Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 62

 அகரமுதல




(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  61 தொடர்ச்சி)


குறிஞ்சி மலர்

அத்தியாயம் 22 தொடர்ச்சி


“நானே தபாலாபீசுக்குப் போய்விட்டு வருகிறேன் அம்மா!” என்று மீனாட்சிசுந்தரம் புறப்பட்டு விட்டார். முருகானந்தம் வசந்தா உறவு மிகக் குறுகிய காலத்தில் உள்ளுக்குள்ளே கனிந்திருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. கடந்த தினங்களில் வசந்தாவின் உற்சாகத்துக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பது இப்போது அவளுக்கு விளங்கிற்று. அன்று அவள் பெயருக்கு வந்திருந்த கடிதத்தின் முகவரி எழுத்து இப்போது பூரணிக்கு மறுபடியும் நினைவு வந்தது. அது முருகானந்தத்தின் எழுத்தே என்பதையும் அவளால் உறுதி செய்ய முடிந்தது. ‘இந்த உறவை மங்களேசுவரி அம்மாள் எப்படி வரவேற்பார்கள்?’ என்ற கவலையில் மூழ்கிற்று அவள் மனம். ‘முருகானந்தம் தங்கமான பிள்ளைதான். ஆனால் செல்வக் குவியலின் மேல் வாழும் வசந்தாவின் குடும்பமும், முருகானந்தத்தின் ஏழைக் குடும்பமும் எப்படி ஒட்டுறவுப் பெற முடியும்?’ என்று தயங்கிற்று பூரணியின் மனம். கதைகளில் நம்ப முடியாதது போலப் படிக்க நேர்கிற நிகழ்ச்சி ஒன்றைத் திடீரென்று வாழ்க்கையில் கண்ணெதிரே சந்தித்து விட்டாற் போலிருந்தது பூரணிக்கு. மனங்கள் நெகிழ்ந்து ஒன்று சேர்வதே ஒருவகையில் தற்செயலாகவும் விரைவாகவும் நிகழ்கிற நிகழ்ச்சியாகப்பட்டது அவளுக்கு. முதல்நாள் காலையில் தன்னுடைய உள்ளத்தில் தவிர்க்க முடியாத வகையில் அரவிந்தனைப் பற்றிய நினைவுகள் உண்டானதையும் எண்ணினாள். ‘பெண்கள் மிக விரைவாக மனம் நெகிழ்ந்து விடுவது அவர்கள் குற்றமில்லை, நெகிழ்வதற்கென்றே நீ எங்களைப் போன்ற மெல்லியவர்களின் மனங்களைப் படைத்திருக்கிறாய், இறைவா! அல்லது நெகிழச் செய்வதை இயல்பாகப் படைத்திருக்கிறாய்!’ என்று நினைத்தாள் அவள். பத்து நிமிடங்களில் தந்தி கொடுத்துவிட்டுத் திரும்பி வந்துவிட்டார் மீனாட்சிசுந்தரம்.

எல்லாருமாகச் சேர்ந்து சாப்பிட உட்காரலாமென்று வசந்தாவையும், முருகானந்தத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் பூரணி. சிறிதுநேரத்தில் சிரிப்பும் கும்மாளமுமாகப் பேசிக் கொண்டே அவர்கள் இருவரும் வந்து சேர்ந்தார்கள்.

“இவர் இதற்கு முன்னால் கோடைக்கானலுக்கு வந்ததில்லையாம் அக்கா! அழைத்துக் கொண்டு போய் எல்லாம் சுற்றிக் காண்பித்தேன். சாயங்காலம் ‘பில்லர் இராக்சு‘ மலைப்பகுதிக்குப் போகத் திட்டம் போட்டிருக்கிறோம்” என்றாள் வசந்தா.

“ஆகா! தாராளமாகப் போய்ப் பார்த்து விட்டு வாருங்கள். என்னை மட்டும் கூப்பிடாதீர்கள். எனக்கு வர ஒழிவு இருக்காது. புத்தகங்கள் படிக்க வேண்டும்” என்று கூறிவிட்டு மெல்லச் சிரித்தாள் பூரணி. முருகானந்தத்தின் முகத்தில் மிக மென்மையானதும் நுணுக்கம் நிறைந்ததுமான புதிய அழகு ஒன்று வந்து பொருந்தியிருப்பதைப் பூரணி கூர்ந்து பார்த்து உணர்ந்தாள். ஓர் இளம் பெண்ணின் உள்ளத்தை வெற்றி கொண்டு விட்டோம் என்ற பெருமையில் ஆண் பிள்ளைக்கு உண்டாகிற இன்பமயமான கருவத்தின் அழகா அது? பகல் உணவு முடிந்ததும் கோடைக்கானலுக்கு அருகில் பட்டி வீரன் பட்டியில் தமக்கு நெருங்கிய நண்பராகிய காப்பித் தோட்ட முதலாளி ஒருவர் இருப்பதாகவும், போய் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு மாலை ஏழு மணிக்குத் திரும்பி விடுவதாகவும் கூறிவிட்டு மீனாட்சிசுந்தரம் காரில் புறப்பட்டுப் போய்விட்டார். பூரணி புத்தகத்தில் மூழ்கி இருந்தாள்.

மாலை மூன்றரை மணிக்கு வசந்தாவும், முருகானந்தமும் அவளிடம் வந்து சொல்லிக் கொண்டு சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள். வசந்தா அத்தனை அழகாக அலங்காரம் செய்து கொண்டு பூரணி இதற்கு முன்பு பார்த்ததில்லை. முருகானந்தம் தனது முன் நெற்றியில் வந்து அடங்காப்பிடாரி போல் சுருண்டிருக்கிற தலை மயிரை அன்று வெளியே புறப்படுகிறபோது அழகாக வாரி விட்டுக் கொண்டிருந்த அதிசயத்தையும் பூரணி கவனித்தாள். ‘காதல் என்னும் உணர்வுக்கு இத்தனை தூரம் மனிதர்களைக் குழந்தைத்தனம் நிறைந்தவர்களாக்கி விடுகிற சக்தியும் உண்டோ?’ என்று எண்ணி வியந்தாள் அவள். ‘இந்தக் குழந்தைகளின் இந்தப் பிள்ளைத்தனமான அன்பை, ஏழ்மை ஏற்றத்தாழ்வுகள் இடையே புகுந்து கெடுத்து விடக்கூடாதே’ என்ற ஏக்கமும் உண்டாயிற்று பூரணிக்கு. பங்களா வாசலில் இறங்கி, பட்டுப் பூச்சிகள் பறந்து போவதைப் போல் அவர்கள் போவதைப் பார்த்து மனம் மலர்ந்தாள் பூரணி. நியாயமான காதல் உணர்வு என்பது உலகத்துக்கே அழகு உண்டாக்குகிற ஒரு புனிதசக்தி என்று அந்தச் சமயத்தில் அவளுக்குத் தோன்றிற்று. படிப்பு, பண்பு, புகழ், உலகம் மதிக்கிற பெருமை எல்லாமாக ஒன்று சேர்ந்து எந்த ஓர் அன்பு விளையாட்டைத் தானும் அரவிந்தனும் விளையாட முடியாமல் செய்திருந்தனவோ, அந்த விளையாட்டை முருகானந்தமும் வசந்தாவும் கண் காண விளையாடத் தொடங்கி விட்டதைப் பூரணி உணர்ந்தாள்.

மீனாட்சிசுந்தரம் கோடைக்கானலிலிருந்து கொடுத்த தந்தி அன்று இரவு பத்து மணி சுமாருக்கு அரவிந்தனுக்குக் கிராமத்தில் கிடைத்தது. மூன்று கல் தொலைவுக்கு அப்பால் தான் தந்தி நிலையம் இருந்தது. தந்தி அங்கே வந்து, அங்கிருந்து சைக்கிளில் ஆள் கொண்டு வந்து தர வேண்டும், அரவிந்தனுடைய கிராமத்துக்கு. எனவே மெல்லவும் தாமதமாகவும் அந்தத் தந்தி வந்தது அவனுக்கு வியப்பை உண்டாக்கவில்லை.

‘நீ அருகில் இல்லாமல் இவளைச் சம்மதிக்கச் செய்ய முடியாது போலிருக்கிறது. ஒரு நடை வந்து விட்டுப் போ’ என்ற கருத்துத் தோன்ற அமைந்திருந்தது தந்தி வாசகம். ‘நான் அருகில் இல்லாமல் என்னைக் கலந்து கொள்ளாமல் அவள் அவருக்குச் சம்மதம் தரவில்லை’ என்று உணர்ந்தபோது அவனுக்குக் களிப்புத்தான் உண்டாயிற்று. அவள் அப்படித் தன்னை எதிர்பார்க்க வேண்டும் என்றுதானே அவனுடைய அந்தரங்கத்தின் ஆவல் துடித்தது! அந்தத் தந்தி வராவிட்டாலும் மறுநாள் காலை மயானத்தில் ‘பால்தெளி’ முடிந்ததும் அவனே மதுரை போய் அங்கிருந்து கோடைக்கானல் போக வேண்டுமென்று தான் எண்ணியிருந்தான். பூரணியை மீனாட்சிசுந்தரம் எந்தத் தொகுதியில் தேர்தலுக்கு நிறுத்த இருக்கிறாரோ அதே தொகுதியில் தான் புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரரும் நிற்கப் போகிறார் என்று மதுரை உறவினர் தெரிவித்த போது அரவிந்தன் கோடைக்கானல் போய் அந்தத் தகவலைத் தெரிவித்துவிட வேண்டுமென்று உறுதி செய்து கொண்டுவிட்டான்.

‘பால் தெளி’ முடிந்த அன்று பகலில் அரவிந்தன் மதுரை புறப்பட்ட போது கேதத்துக்கு வந்திருந்த அரசியல் பிரமுகரும் அவனோடு மதுரை வந்தார். முதல்நாள் ஈமச்சடங்கு முடிந்து திரும்பிய போது, ‘பூரணி நிற்கப் போகிற தொகுதியில் கடுமையான போட்டி இருக்கும்’ என்று அவனிடம் கூறியவர் அவர் தான். அரவிந்தன் அவரை மிகவும் நல்லவரென எண்ணியிருந்தான். ஆனால் கிராமத்திலிருந்து மதுரை திரும்பியதும் அவனைத் தமது வீட்டுக்கு அழைத்துப் போய்ச் சுய உருவத்தைக் காட்டினார் அவர். அரவிந்தன் திகைத்துப் போனான். அத்தனை பயங்கரமும் அரசியலில் இருக்குமோ? ஐயோ அரசியலே!

‘வாடிய பயிரைக் கண்டால் நான் வாடினேன். பசித்தவனைக் கண்ட போதெல்லாம் நோயை உணர்ந்தேன். ஏழைகளையும் இளைத்தவர்களையும் கண்டபோது நானே ஏழையாய் இளைத்தேன்!’ என்று இராமலிங்க வள்ளலார் பாடிய பாட்டின் கருத்துத்தான் இந்த நாட்டில் ஒரு அரசியல் தொண்டனின் இலட்சியமாக இருக்க வேண்டுமென அவன் எண்ணியதுண்டு. ஆனால் அவனுடைய சத்தியத்தை ஐயாயிரம் ரூபாய் விலைக்கு ஏலம் கூறி விற்கப் பார்த்தார் அந்த முதிய அரசியல்வாதி. அவன் மருண்டான். இப்படி அனுபவம் இதற்குமுன் அவனுக்கு ஏற்பட்டதில்லையே?

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்