மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 57
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 56 தொடர்ச்சி)
குறிஞ்சி மலர்
21
நினைப்பென்னும் காற்றசைப்ப நெஞ்சிடையே மூளும்
கனற்புகைய வேகின்றான். . .
– புகழேந்தி
முதலில் திட்டமிட்டிருந்தபடி அரவிந்தனும் முருகானந்தமும்தான் கோடைக்கானலுக்குப் புறப்படுவதாக இருந்தது. காலையில் புறப்படுகிற சிறிது நேரத்துக்கு முன்னால் அந்தத் தந்தி வந்திருக்காவிட்டால் அரவிந்தன் பயணம் தடைப்பட்டிருக்காது.
அரவிந்தனுக்குத் தன்னுடைய சொந்தக் கிராமத்தில் உறவு கொண்டாடிக் கொண்டு ஆள்வதற்கு சொத்து ஒன்றுமில்லாவிட்டாலும் மனிதர்கள் இருந்தார்கள். பேருக்குத்தான் அவர்கள் உறவினர்கள், உண்மையிலோ அத்தனை பேரும் பகைவர்கள், அத்தனை பேரும் குரோதமும் அசூயையும் கொண்டவர்கள்; தாயாதிச் சண்டைகள் நிறைந்தவர்கள், சொத்துச் சேர்ப்பதும் பணத்துக்கு மரியாதை செலுத்துவதும் தவிர வேறு எதுவும் உலகத்தில் இல்லை என்று நினைப்பவர்கள். இந்த அத்தியாயத்தைத் தொடங்குமுன் அரவிந்தன் இளமைப்பருவம் பற்றியும், பெற்றோர் பற்றியும், பிறந்த ஊர் பற்றியும் சிறிது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அவனுக்கு நோயாளியான சிற்றப்பா ஒருவர் ஊரில் இருந்தார். தனக்கு அவர் ஒரு நன்மையும் செய்ததில்லை என்பதை அரவிந்தன் உணர்ந்திருந்தான். தந்தைக்கும் தன் குடும்பத்துக்கும் ஒவ்வொரு சமயத்திலும் சிற்றப்பா செய்திருக்கிற கொடுமைகளை, துரோகங்களை, ஏமாற்றுக்களை அரவிந்தன் பலமுறை நினைத்துப் பார்த்துக் கொதிப்பு அடைந்திருக்கிறான். அந்தக் கொதிப்பின் காரணமாகவே மதுரைக்கு வந்து படித்துப் பெரியவனாகி, தனக்கென்று ஒரு வாழ்வை வகுத்துக் கொண்டு முன்னேறினான் அவன். அவனுடைய தந்தை தாராளக் கையாக இருந்தவர், தான தருமங்களுக்கு வாரி இறைத்தவர். சிற்றப்பா கருமி, அநாவசியமாகக் கால் காசு செலவழிக்க மாட்டார். அவசியத்துக்காகக் கூட சிந்தித்தே செலவழிப்பார். வட்டியும் முதலுமாக ஏறிப் போய் கடன் வாங்கினவன் திணறும் போது அவனுடைய நிலங்களையோ, வீடு, நகை போன்ற பொருள்களையோ கடனுக்கு ஈடாகப் பறிமுதல் செய்து விடுவார். முக்கால் வட்டியும், முழு வட்டியும் கூசாமல் வாங்குவார். அப்பா நாளுக்கு நாள் கைநொடித்து ஏழையாகப் போய்க் கொண்டிருந்த போது, சிற்றப்பா பணக்காரராகி மாடி வீடு கட்டினதன் இரகசியம் இதுதான் என்பதை வயது வந்த பின் அரவிந்தன் தெரிந்து கொண்டிருந்தான்.
கடைசிக் காலத்தில் அரவிந்தனின் தந்தைக்கு எமனாக நின்றவரும் அவருடைய தம்பிதான். ‘உடன் பிறந்த தம்பிதானே? எல்லாரிடமும் கடுமையாக நடந்து கொள்வது போல் நம்மிடம் நடந்து கொள்ளமாட்டான். மூத்தவன் என்றும், அண்ணன் என்றும் தம்மை மதிக்கக் கடமைப்பட்டவன் அல்லவா?’ என்று எண்ணிக் கொண்டு தம்பியிடம் விவசாயச் செலவுக்காகச் சில ஆயிரம் கடன் வாங்கினார் அரவிந்தனின் தந்தை. அந்த ஆண்டு விளைச்சல் சுகப்படாததனால் அவரால் தம்பிக்குக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை.
“என்ன இருந்தாலும் நீ எனக்கு உடன்பிறப்புத்தானே அப்பா! கடவுள் புண்ணியத்தில் செட்டாகச் சேர்த்து வைத்துக் கொண்டு நன்றாகயிருக்கிறாய். என்னைப் போல் வாரியிறைத்துவிட்டு நிற்கவில்லை நீ. அடுத்த மகசூலில் உன் கடனை அடைத்து விடுகிறேன். அதுவரை பொறுத்துக் கொள். ஏதோ என் போதாத காலம் விளைச்சல் சரியில்லை” என்று தம்பியை வீடு தேடிப் போய்க் கெஞ்சினார் அரவிந்தனின் தந்தை. ஆனால் அவருடைய தம்பி அதற்கு இணங்கவில்லை. மனைவி சொல் கேட்டுக் கொண்டு அண்ணனிடம் மரியாதையின்றிப் பேசினார்.
“சொன்னபடி வாங்கின கடனைக் கீழே வைத்து விட்டு மறுவேலை பார். பணத்துக்கும் உடன்பிறப்புக்கும் சம்பந்தமில்லை.”
“ஏண்டா! நீ பணத்தோடுதான் பிறந்தாயா? என்னோடு பிறக்கவில்லையா? பெண்பிள்ளை பேச்சைக் கேட்டுக் கொண்டு மூத்தவன் என்கிற மதிப்புகூட இல்லாமல் இப்படி என்னிடம் கண்டிப்புப் பண்ணலாமா?”
“இதெல்லாம் எதற்கு அண்ணா வீண் பேச்சு? பணம் என்றால் கண்டிப்பில்லாமல் முடியாது.”
அவர் பெரிய மானி. வேறு வழியில்லாமல் போகவே தம்முடைய சொத்து என்று மீதமிருந்த கொஞ்ச நிலத்தையும் விலைக்கு விற்றுத் தம்பிக்குக் கடன் கொடுத்து நல்லவரானார் அரவிந்தனின் தந்தை. அவருக்கும் அவர் மனைவிக்கும் நெடுங்காலம் பிள்ளைப் பேறில்லாமல் காலந்தள்ளிப் பிறந்த கடைசிக் கொழுந்துதான் அரவிந்தன். செல்லப் பிள்ளையாக வளர்த்தார்கள் அந்தக் குழந்தையை.
சிற்றப்பாவின் கடனால் மனம் ஒடிந்து தந்தை நிலத்தை விற்கிறபோது, அரவிந்தனுக்குப் பத்து வயது. ஓரளவு நினைவு தெரிந்த காலம்தான் அது. உள்ளூர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்போ நாலாவது வகுப்போ படித்துக் கொண்டிருந்தான் அவன். ஒரே சொத்தாக மீதியிருந்த நிலத்தை விற்று விட்டபின் அதே ஏக்கத்தில் படுக்கையானார் அரவிந்தனின் தந்தை. அவர் காலமான தினம் இன்னும் அவன் மனத்தில் துக்கப் புண்ணின் வடுவாகப் பதிந்திருக்கிறது. ஒரு விவரமும் சொல்லாமலேயே அவனைப் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்துப் போய் மொட்டை அடித்துவிட்டுப் பிஞ்சுக்கை நோகக் கொள்ளிச் சட்டிக் காவடியைச் சுமக்கச் செய்து அப்பாவின் பிணத்தோடு சுடுகாட்டுக்கு அழைத்துப் போன நிகழ்ச்சி இன்னும் மறக்க இயலாது. பொருமிப் பொருமி அழுதுகொண்டே நடந்து போன அன்றைய நிகழ்ச்சியை நினைத்தால் இப்போதும் கண்கலங்கிவிடும். அரவிந்தனுக்கு அவனுடைய பிஞ்சுப் பருவத்து வாழ்க்கையில் அடுத்த பேரிடி அம்மாவின் மரணம். பன்னிரண்டு வயதுச் சிறுவனாகி ஆரம்பப் பள்ளிக்கூடப் படிப்பை முடித்த தறுவாயில் தாயையும் இழந்து அநாதையானான் அவன். சமுத்திரத்தின் வேகமும் ஆழமும் தெரியாமல் கரையோரமாகக் காகிதத்தில் கப்பல் செய்துவிடலாமா என்று பேதைத்தனமாக எண்ணும் குழந்தை போல் வாழ்க்கைக்கு முன்னால் அநாதையாக நின்றான் அரவிந்தன். எப்படியாவது வாழவேண்டும் என்ற ஆசையும், எப்படி வாழ்வது என்ற மலைப்புமாகத் தவித்தது உலகம் தெரியாத இந்தப் பூ உள்ளம். ஊர்க்காரர்களுடைய பழிக்கு அஞ்சிச் சிற்றப்பா சிறிது காலம் அவனை வீட்டில் வைத்துக் கொண்டார். சித்தி கொடுமையே உருவானவள். “தண்டச்சோறு கொட்டிக் கொள்கிறாயே கடன்காரா! தின்கிற சோற்றுக்கு வேலை வேண்டாமோ! இந்த எருமை மாடுகளையெல்லாம் நன்றாக மேய்த்துக் கொண்டு வா” என்று பள்ளிக்கூடம் போகவிடாமல் தடுத்து மாடு மேய்க்கிற வேலையை அவன் தலையில் கட்டினாள், சித்தி. மாடுகளை மேயவிட்டு வயல்வரப்புகளிலே அமர்ந்து பச்சைப் பிள்ளையாகிய அவன் மனத்தவிப்பு அடங்கக் குமுறிக் குமுறி அழுத நாட்கள் கணக்கிலடங்கா. “அப்பா! அம்மா! என்னை ஏன் இப்படி அநாதைப் பயலாக இந்த உலகத்தில் விட்டுச் சென்றீர்கள்? சித்தியிடம் அடி வாங்கவும், சிற்றப்பாவிடம் திட்டு வாங்கவுமா விட்டுப் போனீர்கள்?” என்று தனக்குத்தானே புழுங்கி அவன் நொந்த நாட்கள்தாம் எத்தனை!
சிற்றப்பாவுக்கும் சித்திக்கும் குழந்தையில்லை! சித்தி தன் உறவுவழிப் பெண் ஒருத்தியை வீட்டோடு அழைத்துக் கொண்டு வைத்து வளர்த்து வந்தாள். அரவிந்தனை அவர்கள் பிள்ளைக் குழந்தையாக எண்ணி வளர்க்கவில்லை. மாட்டுக் கொட்டத்திலே மாடுகள் வளரவில்லையா அப்படி அவனையும் விட்டு விட்டார்கள்! அவன் மாட்டுக் கொட்டத்திலேயே சாப்பிட்டான். அங்கேயே ஒரு மூலையில் உறங்கினான். விடிந்ததும் மாடு பற்றிக் கொண்டு போனான். ஒருநாள் மாடுகளை மேயவிட்டு அவன் புத்தகம் படித்துக் கொண்டிருந்து விட்டதால், பக்கத்து நெல்வயலில் ஒரு பக்கமாக மாடுகள் வாய் வைத்து விட்டன. வயல்காரன் சிற்றப்பாவிடம் போய்ச் சொல்லிவிட்டான். சாயங்காலம் அவன் மேய்ச்சல் முடிந்து திரும்பினதும் மூக்கு முகம் பாராமல் அடித்து விட்டார் சிற்றப்பா. சித்தி வாயில் வராத வார்த்தையெல்லாம் சொல்லி வைதாள். அன்று தான் அவனுடைய கண்களும், மனமும் திறந்தன. இனி, இந்த வீட்டில் தான் இருக்கக் கூடாது. இருக்கவும் முடியாது. எங்காவது ஓடிப்போய் விட வேண்டும் என்ற துணிவு அவன் உள்ளத்தில் உண்டாயிற்று.
(தொடரும்)
தீபம் நா.பார்த்தசாரதி
குறிஞ்சி மலர்
Comments
Post a Comment