Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 61

 அகரமுதல




(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  60 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்

22 தொடர்ச்சி



அப்பாவின் நினைவு, உள்ளத்தில் உண்டாக்கிய உரத்துடன் எதிரே உட்கார்ந்திருந்த மீனாட்சிசுந்தரத்தையும், முருகானந்தத்தையும் நோக்கி உறுதியான குரலில் கூறலானாள் பூரணி.

“நீங்கள் மிக்க அனுபவசாலி, எவ்வளவோ பெரியவர். உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் சொல்லுகிற காரியத்துக்கு எப்படி இணங்குவதென்று தான் தயக்கமாக இருக்கிறது. இத்தகைய உலகியல் வழிகளில் சிக்கிப் பொருளும் புகழும் பெறுவதை என் தந்தையே தம் வாழ்நாளில் வெறுத்திருப்பதை நான் கண்டிருக்கிறேன். அப்போதே அப்படியானால் இப்போது உள்ள சூழ்நிலையில் கேட்கவே வேண்டாம். அறிவு தோற்று உணர்ச்சிகள் வெல்லும் காலம் இது. பண்பு தோற்றுப் பரபரப்பு வெல்லுகிற காலம், அன்பு தோற்று ஆசைகள் வெல்லுகிற காலம், நிதானம் தோற்று வேகம் வெல்லுகிற காலம். இந்தக் காலத்தில் அரசியல் வாழ்க்கையில் எதிர்நீச்சுப் போட என்னைத் தூண்டுகிறீர்கள் நீங்கள்.”

“உன்னால் முடியும் என்று நன்றாகத் தெரிந்து கொண்டு தான் தூண்டுகிறேன், அம்மா! அரவிந்தனுக்கும் உனக்கும் ஒரே மனப்பாங்குதான் போலிருக்கிறது. இந்தத் தீர்மானத்தை அவனிடம் தெரிவித்தபோது ஏறக்குறைய நீ இப்போது கூறிய தடைகளைத்தான் அவனும் சொன்னான். ஆனால் நான் கூறிய சமாதானங்களைக் கேட்டுவிட்டு என் தீர்மானத்தை ஒருவாறு ஒப்புக் கொண்டான். உன்னையும் ஒப்புக் கொள்ள வைப்பதாகச் சொன்னான். சிற்றப்பாவின் காரியங்களுக்காக அவன் கிராமத்துக்குப் போகும்படி நேரிட்டிருக்காவிட்டால் அவனே இங்கு வந்து உன்னைச் சம்மதிக்கச் செய்திருப்பான். அவன் வந்திருந்தால் என்னுடைய வேலை சுலபமாகியிருக்கும். உனக்கு இத்தனை சிரமப்பட்டு நானே விளக்கம் சொல்ல வேண்டியிராது. அவன் பாடு, உன் பாடு என்று விட்டிருப்பேன்.”

வைரம் பாய்ந்த மரத்தில் திருகு ஆணி இறக்குகிற மாதிரி மீனாட்சிசுந்தரம் அவள் மனத்தில் தம் கருத்தைப் பதித்துவிட முயன்றார். இலங்கை, மலாயா முதலிய இடங்களிலிருந்து சொற்பொழிவுக்கு அழைப்பு வந்திருப்பதைப் பற்றி பூரணி அவரிடம் கூறினாள். அவர் கேட்டதைப் பற்றி ஒரு முடிவும் சொல்லவில்லை. “உன் பேரில் அபேட்சை மனுத் தாக்கல் செய்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். திருவேடகத்துக்குப் போய்ப் பூக்கட்டி வைத்துப் பார்த்ததில் நல்ல பூவே கிடைத்திருக்கிறது. நீ என்னைக் கைவிட்டு விடாதே அம்மா!” என்று சுற்றிச் சுற்றித் தம் வேண்டுகோளையே வற்புறுத்திக் கொண்டிருந்தார். அவள் பிடிகொடுத்துப் பேசவில்லை.

“நீ இலங்கை, மலாயா எல்லா இடங்களுக்கும் போய்ப் புகழ்பெற்று வா, அம்மா! அதனால் எங்களுக்கெல்லாம் பெருமைதான். அவற்றோடு இந்தப் பெருமையையும் நாங்களாகப் பார்த்து உனக்கு அளிக்கிறோம். மறுக்காமல் ஏற்றுக் கொள். இதில் வெற்றி பெற உன்னால் முடியும். வெற்றி பெற்றால் இதனால் நீயும் உயர்வு அடையலாம். நாடும் உயர்வு பெறும்” என்றார்.

“பார்க்கலாம்! எனக்குச் சிந்திக்க நேரம் கொடுத்தால் நல்லது. ‘வந்தோம், உடனே கேட்டுச் சம்மதம் பெற்றவுடன் திரும்பலா’மென்று நீங்கள் நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. இரண்டு, மூன்று நாட்கள் இருந்துதான் போகவேண்டும் நீங்கள். கோடைக்கானல் மூன்று தினங்கள் தங்குவதற்குக் கூடத் தகுதியில்லாத ஊரா, என்ன?” என்று கேட்டாள் பூரணி.

“இரண்டு, மூன்றுநாள் தங்குவது பற்றி எனக்கு ஒன்றும் மறுப்பில்லை, அம்மா! நீ விரும்பினால் இதுபற்றிப் பேச அரவிந்தனையும் வரவழைக்கிறேன். உன்னுடைய தயக்கத்திற்குக் காரணமே அவன் இல்லாமல் முடிவு செய்யலாகாது என்பதுதான் என்று எனக்குப் புரிகிறது பெண்ணே!”

அவர் இவ்வாறு கூறியதும் அவளுடைய முகத்தில் நுண்ணிய அளவில் நாணம் பரவிற்று. தலை சற்றே தாழ்ந்தது. இதழ்களும் கண்களும் மோன மென்னகை புரிந்தன. அவர் அவளை அப்போது நன்றாகக் கவனித்தார்.

தம்முடைய செல்வாக்கைவிட, செல்வத்தை விட ஏதோ ஒரு பெரிய அற்புதத்தால் மாயம் செய்து அவளுடைய உள்ளத்தை அரவிந்தன் ஆண்டு கொண்டிருப்பதை மீனாட்சிசுந்தரம் அந்தக் கணத்தில் மிக நன்றாகப் புரிந்து கொண்டார். ‘சாதாரணமாக ஒரு பெண்ணின் உள்ளத்தை ஆள்வதற்கே ஆற்றல் வேண்டும். இவளைப் போன்ற அபூர்வமான பெண்ணின் இதயத்தையும் ஆள்கிற அளவுக்கு நம் அரவிந்தனுக்கு ஏதோ பெரிய கவர்ச்சியிருக்கிறது. அது முகத்தின் கவர்ச்சி மட்டுமன்று; முகத்தில், பேச்சில், பழக்க வழக்கங்களில் எல்லாவற்றிலும் சேர்ந்து ஏதோ ஒரு பெரிய மாயம் வைத்துக் கொண்டிருக்கிறான் அரவிந்தன்’ என்று எண்ணினார். அப்படி எண்ணியபோதுதான் அவன் அவருடைய உள்ளத்திலும் மிகப் பெரியவனாக உயர்ந்து தோன்றினான். பல ஆண்டுகளுக்கு முன் ‘எங்கிருந்தோ வந்தான்’ என்பது போலப் போட்டுக் கொள்ள மறுசட்டையின்றி அனாதை இளைஞனாகத் தம்மிடம் வேலைக்கு வந்த பழைய அரவிந்தனையும், தன்னையும் வளர்த்துக் கொண்டு, அவருடைய அச்சகத்தைய்ம் வளர்த்து விட்டிருக்கும் இப்போதைய அரவிந்தனையும் ஒரு கணம் தம் மனத்தில் ஒப்பிட்டுப் பார்த்தார் மீனாட்சிசுந்தரம். நெடுந்தொலைவில் நெடுநாட்களாகப் பிரிந்து போய்விட்ட தம் மூத்த பிள்ளையான ஒருவனைப் பற்றி நினைப்பது போல் பாசம் பொங்கிற்று அவர் மனத்தில்.

“உன் அந்தரங்கம் எனக்குப் புரிகிறது பூரணி. ஒரு நடை வந்துவிட்டுப் போகச் சொல்லி அரவிந்தனுக்குத் தந்தி கொடுக்கிறேன் அம்மா!” என்றார் அவர்.

“சிற்றப்பாவின் காரியங்கள் முடிவதற்கு முன் அங்கிருந்து அவர் புறப்பட்டு வர முடியுமோ, முடியாதோ? தந்தி கொடுத்தால் என்ன நினைப்பாரோ?” என்று சந்தேகம் தெரிவித்தாள் அவள்.

“அப்படியில்லை, அம்மா? தந்தி கொடுத்தால் அவன் நிச்சயம் புறப்பட்டு வருவான். இன்று மரணச் சடங்கு முடிந்திருக்கும். நாளைக் காலையில் மயானத்துக்கும் போய்ப் ‘பாலூற்றலை’ முடித்தால் அப்புறம் பதினோறாவது நாள் கருமாதிக் காரியங்களுக்குத்தான் அவன் போக வேண்டியிருக்கும். நான் தந்தி கொடுக்கிறேன்” என்று பூரணியிடம் கூறிவிட்டு முருகானந்தம் உட்கார்ந்திருந்த பக்கமாகத் திரும்பினார் மீனாட்சிசுந்தரம். அவன் அங்கே இல்லை. உட்கார்ந்திருந்த நாற்காலி வெறுமையாக இருந்தது.

“இந்தப் பிள்ளை எங்கே போனான்? தபால் ஆபீசுக்குப் போய்த் தந்தி கொடுத்துவிட்டு வரச் சொல்லலாமென்று பார்த்தேன்! பரவாயில்லை, நானே காரை எடுத்துக் கொண்டு போய்விட்டு வந்து விடுகிறேன்” என்று எழுந்திருந்தார் மீனாட்சிசுந்தரம்.

“வேண்டா! சிறிது நேரத்துக்கு முன்புதான் இங்கே தோட்டத்துப் பக்கமாகச் சுற்றிப் பார்க்க எழுந்து போனதைப் பார்த்தேன். இதோ கூப்பிடுகிறேன். அவரே போய் வரட்டும்! உங்களுக்கு எதற்குச் சிரமம்?” என்று பூரணி எழுந்திருந்து தோட்டத்துப் பக்கம் போனாள். தோட்டத்தில் ஒருவரும் இல்லை. வீட்டுக்குள் வந்து வசந்தாவை அவளுடைய அறையில் தேடினாள். அவளையும் காணவில்லை. பூரணி சமையற்கார அம்மாளிடம் கேட்டாள்.

“இங்கேதான் இருந்தாள்! அந்தப் பெரியவரோடு வந்திருந்த பிள்ளைக்கு தோட்டத்தைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தாளே! தோட்டத்தில்தான் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நன்றாகப் பாருங்கள்” என்றாள் சமையற்கார அம்மாள். மறுபடியும் தோட்டத்துக்குப் போய் நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள் பூரணி. அங்கிருந்து மேடான ஓர் இடத்திலிருந்து பார்த்தால் ஏரி மிக அருகில் நன்றாகத் தெரியும். பூரணி ஏரியில் பார்த்தபோது முருகானந்தமும் வசந்தாவும் படகில் சுற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. பூரணி தனக்குள் சிரித்துக் கொண்டு திரும்பிவிட்டாள்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்