Skip to main content

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 3/3

 அகரமுதல




(செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 2/3 தொடர்ச்சி)

“மகராசி என்னும் வள்ளி யம்மையை
நன்மனை அறங்களை நன்கு வளர்த்திட
முன்மனை யாக மொய்ம்பொடு கொண்டேன்
……………………………………………………………….
எனதொரு வடிவும் எனக்குறு தொண்டுமே
கனவிலும் நனவிலும் கண்டவள் நின்றவள்
என்னைப் பெற்றோர், என்னொடு பிறந்தோர்
என்னை நட்டோர் யாவரும் தன்னுடை
உயிரெனக் கருதி ஊழியம் புரிந்த
செயிரிலா மனத்தள்; தெய்வமே அனையள்.”


இப்பாடல் வழி வ.உ.சி.யின் தெள்ளுதமிழ் அகவல் நடையின் அழகினையும் மாண்பினையும் உணரலாம்.

3. உரையாசிரியப் பணி

நாளும் தமிழ்ப் பணியில் கருத்தூன்றிய சிதம்பரனார் தம் வாழ்வின் இறுதிக்காலத்தில் சிவஞான போதத்திலும், கைவல்ய நவநீதத்திலும் பெரிதும் ஈடுபட்டார். சிவஞான போதத்திற்கு ஓர் உரை கண்டு வெளியிட்டார். சித்தாந்தப் புலமையும் வேதாந்த வித்தகமும் விளங்க அவர் கண்ட உரை, நயம் பயப்பதாகும். உரைப்பாயிரத்தின் இறுதியில்,

“இறைவனையும் உயிரையும் பற்றிப் பேசும் இவ்வருமையான நூலைத் தமிழ் மக்களெல்லாம் படித்தல் வேண்டும். படிக்க முன்வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நான் இவ்வுரையை இயற்றியுள்ளேன். எனது நோக்கம் இனிது நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் துணை.”

என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர் ‘விவேகபாநு,’ எனும் தமிழ் இதழின் ஆசிரியராக இருந்து பணியாற்றிப் பல்வேறு பயனுறு கட்டுரைகளை அதில் எழுதியுள்ளார் என்பது ஈண்டு நெஞ்சில் நிறுத்தத் தக்கதாகும்.


4. படிப்புப் பணி

பழந்தமிழ் நூற் பதிப்புப் பணியில் தமிழில் முதலில் ஈடுபட்டவர் இச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் இளங்கலை (பி.ஏ.) பட்டம் பெற்ற யாழ்பாணத்தைச் சேர்ந்த சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் ஆவர். சங்க நூல் முதற்பதிப்பாசிரியர் என்று போற்றப் பெறுபவர் அவராவர். வ.உ.சி. தமிழ் இலக்கிய இலக்கணத்தை அடிநாள் தொட்டே நன்கு கற்றவர். சங்க நூற்றேர்ச்சி மிக்கவர். தொல்காப்பியத்தை நல்லாசிரியரிடம் தம் வாழ்நாள் எல்லாம் பாடங்கேட்டவர். பேராசிரியர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார், ச. சோமசுந்தர பாரதியார், எசு. வையாபுரிப்பிள்ளை, சி. சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.க., மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர் முதலியவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்.

வ.உ.சி. அவர்களுக்குத் தொல்காப்பியம், திருக்குறள், சிவஞான போதம், ஆலன் நூல்கள் முதலியவற்றில் நிரம்ப ஈடுபாடு உண்டு. தொல்காப்பியத்தை 1910ஆம் ஆண்டு சிறையில் படிக்கத் தொடங்கினார். வ.உ.சி. கூறுவன வருமாறு :

“அதன் பொருளதிகாரத்தை யான் படித்தபோது அதில் வேறு எம்மொழி இலக்கணத்திலும் காணப்படாத நிலப்பாகுபாடு, நிலங்களின் மக்கள் ஏனைய உயிர்கள், மரங்கள், செடிகள், மாக்கள், மக்களின் ஒழுக்கங்கள், பழக்கவழக்கங்கள் முதலியன கூறப்பட்டிருக்கக் கண்டேன். இவ்வொப்புயர்வற்ற நூலைத் தமிழ் மக்கள் படியாததற்கு ஒரு காரணம், இந் நூலிற்கு ஆன்றோர் இயற்றியுள்ள உரைகளின் கடின நடையென்று உணர்ந்தேன், இந்நூலைத் தமிழ் மக்கள் யாவரும் கற்கும்படி எளிய நடையில் ஓர் உரை எழுதவேண்டுமென்று நினைத்தேன். உடனே எழுத்ததிகாரத்தின் முதற் சில இயல்களுக்கு உரையும் எழுதினேன். .. .. .. .. (பின்னர்) இளம் பூரணத்தை யான் படித்தபோது, அதன் உயர்வும் சிறப்பும், எளிய நடையும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதுவது மிகையென்று நினைக்கச் செய்தன.”*

இப்பகுதி கொண்டு வ.உ.சி. தமிழுக்கு-தமிழருக்குச் செய்ய நினைத்த தொண்டும், உரையாசிரியர் எனப் பண்டையோரால் சிறப்பித்துக் குறிப்பிடப்பெறும். இளம்பூரணரிடத்து அவர் கொண்டிருந்த மதிப்பும் புலனாகும். 1935ஆம் ஆண்டில் அதாவது தாம் இறப்பதற்கு ஓர் ஆண்டிற்கு முன்னர்த் தொல்காப்பியம் இளம்பூரணத்தினை இவர் வெளியிட்டார். ஆயினும், 1920இல் இவர் தொடங்கிய தொல்காப்பிய அகத்திணையியல், புறத்திணையியல், இளம்பூரணர் உரைப்பதிப்பு 1928ஆம் ஆண்டு கோவில் பட்டியில் இவர் இருந்தபொழுது வெளியிட்டுள்ளார். அடுத்து 1933ஆம் ஆண்டில் இளம்பூரணம் களவியல், கற்பியல் பொருளியல் பதிப்பு வெளிவந்தது, இதனையடுத்து 15-1-1936 தேதியிட்டு இளம்பூரணம் மெய்ப் பாட்டியல், உவம இயல், செய்யுளியல், மரபியல்கள் பதிப்பு வெளியாகியுள்ளது. இப்பதிப்புப் பணிக்குப் பேருதவி புரிந்தவர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை என்பது.

“இவ்வேழு இயல்களுக்குப் பெயரளவில் பதிப்பாசிரியன் நான். உண்மையில் பதிப்பாசிரியர் திரு. வையாபுரிப்பிள்ளை அவர்களே. அவர்கள் செய்த நன்றி என்னால் என்றும் உள்ளற்பாலது”

என்று குறிப்பிட்டுள்ளமை கொண்டு அறியலாம்.

இதனால் வ.உ.சி.யின் செய்நன்றியறிதலின் திறமும், அடக்கப் பண்பும் புலனாதல் காணலாம். இளம்பூரணத்தின் பெரும் பகுதியினைப் பதவுரையுடன் வெளியிட்ட சிறப்பு வ.உ. சி.யைச் சாரும்.

“The book represent the fruitful results of his (V.O.C.) arduous labours in the field carried on for more than three decades.”

என்று தொல்காப்பியம் மெய்ப்பாட்டியலின் பதிப்புரையின் நூல் வெளியீட்டு நிறுவனத்தார் திரு. வெங்கடேச சாசுதுருலு குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான “இன்னிலை”க்கு எளிய இனிய உரையெழுதிப் பதிப்பித்துள்ளார்.

திருக்குறளில் நெஞ்சம் தோய்ந்தவர் வ.உ.சி. என்பதனை முன்னரே கண்டோம். ‘அகமே புறம்’ எனும் சேம்சு ஆலன் நூலின் மொழிபெயர்ப்பில் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார் என்பது எண்ணற்பாலது. திருக்குறள் மணக்குடவர் உரையை அறத்துப் பாலிற்கு மட்டுமான உரையை-முதன் முதலில் பதிப்பித்த பெருமை வ.உ.சி.யைச் சேரும். அறப்பால், பொருட்பால், இன்பப் பால் என்றே இவர் வழங்குவர். பரிமேலழகர் உரையோடு இவர் பலவிடங்களில் மாறுபட்டு நிற்கின்றார். மேலும், வ.உ.சி. அறத்துப்பாவின் சில பகுதிகளுக்குத் திண்மையாக உரை விளக்கம் கண்டுள்ளார். இவ்வுரை நயம் போற்றத் தக்கதாம். பாயிரம் திருவள்ளுவரால் எழுதப்பட்டிருக்க முடியாது என்று இவர் முதல் முதலில் காரணங்காட்டித் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வ.உ.சி. அவர்கள் அரசியல் வானில் ஒளிவீசும் சுடர்த் தாரகையாகத் திகழும் அதே நேரத்தில் தமிழ் மொழிக்குத் தம் வாழ்நாள் முடியும் எல்லை வரையில் பல்வேறு துறைகளில் பாங்குற ஈடுபட்டு அயராது உழைத்த அறிஞர்-செந்தமிழ்ச் செம்மலார்-நூலோர் என்பது இது காறும் கூறியவாற்றான் தாமே போதரும்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்