ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 3
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 2 தொடர்ச்சி)
ஊரும் பேரும் – 3
சோலை
சோலை என்ற சொல்லும் சில ஊர்ப் பெயர்களில் உண்டு. மதுரையின் அருகேயுள்ள அழகர் கோவில் பழங்காலத்தில் திருமால் இருஞ்சோலை என்று பெயர் பெற்றிருந்தது.32 பழமுதிர் சோலை முருகப் பெருமானது படைவீடுகளில் ஒன்று என்று திருமுருகாற்றுப்படை கூறும்.33 சேலம் நாட்டில் தலைச்சோலை என்பது ஓர் ஊரின் பெயர். திருச்சிராப்பள்ளியில் திருவளர்சோலை என்னும் ஊர் உள்ளது.
தோப்பு
மரஞ் செடிகள் தொகுப்பாக வளரும் இடம் தோப்பு என்று அழைக்கப்படும்.34 தோப்பின் அடியாகப் பிறந்த ஊர்களும் உண்டு. மந்தித் தோப்பு என்னும் ஊர் நெல்லை நாட்டிலும் மான்தோப்பு இராம நாதபுரத்திலும், நெல்லித் தோப்பு தஞ்சை நாட்டிலும், வெளவால் தோப்பு தென்னார்க்காட்டிலும் விளங்குகின்றன.
சுரம்
சுரம் என்பது காடு. தொண்டை நாட்டில் உள்ள திருச்சுரம் இப்பொழுது திரிசூலம் என வழங்குகின்றது. அந்நாட்டில் உள்ள மற்றோர் ஊரின் பழம் பெயர் திருவிடைச்சுரம். அது. திருவடிசூலம் எனத் திரிந்து விட்டது.35
வனம், ஆரண்யம்
காட்டைக் குறிக்கும் வடசொற்களில் வனம்,36 ஆரண்யம் ஆகிய இரண்டும் சில ஊர்ப் பெயர்களில் அமைந்துள்ளன. புன்னைவனம், கடம்பவனம், திண்டிவனம்37 முதலிய ஊர்ப்பெயர்களில் வனம் அமைந்திருக்கக் காணலாம். வேதாரண்யம் என்ற பெயரில் ஆரண்யம் விளங்குகின்றது.38
பல்வகை மரம்
இன்னும், தமிழ் நாட்டிலுள்ள சில ஊர்ப் பெயர்கள் தனி மரங்களின் பெயராகக் காணப்படுகின்றன. கரவீரம் என்பது பாடல்பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. 39
கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. இன்றும் கரவீரக் கோயிலில் பொன்னலரியே தல விருட்சமாகப் போற்றப்படுகின்றது. தேவாரத்தில் குறிக்கப்படுகின்ற திருப்பைஞ்ஞீலி என்ற ஊரும் மரத்தின் அடியாகப் பிறந்ததேயாகும். மைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். அவ்வகையான வாழைகள் சிறந்து விளங்கிய ஊரைப் பைஞ்ஞீலி என்று பழந்தமிழர் அழைத்தனர்.40
இன்னும், வாகையும் புன்னையும் வட ஆர்க்காட்டில் ஊர்ப் பெயர்களாக வழங்குகின்றன. சிவகங்கை வட்டத்தில் காஞ்சிரமும் கருங்காலியும் இரண்டு ஊர்களின் பெயர்களாக அமைந்துள்ளன.
தமிழகத்தில் ஆலும் அரசும், அத்தியும் ஆத்தியும், புளியும் புன்னையும், பனையும் தென்னையும், மாவும் வேம்பும் மற்றும் பல மரங்களும் செழித்து வளர்தலால் அவற்றின் பெயர்கள் எலலாம் ஊர்ப் பெயர்களாக ஆங்காங்கு வழங்கக் காணலாம்.
குறிப்புகள்:
32. மதுரை நாட்டு மேலூர் வட்டத்திலுள்ள அழகர் கோயிலே
திருமால் இருஞ்சோலை. எம்.இ.ஆர்.1928-29… தென் திருமால்
இருஞ்சோலை என்பது திருநெல்வேலி நாட்டிலுள்ள
சீவலப்பேரியின் பெயர் என்று சாசனம் கூறும். 408 / 1906.
33. “பழமுதிர்ச்சோலை மலைகிழவோனே” – திருமுருகாற்றுப்
படை.
34. தொகுப்பு என்பது தோப்பு என்றாயிற்று. “செய்குன்று
சேர்ந்த சோலை தோப்பாகும்” – பிங்கல நிகண்டு.
35. 312 / 1901; 355 / 1908. திருவிடைச் சுரத்தைத்
தொண்டை நாட்டுக் குறிஞ்சி நிலத் தலமாக குறித்துள்ளார்
சேக்கிழார் -திருக்குறிப்புத் தொண்டர் புராணம், 13.
36. “ஊரொடு சேர்ந்த சோலை, வனம் என்ப” – பிங்கல
நிகண்டு.
37. திந்திருணி என்பது புளிய மரத்தைக் குறிக்கும்
வடசொல். திந்திருணி வனம் (புளியங்காடு) திண்டிவனம் என
மருவிற் றென்பர். 143 / 1900.
38. மறைக்காடு என்பதற்கு நேரான வடசொல்
வேதாரண்யம்.
39. கரைய புரம் என்பது இப்பொழுது வழங்கும் பெயர்.
கரவீரம், கரையபுரம் என மருவியுள்ளது. கரவீரம் அலரியென்பது,
“கவீரம் கணவீரம் கரவீரம் அலரி” என்னும் பிங்கல நிகண்டால்
அறியப்படும்.
40. இவ்வூர் திருப்பங்கிலி என்ற பெயரோடு திருச்சி நாட்டு
இலால்குடி வட்டத்தில் உள்ளது.
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை)
ஊரும் பேரும்
Comments
Post a Comment