தமிழ் மட்டும் தானே! – உருத்திரா
07 July 2022 No Comment
தமிழ் மட்டும் தானே!
நம்பிக்கை கொள்!
அது உன்னுள்
ஆயிரம் யானைகள்
பிளிறும் குரல்!
அச்சம் அகற்று!
அதுவே
உன் விரல்நுனியில்
ஒரு விடியல்.
உள்ளம் பிழிதல்
தவிர்த்து விடு!
அதுவே
வழியிடறும் பாறைகள்
தவிடு பொடியாக்கும்.
இதயம் துடிக்கும் போது
உணர்ச்சியை
இளக்கமாய் ஆக்கி
இறுக்கமாய் உடுத்திக்கொள்!
தளர்வுகள் ஏதும்
தலை காட்டாது ஓடும்.
சொற்கள் தோறும்
கற்கள் பிளந்து
உறுதியைக்காட்டு!
இமயங்கள் கூடத் தன்
மகுடங்கள் இழந்து
மண்டியிடும் அறிவாய்!
மனிதா!மனிதா!
மந்திரம் சொல்லி உனை
மடக்கும் மொழியை
உடைக்கும் ஓரொலி உண்டு
அதுவே நம்
தமிழே தமிழே
தமிழ் மட்டும் தானே!
அட! அந்தக் கடவுள்தனை
கையில் எடு!
அதன்
கருத்தினில் நுழை!
அங்குக் கருவறையில்
நீயே ஒளி!
கரு மந்திரம் உன்னிடம் உண்டு
இந்த இருள் மந்திரம்
உனக்கேன் உணர்?
அறிவே உன் “அறிவு.”
அதை அறியும் வரை
இந்தக் கற்கள் எல்லாம்
உன் எல்லைக் கற்கள்!
அறிவின் சிகரம் நீ
தொட்டபின்னே
உனக்கு
வருணம் இல்லை.
வகுப்புகள் இல்லை.
பிளவுகள் இல்லை.
பித்தங்கள் இல்லை.
தெளிவே உந்தன் கிழக்குத் திசை.
தீர்வே உந்தன் மேற்குத் திசை.
தெற்கு எல்லாம்
நிமிர்ந்து நின்றால்
வடக்கின் ஆணவம்
இங்கே இல்லை.
சோழிகள் குலுக்கி
குருவும் சனியும்
பெயர்ந்தது என்பார்.
பெயர்ந்து வீழ்வதோ
நம்முள் இருந்து
நம்மைக் கட்டிய
கூடு எனும் வீடு.
கூர் தீட்டும் அறிவை
மழுங்க வைக்கவே
இங்கு
மலிந்து கிடக்கும் புராணங்கள்.
உலகத்தமிழனுக்கு
வேலிகள் இல்லை
வேதனை இல்லை.
கைபர் போலன்
கணவாய் வழியே
வந்த “பேரிடரே” நம்
வரலாறு சிதைக்கும்
நச்சுப்பேய்கள்.
அந்த
நரித்தனம் அழிக்க
நம்மிடம் இன்னும்
இங்கே இருப்பது
தமிழே! தமிழே! தமிழ் மட்டும் தானே!
- உருத்திரா
Comments
Post a Comment