Skip to main content

தமிழணங்கே! தமிழணங்கே! – புதேரி தானப்பன்

அகரமுதல




தமிழணங்கே!  தமிழணங்கே!


நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே
தமிழணங்கே உன்.
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!



இந்தப் பாடல் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்களால் 1891 ஆம் ஆண்டு பாடப்பட்டது. அவர், ‘மனோன்மணியம்’ என்னும் கவிதை வடிவிலான நாடக நூல் எழுதினார். அந்த நூலின் பாயிரத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தாக இப் பாடலைப் பாடினார். 

அதன்பிறகு ஓரிருவர் கவிதை நடையில் நாடக நூல் எழுதினர். ஆயின் அவை எதுவும் நாடக நூல் என்னும் சிறப்பைப் பெறவில்லை. எனவே, ‘மனோன்மணீயம்’ என்னும் நூல் மட்டுமே தமிழில் உள்ள ஒரே நாடக இலக்கியமாக இன்றுவரை  திகழ்கிறது.

இப் பாடலின் பொருள்:
நீரால் நிறையப் பெற்றது கடல்.
அந்தக் கடலை ஆடையாக உடுத்தியுள்ளது நிலம் என்னும் பெண்ணாள்.
இத்தகைய பெண்ணுக்கு அழகு ஒளிரும் சிறப்பு மிக்க முகமாக பரதக் கண்டம் என்னும் நம் இந்திய நாடு திகழ்கிறது. 
இந்த இந்தியத் திருநாட்டில் அமைந்துள்ளது, தட்சிண பீடபூமி எனப்படும் தென்னிந்தியா.
இத் தென்னிந்தியாவில் திராவிட நாடு உள்ளது.
இது நல்லதோர் அழகிய திருநாடாகிய தமிழ்நாடு ஆகும்.
இத் தமிழ்நாடு சிறிய பிறைச் சந்திரனைப் போல மிகவும் பொருத்தமான நெற்றியாகவும் அந்த நெற்றியில் வைக்கப்பட்டுள்ள மணம் மிகுந்த பொட்டாகவும் திகழ்கிறது.
அந்தப் பொட்டிலிருந்து நல்ல வாசனை வீசுகின்றது.
அந்த வாசனை போல அனைத்து உலகமும் இன்பம் பெறுகின்றது.
இப்படி எல்லாத் திசைகளிலும் புகழ்மணம் வீசுகின்ற பெருமை மிக்கவள் தமிழ்மகள்.
அத்தகைய சிறப்பு மிக்க தமிழ்மகளே!
நீ எப்போதும் அழகுடனும் இளமையுடனும் இருக்கின்றாய்!
உனது சிறப்பு மிக்க திறமையை வியக்கின்றோம்!
செயல்களை மறந்து உன்னை வாழ்த்துகிறோம்!
வாழ்த்துகிறோம்!
வாழ்த்துகிறோம்!


















































 முனைவர் புதேரி தானப்பன் புது தில்லி. 

நன்றி: தமிழணங்கு, மலர் 1, இதழ் 1

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்