மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 68
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 67 தொடர்ச்சி)
குறிஞ்சி மலர்
அத்தியாயம் 24 தொடர்ச்சி
“சினிமாவில் நடிக்கிற பித்து அந்த ஏமாத்துக்கார மனிதனோடு புறப்பட்டுப் போகச் செய்து விட்டது. அவ்வளவு தானே தவிர, உங்கள் பெண்மேல் வேறு அப்பழுக்குச் சொல்ல முடியாதே. மதுரையிலிருந்து திருச்சி வரையில் ஓர் ஆண் பிள்ளையோடு இரயிலில் பயணம் செய்தது மன்னிக்க முடியாததொரு குற்றமா அம்மா?”
“அதை நினைத்தால்தானே வயிற்றெரிச்சலாக இருக்கிறது. ஒன்றுமில்லாததை எப்படி எப்படியோ திரித்துப் பெண்ணுக்கு மணமாகாமல் செய்துவிடப் பார்க்கிறார்களே. நான் ஒருத்தி தனியாக எப்படி இந்தச் சமூகத்தின் அநியாயப் பழியை சுமப்பேன்?” – இதைச் சொல்லும் போதே அந்த அம்மாளின் குரல் கரகரத்து நைந்தது. தூய்மையான அந்தத் தாயின் கண்களில் நீர்மணிகள் அரும்பிச் சோகம் படர்வதை அரவிந்தன் கண்டுவிட்டான். அவனுடைய உள்ளம் உருகியது. அந்தத் தாயின் தவிப்பு அவனுடைய உணர்வைக் கரைத்தது. அப்போது அரவிந்தனுடைய மென்மையான உள்ளத்தில் ஓர் இளங்கவியின் குமுறல் எழுந்தது.
‘உத்தர ராமாயணத்தில் சீதையை ஊராருக்காக இராமன் சந்தேகமுற்றபோது அந்த அபவாதத்தைப் பொறுமைக்கெல்லாம் எல்லையான பூமியே பொறுத்துக் கொள்ள முடியாமல் தன் மண்மேனி வழி திறக்கப் புண்ணாகப் பிளந்து உள்ளே ஏற்றுக் கொண்டதைப் போல இந்தச் சமூகத்தில் ஒவ்வோர் அப்பாவிப் பெண்ணுக்கும் துன்பம் வரும்போது அந்தத் துன்பம் அவளை அணுகவிடாமல் பூமியே பிளந்து ஏற்றுக் கொண்டு விட்டால் எத்தனை நன்றாக இருக்கும்? சமூகத்தின் பழிகளுக்கு நடுவே அபலையாய் சபலையாய் ஆதரவு இழந்து நிற்கும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு சீதைதான். “நல்வழி தா எனக்கு மண் மகளே!” என்று சீதை மண் புகுந்தது போல் பழிகளிலிருந்து விடுபட்டுப் பிரகிருதியின் அடிமடியில் சரண் புகுந்து விடுகிற தெம்பு இந்தத் தவத்திரு நாட்டுப் பெண்களிடம் இன்று இல்லாமற் போயிற்றே?’ என்று கொதித்து வேதனைப்பட்டான் அரவிந்தன்.
“நான் இப்படிப் பளிச்சென்று கேட்பதற்காக வருத்தப்பட்டுக் கொள்ளக்கூடாது அம்மா! என்னையும் பூரணியையும் போலவே நீங்களும் முற்போக்கான கருத்துள்ளவர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் கூச்சமும் தயக்கமும் இல்லாமல் இப்படி உடனே உங்களைக் கேட்கிறேன். தவறாக எண்ணிக் கொள்ளாதீர்கள். உங்களை விடத் தாழ்வான – குறைந்த பொருளாதார நிலையிலுள்ள ஏழைக் குடும்பத்து இளைஞன் ஒருவனை உங்கள் பெண்ணுக்குக் கணவனாக ஏற்றுக் கொள்வீர்களா நீங்கள்?” என்று மெல்ல சிரித்துக் கொண்டே அந்த அம்மாள் முகத்தை உற்றுப் பார்த்தவாறே கேட்டான், அரவிந்தன். அந்த அம்மாளும் சிரித்துக் கொண்டே பதில் கூறலானாள்.
“அரவிந்தன்! என்னைப் பற்றி இந்தச் சந்தேகம் உங்களுக்குத் தோன்றி இருக்கவே கூடாது. பணத்துக்காகவும், பகட்டுக்காகவும் மனிதர்களை மதிக்கிற குணம் என்னிடம் என்றும் இருந்ததில்லை. நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பணக்காரக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்டது போல், என் பெண், பணக்கார குடும்பத்திலிருந்து ஏழைக் கணவனுக்கு வாழ்க்கைப்படட்டுமே! என் பெண் விரும்பாத இடத்தில் அவளை வற்புறுத்தித் தள்ளக்கூடாது என்ற ஒரு நோக்கம் தவிர வேறு ஏற்றத்தாழ்வை நான் பார்க்க விரும்பவில்லை. நீங்கள் என்னவோ பூரணியையும் உங்களையும் தான் மிகவும் முற்போக்கானவர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்திருக்கக் காரணமில்லை. நான் உங்களையெல்லாம் விட முற்போக்கானவள் என்பதைப் பூரணி ஒருவாறு புரிந்து கொண்டிருப்பாள். என் பெண் மாறுபட்ட சூழ்நிலையிலும் பழக வேண்டும் என்பதற்காகத்தான் நான் அவளை ஆண்கள் கல்லூரியில் சேர்த்தேன். உங்கள் பூரணியோ, ‘பெண் மாறுபட்ட சூழ்நிலைகளில் அதிகம் பழகலாகாது’ என்ற கருத்துடையவள். இந்த வயதான கோலத்தையும் நெற்றியில் விபூதிப் பூச்சையும் கண்டு என்னை மிகவும் பழைய காலத்துக்குச் சொந்தமானவளாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது. கல்லூரியில் படிக்கிற வசந்தா மனம் விரும்பி உண்மையான அன்புடன் எந்த இளைஞனோடு பழக நேர்ந்தாலும், அதை வரவேற்று மணம் செய்து கொடுக்கலாம் என்ற அளவுக்கு முற்போக்காக எண்ணி வைத்துக் கொண்டிருந்தவள் நான். அழகு நிறைந்த சந்ததியினரும், வேறுபாடுகளில்லாத சமூக உறவும் வளர்வதற்கு நேர்மையான காதல் மணங்கள் பெரிதும் உதவுகின்றன என்பதை நான் நம்புகிறேன்” என்று இவ்வாறு அந்த அம்மாள் உணர்ச்சிகரமானதொரு சொற்பொழிவு செய்வது போல் மறுமொழி கூறியதைக் கேட்டபோது அரவிந்தனுக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை. ‘இந்தப் பழமையான முதிய தோற்றத்துக்குள் இவ்வளவு புதுமையான இளமையான கருத்துக்கள் ஒளிந்திருக்கின்றனவே’ என ஆச்சரியப்பட்டான். ‘முருகானந்தம் கொடுத்து வைத்தவன் தான்’ என்ற மகிழ்ச்சியில் அவன் மனம் நிறைந்தது. ‘இந்த முருகானந்தம் பயல் பொதுமேடைகளிலும், தொழிற்சங்கங்களிலும் பேசிப் பேசிச் சாதித்த சாதனைகள் கூடப் பெரிதில்லை. வசந்தா என்ற பெண்ணின் மனத்தை இளக்கி நெகிழச் செய்து தன் பக்கமாகத் திருப்பிக் கொண்டானே, இது பேசாமலே சாதித்த மகத்தான சாதனை’ என்று வேடிக்கையாகத் தோன்றிற்று அவனுக்கு. அந்த அம்மாள் மேலும் கூறினாள்.
“ஏழைப்பட்ட வரன் ஆயிற்றே என்று தயங்க வேண்டாம் அரவிந்தன்! உங்களுக்குத் தெரிந்த இடம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். வசந்தாவின் கல்யாணத்துக்கு உங்களையும் பூரணியையும் தான் மலைபோல் நம்பியிருக்கிறேன் நான். நீங்கள் சுட்டு விரலால் காட்டுகிற வரனுக்கு அவளை மணம் முடித்து கொடுத்துவிட நான் தயார்.”
“அப்படியானால் உங்கள் பெண்ணுக்கு இப்போதே திருமணம் முடிந்த மாதிரிதான் அம்மா!” என்று புன்னகையோடு கூறினான் அரவிந்தன். அந்த அம்மாள் முகம் மலர்ந்தது.
“விவரம் சொல்லுங்கள் அரவிந்தன்?”
“நாளைக்குத்தான் கோடைக்கானலுக்கு நீங்களும் வரப் போகிறீர்களே, அம்மா! பூரணியையும் உடன் வைத்துக் கொண்டு அங்கே பேசி முடித்துக் கொள்ளலாம். இப்போது உங்கள் பெண்ணுக்காக நான் கூறப் போகிற வரனைப் பூரணிக்கும் தெரியும்” என்று குறும்புச் சிரிப்பு சிரித்தான் அரவிந்தன். வரனைப் பற்றிச் சொல்லுமாறு மங்களேசுவரி அம்மாள் எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டும் அவன் கூறவில்லை. “அந்த இரகசியத்தை நாளைக்குக் கோடைக்கானலில் தான் வெளிப்படுத்த முடியும்” என்று விளையாட்டுப் பிடிவாதத்தோடு மறுத்துவிட்டான்.
அவர்கள் நேரம் கழிவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்து விட்டார்கள். இரவு நெடுநேரமாகியிருந்தது.
“மாடியறையில் போய்ப் படுத்துக் கொள்ளுங்கள். காலையில் இங்கிருந்தே காரில் கோடைக்கானல் புறப்பட்டு விடலாம்” என்றாள் அந்த அம்மாள்.
“இல்லை! நான் அச்சகத்துக்குப் போய்ப் படுத்துக் கொண்டிருந்துவிட்டுக் காலையில் இங்கே வந்துவிடுகிறேன். அந்தப் பையன் திருநாவுக்கரசுதான் தனியாக இருப்பான். நான் இப்போது அங்கே சென்றால், அந்தப் பையனிடம் இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு அச்சகத்தைக் கவனித்துப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, நாளைக்குப் புறப்பட வசதியாயிருக்கும்” என்று அச்சகத்துக்குக் கிளம்பி விட்டான் அரவிந்தன்.
மறுநாள் காலை கோடைக்கானலுக்குப் புறப்பட்டார்கள் அவர்கள். வானில் மப்பும், மந்தாரமுமாக வெய்யிலே இல்லாமல் பயணம் மிகவும் சுகமாக இருந்தது. மங்களேசுவரி அம்மாள், குழந்தைகள், அரவிந்தன் எல்லோரும் சேர்ந்து வந்ததைக் கண்டபோது பூரணிக்கு, மதுரையே கோடைக்கானலுக்கு வந்துவிட்டது போலிருந்தது. உடனே திரும்பி விடுவதாகச் சொல்லிவிட்டுப் பட்டிவீரன்பட்டிக்குப் போயிருந்த மீனாட்சிசுந்தரம் இன்னும் திரும்பவில்லையாதலால் அன்று தேர்தல் பற்றி முடிவு செய்யவில்லை அவர்கள். அவருடைய வரவை எதிர்பார்த்தனர்.
அன்று மாலையில் முருகானந்தமும், மங்களேசுவரி அம்மாள், வசந்தா, குழந்தைகள் எல்லாரும் ஏரிக்கரைக்கு உலாவப் போயிருந்தார்கள். அரவிந்தனும், பூரணியும் மட்டும் தமிழ் முருகன் கோயில் கொண்டிருக்கும் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்குப் புறப்பட்டுப் போனார்கள். மாலை நேரத்தில் மலைச்சாலையில் நடப்பது இன்பமாக இருந்தது.
பகல் என்னும் கணவனை இழந்த மாலை என்னும் மேல்திசைப் பெண், பால்வடியும் வாயையுடைய பிறை என்னும் பிள்ளையை இடுப்பில் ஏந்தி நின்று, விதவைக் கோலத்தில் புலம்புகிறாற் போல் தோன்றும் மாலைப் போதாக இருந்தது அது. கோடைக்கானலுக்கு வந்தபின் பூரணியின் நிறம் வெளுத்திருப்பதாகவும் அழகு அதிகமாயிருப்பதாகவும் அரவிந்தனுக்குத் தோன்றியது.
“அலைச்சல் அதிகமோ? நீங்கள் கருத்திருக்கிறீர்களே!” என்றாள் பூரணி. “ஆமாம்!” என்று புன்முறுவல் பூத்தான் அரவிந்தன்.
“முன்பு ஒருமுறை நாமிருவரும் திருப்பரங்குன்றம் மலையில் ஏறியது நினைவிருக்கிறதா உங்களுக்கு? நாம் இருவரும் சேர்ந்து செல்லும்போதெல்லாம் உயரமான இடத்தை நோக்கியே ஏறிச் செல்லுகிறோம் இல்லையா?” அரவிந்தனுக்கு மெய்சிலிர்த்தது. எத்தனை அருத்தம் நிறைந்த கேள்வி இது? ‘நாங்கள் இருவரும் உயர உயரப் போவதற்காகவே பிறந்தவர்களா?’ மீண்டும் சிலிர்த்தது அவனுக்கு.
(தொடரும்)
தீபம் நா.பார்த்தசாரதி
குறிஞ்சி மலர்
Comments
Post a Comment