அறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே!: 5/8
(ஏ, தாழ்ந்ததமிழகமே! 4/8 தொடர்ச்சி)
[1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.]
அவர் செய்தது
நம்பத் தகாதவற்றை நம்புவதா? நம்பும்படி நாட்டு மக்களை நிருப்பந்திப்பதா? இதைவிட நயவஞ்சகச் செயல் வேறொன்றுமில்லை. அந்த உலகமே வேண்டாமென்று இந்த உலகத்துக்கு வந்தார். வந்து கடவுள் முதற் கொண்டு கருப்பத் தடை வரைக்கும், காதலிலிருந்து விதவை மறுமணம் வரைக்கும், சுண்ணாம்பு இடிக்கிற பெண்ணின் பாட்டிலிருந்து ஆலைச்சங்கின் நாதம் வரைக்கும், அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானதை, கண்டுகளிப்பதை, நாம் பாடவேண்டுமென்றிருந்ததைப் பாடினார். பாடுகிறார். நாம் பார்ப்போம்!
இந்தக் கட்டழகியின் கண்ணீருக்காவது ஒரு பாட்டுப் பாட வேண்டும் என்று நினைப்போம். ஆனால் பாட முடியாது, அதைப் பாரதிதாசன் பாடுவார். நமது வேலையை அவர் செய்து தருகிறார்.
நாம் விதவைகளைப் பார்க்கிறோம், அவர்கள் பூவணியாத கோலத்தைப் பார்க்கிறோம்; அவர்கள் கன்னத்தில் வழிந்து காய்ந்துபோன நீரைப்பார்க்கிறோம். தேம்புதலைக் கேட்கிறோம். மமதையாளர் அவர்களுக்கு மணவாளர்களும் தேவையா என்று சொல்லுவதைக் கேட்கிறோம். அவர்களோ மாளவேண்டிய வயதில் காமரசம் பருகுவதற்காகக் கன்னிகைகளைத் தேடுவதைப் பார்க்கிறோம்; தாத்தாவுக்கு வாழ்க்கைப் பட்டபெண் தாழ்வாரத்திலே தனியே புரள்வதைப் பார்க்கிறோம்; அவளது கண்ணீர் தலையணையை நனைத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம்; பார்த்துக் கருத்தை வெளியிடக் கவிதைகள் கட்டலாமா என்று நினைக்கிறோம். ஆனால், முடியவில்லை. கவிஞர் பாரதிதாசன் அதைக் கவிதையால் பாடுகிறார். பாடி. ‘இதைத்தானே தம்பி நீ பாட வேண்டுமென்று நினைத்தாய்?‘ என்று காட்டுகிறார். நாம் கண்டு மகிழ்ச்சியடைகிறோம். அவர் கவிதைகளிலே அந்த உலகத்தைப் பற்றியோ, அந்த வாழ்வைப் பற்றியோ இருக்காது.
காதற்ற ஊசி
பட்டினத்தடிகள் காலத்திலிருந்துதான் மாய வாழ்க்கை பற்றி மக்கள் அதிகம் நினைக்க ஆரம்பித்தனர். ‘காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே‘ என்ற மாயா வாழ்க்கைத் தத்துவம் இன்றும் உலவுகிறது. நாடகங்களிலே நீங்கள் இதைப் பார்த்திருக்கலாம். அங்கிருந்து அரசன் வருவான். அரசனைப் பார்த்து ஒருவன் கேட்பான், ‘இந்த அரண்மனை யாருக்குச் சொந்தம்; இந்த நந்தவனம் யாருக்குச் சொந்தம்? இரும்புப் பெட்டி யாருக்குச் சொந்தம்? இரும்புப் பெட்டியிலுள்ள 20 இலட்சம் யாருக்குச் சொந்தம்? என்று. அரசன், ‘யாருக்கும் சொந்தமல்ல‘ என்று சொல்லுவான். உண்மையிலே அவன் இறந்த பிறகு அவன் மகன் அனுபவிப்பான்; மகன் இல்லாவிட்டால் அவனது மருமகன் அனுபவிப்பான்; மருமகன் இல்லாவிட்டால் அவனது வாரிசுகளில் ஒருவன் அனுபவிப்பான். வாரிசுமில்லா விட்டால் தருமகர்த்தாக்கள் அனுபவிப்பார்கள். தருமகர்த்தாக்கள் இல்லாவிட்டால், நிரந்தர தரும கருத்தாவாகிய நமது சர்க்கார் அனுபவிப்பார்கள். இதை மக்கள் உணருவதில்லை. உணர அவர்கள் மனம் இடம் கொடுக்காது.
அந்த ‘மாயம்’ எந்த மயக்கத்தை மக்களிடம் உண்டாக்கிற்று என்றால் நாற்பது வயது ஆளைப் பார்த்து ‘என்ன சௌக்கியமாயிருக்கிறீ்ர்களா?’ என்றால், சௌக்கியமா யிருக்கிறேன் இல்லை; என்று மேல் இச்தாயி இறங்கி கீழ் இச்தாயியிலே சொல்லுவான். அப்படிச் சொல்வதிலே சுரங் குறைந்திருக்குமென்பதோடு மட்டுமல்ல; பேச்சுடன் பெருமூச்சும் கலந்து வரும். அந்தக் கலப்புக் கேட்டவனுக்கே பயமும் கவலையும் உண்டாக்கி விடும். நல்லாயிருக்கிறேன் என்று சொன்னால் என்ன? மேல் நாடுகளிலே ஆங்கிலத்தில் ஃகெள டு யு டு என்றால், உடனே ஓ,கே, (நன்றாயிருக்கிறேன்) என்று சொல்லுவார்கள். அதனால்தான் அவர்கள் வாழ்கிறார்கள். நாம் ஏதோ இருக்கிறோம். பத்து வயதிலே பரதேசியாகி, பரலோகத்தைப்பற்றி. மாயத்தைப்பற்றி ‘காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்று பாடுகிறோம். இந்த வாழ்வு, எத்தனை நாளைக்கு ஐயா? எல்லாம் மாயவாழ்வு; இது சதம் என்றா கருதுகிறீர்கள் என்று உண்மையிலேயே, தெரிந்தோ தெரியாமலோ எண்ணுகிறவர்கள் ஏட்டிலே தீட்டுகிறவர்கள் நம்மவரில் அநேகம் பேர் இருக்கின்றனர்.
அழைத்தால் ‘சிவனே. அப்பா உனது பாதாரவிந்தம் எப்போது கிடைக்கும்?’ என்று சிலைக்கு முன் கதறுகிற ஒரு சைவரிடம் ஒரு வேளை பரமசிவன் போல் யாராவது முன்னால் வந்து ‘பக்தா! பயப்படாதே; எழுந்திரு. உனது சிவநேசத்தைக் கண்டு உள்ளம் பூரித்தேன். இன்று முதல் நீ என்னுடன் இரண்டறக் கலந்து கொள்ளலாம் வா!‘ என்று அழைத்தால் போவதற்கு அவர் தயாராயிருப்பாரா? கேட்கிறேன், என்ன சொல்லுவார் அப்போது? ‘பிரபோ! தாங்கள் காட்சியளித்தது போதும்‘ என்பார். அப்பொழுதுதான் பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் தன் மகன், பி.எல். முதல் வகுப்பிலே பாசாக வேண்டாமா, என நினைப்பார். தன் ஒரே மகளுக்கு நல்ல இடத்தில் மணம் முடித்து வைக்க வேண்டுமே என்று நினைப்பார்; போன வருடம் பாங்கிலே போட்ட 9 ஆயிரம் உரூபாய் எப்போது 10 ஆயிரமாக ஆகும் என்று எண்ணுவார், ஈசனைப் பற்றிய எண்ணம் தோன்றாது. உண்மையில் அவர்கள் பக்தியில் அருத்தமிருக்கிறதா? மாய வாழ்விலே பேச்சில் நிசம் இருக்குமா என்றால் இல்லை. இவையெல்லாம் மக்களை மயக்கி. அவர்கள் உழைப்பிலே வாழ்வதற்காக நயவஞ்சர்களால் வகுக்கப்பட்ட சூழ்ச்சியான வழிகள். மக்கள் இதை நம்பி இந்த வழியிலே போய்த் தடுமாறுகிறார்கள்.
புரட்சி மனப்பான்மையைத் தீய்த்தவைகள்
விழுப்புரம் சந்திப்பிலிருந்து கொண்டு பாண்டிக்குப் போகிறவன் வழி பார்ப்பது போலவும்; திருச்சி சந்திப்பினிலுள்ளவன் மதராசுக்குப் போவதற்கு விளிப்பது போலவும், மக்கள் பிறந்தவுடனே அண்ணாந்து மேலே பார்த்துக் கொண்டு, ‘அப்பா! இதைவிட்டு எப்போது அந்த உலகத்திற்கு வருவேன்?‘ என்று, இந்த உலகத்தை ஒரு சந்திப்பாக்கி விட்டார்கள். சமணர்கள் காலத்தில் நிலையாமைத் தத்துவம் கொஞ்சம் வளர ஆரம்பித்தது. மணிமேகலையில் ஓர் இடத்தில் யாக்கை நிலையாமை பற்றி ஆசிரியர், சுதமதியின் வாயின் மூலம் கூறியிருக்கிறார். சுதமதி. மணிமேகலையின் தோழி. மலர்வனத்திலே மணிமேகலையைக் கண்ட அரசகுமாரன் (உதய குமாரன்) மானே! மயிலே! மரகதமே! என்று கூறுகின்றான். கூறிக் கொண்டே அருகில் வருகிறான். அப்போது சுதமதி கூறுகிறாள்.
“வினையில் வந்தது; வினைக்கு விளைவாரவது
புனைவன நீங்கிற் புலால்புறத் பறந்திடுவது;
மூப்புவிளி வுடையது; தீப்பிணி யிருக்கை;
பற்றின் பற்றிடங் குற்றக் கொள்கலம் –
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து,” (மணிமேகலை) “மானே என்கிறீரே. அங்கே என்ன இருக்கின்றது? தோல், தோலைப் பிய்த்தால் இரத்தம், சீழ்; இவற்றிலா காமரசம் பருகலாமென்று வந்தீர்?” என்று யாக்கை நிலையாமையைப் பற்றிக் கூறுகிறாள். காமவேகத்தை அடக்குவதற்காகச் சுதமதி அரசகுமாரனிடம் யாக்கை நிலையாமையைப்பற்றிக் கூறினதுபோல, மக்களின் மனோவேகத்தை, அடக்க, மாயா வாழ்வைப் புகுத்தினார்கள் சில நயவஞ்சகர்கள்; எத்தர்கள் நல்லவர்களைப் போல நடித்தார்கள், ஏமாளிகள் இந்த லோகத்தில் கஷ்டப்படாமல், அந்த லோகத்தில் சுகம் கிடைக்கும்; இந்த லோகத்தில் நடக்கிற அநியாயங்களுக்கு, அந்த லோகத்தில் நீதி கிடைக்கும் என்றெண்ணி, எவ்வளவோ கொடுமைகளை எவர் இழைத்தாலும் அது எம்பெருமான் இட்ட கட்டளை என்று சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அனுபவித்தார்கள். அனுபவிக்கிறார்கள். மாயா வாழ்வு, விதி, அந்த உலகம்(லோகம்) என்பவையெல்லாம் புரட்சி மனப்பான்மையைத் தீய்த்து விட்டன.
வேறு நாடாயிருந்தால்?
இல்லாவிட்டால், 150 ஆண்டுகளாக இவ்வளவு பெரிய நாடு, பரந்ததொரு பரப்பளவைக் கொண்ட நாடு, பலப்பல புராணப் பெருமக்களைக் கொண்ட நாடு அந்நியனுடைய ஆட்சியிலே இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது பார்த்திருக்கிறீர்களா? மேல்நாடுகளில் 25 ஆண்டுகளுக்கு ஒரு தடவை புரட்சி என்று படிப்போம். கலையிலே புரட்சி; மதத்திலே புரட்சி; நடையுடை பாவனையிலே புரட்சி, பொருளாதாரத்தில் புரட்சி; எல்லாவற்றிலும் புரட்சி என்று படிப்போம். இங்கு ஏதாவது உண்டா என்றால் இல்லை (இன்று இல்லாவிட்டால் நாளையாவது ஏற்படுமா?)
வங்கத்திலே பஞ்சம் ஏற்பட்டது. பட்டினியால் பல இலட்சம் பேர் பிணமாயினர். அந்தப் பிணத்தை நாயும், நரியும் இழுத்தன என்ற இந்தக் காட்சி, என்ற இந்த நிலை மேல்நாடுகளிலே, வேறு நாடுகளிலே, மட்டும் ஏற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்; அப்பொழுதே புரட்சி நடந்திருக்கும். ஆனால் துருப்பாக்கியமான இந்நாட்டிலே அது கிடையாது; ஏன் ஏற்படவில்லை? ஆங்கிலேயனுடைய ஆயுதங்களுக்கஞ்சியா? இல்லை. புரட்சி மனப்பான்மையையே நமது கவிதைகளும், காவியங்களும் அடக்கிவிடுகின்றன; ஆதலால்தான்.
(தொடரும்)
ஏ, தாழ்ந்த தமிழகமே!
பேரறிஞர் அண்ணா
Comments
Post a Comment