Skip to main content

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 11

அகரமுதல

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 11



(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 10 இன் தொடர்ச்சி)

குமரிக் கோட்டம்

அத்தியாயம் 3

கதிரவனைக் கண்டு கமலம் களிக்கும் என்பார்கள். காமத்துக்குப் பலியான குமரியின் முகத்திலே காலைக் கதிரவன் ஒளி பட்டபோது, இரவு நேரிட்ட சேட்டையின் அடையாளங்கள், கன்னத்தில் வடுக்களாகத் தெரிந் தனவேயன்றி, முகம் மலர்ச்சியாகத் தெரியவில்லை. கண் திறந்தாள் ; புதியதோர் இடமாகத் தோன்றிற்று. திகைப்புடன் பார்த்தாள், செட்டியார் மீது சாய்ந்து கொண்டிருப்பதை. “ஐயோ” என்று அலறியபடி எழுந்திருக்கலானாள். செட்டியாரோ, “அன்பே !” என்று கூறி, அவளை மீண்டும் தம் மீது சாய்த்துக்கொண்டார் .

“பாதகா! பாவி! மோசம் போனேனே ! என்னமோ தின்னக் கொடுத்து விட்டு, என்னை இக்கதிக்கு ஆளாக்கினாயே, நீ நாசமாப் போக” என்று வசைமொழியை வீசியபடி, கைகளைப் பிசைந்து கொண்டு, கலங்கினாள் குமரி. செட்டியார் முகத்திலே அச்சமோ, கவலையோ தோன்றவில்லை. பரிபூரணத் திருப்தி தாண்டவமாடிற்று.

“குமரி ! கூச்சலிடாதே! உனக்குத்தான் தீமை அதனால், நடந்தது நடந்துவிட்டது” என்றார் அவர்.

”அட பாதகா! பதைக்காமல் துடிக்காமல் பேசுகிறாயே, ஒரு ஏழையின் வாழ்வை அழித்து விட்டு.
இதற்கா நீ பக்திமான் வேஷம் போட்டாய்? கோயில் கட்டினாய்? கதியற்ற பெண்களைக் கற்பழிக்கத்தானா, கோயில் கட்ட ஆரம்பித்தாய்? ஐயோ! நான் என்ன செய்வேன் ! நீ கொடுத்த லேகியம், என் புத்தியைக் கெடுத்து, உன் மிருகத்தனத்துக்கு என்னைப் பலியாக்கி விட்டதே” என்று பதறினாள் குமரி.

”குமரி ! நானும் இதுவரை இப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபட்டவனல்லன். யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பார் – என்னமோ விதிவசம் இப்படி நேரிட்டு விட்டது” என்றார் குழந்தைவேலர்.

“விதி! என்னைக் கெடுத்துவிட்டு, நிலை தவறச் செய்து என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிவிட்டு, விதியின் மீதா பழி போடுகிறாய்! உன் மகளை, இப்படி ஒருவன் கெடுத்தால், நீ செய்து விட்ட அக்கிரமத்தை ஆண்டவனும் கேட்கமாட்டாரா? பாவி! கோயிலிலே, இந்த அக்கிரமத்தை நடத்தினாயே, உனக்கு நல்ல கதி கிடைக்குமா?” என்று அழுது கொண்டே கேட்டாள் குமரி.

“ஆண்டவன் கேட்பானேன்? இதோ, நான் கேட் கிறேன் ” என்று ஒரு குரல் கேட்டு, இருவரும் திடுக்கிட்டுப் பார்க்க, அறை வாயிற்படியில் கோபமே உரு வெடுத்து வந்தது போல, சொக்கன் நின்று கொண்டிருந்தான்.

”அண்ணா ! மோசம் போனேன்” என்று அலறித் துடித்துக்கொண்டு, அவன் கால்களைப் பீடித்துக் கொண் டாள் குமரி.

‘சீ! நாயே ! குலத்தைக் கெடுத்த கழுதே” என்று கூவி, காலை உதறினான்; குமரி ஒருபக்கம் போய் வீழ்ந்தாள்.

”நடந்தது நடந்து விட்டது! ஏனய்யா செட்டியாரே ! அவ்வளவுதான் உனக்குச் சமாதானம் கூறக் தெரிந்தது? எவ்வளவு திமிர் இருந்தால், ஒரு கன்னிப் பெண்ணைக் கற்பழித்துவிட்டு, ஏதோ கைதவறிக் கீழே உருண்டு விட்டதால் செம்பிலே இருந்த பால் கீழே கொட்டி விட்டதற்குச் சமாதானம் சொல்வதுபோல, நடந்தது நடந்துவிட்டது என்று கூறத் துணிவு பிறக்கும் உனக்கு? என்னை வெளியூர் போகச் சொல்லி விட்டு, விடிவதற்குள், இவளை விபசாரியாக்கி விட்டாய். நடந்தது நடந்துவிட்டது ! நாயே ! இனி நடக்க வேண்டியதைச் சொல் ‘; என்று செட்டியார் மீது பாய்ந்தான். அவர் அவன் காலில் விழுந்து, “அப்பா ! நீ என்னை எது செய்தாலும் தகும். நான் செய்துவிட்ட அக்கிரமத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் என்னைத் தண்டிக்கலாம். காமாந்தகாரத்தால் நான் இந்த அந்நியாத்தைச் செய்து விட்டேன்,” என்று புலம்பினார்.

காமாந்தகாரம்! அதை இந்த ஏழைப் பெண்ணிடம் காட்டவா, கோயில் ! ஊரெல்லாம் உன்னை உத்தமன் என்று புகழ்கிறது : பாவி, நீ என் குடும்பத்துக்குச் சனியனாக வந்தாயே நடந்தது நடந்து விட்டது என்றாயே ! நினைத்துப் பாரடா பாதகா, நீ செய்த காரியத்தை. ஏமாளிப்பெண் ஒருத்தியை, ஏழையை. கூலி வேலை செய்ய வந்தவளைக் கற்பழித்திருக்கிறாய், நீ ஆயிரம் கோயில் கட்டி என்ன பிரயோசனம்? உனக்குத் தாய், தங்கை, அக்கா, யாரும் கிடையாதா? குமரி, எல்வளவு களங்கமற்றவள், கொடியவனே ! அவளை இக்கதிக்குக் கொண்டு வந்தாயே !” என்று சொக்கன் ஆத்திரத்துடன் பேசிக்கொண்டே, செட்டியாரைத் தாக்கினான்.

“சருவேசுவரா! ஐயோ அப்பா! வேண்டாமடா. சொக்கா! நான் தாளமாட்டேண்டா, உயிர் போகிறதடா, உன் காலைக் குடும்பிடுகிறேனடா! நீ என்ன செய்யச் சொல்கிறாயோ அதைச் செய்கிறேண்டா? அப்பா சொக்கா, நான் பாவிதான், என்னைக் கொல்லாதே என்று செட்டியார் கூவினார்.

“சொல்வதைச் செய்கிறாயா? ஆனால் கேள். குமரியைப் பலரறியக் கலியாணம் செய்துகொள்” என்று கர்ச்சித்தான் சொக்கன்.

“கலியாணமா? ஐயோ: அடுக்காதே ; என்றார் செட்டியார், கீழே வீழ்ந்து கிடந்த குமரியின் கூந்தலைப் பிடித்து அவளைத் தூக்கி நிறுத்தி, “இது அடுக்குமா? இவளைக் கெடுத்து விட்டு, பிறகு யார் தலையிலாவது கட்டுவது அடுக்குமா?” என்று சொக்கன் கேட்டான். குமரியின் கண்களிலே வழியும் நீரையும் கண்டார் செட்டியார் : இங்கே புனல், சொக்கனின் கண்களிலே அனல் : “ஆண்டவனே ! நான் என்ன செய்வேன்?;, என்று அழுகுரலுடன் கூறிக்கொண்டே தலையிலே அடித்துக்கொண்டார்.

அக்கிரமக்காரா! அடிக்கடி ஆண்டவனை ஏன் கூப்பிடுகிறாய்? அனாதைப் பெண்களை ஆலயத்திலே கற்பழிக்கும் உனக்கு ஆண்டவன் பெயரைக்கூடச் சொல்லத் தோன்றுகிறதா? இனி நடக்க வேண்டியதைச் சொல்” என்று சொக்கன் சீறினான்.

“அப்பா! என் பேச்சைக் கொஞ்சம் கேள் ; நான் ஏதோ புத்தியில்லாமல் இக்காரியம் செய்து விட்டேன். நான் குமரியைக் கைவிடுவதில்லை ; கடைசிவரை காப்பாற்றுகிறேன் . . . . . . . . . . . . ..”

“உன் கூத்தியாராகச் சொல்லுகிறாயா? என் எதிரிலே என் தங்கையை வைப்பாட்டியாக்கு என்று கேட்குமளவு உனக்குத் துணிவு பிறந்ததா?”

“வேறென்ன செய்வது, சொக்கா ! நான் வைசிய குலம். ஊருக்கெல்லாம் சாதியாச்சாரத்தைப்பற்றிப் பேசுபவன், வேறு சாதிப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டதற்காகச் சொந்த மகனையே வீட்டை விட்டுத் துரத்தியவன் . . . . . . . . . . . “

“அதனால் . . . . . . . . . . . ?”

“எங்கள் குலத்தவர் ஆச்சாரம் கெடக்கூடாதே ! உலகம் என்னைப் பழிக்குமே, குடும்பமே இழிவாக்கப் படுமே!”


(தொடரும்)

கா.ந. அண்ணாதுரை

குமரிக்கோட்டம்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்