கூட்டை எரிக்கும் சிறகுகள்!- கிருட்டிண திலகா
கூட்டை எரிக்கும் சிறகுகள்!
வேலியுமே பயிர்களைத்தான்
கெடுக்கும் காலம்.
வெள்ளாட்டை வளர்ப்போனே
அழிக்கும் கோலம்.
கூலியின்றி ஏமாற்றிப்
பிழைக்கும் கூட்டம்.
குடிவைத்த வீட்டினையே
எரிக்கும் நாட்டம்.
வாலில்லாக் குரங்கினத்துப்
பகையை அன்று
வாலிதனை மாய்த்ததுபோல் மறைந்திருந்து
அழிக்கத் தோன்றும்.
சூலியென ஆங்காரம்
எழுமே நெஞ்சில்.
சூழ்பகையும் அழிந்திடுமே
வலியும் மிஞ்சில்!
*பொய்சொல்லி ஆட்சியேறிப் பிழைக்கும் கூட்டம்.
போக்கற்ற வழியினிலே
பணத்தைக் கட்டும்.
மெய்வருத்தி உழைப்போர்மேல்
வரியைக் கூட்டி…
மேதினியைச் சுருட்டிடவே
மிடுக்கும் காட்டும்!
பெய்கின்ற மழையும்தான்
புரண்டு போகும்.
பேய்வாழும் நாட்டினிலே
அறமும் சாகும்.
செய்கின்ற செயல்யாவும்
வலிகள் தந்து…
சிறுகூட்டை எரிக்கின்ற
சிறகு களா (கு)மே.
*கூட்டவேண்டும் தண்டனைகள் குறையா மல்தான்!
குறைந்திடவே குற்றங்கள்
தவறா மல்தான்!
ஏட்டினிலே புதுசட்டம்
இயற்ற வேண்டும்.
ஏடுநிறை மாற்றங்கள்
அதிலே வேண்டும்!
காட்டுகின்ற நேர்மையொன்றே
பெருக வேண்டும்.
காரியத்தில் அனைவருக்கும்
உறுதி வேண்டும்!
நாட்டுமக்கள் நலமொன்றே
மனத்தில் கொண்டு,
நன்மைகளைச் செய்யுமாட்சி
தொடர்தல் நன்றே!
–முனைவர். கிருட்டிண திலகா
போரூர்
சென்னை.
Comments
Post a Comment