பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! – தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்




Jpeg

பாடு சிட்டே பாடு ! பண்பாடு !

தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்

காட்சி – 1


அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு
இடம்      :     கூரையிலுள்ள குருவிக்கூடு
நிலைமை  :     (தன்னுரையாக இரு சிட்டும்
முன்னுரை இங்கே பகிர்கின்றது)
ஆண் பெண் பருவ இருசிட்டு
ஆழ்ந்த காதல் முடிபோட்டு
வாழத்துடியாய்த் துடித்தொன்றாய்
நாடி நரம்பு தளர்ந்து விட
வானில் பறவைகள் பறந்ததுவே!
அஞ்சிச் சிறகுகள் வழிதடுத்தும்
கெஞ்சிக்கால்கள் குரல்கொடுத்தும்
அலையாய், அலையாய் அலைந்துமே
நிலையாய் முட்டையிட்டுவிடக்
குஞ்சு பொரித்து வாழ்ந்துவிட!
நெஞ்சம் குளிர்ந்து முடிவெடுத்தும்
அகப்படவில்லை, அதற்கோர் இடமே!
கலங்கிய சிட்டுகள் மரம் ஒன்றில்
அமர்ந்தே சிறிது ஓய்வெடுத்து
சுற்றும் முற்றும் பார்த்து ஒரு
முடிவுக்குவந்தன! அவையிரண்டும்!
ஆண் :   சந்தாம் விந்தைப் பொந்தொன்றில்
                சொந்தம் கொண்டே முளைத்தவொரு
               வீடாம் பாழ்த்த வீடொன்றில்
                கூடுகட்டி வாழ்ந்து விட
எங்கொங்கோ அலைந்தொன்றாய்!
                     இங்கே தங்க முடிவெடுத்து!
வாயில் கூரைக் கீத்தொன்றில்
           சாயல் பொத்தல் போல் தெரிய
குழியில் வந்து தங்கினோம்!
           பழியாய் வேறு இடமின்றி!
இல்லறக் கணக்கில் கணக்கிட்டால்
            செல்லச் சிறுசுகளாச்சே!
சிட்டுகளாகிய நாங்கள்!
           சிட்டாய்ப் பறந்து சேகரித்த
கூளம் குப்பை குச்சுகளால்
           வாழ்வுப் பணியை தொடர்ந்து விடக்!
கூடுகட்டும் பணியினிலே
                     ஈடுபட்டோம்! நிலைமனமாய்!
சாலையைச் சோலையாய் எண்ணியே
                காலை மாலைப் பொருளின்றி
எங்கும் ஆட்டம் போட்டுவிடும்!
                     சங்கு சக்கரப் பிள்ளைகளோ!
விருது பெற்று மறைந்தோடும்
           பருந்து போன்ற பறவைகளோ!
இல்லை! இங்கே இடர் கொடுக்க!
                     சொல்லவும் வேண்டுமோ? களிப்பிற்கு!
மரமோ ஒன்று நிழல் கொடுக்க
                     வரம் போல் நின்றது குடில் முன்னே!
விடியும் முன்னே சென்றெங்கோ
                     மடியும் பொழுதில் வந்திங்கு
எழுதும் பழுத்தக் கவியின்றி
           பழுதாய்ச் சொல்ல வேறில்லை!
கடந்த வாழ்வை இனிமறந்தே
                     உடலும் மனமும் உரம் பெற்றே
இனிய முட்டை இனியிட்டு
           இன்ப வாழ்க்கை வாழ்ந்துவிடும்!
திட்டம் பலிக்க இதிலும் நல்
           இடம் தான் கிடைக்க வழியுண்டோ?
குஞ்சுபொரித்து இனிவாழ
           கொஞ்சமும் அச்சம் இங்குண்டோ?
கருகிய நெருப்புக் குச்சிக்கோ
                     சருகுகள் மயிர்ச்சுருள் தாளுக்கோ
பஞ்சமே இல்லையாய் இங்கதுவோ
                  தஞ்சமாய்க் குவியத் தொடங்கியது!
சுந்தரவீடாய்ச் சமைத்துவிட
           விந்தைப் பொருள்கள் ஒவ்வொன்றாய்
பேடும் சேர்த்து அலங்கரித்த
           கோடி அழகை என் சொல்வேன்!
விர்ரெனப் பறந்தால் சிலநொடியே!
               சர்ரென! இறங்க மளிகைக்கடை!
மளிகை அருகே இருந்துவிடத்
                     துளியும் உணவுக்கென்ன குறை?
கடை கீழ் சிந்தும் பருப்புபிற
                     படையல் வகைகளால் பசியாறி
விடையாய்க் கொஞ்சம் கூட்டிற்கு
               நடையாய் கொண்டு வந்திடலாம்
மறந்தால் மறுநாள் பட்டினியால்
                     இருக்கவேண்டுமே! விடுமுறையால்!
சிட்டுகளாச்சே! தெரியாதா? மூட!
           சட்டமே உண்டே! ஒரு நாள்தான்!
சிரமப்பணியைச் சிரம் ஏற்று
              திறனாய்ச் சென்றே தொலைவினிலே
நிரம்பக் கூளம் குப்பைகளைப்
                    பொறுக்கி வந்ததே! என் பேடும்!
நானும் அழகுப் பொருள்சேர்த்து
           தேனார் கூடாய் செய்துவிட
கூடும் கூடாய்த் தெரிந்ததுவே;
                கூடிய உழைப்பின் சிகரமென!
வானம் இருண்டு காற்றோடு
           வீணாய் மழையே பெய்தாலும்
உழைப்பின் வீட்டில் சுகமாக
                களிப்பில் மூழ்கிக் குடியிருக்க
சிட்டுகளுக்கென்ன; பயமென்ன?
                                சிட்டாய்ப் பறந்து போகாதோ?
வாடைக்காற்றும் மழைவீச்சும்
           சோடையின்றி ஓர் முடிவாய்
கூட்டின்மேலே போர் தொடுத்தால்
                     கூட்டை அசைக்க வலு உண்டோ?
தெம்பற்றுப் போகும்! அப்பப்பா!
                 கும்மென்றிருக்கலாம்! எப்போதும்!
ஒன்றிக்கொண்டு பல நாழி
           இன்பப் போதையில் கண்மூடி
ஒன்றாய் எங்கோ நாங்கள்தான்
                  நன்றே செல்லலாம்? பல நாட்கள்!
குடும்பம் பெருகும்! கொஞ்சநாளில்!
                     இடுவேன் முட்டை! குஞ்சு பொரிப்பேன்!
இறகும் முளைக்கும்! மரம்! மரமாக!
           பறக்கத் துடிக்கும்! குடில்! குடிலாக!
பட்டணம் முழுக்க! இனிமையில் நாளும்
                     வட்டம் போடும்! செல்வங்கள் சிரித்தே!
மரத்தடி தங்கும் மனிதர்கள் நாளும்
                     இரவிலே பாட்டு! கதையும்! அப்பப்பா!
                (அன்புச் சிட்டின் துணை எண்ணி
                    இன்பக் கனவில் மூழ்கியது)
(காட்சி முடிவு)
(தொடரும்)
Jpeg


அகரமுதல 56

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்