Skip to main content

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 13

அகரமுதல

      20 August 2022      No Comment



(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 12 இன் தொடர்ச்சி)

குமரிக் கோட்டம்

அத்தியாயம் 3 தொடர்ச்சி

மறையூர் வைதிகர்கள் பதைபதைத்தனர். ”வைசிய குலத் திலகர், பக்திமான் செட்டியார், உப்பிரசாதிப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா? அடுக்குமா இந்த அனாச்சாரம்? அது, நமது திவ்விய சேத்திரத்தில் நடப்பதா?” என்று கூக்குரலிட்டனர். செட்டியாரைச் சபித்தனர். ஊரிலே இந்தக் கலியாணம் நடைபெற்றால், பெரிய கலகம் நடக்கும் என்று கூவினர். பழனி, மறை யூரிலும் சுற்றுப்பக்கத்திலும் சென்று சாதி குலம் என்ப தெல்லாம் வீணர்களின் கட்டுக்கதை என்பதை விளக்கிப் பேசினான், கலகம் கல்லடி இவற்றைப் பொருட்படுத்தாமல். ஆதார பூர்வமான அவனுடைய பிரசங்கத்தைக் கேட்டு, பெரும்பாலான மக்கள், அவனுக்கு ஆதரவுதர முன் வந்தனர். வைதிகர்கள் பயந்து போயினர், சனசக்தி, பழனிபக்கம் குவிவது கண்டு. “இதுபோன்ற இனிமையான அறிவுக்கு விருந்தான பிரசங்கத்தை நான் இது வரை கேட்டதே இல்லை. உன்னை மகனாகப் பெற்ற நான் உண்மையிலேயே பாக்கியசாலி” என்று கூறிப் பூரித்தார், குழந்தைவேல் செட்டியார். தாழையூர் சத்சங்கத்தின் தூதர் ஒருவர், மறையூர் வந்து சேர்ந்து செட்டியாரைச் சந்தித்து, அவருடைய செயலைத் தடுக்க முயன்றார்.
செட்டியாரோ, பழனி பிரசங்கத்திலே கூறின வாதங்களை வீசி, அந்த வைதிகரை விரட்டினார். வெகுண்ட வைதிகர்கள், கோயிலை இடிப்போம் என்று ஆர்ப்பரித்தனர் கூலி மக்களும், தாழ்த்தப்பட்டவர்களும், கலப்பு மணம் செய்து கொள்ளச் சம்மதித்த செட்டியாருக்குப் பட்டாளமானது கண்டு, கோபம் கொண்டு, ஓர் இரவு அவர்கள் வசித்த குடிசைகளுக்குத் தீயிட்டனர். குய்யோ முறையோ என்று கூவி, மக்கள் ஓடி வந்தனர். எங்கும் தீ ! பசு, கன்று, வெந்தன. பாண் டம் பழஞ்சாமான் தீய்ந்தன. பழனியும் அவன் நண்பர்களும், தீ விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றி வீடு வாசல் இழந்தவர்களனைவரையும், அரைகுறையாக இருந்த கோயிலுக்கு அழைத்துச் சென்று, இனி அங்கேயே இருக்கலாம் என்று கூறினர்.

கலியாணம் சிறப்பாக நடைபெற்றது. சொக்கன் சந்தோசத்தால் மெய்மறந்தான். குமரிக்கு நடப்பது உண்மையா கனவா, என்று அடிக்கடி சந்தேகமே வந்தது. மறையூர் வைதிகர்கள் அன்று “துக்கதினம் ” கொண்டாடினர்.

நாகவல்லி குமரிக்கு ஆசிரியையானாள். குமரியின் மனம், மொட்டு மலர்வதுபோல ஆகிவிட்டது. கோயில் வேலை நின்று இருந்தது. “என்ன செய்வது இனி?” என்று பழனியைச் செட்டியார் யோசனை கேட்டார். “என்ன இருக்கிறது செய்ய?” என்று பழனி கேட்டான். “ஆலயத் திருப்பணி அறைகுறையாகவே இருக்கிறதே” என்று செட்டியார் சொன்னார். “கட்டடம் அரைகுறையாக இருக்கிறது; ஆனால் ஆண்டவன் இங்கே கோயில் கொண்டு விட்டார். ஏழைகளின் இல்லமாக இந்த இடம் ஆக்கப்பட்டபோதே இங்கு இறைவன், அபிசேகமின்றி, ஆராதனையின்றி, வேதபாராயண மின்றி, தானாகச் சந்தோசத்துடன் வந்து விட்டார் ” என்றான் பழனி. மகனைக் கட்டி அணைத்துக் கொண்டு, “உன் அறிவே அறிவு! இப்படிப்பட்ட உத்தமனை நான், ஊரிலே உலவும் சில வைதிக உலுத்தர் பேச்சைக் கேட்டுக்கொண்டு, இம்சித்தேன். நற்குணம் படைத்த நாகவல்லியைத் துன்புறச் செய்தேன்.” என்று உருக்கமாகச் செட்டியார் பேசினார்.

“அப்பா! தாங்கள் தீர்மானித்தபடி சொத்து முழுவதும் கோயில் காரியத்துக்கே செலவிடப்பட வேண்டி யதுதான். ஆலயம் கட்டும் வேலையும் தொடர்ந்து நடத்த வேண்டியதுதான். . . .. .. . . . . . .” என்று பழனி கூறிக் கொண்டே இருக்கையில், குழந்தை வேலர் குறுக்கிட்டு, “நம் சொத்தைப் பாழாக்கிக் கோயில் கட்டி, குலம் சாதி பேசி சமூகத்தைக் குலைத்து வரும் வைதிகர்களிடம் சொடுப்பதா?” என்று கோபத்துடன் கேட்டார். குழந்தைவேலர், சுயமரியாதை இயக்க வக்கீலானது கண்டு, பழனி களித்தான்.

“ஆலயம் கட்ட வேண்டியதுதான் அப்பா. ஆனால் அதன் அமைப்பிலே சில மாறுதல்கள் செய்துவிட வேண்டும். ஆயிரக்கால் மண்டபத்துக்கு ஆரம்ப ஏற்பாடகிவிட்டது, அது கட்டி முடிக்க இன்னும் கொஞ்சம் வேலை தான் பாக்கி. முடிந்த பிறகு, அதனை வௌவால் வாழுமிட மாக்கிவிடாமல், சிறுவர்களுக்கு அதனைப் பள்ளிக்கூடமாக்கி விடலாம். நாகா, வேறு பள்ளிக்கூடம் தேடவேண்டியதில்லை. பிராகாரம், சிறு சிறு விடுதிகளாட்டும், பட்டாளி மக்கள் குடி இருக்க. குளம் இங்கே வாழும் மக்கள் குளிக்குமிடமாகும். இங்கு அபிசேகமும் உற்சவமும் நடப்பதற்குப் பதில் அன்பும் அறிவும் பரப்பும் பிரசார தாபனம் அமைப் போம். அப்பா ! தாங்கள் குமாரக்கோட்டம் கட்ட ஆரம்பித்தீர்கள். அது குமரிக்கோட்டமாக மாறி விட்டது. சாதி பேதம் ஒழிந்த இடமாக, காதல் வாழ்க்கைக் கூடமாக, மாறுகிறது. இதுதான் இனி . இந்த மாவட்ட சுயமரியாதைச் சங்க கட்டடம் ; நமது’ பிரசார இலாக்கா” என்றான்.

“பேசு! பழனி ! அற்புதமான யோசனை. ஆலயம் அமைத்து அதிலே, வைதிகர்கள் ஊர்ச் சொத்தை விரயம் செய்வதற்கு வழி செய்யும் வழக்கத்தை நாம் ஒழித்து விடுவோம், முதலில், இது அறிவாலயமாக, அன்பு ஆலயமாக மாறிவிட்டது” என்று செட்டியார் சந்தோசத் துடன் கூறினார்.

“குமரக்கோட்டம் அமைத்தால், இங்கு கொட்டு முழக்கம், குருக்களின் தர்பாரும், இருந்திருக்குமே யொழியப் பலன் ஏதும் இராது. குமரியின் அன்புக்குக் கட்டுப்பட்டு, சாதியைக் குலத்தைத் தள்ளிவிட்ட தாங்கள், இப்போது குமரிக்கோட்டம் அமைத்து விட்டீர். நமது குலத்தவர் இதுவரை எத்தனையோ கோட்டங்கள் அமைத்தனர். ஒருவரேனும், இதுபோன்ற குமரிக் கோட்டம் கட்டினதில்லை. அந்தப் பெருமை தங்களுக்கே கிடைத்தது ” என்றான் பழனி .

“பழனி என் கண்களைத் திறத்தவன் நீ,” என்று கனிவுடன் கூறினார் செட்டியார்.
வேறொர் புறத்திலே, நாகவல்லி குமரியின் கன்னத்தைக் கிள்ளிக்கொண்டே “பலே பேர்வழி நீ குமரி. உன் பெயரால் கோயிலே கட்டுகிறார்கள் பாரடி ‘ என்று கேலி செய்து கொண்டிருந்தாள்.
” அவர்கள் சொல்வது தவறு அம்மா! இதற்குப் பெயர் பழனி ஆண்டவர் கோயில் என்று இருக்க வேண்டும்’ என்று சாமர்த்தியமாகப் பதிலுரைத்தாள் குமரி.

” அப்படிப் பார்க்கப்போனால், அதுகூடப் பொருந் தாது. ‘லேகிய மண்டபம் : என்ற பெயர்தான் ரொம்பப் பொருத்தம்’ என்று கூறிவிட்டு ஓடினாள் நாகவல்லி. அவளைத் துரத்திக்கொண்டு குமரி ஓடினாள். தந்தையும் மகனும் அந்தக் காட்சியைக் கண்டு ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை புரிந்தனர்!



குறும்புதினம் நிறைவு

கா.ந. அண்ணாதுரை

குமரிக்கோட்டம்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue