Skip to main content

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 9

 அகரமுதல




(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 8 இன் தொடர்ச்சி)

குமரிக் கோட்டம்

அத்தியாயம் 2 தொடர்ச்சி

அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த கோயிலிலேயே ஒரு சிறு அறை, செட்டியார் தங்கி இருந்த இடம். அகல் விளக்கு அதிகப் பிரகாசமின்றி எரிந்து கொண்டிருந்தது. வேலையாட்கள் தூங்கும் சமயம். குமரி அவசரமாக ஓடி வந்தாள் கோயிலுக்கு. அறை யிலே செட்டியார் உலவிக் கொண்டிருக்கக் கண்டு, ” என்னாங்க உடம்புக்கு ! என்னமோ நொப்பும் நுரையுமா தள்ளுது, போய்ப் பாருடி, யாரையும் எழுப்பாதே. யாருக்கும் சொல்லாதே என்று மீனா அக்கா சொன்னாளே ” என்று கேட்டாள்.

செட்டியார், மீனாவின் தந்திரத்தைத் தெரிந்து கொண்டார். “ஆமாம் குமரி ! மயக்கமாக இருந்தது: இப்போது இல்லை. மணி பத்து இருக்குமே பாவம், நீ தனியாகவா இங்கு வந்தே’ என்று கேட்டார்.

“ஆமாங்க ! மீனா சொன்னதும் எனக்கு, வந்து பார்த்துவிட்டுப் போகணும்னு தோணவே, ஒரே ஓட்ட மாக ஓடி வந்தேன். நான் போகிறேனுங்க” என்றாள் குமரி. செட்டியாருக்கு ஆபத்து என்ற உடனே ஓடி வந்துவிட்டாளே தவிர, அவருக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்ததும், தனியாக அந்த நேரத்தில் அவருடன் இருப்பது சரியல்லவே, என்று தோன்றிற்று.

” ஏன், இந்த வேளையிலே தனியாக இருக்க . . . . . . . . . . . . . . . . . . . . . . .” என்று செட்டியார் கேட்டு முடிப்பதற்குள், குமரி வெட்கத்துடன், “அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க, நாம்ப இங்கே களங்கமற்றுத்தான் இருக்கிறோம்; ஆனா மத்ததுங்க அப்படி நினைக்காது பாருங்க” என்றாள். களங்கமற்ற நிலையில் தான் அவள் இருந்தாள். ஆனால் செட்டியாரின் மனநிலை அவளுக்குத் தெரியாது!

“வந்தாகிவிட்டது, குமரி ! கொஞ்சம் அறையைச் சுத்தம் செய்” என்று கூறினார் செட்டியார். குமரி உடனே அந்தக் காரியத்தைச் செய்தாள். “செட்டியாரே ! நெல் மூட்டைகளை ஏன் இங்கேயே போட் டிருக்கிறீர்கள், எலிகள் அதிகமாகுமே” என்று கேட்டுக்கொண்டே, மூட்டைகள் இருந்த இடத்தைச் சுத்தம் செய்தாள். எலிகளைக் காணவேண்டும் என்ற அவசரத்திலே செல்பவர் போலச் செட்டியார், மூட்டைகள் இருக்குமிடம் போனார், குமரி மீது உராய்ந்தபடி ! அதிலே அவருக்கு ஓர் ஆனந்தம் ! அவள் கொஞ்சம் அஞ்சினாள். சுத்தமாக்கிவிட்ட பிறகு, வியர்வையை முந்தானையால் துடைத்துக்கொண்டு நின்றாள். செட்டியார், ” குமரி ! இந்தா, உனக்குப் பரிசு ! சாப்பிடு, ருசியாக இருக்கும், உடம்புக்கும் நல்லது” என்று கூறி லேகியத்தைக் கொடுத்தார்.

” என்னதுங்க அது, நாவப்பழமாட்டம்!” என்று கேட்டாள் குமரி, லேகியத்தைப் பணிவுடன் பெற்றுக் கொண்டு .

“அது மீனாட்சி பிரசாதம்” என்றார் அவர்.

“அப்படின்னா?” என்று குமரி கேட்டாள்.

“மீனாட்சி கோயிலில், சாமிக்குப் படைத்தது. சாப்பிடு, நல்லது” என்று கூறிவிட்டு, வேறு ஏதோ வேலையைக் கவனிக்கப் போகிறவர் போல அறைக்கு வெளியே சென்றார். குமரி, லேகியத்தைத் தின்றாள். சுவையாகவே இருந்தது. எப்போதும் அவள் கண்ட தில்லை அதுபோல லேகியத்தைத் தின்றுவிட்டு, செட்டியார் வந்ததும் சொல்லிவிட்டுப் போகலாம் என்று நெல் மூட்டை மீது சாய்ந்தபடி நின்று கொண்டே, அந்த அறையிலே இருந்த படங்களைப் பார்த்தபடி இருந்தாள். திடீரென்று அந்த அறையிலிருந்த விளக்கு மிகப் பெரிதாகவும், மிகப் பிரகாசமாகவும் அவளுக்குத் தெரிந்தது. கொஞ்சம் ஆச்சரியத்துடன், மறுபடி விளக்கைப் பார்த்தாள்; ஒரு விளக்கல்ல, பல விளக்குகள் இருக்கக் கண்டாள் ! எலி, மூட்டைகளிடையே ஓடக் கண்டாள் ; குனிந்து, கோல் ஒன்று எடுத்து விரட்டினாள். எலி ஒரு பக்கமிருந்து மற்றோர் பக்கம் ஓடிற்று. குமரி, ”ஓடினா விடுவேனா அம்மாடி ! எவ்வளவு சாமர்த்தியம்? ஆனால் இந்தக் குமரியிடமா நடக்கும் ” என்று கூறிக்கொண்டே எலியை வேட்டையாடினாள். கடைசியில் எலி தப்பித்துக்கொண்டே ஓடிவிட்டது. ‘ஒரு சுண்டெலிக்கு எவ்வளவு சாமர்த்தியம் பார்த்தாயா?’ என்று கேட்டாள். யாரும் எதிரிலே இல்லை. ‘சே ! யாரும் இல்லை இங்கே, யாரிடம் பேசுகிறோம்’ என்று நினைத்தாள், சிரிப்பு பொங்கிற்று. சிரித்தாள். மேலும் மேலும் சிரித்தாள். உரத்த குரலிலே சிரித்தாள்.

இடையிடையே பாடவுமானாள், அறை முழுவதும் சோதிமயமாக அவளுக்குத் தெரிந்தது. குதூகலம் ததும்பிப் பொங்கி வழிந்தது. ஆடை நெகிழ்வதையும் கடந்தால் சரிவதையும் கவனியாமல் சிரித்துக் கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தாள். குமரியின் கண்கள், உருள ஆரம்பித்தன! தூக்கம் வருவது போன்ற உணர்ச்சி – கருமணி மேல் இரப்பைக்குள்ளே போய் புகுந்து கொள்வது போல, மேலுக்குப் போகிறபடி இருந்தது; என்றுமில்லாத அசட்டுத்தனமான தைரியம். லேகியம் அவளை ஆட்டி வைக்க ஆரம்பித்தது ; வார்த்தைகள் குழைந்து குழைந்து வெளிவரத் தொடங்கின. செட்டியார், அந்தச் சமயமாகப் பார்த்து உள்ளே நுழைந்தார்.

“குமரி “

“செட்டியாரே!’

“ஏன் இப்படி இருக்கறே?”

“ஏன், செட்டியாரே, ஆடிக்கிட்டே இருக்கறே? ஆமாம், ஏன் இத்தனி விளக்கு”

ஒரு சமயம் குமரிக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று செட்டியாருக்குத் திகில் உண்டாகி விட்டது.

“குமரி | உட்கார்!”

“எங்கே உட்காரவாம் “

அங்கே இருந்த நாற்காலியிலே செட்டியார் உட் கார்ந்துகொண்டு, “குமரி ! இங்கே வா ! இப்படி உட்கார் ” என்று கொஞ்சினார்.

குமரி, ” என்னா அது! ஏனய்யா, செட்டியாரே! விளையாட்டா செய்யறே!” என்று மிரட்டினாள். செட்டியார், ‘லேகியம் குமரியின் புத்தியைக் கெடுத்து விட்டது. ஆனால் அந்த நிலையிலும் அவளை இணங்க வைக்கவில்லை என்று நினைத்து மேலும் பயந்தார். மறு விநாடி, குமரி கலகலவெனச் சிரித்தாள். செட்டியார் அருகே போய், அவருடைய முகவாய்க் கட்டையைப் பிடித்தாட்டி, “செட்டியாரே! செட்டியாரே!” என்று ஏதோ பாடத் தொடங்கினாள். அதற்குமேல் செட்டியாரால், பயத்துக்குக் கட்டுப் பட்டிருக்கவும் முடிய வில்லை. ”கண்ணு! குமரி!” என்று கொஞ்சிய படி, அவளை அணைத்துக்கொண்டு, முகத்தோடு முகத்தைச் சேர்த்தார், இதழையும். . . . . . . . . . ..

(தொடரும்)

கா.ந. அண்ணாதுரை

குமரிக்கோட்டம்


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்