இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 2
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 1 தொடர்ச்சி)
1. மொழியின் சிறப்பு தொடர்ச்சி
“அம்மா” என்று, மக்களுடன் நெருங்கிப் பழகும் விலங்குகளாம் பசுவும் எருமையும் ஆடும் கூப்பிடக் காண்கின்றோம். தமிழில்தான் அம்மா எனும் சொல் முழு உருவுடன் ஒலிக்கப்படுகின்றது. ஆதலின் தமிழே இயற்கையை ஒட்டி எழுந்த உலக முதன்மொழியென்று கூறுதல் சாலும்.
கடலிடையிட்டும் காடிடையிட்டும் மலையிடையிட்டும் வாழ நேர்ந்த காரணத்தால் ஒரு கூட்டத்தினர்க்கும் இன்னொரு கூட்டத்தினர்க்கும் தொடர்பின்றி அவரவர் போக்கில் கருத்தை அறிவிக்கும் மொழியாம் கருவியை உருவாக்கிக் கொண்டனர் மக்கள்.
பேச்சுமொழியை நிலைக்கச் செய்யவும், பேசுவோர் நேரிலின்றிப் பேச்சைக் கேட்கவும் துணைபுரியப் படைத்துக் கொண்ட எழுத்துமொழி பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
கருத்தை அறிவிப்பதற்கு முதலில் ஓவியங்களை வரைந்தனர் என்றும், அவ்வோவியங்களிலிருந்தே பின்னர் எழுத்துமுறை தோன்றிற்று என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தமிழிலும் கண்ணெழுத்து என்னும் பிரிவு சித்திர எழுத்தையே குறிக்கும் என்பர் சிலர்.
மெசொபொடாமியாவின் சுமேரியரும் நீல ஆற்றுச் சமவெளி யின் எகிப்தியரும் பண்டைச் சீனர்களும் ஓவிய எழுத்துமுறையை நன்கு வளர்த்தனர். ஆனால் அவர்கள் பயன்படுத்திய கருவிகள் வெவ்வேறு தன்மையன. சுமேரியர்கள் பசுங் களிமண்ணில் முளைபோன்ற கருவிகளைப் பதித்து எழுத்துகளை உருவாக்கினர். ஆதலின் அது முளை வடிவ எழுத்துமுறை என அழைக்கப்பட்டது. எகிப்தியர்கள் கல்லில் உளிகொண்டு செதுக்கி எழுத்துகளை அமைத்தனர்; அதனைத் திருக்கல் எழுத்துமுறை (Hieroglyph=Sacred Stone) என்றனர். பின்னர்த் துகிலிகையால் பேபிரசு எனப்படும் பொருளில் எழுதத் தொடங்கினர். ஐரோப்பிய நாடுகளில் கல்லிலும் அரக்குப் பாளத்திலும் எழுத்தாணி போன்ற கூரிய கருவியால் எழுதினர். பின்னர் ஆட்டுத் தோலிலும், மரப்பட்டையிலும் பறவை இறகின் அடி முனையால் மைதொட்டு எழுதத் தொடங்கினர். தமிழர்கள் கூரிய முனையுள்ள எழுத்தாணியால் பனையேட்டில் எழுதினர்.
முதலில் தோன்றிய ஓவிய எழுத்து என்பது பொருளைக் குறிக்க ஓவியம் வரைந்த முறையாகும். ஞாயிற்றைக் குறிக்க ஒரு வட்ட வடிவத்தையும், மதியைக் குறிக்க ஒரு பிறை வடிவத்தையும், மரத்தைக் குறிக்க கிளைகளோடு கூடிய அடி மரத்தையும் வரைந்து காட்டினர். வடிவங்களைப் புலப்படுத்தவே முதலில் வரைந்தனர். பின்னர்ச் செயலைக் குறிப்பதற்கு வடிவம் வரையத் தலைப்பட்டனர். நடப்பது போன்ற நிலையிலுள்ள மனித வடிவம் போதலையும், வாயினிடம் உணவு கொண்டு வரும் கை வடிவம் உண்ணுதலையும் குறிக்குமாறு வரைந்தனர். சீனர்கள் நன்மை யைக் குறிப்பதற்கு ஒரு பெண்ணையும், குழந்தையையும் வரைந்தனர்; கிழக்கைக் குறிப்பதற்கு ஞாயிற்றையும் மரத்தையும் வரைந்தனர். (ஞாயிறு தோன்றுங்கால் மரங்களுக்கு மேலே தோன்றி வரும் என்பதாம்.) சீனர்கள் இம்முறையை மேலும் வளர்த்து ஓவியங்களை மாறி மாறிச் சேர்த்துக் கருத்துகள் புலப்படுத்துவதில் வெற்றி கண்டனர். இன்னும் இம் முறையை பயன்படுத்துகின்றனர். உருவப் பொருள்களைக் காட்டும் ஓவியங்கள் சிலவற்றை மாறி மாறிச் சேர்ப்பதால் நாற்பதாயிரம் கூட்டெழுத்துகளைப் பெற்றுள்ளனர். இம்முறையால் சீனநாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்கள் பேச்சுமுறை வேறுபடப் பேசினாலும், வரிவடிவம் ஒன்றாகவே அமைந்துள்ளது. இப்பொழுது நாம் 9 என்று எழுதி ஒன்பது என்று தமிழரும், தொம்மிதி என்று தெலுங்கரும், நவம் என்று வடமொழியாளரும், நவ் என்று இந்தி மொழியினரும், நயின் என்று ஆங்கில மொழியாளரும் கூறுவது போன்று சீனரின் வரிவடிவ மொழியும் ஒலிவடிவ மொழியும் வேறுபட்டுள்ளன. ஒரு பகுதியில் உள்ள சீனர் இன்னொரு பகுதியில் உள்ள சீனர் பேசுவதை விளங்கிக்கொள்ள மாட்டார்; ஆனால் எழுதுவதை அறிந்து கொள்வார்.
மேல் நாட்டில் எழுத்துமுறை தோன்றி வளர்ந்தது இதனின்றும் வேறுபட்டதாகும். சில காலம் பண்டை மக்கள் ஓவியத்தாலும் ஓவியக்கலப்பு முறையாலும் கருத்துகளை அறிவித்து வந்தனர். எனினும் செமிட்டிக்கு இனத்தவர் ஓவிய அடையாளங்களைக் கருத்துகளைப் புலப்படுத்துவதற்குப் பயன்படுத்தாமல் பேச்சுமொழி ஒலிகளை அறிவிக்கப் பயன்படுத்தினர். இம்முறை எழுத்துமுறையிலேயே ஒரு பெரும் புரட்சியை உண்டு பண்ணிவிட்டது. வீட்டைக் குறிப்பதற்கு முதலில் வீட்டையே எழுதிக் காட்டினர். பின்னர் அவ்வீட்டு வடிவம் வீடு என்னும் பொருளைக் குறிக்காமல் வீடு என்னும் சொல்லின் முதல் ஒலியைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. A,B என்னும் ஆங்கில எழுத்துகள் இவ்வாறே பொருளின் வடிவங்களிலிருந்தே தோன்றியனவாம். B என்பது எருதின் தலையைக் குறிக்க எழுதப்பட்ட ஒவியத்திலிருந்து தோன்றியதாகும்.
எழுத்து முறையானது செமிடிக்கு இனத்தவரிடமிருந்து கிரேக்கரிடம் சென்றது. பின்னர் கிரேக்கரிடமிருந்து உரோமானியரிடம் சென்றது. உரோமானியர் வடிவங்களில் சில மாறுதல்களைச் செய்தும் புதிய வடிவங்களைச் சேர்த்தும் எழுத்துமுறையைச் செம்மைப்படுத்தினர். இன்று மேலைநாட்டார் பயன்படுத்தும் எழுத்துமுறை உரோமானியரால் உண்டுபண்ணப் பட்ட முறைதான் என்பர். ஆனால் அவரவரும் அவரவர்க்கு வேண்டும் சில வடிவ வேறுபாடுகளைச் செய்து கொண்டுள்ளனர். ஆதலால்தான் பிரெஞ்சு, செருமன், அங்கேரியன் முதலிய மொழிகள் உரோமானிய எழுத்து முறையையே மேற்கொண்டிருந்த போதிலும் வரிவடிவ வேறுபாடுகள் அம்மொழிகளில் நிலவக் காணலாம்.
பழைய செமிடிக்கு எழுத்துமுறை வலப் பக்கத்திலிருந்து இப்பக்கத்திற்குச் செல்லும் முறையில் எழுதப்பட்டது. ஈபுரு மொழியும், அராபிய மொழியும் இம்முறையில்தான் இன்றும் எழுதப்படுகின்றன. எழுத்து முறையைப் பண்டைய செமிடிக்கு இனத்தவரிடமிருந்து கடன் பெற்ற பண்டைக் கிரேக்கர்கள் எம்முறையில் எழுதுவது என்று உறுதிப்பாடு கொள்ளாமல் வலமிருந்து இடமும் இடமிருந்து வலமும் மாறிமாறி எழுதி வந்தனர். இம்முறையையே எருது உழும் முறை என்று அழைத்தனர். வயலில் ஏர் உழுங்கால் படைச்சால் மாறிமாறி வருவதை அறிவோம் அன்றோ? அப் படைச்சால் போன்று வலப்பக்கமிருந்து இடப்பக்கம் எழுதிச் சென்று பின்னர் அவ்விடப் பக்கத்திலிருந்து திரும்பி வலப்பக்கம் வந்து, பின்னர் அவ்வலப் பக்கத்திலிருந்தே இடப்பக்கம் செல்லுவது ஆகும். பின்னர் இம்முறையை விட்டு இடது பக்கமிருந்து வலது பக்கம் செல்லும் முறையையே நிலையாகக் கொண்டுவிட்டனர். உரோமானியர்கள் இம்முறையையே ஏற்றுக்கொண்டனர். அவர்களிடமிருந்து ஆங்கிலேயரும் பிறரும் கற்றுக்கொண்டனர்.
கிரேக்கர்கள் தமக்குரிய வரிவடிவ முறையொன்றையே கொண்டுள்ளனர்; உருசியமும், சிலேவியரும் (Slavic people) கிரேக்கரிடமிருந்தே எழுத்துமுறையைக் கற்றுள்ளனர்.
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்
Comments
Post a Comment