் இக் காலத்தில் மக்கள் பல துறைகளிலும் முன்னேறலாயினர். உழவுத் தொழில்புரியத் தொடங்கினர். எனவே இவர்கள் நிலையான வாழ்க்கை வாழத்தொடங்கினர்.

சங்கக் காலத்தில் மக்கள் கலையும் பண்பாடும் வளரப் பெற்று உலக நாகரிகத்தின் முன்னோடிகளாக விளங்கினர். காடு கெடுத்து நாடாக்கினர்; வளமான வாழ்க்கை வாழ்ந்து மகிழ்ந்தனர்; தமது கலையுணர்வைப் பல்வேறு முறைகளில் வெளிப்படுத்தினர். காதலும் போரும் மக்களின் இரு கண்களாய் விளங்கின. மக்களின் வாழ்க்கையினை அகம், புறம் என இரு பிரிவாக்கிப் புலவர்கள் வியந்து பாராட்டினர்.

கி. மு. 300 முதல் கி. பி. 200 வரைச் சங்க காலம் எனப் படும். இக்காலத்தைப் பொற்காலம் எனக் குறிப்பிடலாம். மக்கள் சீரும் சிறப்புமாய் வாழ்ந்தனர். இலக்கியங்கள் பல எழுந்தன. ஆனால் பிந்திய மூன்று நூற்றாண்டுகளில் ஆரியர்கலை, நாகரிகம், சமயம் முதலியவை தமிழ் நாட்டில் மெல்ல மெல்லப் பரவலாயின. தமிழ் நூல்களில் வடசொற் கலப்பும், வடவர்தம் கலை, சமயக் கருத்துக்களின் கலப்பும் ஏற்பட்டன.

சங்க காலத்திற்குப் பின்னர் ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் தமிழக வரலாற்றைத் தெளிவாக அறிவதற்கில்லை. எனவே இக்காலத்தினை சில அறிஞர்கள் இருண்ட காலம் என அழைக்கின்றனர்.

கி.பி. 300 முதல் கி.பி. 900 வரை பல்லவர் காலமாகும். ஆனால் கி. பி. 600 லிருந்துதான் பல்லவர் வரலாற்றினைக் கோவையாகவும் தெளிவாகவும் நம்மால் அறிய முடிகின்றது. இவர்களது ஆட்சிக்குத் தமிழகம் உட்பட்ட காரணத் தால் தமிழர் வாழ்வு மேலும் மாறத் தொடங்கிற்று. வடவர் மொழியும் கலையும், தமிழர் மொழி, கலைகளோடு விரவத் தொடங்கின. வட சொற் கலப்பு தமிழில் பெரிதும் ஏற்பட் டது. தமிழர் சமயக் கருத்துகளும் மாறலாயின. இதற்குக் காரணம் பல்லவ அரசரில் பலர் வட மொழியை நன்கு ஆதரித்தமையே. எனினும் தமிழர் கலைகள் இக்காலத்தில் விரிவு பெற்றுப் பல துறைகளிலும் வளர்ச்சியடையத் தவறவில்லை. சிறப்பாக சிற்பக்கலை சீரிய முறையில் வளர்க்கப்பெற்றது. பல்லவர் ஆட்சியின் முற்பகுதியில் சமண பௌத்த மதங்கள் தமிழகத்தில் உச்ச நிலையில் விளங்கின. ஆனால் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் சைவமும் வைணவமும் ஓங்கலாயின.

கி. பி. 900 – கி. பி. 1300 வரை சோழர்கள் தமிழ் நாட்டில் தலை சிறந்து விளங்கினர். எனவே தமிழ் மீண்டும் செழித்து வளரலாயிற்று. சைவமும் வைணவமும் மிகச் சிறந்து விளங்கின. இதன் காரணமாய் விண்ணை முட்டும் கோபுரங்களுடன் கூடிய – கோயில்கள் தமிழ் நாடெங்கணும் எழுப்பப்பட்டன. இப்பணியில் சோழப் பேரரசர்கள் பெரிதும் ஈடுபட்டனர். இக்காலத்தில் பாண்டியர்களும் பழைய படி தலையெடுத்துத் தரணி ஆண்டனர். தமிழ் வளர்ந்தது.

கி. பி. 1300க்குப் பின்னர் முகமதியரும் வேறு இனத்தவரும் தமிழ் நாட்டின் மீது படையெடுத்தனர். ஒய்சலர் என்னும் இனத்தாரும் நம் தாயக ஆட்சியில் தொடர்பு கொண்டிருந்தனரெனத் தெரிகிறது. முகமதியர் படையெடுப்பால், சலாம், கசானா, சால்சாப்பு முதலிய சொற்கள் தமிழ் மொழியில் கலந்தன. முகமதியர் ஆட்சியை எதிர்த்த விசய நகர மன்னர்களின் ஆட்சி, அடுத்து தமிழகத்தில் ஏற்பட்டது. இக்காலத்தில் மீண்டும் வட மொழியாதிக்கம் பரவியது. நாயக்கராட்சி நடந்த காலத்திலும் இதே நிலைதான் தமிழ்நாட்டில் நீடித்தது.

இவ்வாறாகத் தமிழும் தமிழ்நாடும் பற்பல மாறுதல்களுக்கு உட்பட்டு இறுதியில் ஆங்கிலேயரின் கீழ் வந்தது. இவர்கள் ஆட்சியில் ஆங்கிலமொழி அரசுமொழியாக விளங்கியதால் தமிழ் தழைக்க முடியாது போயிற்று.

இன்று நாம் குடியாட்சியில் வாழ்கின்றோம். அடிமைத்தளை அகற்றப்பட்டு உரிமை பெற்றவரானோம். எனவே எங்கும் மறுமலர்ச்சியைக் காணுகின்றோம். தமிழ் மொழி அரியணை ஏறி அரசோச்சத் தொடங்கியுள்ளது. தமிழர் நாகரிகமும் பண்பாடும் தழைத்தோங்கத் தொடங்கியுள்ளன. எனவே தமிழர்கள் இனியாவது விழிப்புடனிருந்து மொழியையும், கலையையும், பண்பாட்டையும் பார் முழுதும் பரவச் செய்வதற்கு வழி வகைகளை வகுத்துத் தளராது அயராது உழைத்தல் வேண்டும்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்