Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 65

 அகரமுதல





(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 64 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்

அத்தியாயம்  23 தொடர்ச்சி

‘பணமும், பகட்டும் உள்ளவர்களைத் தவிர வேறு ஆட்களை மதிக்காத இந்த பருமாக்காரக் கிழவர் இன்று ஏன் இப்படி என்னிடம் ஒட்டிக் கொள்கிறார்? சிற்றப்பனின் சொத்துகளுக்கு நான் வாரிசு ஆகப் போகிறேன் என்பதற்காகவா? அடடா; பணமே, உனக்கு இத்தனை குணமுண்டா? இத்தனை மணமுண்டா‘ என்று எண்ணிக் கொண்டான் அரவிந்தன். பருமாக்காரருடைய சிரிப்பிலும், அழைப்பிலும், அன்பிலும், ஏதோ ஓர் அந்தரங்கமான நோக்கத்தின் சாயல் பதிந்திருப்பதை அவன் விளங்கிக் கொள்ள முயன்றான். அலாரம் வைத்த கடிகாரம் போல் நேரம் பார்த்து, அளவு பார்த்து உள்நோக்கத்தோடு அவர் சிரித்துப் பழகுகிறாரா? அந்த மனிதரைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டு விடுவதற்காகவாவது அவருடைய வீட்டுக்குப் போய் வருவதென்று முடிவு செய்து கொண்டு இணக்கம் தெரிவித்தான் அரவிந்தன். இரயில் நிலைய வாயிலில் அவருடைய புதிய கார் பெரிதாக, அழகாக நின்று கொண்டிருந்தது. எல்லாரும் ஏறிக் கொண்டதும் கார் புறப்பட்டது.

“நான் சொல்றேன் இதுதான், தம்பி! இதுவரைக்கும் நீ எப்படியெல்லாமோ இருந்திருக்கலாம். இனிமேல் உனக்குன்னு ஒரு அந்தசுது வேணும்! இலட்ச உரூபாய்ச் சொத்துக்கு வாரிசாயிருக்கிறாய்! அதுக்குத் தகுந்த உறவு, பழக்கம் எல்லாம் உண்டாகணும். அந்த மீனாட்சி அச்சக வேலையை நீ விட்டு விடலாம் என்கிறது என் அபிப்பிராயம். நீயே சொந்தத்தில் நாலு அச்சகம் வைத்து நடத்துகிற வளமை உனக்கு வந்தாச்சு. இனிமேல் எதுக்கு அந்தப் பொறுக்கிப் பயல் வேலை? என்ன? நான் சொல்வது சரிதானே?” என்று சொல்லிக் கொண்டே அவன் முகத்தைப் பார்த்தார் பருமாக்காரர். அவன் கார் சன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் கூறியதை இலட்சியம் செய்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.

கார் வையைப் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தது. அந்தப் பாலத்தின் மேல் போக நேர்கிற போதெல்லாம் அரவிந்தனுக்கு ஒரு விந்தையான சிந்தனை உண்டாகும். ‘இந்தப் பாலம் இலட்சாதிபதிகளும், பங்களாவாசிகளும் நிறைந்த வடக்கு மதுரையையும், சாதாரண மக்களின் நெருக்கடி நிறைந்த தெற்கு மதுரையையும் இணைக்கிறது. ஆனால் இந்த இரண்டு மதுரைகளின் மண் தான் இணைகிறதே ஒழிய மனம் இணையவில்லை. அதற்கு வேறொரு புதிய பாலம் போடவேண்டும். அது பண்பாட்டுப் பாலமாக இருக்கும்‘ என்று எண்ணுவான்.

அமெரிக்கன் கல்லூரியின் சிவப்பு நிறக் கட்டடங்கள், தல்லாகுளம் பெருமாள் கோயிலின் பட்டையடித்த மதிற்சுவர் எல்லாவற்றையும் வேகமாகப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு கார் விரைந்தது. எதிரே நீலவானத்தின் சரிவில் மங்கிய ஓவியம்போல் அழகர் மலைக் குன்றுகள் தெரிந்தன.

கார் ‘பருமாக்காரர் எசுடேட்’டில் நுழைந்தது. அரவிந்தன் மலைத்துப் போனான். அப்பப்பா? எத்தனை அழகான இடம்! எவ்வளவு பெரிய தோட்டம்! எத்தனை விதமான பூந்தொட்டிகள்! எவ்வளவு பெரிய மாளிகை! ஒரு பெரிய ஊரையே குடி வைக்கலாம். அவ்வளவு விரிவான நிலப்பரப்பில் தோட்டமும் மாளிகையும் அமைந்திருந்தன.

சிற்றுண்டி, தேநீர் உபசாரமெல்லாம் பிரமாதமாக நடந்தது. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட எழுந்தான் அரவிந்தன்.

“என்னப்பா பறக்கிறாய்? இனிமேல் நாளைக் காலையில் தானே கோடைக்கானல் போகப் போகிறாய்! உன்னை என் நண்பர் ஒருத்தருக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். கொஞ்சம் இரப்பா, அந்த நண்பருக்கு டெலிபோன் செய்து வரவழைக்கிறேன்” என்று யாருக்கோ டெலிபோன் செய்தார் பருமாக்காரர். அவர் டெலிபோனில் பேசிய விதம், கண் சிமிட்டிக் கொண்டே கள்ளச் சிரிப்புச் சிரித்த விதம், எல்லாமாகச் சேர்ந்து மொத்தமாக அரவிந்தன் மனத்தில் ஏதோ ஒரு சந்தேகத்தைக் கிளப்பின. சிறிது சிறிதாக அவருடைய அந்தப் புலிமுகம் உண்மையாகவே புலிமுகமாய் மாறிக் கொண்டு வருவதுபோல் தோன்றியது அவனுக்கு. ‘நீ ஏதோ வம்பில் மாட்டிக் கொள்ளப் போகிறாய்’ என்பது போல் அவன் உள்ளுணர்வு எச்சரித்தது.

‘மதுரை மீனாட்சி கோயிலில் வடக்குக் கோபுரத்தில் உட்பக்கம் சில தூண்கள் இருக்கின்றன. அவற்றுக்கு ‘இசைத்தூண்கள்’ என்று பெயர். அந்தத் தூண்களுக்கு அருகில் நெருங்கி அவற்றைத் தட்டிப் பார்த்தால் ஒவ்வொரு தூணிலிருந்தும் ஒவ்வொரு விதமான ஒலி கேட்கும். அதே போல் அருகில் நெருங்கி இதயத்தைத் தட்டிப் பார்க்கும் போதல்லவா மனிதனுடைய சுயமான உள்ளத்தின் ஒலி கேட்கிறது’ என்று நினைத்து மருட்சியோடு பருமாக்காரர் எசுடேட்டின் மாளிகைக்குள் அவரெதிரே வீற்றிருந்தான் அரவிந்தன். மருட்சி இருந்தாலும் அவன் தைரியத்தை இழந்துவிடவில்லை.

சிறிது நேரத்தில் அவனுக்காக வரவழைப்பதாக பருமாக்காரர் டெலிபோன் செய்த நண்பர் வந்து சேர்ந்தார். அந்த ஆளைக் கண்டதும் அரவிந்தன் திகைத்தான். அவர் அவனுக்கு இனிமேல் தான் அறிமுகம் ஆகவேண்டிய ஆள் இல்லை. ஏற்கனவே அறிமுகம் ஆனவர் தான். வேறு யாருமில்லை. அன்றொரு நாள் பூரணியின் வீட்டில் அவனைக் கன்னம் சிவக்க அறைந்துவிட்டுப் போனாரே, புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர், அவர் தான் விசமச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே வந்து உட்கார்ந்தார். அதன் பின் அங்கு நிகழ்ந்தவையெல்லாம் துப்பறியும் மருமக் கதைகளில் நடப்பது போல் நிகழ்ந்தன. அரவிந்தன் வற்புறுத்தப்பட்டான். பயமுறுத்தப்பட்டான்.

அவர்கள் தன்னிடம் பேசியவற்றிலிருந்து அரவிந்தன் சில உண்மைகளைப் புரிந்து கொண்டான். பருமாக்காரர் சிற்றப்பாவின் கேதத்துக்கு வந்திருந்தபோது மீனாட்சிசுந்தரம் பூரணியைத் தேர்தலில் நிறுத்தப்போவது பற்றிக் கேட்டது, தன்னிடமிருந்து வாயளப்பு அறிவதற்காகவே என்பது இப்போது அவனுக்கு நன்றாக விளங்கிவிட்டது. பருமாக்காரர் தம்முடைய ஆளாக, அதே தொகுதியில் புது மண்டபத்து மனிதரை நிறுத்த இருக்கிறார் என்பதும் அவனுக்கு விளங்கிற்று. இரயிலில் அவர் தன்னிடம் பேசித் தெரிந்து கொண்ட உண்மைகளும், தன்னைக் கோடைக்கானலுக்கு அன்றே போகவிடாமல் தடுத்ததும் எதற்காக என்பது அரவிந்தனுக்கு இப்போது புரியத் தொடங்கியது. புலிமுகம் கடுமையாகவும் கண்டிப்பாகவும் அவனை நோக்கிப் பேசியது: “தம்பி! நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்குக் கெட்டவன். இந்த ஊரில் என் விருப்பத்தை மீறி ஒரு துரும்பு அசையாது. எனக்குத் தெரியாமல் ஒரு காரியம் நடந்துவிட முடியாது. உன் முதலாளி மீனாட்சிசுந்தரம் நேற்றுப்பயல்! எங்களுக்குப் பரம வைரியாக என்ன செய்ய வேண்டுமோ அதை இப்போது செய்யத் தொடங்கிவிட்டான் அவன். நீ நம் வழிப்பையன். பேசாமல் நான் சொல்கிறபடி கேள், உனக்கு ஐயாயிரம் உரூபாய் பணம் தருகிறேன். அந்தப் பெண் பூரணியைத் தேர்தலில் நிற்பதற்குச் சம்மதிக்காமல் செய்து விடு. இது உன்னால் முடியும். அந்தத் தொகுதியில் நான் இவரை நிறுத்தத் திட்டமிட்டிருக்கிறேன்.”

அரவிந்தன் நெற்றிக்கண் திறந்த சிவபெருமான் போல் கனல் விழிகளோடு அவர்களை முறைத்துப் பார்த்தான். ஐம்பது புத்தம் புதிய நீல நோட்டுகளை எண்ணி நீட்டினார் அவர். அரவிந்தன் விறுட்டென்று எழுந்து நின்றான்.

சாக்கடையில் கொண்டுபோய்ப் போடுங்கள் அந்தப் பணத்தை. இதன் நாற்றம் சாக்கடையைக் கூட அசுத்தமாக்கி விடும்” என்று கூப்பாடு போட்டுக் கொண்டே இடது புறங்கையால் நோட்டுக் கற்றையை அலட்சியமாகத் தட்டிவிட்டான் அரவிந்தன். மின்சார விசிறியின் காற்று வேகத்தில் அவன் தட்டிவிட்ட புது நீல நோட்டுக்கள் சுழன்று பறந்தன. அவன் பணத்துக்குப் பறக்கவில்லை; பணம் எடுக்க ஆளின்றிப் பறந்தது.

அவர்கள் முகம் சிவக்க அவனை வெறித்து நோக்கினர். பருமாக்காரரின் முகம் புலிப் பார்வையின் கடுமையில் அதிகமான இறுதிக் கடுமையை எய்தியது. புது மண்டபத்து மனிதரின் கண்கள் நெருப்புக் கோளங்களாயின.

“இந்தாப்பா, பலராம்! இந்தப் பையன் ஏதோ முறைத்து விட்டுப் போகிறான். நீ வந்து கொஞ்சம் பையனைக் கவனி” என்று யாரையோ கூப்பிட்டார் பருமாக்காரர். எழுந்து வெளியேறிவிட்ட அரவிந்தன் வாயிற்படியிலிருந்து இறங்கி உட்பக்கம் திரும்பிப் பார்த்தான். அரிவாள் நுனிபோல் மீசையும், தடித்த உடம்புமாகக் கொழுத்த மனிதன் ஒருவன், உள்ளேயிருந்து வந்தான். திரைப்படங்களிலும் கதைகளிலும் கண்டது வாழ்க்கையிலும் இப்போது வருவதை உணர்ந்தான் அரவிந்தன். பெரும்புள்ளிகள் இம்மாதிரி ‘அடி ஆட்கள்’ வைத்திருப்பது பற்றி அவன் கேள்விப்பட்டதுண்டு.

நெஞ்சின் வலிமைதான் பெரிது என நினைத்திருந்த அவன் முதன்முதலாகத் தன் வாழ்வில் உடம்பின் வலிமையைக் காட்டிப் போராட வேண்டிய சமயம் மிக அருகில் வந்து கொண்டிருப்பதை உணர்ந்தான். சிப்பாவின் கைகளை மேலே மடித்துவிட்டுக் கொண்டான். கவிதைகளையும் புரட்சிக் கருத்துக்களையும் எழுதிய கைகள் போருக்குப் புடைத்து நின்றன.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue