ஊரும் பேரும்:இரா.பி.சேது(ப்பிள்ளை):– 2
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 1 தொடர்ச்சி)
ஊரும் பேரும் – 2
பழங்காலத்தில் தமிழ் நாட்டில் மரம் செறிந்த காடுகள் மலிந்திருந்தன. பண்டைத் தமிழரசர்களாகிய கரிகால் வளவன் முதலியோர் காடு கொன்று நாடாக்கினர் என்று கூறப்படுகின்றது.19 ஆயினும், அந் நாளில் இருந்து அழிபட்ட காடுகளின் தன்மையைச் சில ஊர்ப்பெயர்களால், உணரலாம். இக்காலத்தில் பாடல் பெற்ற தலங்கள் என்று போற்றப்படுகின்ற ஊர்கள் முற்காலத்தில் பெரும்பாலும் வனங்களாகவே இருந்தன என்பது சமய வரலாற்றால் அறியப்படும். சிதம்பரம் ஆதியில் தில்லைவனம்; மதுரை கடம்பவனம்; திருநெல்வேலி வேணுவனம். இவ்வாறே இன்னும் பல வனங்கள் புராணங்களிற் கூறப்படும்.20
தமிழ் நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களக்காடும் பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும்.21 ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை “ஆரங்கணணிச் சோழன்” என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிக்கின்றது. அந்நாளில் ஆத்தி மரம் காடு நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.22 இக் காலத்தில் ஆர்க்காடு என்பது ஒரு நாட்டுக்கும் நகருக்கும் பெயராக வழங்குகின்றது. ஆர்க்காட்டுக்கு அணித்தாக ஆர்ப்பாக்கம் என்ற ஊர் உள்ளது. அன்றியும் சோழ நாட்டின் பழைய தலைநகரம் ஆரூர் ஆகும். அது பாடல் பெற்ற பின்பு திருவாரூர் ஆயிற்று.
காடு என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டில் பல உள்ளன. தொண்டை நாட்டில் பழையனூருக்கு அணித்தாக உள்ளது திருவாலங்காடு23. பொன்னேரிக்கருகே உள்ளது பழவேற்காடு. கருவேல மரங்கள் நிறைந்திருந்த பழமையான காடு பழவேற்காடு எனப்பட்டது போலும். அவ்வூரில் வந்து குடியேறிய ஐரோப்பியர் அதனைப் புலிக் காடாக்கி விட்டனர்.24 சோழ நாட்டில் பாண்டியன் நெடுஞ். செழியனுக்கும் ஏனைய தமிழரசர் இருவருக்கும் பெரும் போர் நிகழக் கண்ட காடு தலையாலங்காடாகும்.25 இன்றும், சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடுசூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என வழங்குகின்றது.26 நெல்லை நாட்டில் பச்சையாற்றுப் போக்கிலுள்ள களக்காடு என்ற ஊர் மிகப் பழமை வாய்ந்தது. களாச் செடி நிறைந்திருந்த இடம் களக்காடு என்று பெயர் பெற்றது. தென்பாண்டி நாட்டிற்கும் மலையாளத்திற்கும் இடையேயுள்ள நெடுஞ்சாலையில் பச்சையாற்றின் கரையில் பாங்குற அமைந்துள்ள களக்காடு என்னும் ஊர், மலை வளமும், நதி வளமும் உடையதாக விளங்குகின்றது.27
காவு
கா என்னும் சொல் சோலையைக் குறிக்கும். அது காவு எனவும் வழங்கும். மேற்குத் தொடர் மலையில் செங்கோட்டைக்கு அருகே ஆயிரங் காவு என்னும் ஊர் உள்ளது. ஆரியன்28 என்பது ஐயனாருக்குரிய பெயர்களில் ‘ ஒன்று. ஐயனாரை மலையாள நாட்டார் ஐயப்பன் என்பர்.
ஆரியங் காவில் ஐயப்பன் வழிபாடு இன்றும் சிறப்பாக நடைபெறுகின்றது. மேற்குத் தொடர் மலைச்சாரலில் அமைந்த நெடுஞ் சோலையில். ஐயப்பன் கோயில் கொண்டமையால் அவ்வூர் ஆரியங்காவு என்று பெயர் பெற்றதென்பது நன்கு விளங்குவதாகும்.
தொண்டை நாட்டில் திருமாலுக்குரிய திருப்பதிகளுள் ஒன்று திருத்தண்கா எனப்படும். அழகும் குளிர்மையுமுடைய அக் காவில் நின்றருளும் பெருமானை,
“விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண்காவில் .
வெஃகாவில் திருமாலை”
என்று திருமங்கை ஆழ்வார் போற்றினார். அவர் திருவாக்கின் பெருமையால் “விளக்கொளி கோயில்” என்பது திருத்தண்காவின் பெயராக இக் காலத்தில் வழங்குகின்றது. இன்னும், காவளம்பாடி என்பது சோழ நாட்டிலுள்ள திருமால் திருப்பதிகளுள் ஒன்று. சோலை வளம் பொருந்திய இடத்தில் அமைந்த அப் பாடியைக் “காவளம் பாடி மேய கண்ணனே? என்று பாடினார் திருமங்கை ஆழ்வார்.29
மரங்களும், செடி கொடிகளும் செழித்தோங்கி வளரும் சோலையைப் பொழில் என்னும் அழகிய சொல் குறிப்பதாகும். ஆல மரங்கள் செறிந்து, பொழில் அழகிய சோலையாக விளங்கிய ஓர் இடத்தைத் திருவாலம் ‘ பொழில் என்று தேவாரம் பாடிற்று. ஆலம் பொழிலில் அமர்ந்த பெருமானைத் திருஞானசம்பந்தர் தெள்ளிய பாமாலை அணிந்து போற்றியுள்ளார். இன்னும், மலைவளம் வாய்ந்த திருக்குற்றால மலையின் அடிவாரத்தில் கண்ணினைக் கவரும் தண்ணறுஞ் சோலைகளின் நடுவே, ஓர் அழகிய தள அமைந்திருக்கிறது. அவ்வூரின் இயற்கை நலத்தினைக் கண்டு இன்புற்ற பண்டைத் தமிழர் அதற்குப் பைம்பொழில் என்று பெயரிட்டார்கள்.30 அவ் வழகிய பெயர் இக் காலத்தில்: பம்புளி என மருவி வழங்குகின்றது.
சோலையைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல் தண்டலை என்பதாகும். அது தண்டரை எனவும், தண்டலம் எனவும் வழங்கும். திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த குழித்தலை தண்டலை என்னும் ஊர் குழித்தண்டலை என்று முன்னாளில் வழங்கிற்று.3்1 காவிரிக்கரையில், பள்ளத்தாக்கான ஓர் இடத்தில், செழுஞ் சோலைகளின் இடையே எழுந்த ஊரைக் குழித் தண்டலை என்று அழைத்தனர் பண்டைத் தமிழர். இன்னும் தொண்டை நாட்டில் பூந்தண்டலம், பழந்தண்டலம், பெருந்தண்டலம் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் சோலை சூழ்ந்த ஊர்களாக முற்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும்.
- ஊரும் பேரும்
இரா.பி.சேது(ப்பிள்ளை)
(தொடரும்)
உடுக்குறி விளக்கங்கள்
19. “காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கி” – பட்டினப்பாலை, 283.
20. தில்லை என்பது ஒரு வகை மரம்; “தில்லை யன்ன புல்லென் சடை” – புறநானூறு, 252. திருநெல்வேலியின் வரலாற்றைக் கூறும் புராதனமாயுள்ள புராணம் வேணுவ புராணம் எனப்படும். அது நானூற்று ஐம்பத்து நான்கு திருவிருத்தங்களால் ஆயது. திருநெல்வேலிக் கோவிலில் பள்ளமான இடத்திலிலுள்ள சுயம்பு வடிவம் இன்றும் வேணுவன லிங்கம் என்று அழைக்கப் படுகின்றது.
21. “ஆரே தாதகி சல்லகி ஆத்தி” – பிங்கல நிகண்டு. –
22. இதனை ஆற்காடு என்று கொண்டு, ஆறுகாடு அங்கிருந்தனவென்று புராணம் கூறும்; வடமொழியில் சடாரண்யம் என்பர். அது குறித்து அறிஞர் காலுடுவெல் கூறும் குறிப்பை அவரது :ஒப்பிலக்கண: முகவுரையிற் காண்க.
23. தேவாரத்தில் பழையனூர் ஆலங்காடு என்று இவ்வூர் குறிக்கப்படுகின்றது.
24. ஆங்கிலத்தில் வழங்கும் பெயர் Pulicat என்பதாகும்.
25. தலையாலங்கானம் எனவும் வழங்கும். அங்கு நிகழ்ந்த போரில் வெற்றி பெற்ற பாண்டியன், தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் எனச் சங்க இலக்கியத்திற் பாராட்டப்படுகின்றான்.
26. சென்னை மாகாணப் பணியாட்சிக் கையேடு தொ.3, ப.1032(M.M.VOLUME III p. 1032).
27. மேற்குத் தொடர் முன்பின். அடிவாரத்தில் பச்சை யாற்றங்கரையில் உள்ளது இவ்வூர்.
28. தமிழ்நாட்டில் ஐயனார், அரிகரபுத்திரன், சாசுதா முதலிய பெயர்கள் ஆரியனைக் குறிக்கும்-கந்த புராணம், மகா சாத்தாப்படலம் பார்க்க.
29. தேவாரப் பாடல் பெற்ற காவுகள் பின்னாக் கூறப்படும்.
30. S.S.I.VOL IV P.326
31. 169/1914.
Comments
Post a Comment