Skip to main content

பேரறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே!: 2/8

 அகரமுதல




(தாழ்ந்த தமிழகமே!1/8 தொடர்ச்சி)

தாழ்ந்த தமிழகமே!: 2/8

[1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.]


சங்க இலக்கியம்



கவிஞர்களையும், மற்றவர்களையும் அன்று போற்றாததற்கும், இன்று போற்றுதற்கும் இன்னுமொரு காரணமுண்டு. சங்க இலக்கியங்களிலே, நமது கண்ணும் கருத்தும் படாதபடி திரையிட்டு வந்தார்கள்.

உங்களில் பலர் சங்க இலக்கியங்களைப் படித்திருக்கலாம். சிலர் புரிந்து கொண்டிருக்கலாம்; சிலர் புரிந்தது போல் பாவனை காட்டலாம். நான் சங்க இலக்கியங்களைப் படித்தவனல்லன். அல்லது படித்தவனைப் போலப் பாவனை செய்பவனுமல்லன். அதற்காக வெட்கப்படப் போவதுமில்லை. சங்க இலக்கியங்களை நான் படிக்கவில்லை என்றால், அதற்குக் காரணம் எனது அறியாமையல்ல. என் கண்முன் சங்க இலக்கியங்கள் நருத்தனமாடவில்லை. என் கண்முன் அவற்றைக் கொண்டு வந்து புலவர் பெருமக்கள் நிறுத்தவில்லை.

யார் அணுகுவார்கள்? நாவலர்களும், பாவலர்களும் சங்க இலக்கியங்களைச் சுற்றி நாலுபக்கமும் வேலி அமைத்து, இங்கு எட்டாத அளவுக்கு எட்டடி உயரத்தில் எழுப்புச் சுவரை எழுப்பி வைத்துக் கொண்டும் “உள்ளே ஆடுது காளி, வேடிக்கைப் பார்க்க வாடி” என்பது போலத் ‘தொல்காப்பியத்தைப் பாரீர். அதன் தொன்மையைக் காணீர்’ என்றால் அதனிடம் யார் அணுகுவார்? சங்க இலக்கியங்களை வீட்டை விட்டு வெளியேற்றி, நாட்டிலே நடமாடவிட வேண்டும். நடன சுந்தரிகளாகச் சிறுசிறு பிரதிகள் மூலம். தொல்காப்பியக் கருத்துக்களைத் தொகுத்து வெளியிட்டால்தான் தொல்காப்பியம் சிறுசிறு குழந்தைகளாக ஒவ்வொருவருடைய மடியிலேயும் மனத்திலேயும் தவழும். ஒவ்வோர் இல்லமும் இலக்கியப் பூங்காவாகக் காட்சியளிக்கும். இன்றையப் புலவர்கள். உண்மையிலேயே இனிமையையும், எளிமையையும் சங்க இலக்கியத்துடன் சேர்த்து மக்களுக்கு ஊட்டியிருப்பார்களானால், சங்ககாலப் புலவர்களைப் போற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கு மானால், அவர்கள் ஒவ்வொர் இல்லத்தையும் இலக்கியப் பூங்காவாக்கும் உழவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படியில்லை என்பதை நினைக்கும் பொழுதுதான் அவர்கள் இவ்வளவு நாள்களாக நாட்டுக்குச் செய்தது தொண்டு அல்ல; துரோகம் என்று எண்ண வேண்டியிருக்கிறது.

கம்பனா? இளங்கோவா?

புலவர்கள் தாங்கள் நன்மை செய்வதாய்க் கருதிக் கொண்டு, ஒரு சில புலவர்களையும், கவிகளையுமே பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தியும், பொது மக்களின் பாராட்டுதலுக்கு அந்தச் சிலரே அருகதையானவர்கள் என்று சொல்லியும் வருகிறார்கள். அதன் மூலம் உண்மைக் கவிகள், உயிர்க் கவிகள் சங்ககாலப் புலவர்கள் மறைக்கப்படுகிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால், கம்பனை எந்த அளவுக்குப் பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்களோ, அந்த அளவுக்குச் சங்ககாலப் புலவர்களை அறிமுகப் படுத்தவில்லை. கம்பனைத் தெரிந்த பொதுமக்கள்தாம் அதிகம் இருப்பார்களே தவிர, இளங்கோவைப் பற்றித் தெரிந்தவர்கள் கொஞ்சமாகத்தான் இருப்பார்கள். வேண்டுமென்றால், தில்லையில் ஓர் வாக்குப் பெட்டியை வைத்துப் பிரசாரமில்லாமல், அப்படி இருந்தால் இரு பக்கமும் நடத்தி, கம்பனுக்கும், இளங்கோவுக்கும் வாக்கு போடச் சொன்னால், தேர்தலில் கம்பன்தான் வெற்றி பெறுவான். ஆனாலும் நாம் நமது கற்பனா சக்தி முன்பு இருவரையும் நிறுத்திப் பேசச் சொன்னால், கம்பர் இளங்கோவைப் பார்த்து ‘எனக்கு உயிர் ஊட்டிய உத்தமரே!’ என்பார்; ‘எனக்கு அணி அழகு தந்த ஆணழகரே’ என்பார்.

திரைபோட்டு விட்டனர்

அகத்தையும், புறத்தையும் அதிலே காட்டப்பட்ட கருத்துகளையும், அணிகளையும், உவமைகளையும் நாம் அறியாமற் போனதற்குக் காரணம், பத்திரிக்கைகள் ஒரு கவியைப்பற்றியே புகழ்வதும் ஒரு சில கவிதைகளிலேயே இது எவ்வளவு பழமையில் அழுந்தியிருந்த போதிலும், புதுமை மிளிர்வதாகவும், இரசம் ததும்புவதாகவும் விளம்பரப்படுத்துவதும், மிதிலைச் செல்வியைப் பற்றியும் கோசலைச் செல்வனைப் பற்றியும் மாதாந்தர புத்தகங்களும் வெளியீடுகளும், ஆண்டு மலர்களும், பிரத்தியேகப் புத்தகங்களும் வெளியிடுவதும்தான் ஆகும்.

கம்பரையும், சேக்கிழாரையும் அடிக்கடி பலப்பல நிறங்களில் காட்டுவதன் மூலம் – கம்பராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் தத்துவார்த்தங்களாலும், புதுமைக் கருத்துக்களாலும் காட்டி நிலைநாட்டுவதன் மூலம் வள்ளுவனை மக்கள் அதிகம் காண முடியவில்லை.

அகநானூற்றையும், புறநானூற்றையும் மக்கள் மறக்க நேர்ந்தது. கற்றறிந்தோர் ஏத்தும் கலித்தொகையைக் கற்றவரிடம் காண்பதே அரிதாகி விட்டது. பரிபாடலைப் பார்க்கவே முடியவில்லை. ஆகவே, சங்க இலக்கியங்கள் மங்கி, மக்களுடைய மனத்தைப் பெறாமல் போனதற்குக் காரணம் அந்தச் சங்க இலக்கியக் கருத்தாக்களைக் காண முடியாதபடி நமது கண்முன் திரை போட்டு விட்டார்கள். ஒரு சிலரையே மீண்டும் மீண்டும் அறிமுகப் படுத்துவன் மூலம், பொது மக்களுடைய ஆதரவைப் பெற முடியும்; குறிப்பிட்ட திட்டம் நிறைவேறும்; மக்களுடைய மனத்தை மாசற்ற கவிகளின் மீது பாய விடாமல் மருண்ட பாதைக்கு இழுத்துச் சென்றால்தான் என்ன! எதிர்க் கட்சியினருக்கு மட்டமா அல்லவா என்று பார்த்துக் கொண்டால் போதும் என்றெண்ணிவிடும் நயவஞ்சக நாசக்காலர்கள் நாட்டிலே உலவி வருகிறார்கள்.

பிரச்சாரம்

கம்பனுக்குப் பிறகு எவ்வளவு கவிவாணர்கள் தோன்றினாலும், கம்பனுக்கு முன் பலர் இருந்த போதிலும், அவர்கள் வெறும் கவிகளாயிருக்கலாம்; ஆனால் கவிச் சக்ரவர்த்தி கம்பன் தான் என்று சிலர் சொல்லுகிறார்கள். கவிதை எவ்வளவு புரட்சிகரமாயிருந்த போதிலும், கவிதை காலத்தைப் படம் பிடித்துக் காட்டும் கருவியாக இருந்த போதிலும், அவற்றை இயற்றியவர்களைக் கவிச்சக்கரவர்த்தி என்று சொல்லமாட்டார்கள். ‘அவர்கள் போற்றுகின்ற கவியிடம் (நாமக்கல் கவியுடன்) உள்ள கட்சிக் கொள்கைகள் தெரியா. அந்தக் கவியுடன் போட்டியிடக் கூடிய புரட்சிக் கவியிடம் (பாரதிதாசன்) உள்ள, காலத்துக்கேற்ற கருத்துகள் கட்சிக் கொள்கைளாகத் தெரியும். உடனே, இந்தக் கவியைக் கட்சிக் கவி, கற்பனா சக்தியைக் குறிப்பிட்ட கொள்கைக்காகப் பாழ்படுத்திவிடுகிறவர், என்று பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தி விடுவார்கள். அறிவிழந்த மக்கள் அதை நம்பிக் கவிதைகளைக் கைவிடுவார்கள்.

காரணம் இல்லாமல் இல்லை

ஏன் புரட்சிக் கவியைப் புத்துலகச் சிற்பியாக மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்தவதில்லையென்றால், அவருடைய புதுமைக் கருத்துகளைக் காணும்படி மக்களைத் தூண்டுவதில்லை யென்றால் காரணமில்லாமல் இல்லை. மக்கள் புரட்சிக் கவியின் உண்மை உருவத்தைப் பார்த்து விட்டால், அவர்களால் தூக்கி வைக்கப்பட்ட கவிகள் தொப்பென்று கீழே விழுந்து விடுவார்கள், கவிகளுக்கு மதிப்புக் குறையும்; போற்றினவர்கள் பிழைப்பும் கெடும். இளங்கோவைப் பற்றி மக்கள் அறிய ஆரம்பித்து விட்டால் சிலம்பு நாட்டிலே ஒலிக்க ஆரம்பித்து விட்டால் கம்பனுக்கும் கம்ப ராமாயணத்துக்கும் அவ்வளவு மதிப்பும் இராது. மான்செசுடர், கிளாசுகோ முதலிய இடங்களிலிருந்து மெல்லிய துணிகள் வருகின்றன என்றால் இலாங்கிளாத்துக்கு அவ்வளவு கிராக்கி இருக்காது என்பது மட்டுமல்ல; சேலம் ஆறு – ஏழு முழ வேட்டிகளுக்கும் மதிப்பு இருக்காது. ஆமதாபாத்து புடவைகள் அமோகமாகக் கிடைக்கின்றன என்றால் ஆரணங்குகளும் பெங்களூர்ப் புடைவையை எப்படி விரும்புவர்? கம்பனைப் பற்றி நான் குறை கூறுவதாக நினைக்கக்கூடாது. உங்களிடமுள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளவேண்டும். ஒரு சிலரைப் போற்றுவதன் மூலம்தான் புகழடைய முடியும்; நமது புலமை மிளிரும் என்ற நினைப்பு மறைய வேண்டும்.

பாண்டியன் பரிசு

இந்த முறையில் பாரதிதாசனின் பாண்டியன் பரிசு குறையைப் போக்குவதாக இருக்கிறது. பாண்டியன் பரிசு சங்கக்கால இலக்கியங்களிலுள்ள உவமைகளையும், அணிகளையும், எளிய நடையில் எல்லாரும் புரிந்துகொள்ளுமாறு இயற்றப்பட்டிருப்பதைக் காணலாம். பாடலுக்கு இலட்சணம் படித்தவுடன் இலேசில் புரிந்து கொள்ளக் கூடாது என்றும், புலமைக்கு இலட்சணம் பிறர் கண்டு பயப்படவேண்டும் என்றும் கருதுகிறார்கள்.

பாரதிதாசனின் காவியத்தைப் பார்க்க, படித்து உணர இலக்கணம் தேவையில்லை; இலக்கியங்களைப் படித்திருக்க வேண்டுவதில்லை; நிகண்டு தேவையில்லை; பேராசிரியர்கள் உதவி தேவையில்லை. ஆனால் இதைப் புலவர் சிலர் வெறுக்கின்றனர்; மறுக்கின்றனர்! எளிய நடையினில் எழுதுவது ஓர் ஆற்றலா என்று தம்மால் எழுத முடியா விட்டாலும் ஏளனம் பண்ணுகின்றனர்!

(தொடரும்)

ஏ, தாழ்ந்த தமிழகமே!

  • பேரறிஞர் அண்ணா

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்