எழிற்றமிழ் வேந்தன் இளங்குமரனார் இசையுடன் வாழ்வர் ! – புலவர் பழ. தமிழாளன்
25 July 2022 No Comment
எழிற்றமிழ் வேந்தன் இளங்குமரனார்
இசையுடன் வாழ்வர் !
(திருவள்ளுவர் ஆண்டு 2053 கடகம் (ஆடி) 8, 24.07.2022 ஞாயிறு அன்று பாவாணர் இயக்கத் திங்கள் கூட்டத்தில் செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் முதலாம் நினைவேந்தல் நிகழ்வில் பாடப்பெற்ற பா)
1.
தொடக்கநிலை ஆசானாய்ப் பணியதனை ஏற்றே
தொல்தமிழ மாணவர்க்கே தமிழறிவை ஊட்டி
நடமாடும் பல்கலையாய் நாட்டகத்தே தோன்றி
நாடுதமிழ்ப் பல்கலையில் பணியுமதும் ஏற்று
முடமானோர் முனைப்புறவே முதுகெலும்பும் நிற்க
முதுமைவரை பணியாற்று மூதறிஞர் யாராம்
வடமொழியைக் களைந்துதமிழ் வளமை யுறத் தோன்ற
வாழ்வதனை ஏற்றவரும் இளங்குமர னாரே !
2.
இடக்கதனைப் புரிந்துதமிழ் இல்லாமற் செய்தே
தெலுங்குதுளு மலையாளம் கன்னட மாய் ஆக்கு
வடவரது பண்பாட்டை வாழ்க்கையினிற் கூட்டி
வளர்தமிழப் பண்பாட்டை இல்லாமற் செய்த
மடமைமிகு வடமணத்தை மாய்த்துவிட்டு நாட்டில்
மணமதனைத் தமிழ்வழியிற் மணந்தி டவே வைத்த
திடமனத்தார் யாரென்று சிந்திப்பீர் என்றால்
செந்தமிழ அந்தணராம் இளங்குமர னாரே !
3.
நிலமாளும் மன்னவர்கள் ஆணையென் றும் நாட்டில்
நிற்குமுயிர் உடலதனில் இருக்குமட்டும் ஆமே
இலதானால் எந்நாளும் செல்லாதே ஆணை
இறந்தபின்னர் மக்களெல்லாம் மறந் திடுவார் தாமே
நிலையாக உயிருடலில் இருக்கின்ற மட்டும்
இனம்நாடு மொழிவளர ஏற்றபணி செய்து
நிலம்விட்டு மாய்ந்தாலும் நெஞ்சமதில் நிற்பார்
நற்றமிழின் மன்னனெனும் இளங்குமர னாரே !
புலவர் பழ. தமிழாளன்,
இயக்குநர், பைந்தமிழியக்கம்,
திருச்சிராப்பள்ளி.
Comments
Post a Comment