வணிகத்துறையில் பயன்பாட்டுத் தமிழ் – முனைவர் கீதா இரமணன்
14 திசம்பர் 2014
கருத்திற்காக..
வணிகத்துறையில் பயன்பாட்டுத் தமிழ்
முனைவர் கீதா இரமணன்
‘‘விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது
விளக்கிருந்தாலும் எண்ணெய் இல்லாமல் வெளிச்சம் தோன்றாது”
என்ற இலக்கியத் தரமிக்க வைரவரிகளைக்
கவியரசர் கண்ணதாசன் திரைப்படப்பாடல் வரிகளாய் நமக்களித்தார். இருப்பினும்
நம்மில் பலர் விளம்பரங்களால் ஆட்கொள்ளப்பட்டு அனைத்து வணிகப்பிரிவுகளிலும்
விளம்பரங்களை நம்பியும்வணிக அடிப்படை மற்றும் வணிகப் பொருள்களின் தரம்
போன்ற இன்றியமையாதனவற்றைப் பின்னுக்குத் தள்ளியும் செயல்பட்டு வருகிறோம்.
‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ என்று
கூறி ஆண்டுகள் பல கழித்தோம். இதன் அடுத்த நிலையாகத் ‘துறைதோறும் தமிழ்’
என்பதில் முனைந்துள்ளோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வணிகத்தின்
பங்கு முதன்மையானது. பல்வேறு துறைகளில் தமிழைப் பயனாக்குவதுபோல்
வணிகத்துறையில் தமிழை இணைப்பது கடினமான செயல் என்று கருதாமல் இப்பணியில்
தமிழர்கள் வெற்றிகாண வேண்டும்.
‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’
என்பதற்கிணங்க வணிகர்கள் உரோமாபுரி யவனம். சீனம் போன்ற கடல் கடந்த
நாடுகளில் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். வெளிநாடுகளிலிருந்து கொண்டு வந்த
பொருட்களை உள்நாட்டில் விற்பனை செய்தனர். பழந்தமிழ் நூல்கள் இச்செய்திகளை
எடுத்துரைக்கின்றன. வணிகர்கள் தங்களின் வணிகத்தலங்களை ‘அங்காடி’ என்ற
தமிழ்ச்சொல்லால் அழைத்தனர். வெளிநாடுகளுக்குச்சென்று வணிகம் செய்ததால்
பன்மொழிப்புலமை பெற்றிருந்தும் உள்நாட்டில் வணிகத் தலத்திற்கு ‘அங்காடி’
என்ற தமிழ்ச்சொல்லையே பயன்படுத்தினர். பகல்பொழுதில் வணிகம் செய்ய
‘நாளங்காடி’ என்றும் இரவில் ‘அல்லங்காடி’ என்றும் குறித்தனர். பகல்பொழுதில்
விற்பனைக்குரிய பொருள்களைக் குறிக்க விதவிதமான பல வண்ணக்கொடிகளைப்
பயன்படுத்தினர். இரவில் இயங்கும் அல்லங்காடிகளுக்கு பலநிற விளக்குகளைப்
பயன்படுத்தினர். இப்படித் தமிழ்நாட்டின் தன்னிகரற்ற வணிகர்கள்
பிறநாட்டவர்களுக்கும் வணிகத்தின் சிறப்பைக் கற்றுக் கொடுக்கும் தன்மையுடன்
இருந்தமையால் வள்ளுவப்பெருமானும் வணிகத்திற்கென்றே குறளை எழுதியளித்தார்.
‘வாணிகம் செய்வார்க்கு வாணிகம்; பேணிப்
பிறவும் தமபோல் செயின்”
இந்த நடுவுநிலைமையுடன் தமிழ்ப்பற்றையும் இன்றைய தமிழ்வணிகர்கள் சேர்த்துக் கொண்டால் மொழியின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
பெருஞ்செல்வந்தரான திருவெண்காடர்
(பட்டினத்தார்) ஒரு சிறந்த வணிகராவார். கடல்வணிகத்தில் பெயர்பெற்ற இவரின்
வளர்ப்பு மகனான மருதவாணன் தானும் திரைகடலோடி வணிகம் செய்து திரும்பினான்.
கடல்வணிகம் மேற்கொண்ட மகன் பெரும்பொருள் இல்லாது வீடுதிரும்பியதை எண்ணி
வருந்திய போது இன்ப அதிர்ச்சியாக மகன் கொண்டுவந்த விரட்டிகளில் நவமணிகள்
ஒளிர்வதைக் கண்டதும் அமைதிகொண்டார். மருதவாணன் சிறுபெட்டியை அவரிடம்
ஒப்படைத்துவிட்டு மறைந்ததும், அதிலிருந்த ஓலைச்சுவடியில் அவன் எழுதியிருந்த
‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்ற அறிவுரையைக் கண்டு ஞானம்
பெற்றார். செல்வம், வணிகம் அனைத்தையும் துறந்து சித்தரானார். தமிழில்
மிகச்சிறந்த பாக்களைப் புனைந்த பட்டினத்தடிகள் பன்னாட்டு வணிகம் மேற்கொண்ட
மிகச்சிறந்த வணிகர் என்பதை இன்றைய தமிழ்நாட்டு வணிகர்களும் உணர்ந்து
தமிழின் சிறப்பைக் கற்று உலகறியச் செய்யலாமே!
மனிதனின் முதன்மைத் தேவைகள் உணவு, உடை,
இருப்பிடம். வசதியும் கால வாய்ப்புமின்மையால் பெரும்பாலான குடும்பங்கள்
உணவகங்களில் உணவருந்துதலை அதிகரித்துள்ளனர். எனவே உணவகங்களில் ஆக்கப்படும்
தமிழ்நாட்டு உணவுகளின் பெயர்கள் தமிழில் அமைவது சிறப்பு. இளைய
தலைமுறையினருக்குப் ‘பானகம்’, ‘பதநீர்’ போன்ற தமிழ்ச் சொற்களை
நினைவூட்டலாம். சிற்றுண்டி, மதிய உணவு, மாலைச் சிற்றுண்டி, இரவு உணவு
என்றெல்லாம் வகைப்படுத்தலாம். உணவுப் பட்டியல் (மெனு) அட்டைகளைத் தமிழிலும்
அளிக்கலாம். தமிழ்நாட்டுச் சிற்றுண்டி உணவு வகையைச் சார்ந்தது ‘இட்லி’.
இதன் சரியான பெயர் ‘இட்டிலி’ அல்லது ‘இட்டலி’ என்ற இருவிதமான கருத்துகள்
உள்ளன. இதில் ‘இட்டிலி’ என்பதே சரியானது. உணவங்களில் ‘இட்டிலி’ என்று
சரியான சொல்லைப் பயன்படுத்தலாமே!
அயல்நாட்டு உணவு வகைகள் பலவற்றை இன்று
தமிழ்நாட்டில் பலர் விரும்பி உண்கிறோம். இத்தாலிய உணவு வகையான ‘பிட்சா’வை
தமிழ் மரபுப்படி ‘இத்தாலிய அப்பம்’ என்று குறிப்பிடலாமே. இதைப்போல்
இயன்றவரை அயல்நாட்டு உணவு வகைகளைத் தமிழ்ப்படுத்தலாமே!
வணிகத்துறையில் ஏற்றுமதியின் பங்கு
அவசியமாகிறது. தமிழ்நாட்டிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின்
பெயர்கள் தமிழில் அமைவது சிறப்பு. இங்கு பதப்படுத்தப்பட்டு வெளி மாநிலம்,
வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருள்கள் பல. அவற்றில் நறுமணப் பொருள்கள்
என்று கூறப்படும் மிளகாய், மிளகு, ஏலம் போன்றவற்றைத் தமிழிலேயே பெயர்களை
முதலில் குறிப்பிட்டுப், பின்னர் அடைப்புக் குறிக்குள் அவற்றின் ஆங்கிலப்
பெயர்கள் ‘சில்லி, பெப்பர், கார்டமம்’
என்று எழுதப்பட்டிருந்தால் அதனைக்காணும் தமிழ் அறியாத தமிழ் மக்கள்
தமிழ்ப்பெயர்களைப் படிக்கத் தெரிந்து கொண்டு தமிழில் ‘சில்லி’ என்பதற்கு
மிளகாய் என்பதனை அறிவார்கள். இன்று வணிகத்தின் வளர்ச்சியில் பொருள்களின்
தமிழ்ப்பெயர்களைக் கூடத் தமிழ்மக்கள் மறந்துள்ளனர். குழந்தைகள் மிளகாய்
என்றால் சிறிது யோசித்தே அதன் தன்மையைக் கூறுவர். ஆனால் ‘சில்லி’ என்று
கூறினால் உடனே அது காரமானது என்பதை அறிவர். அந்த அளவு, பொருள்களின் தமிழ்ப்
பெயர்களை மறந்துள்ளனர். மேலும் ‘தக்காளிக் கூழ்’ என்றால் விழிக்கும் சில
தமிழர்கள் ‘டொமாட்டோ கெச்சப்’ என்றால் உடனே புரிந்து கொள்கின்றனர். உணவு
வணிகத்துறையில் ஈடுபடும் தமிழர்கள் தங்களின் உணவுப் பொருள்களின் பெயர்களைத்
தமிழில் அறிமுகம் செய்து தமிழின் பயன்பாடு அதிகரிக்கும்படி செய்ய
வேண்டும். வணிக நிறுவனங்கள் அன்றாடப் புழக்கத்தில் உள்ள பொருள்களின்
பெயர்களைத் தமிழில் முதலில் குறித்து தமிழிலேயே பெரிய எழுத்தில் அதனை
எழுதி, சிறிய வடிவில் உலகம் அறிந்த மொழிகளில் குறித்தால் தமிழ் அறியா
மக்களின் மனத்தில் கூட ‘இவை தமிழ் எழுத்துவடிவங்கள்’ என்ற எண்ணமாவது
தோன்றும்.
வணிகத்துறையில் மக்களின் தேவையில்
முன்னிலையில் இருக்கும் பிரிவு ஆடையகம். திருவிழாக்காலங்கள் மட்டுமல்லாமல்
ஆண்டின் எல்லா மாதங்களிலும் திருவிழாக்கோலம் கொண்டிருப்பது ஆடையகங்கள்
தான். மேலும் நேரங்களுக்கேற்ற வகையில் ஆடைகளுக்குப் புதிய பெயர்கள் இட்டு
அழைப்பதும் இவர்களது விற்பனைத் திறனில் ஒன்று. இவர்களால் விற்கப்படும்
சேலைகளின் தன்மைகளும் வகைகளும் ஆங்கிலம் மற்றும் பிற மொழிப் பெயர்களால்
அறிமுகப்படுத்தப்படுகின்றன. ‘சில்க்’ என்பதனைத் தவிர்த்து ‘பட்டு’ என்றும்
‘சாஃப்ட் சில்க்’ என்பதை ‘மென்பட்டு’ என்றுப் அழைக்கலாம். ‘பனாரசு சில்க்’
என்பதை ‘வாரணாசிப்பட்டு’ என்று குறிப்பிடலாம்.
வாடிக்கையாளர்கள் பங்குபெற வணிக
நிறுவனங்கள் பல போட்டிகளையும் பரிசுத்திட்டங்களையும் ஏற்படுத்துகின்றன.
பொருள்களின் விற்பனையைக் கூட்டும் வகையில் தங்கள் சேவை மற்றும் நிறுவனம்
குறித்து ஓரிரு சொற்றொடர்கள், அதாவது ‘சுலோகம்’ எழுதும்படி அட்டை
ஒன்றை அளித்துச் சிறந்தவற்றிற்குப் பரிசு வழங்குவதாக அறிவிப்பர். இவற்றைத்
தமிழிலேயே ஓரிரு வரிகளாக எழுதுமாறு செய்யலாம். இதன் மூலம் தமிழில் எழுதும்
பழக்கத்தை அதிகரிக்கலாம். பிறமொழியாளர்களுக்கு மட்டும் ஆங்கிலத்திலோ
பிறமொழியிலோ இப்போட்டிகளை நடத்தலாம்.
உணவு, உடைக்கு அடுத்ததாக உள்ள இருப்பிடம்
மனித வாழ்வில் தொடர்ந்து இணைவதாகும். உணவு அன்றுடன் செரித்துவிடும்.
உடைகள் அவ்வப்போது மாற்றப்படும். இருப்பிடங்கள் பெரும்பாலும் நீண்ட காலம்
நம்முடன் இணைந்து நம்மைக் பாதுகாப்பவையாக அமைகின்றன. இந்த இருப்பிடங்கள்
இப்போதெல்லாம் தனித்தனியாக இல்லாமல் இடநெருக்கடியால் அடுக்ககங்களாகவும்,
பலமாடிக்கட்டடங்களாகவும் மாறிவருகின்றன. இவற்றைப் பல வணிகநிறுவனங்கள்
கட்டித்தருகின்றன. இன்றைய வணிகம் மற்றும் தொழில் துறைகளில் கட்டட
நிறுவனங்கள் மேலோங்கி நின்று பயனளித்து வருகின்றன. இந்தக் கட்டடங்களுக்குப்
பெயர்கள் சூட்டுவதும் வழக்கமாகியுள்ளது. இப்பெயர்கள் மிகப்பெரும்பான்மையான
அளவில் ஆங்கிலம், இலத்தீன், பிரெஞ்சு சமற்கிருதம், போன்ற
மொழிப்பெயர்களாகவே அமைகின்றன. இவற்றின் பொருள்கூடத் தமிழர்களுக்குத்
தெரியாது. இருப்பினும் பெருமையுடன் சூட்டுகின்றனர். தமிழ்நாட்டில்
கட்டப்படும் கட்டடங்களுக்குத் தமிழில் ஏன் பெயர் சூட்டக்கூடாது?
தமிழர்களல்லாதோர் கட்டும் நிறுவனங்கள் மற்றும் கட்டடங்களின் பிறமொழிப்
பெயர்களும் ஏன் தமிழில் எழுதப்படக்கூடாது?
அரசாங்கக் கட்டடங்கள், அரசின் பொது
நிறுவனங்கள் தமிழில் அழைக்கப்படுவதைப் போல் மக்களின் தனி நிறுவனங்களும்
அடுக்ககங்களும் ஏன் தமிழில் அழைக்கப்படக்கூடாது!
வணிக நிறுவனங்கள் பெரும்பாலும் உலக
அளவில் சிறப்புபெற்ற பெயர்களைத் தங்களின் நிறுவனங்களுக்குப் பெயர்களாகச்
சூட்டுவதில் ஆர்வம் செலுத்துகின்றன. இதனைத் தவிர்த்து குறைந்தது
தமிழர்களால் உருவான நிறுவனங்களாவது தமிழில் தங்களின் நிறுவனங்களுக்குப்
பெயர் வைத்தலை மேற்கொள்ளலாம். சப்பானியர்களின் ‘சோனி’, ‘சுசுகி’
போன்ற தொழில் நிறுவனங்களின் பெயர்கள் அம்மொழிப் பெயருடன் உலகமெங்கும் வலம்
வருகின்றன. இதே போன்று தமிழ்நாட்டில் தமிழர்களால் ஏற்படுத்தப்படும்
நிறுவனங்களும் தமிழில் பெயர்களையும்பொருட்களையும் குறித்தால் உலக அளவில்
வணிகத்தில் தமிழ் வளர்வதற்கான வாய்ப்பாக அமையும். மேலும் தெய்வங்களின்
பெயர்களை வணிகத்துறையில் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும் போது
பிறமொழிக்கலப்பு இல்லாமல் தூய தமிழில் அமைப்பது சிறப்பு. எடுத்துக்காட்டாக
‘கார்த்திக்’ ‘விட்ணு’ என்பதனை ‘முருகன்’, ‘திருமால்’ என்று நம்தமிழ்
வழக்கத்திற்கு ஏற்ற பெயர்களாக அமைக்கலாமே!.
‘ அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே’
என்னும் பழமொழிக்கேற்ப ‘தொழில் நிறுவனங்கள் தங்களின் பெயர்ப்பலகைகளைத்
தமிழில் கட்டாயம் குறிப்பிட வேண்டும்’ என்று அரசு ஆணையிட்டவுடன் தொழில்
நிறுவனங்கள் ஏற்றுச் செயல்படத் தொடங்கின. தங்களின் பெயர்ப்பலகைகளைத்
தமிழில் எழுதி வைத்தன. இதைப்போன்று சிறிய கடைகளில் விற்கப்படும்.
பொருள்களின் பெயர்ப்பட்டியலிலும் தமிழிலேயே குறிப்பிட்டால் மக்களின் அன்றாட
வாழ்க்கையில் தமிழின் பயன்பாடும் அதிகரிக்கும்.
வணிக நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சிக்கு
ஊடகங்களை நாடுகின்றன. இந்நிலையில் இதழ்களில் தங்களின் சாதனை,
தரம்போன்றவற்றை அறிமுகம் செய்யும் போது கலப்பில்லாத, சிறப்பான தமிழில் அதனை
வழங்கலாம். கவர்ச்சியான சொற்றொடர், மொழி நடை, வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள்
மூலம் படிப்பவர்களை ஈர்க்கும் வகையில் சுவையுடன் அமைத்தால் தமிழார்வத்தை
அது தூண்டும் வகையிலும்தமிழ் அகராதியைப் பயன்படுத்தும் வழக்கத்திற்கும்
வழிவகுக்கும். ஆங்கில இதழ்களில் கையாளப்படும் சில ஆங்கிலச் சொற்களுக்கான
பொருளை அறிய அகராதியைப் பயன்படுத்துவது போல நம் தாய் மொழியான தமிழிலிலும்
அருஞ்சொற்களை இதழ்களில் பயன்படுத்துவதால் மக்கள் இச்சொற்களின் பொருளை
அறியத் தமிழ் அகராதிகளைப் பயன்படுத்துவர். மேலும் தங்களின் அன்றாடப்
பேச்சு, எழுத்து வழக்கிலும் இதனைப் பயன்படுத்த முனைவர். இதனால் தமிழரின்
தமிழ்ச்சொல்லாட்சி மற்றும் எழுத்துவடிவ வளர்ச்சி மேம்படும்.
ஊடகங்களின் வரிசையில் வானொலி,
தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என்று கொண்டால், வானொலி கேட்பது என்பது
அரிதாகிவரும் நிலையில் தொலைக்காட்சியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குழந்தை
முதல் பெரியவர்வரை கண்டும் கேட்டும் இன்புறுகின்றனர். வணிகத் துறையினர்
தொலைக்காட்சியில் தங்களை அறிமுகம் செய்யும் போது அனைவரின் கவனத்தையும்
கவரக்கூடியதாக அமையும் விளம்பரங்கள் தனித்தமிழில் அமைந்தால் சிறப்பாகும்.
சிறார்கள் இன்று விளம்பரங்களை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவித்தலில்
ஆர்வம் காட்டுகின்றனர். விளம்பரங்களில் தமிழிலேயே உரையாடல் அமையச்
செய்துபழந்ததமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தினால் சிறார்களும் தங்களின் பேச்சு
வழக்கில் இவற்றைப் பயன்படுத்துவர். தமிழும் வளரும். பெரும்பாலான
விளம்பரங்கள் பிறமொழி கலந்த விளம்பரங்களாகவே அமைகின்றன. எடுத்துக்காட்டாக
வார இதழ் ஒன்றின் விளம்பரம்,‘Osthy கண்ணாOsthy’
என்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதைப் பலர் குறை கூறியதும் ‘ஒசத்தி
கண்ணா ஒசத்தி’ என்று மாற்றினார்கள். ஒசத்தி என்பது உயர்ந்தது என்னும்
தமிழ்ச்சொல்லின் மரூஉ வடிவம். வேற்றுமொழிச் சொற்களைவிடவும் கொச்சைத்தமிழ்
மேலானது அன்றோ! இதே போல் ‘நம்பர் ஒன்’ நாளிதழ், டாப்டென், மேட்னிஃசோபோன்ற
தேவையற்ற பிறமொழிக்கலப்புகள் ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. இவற்றையெல்லாம்
சரி செய்து ஊடகங்கள் தமிழ் வளர்ச்சிக்கு உதவலாமே! ஊடகங்களும் பொருளீட்டும்
வணிகநிறுவனங்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டே இக்கருத்து கூறப்படுகிறது.
இன்று புதிது புதிதாகத் தொலைக்காட்சி
நிறுவனங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றுள்சில தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும்
உறுதுணையாகின்றன. விளம்பரங்கள் அதிகம் கிடைக்காவிட்டாலும் தமிழில்
நிகழ்ச்சிகளை அளித்தும்தமிழில் போட்டிகள் பல நடத்தியும் தமிழ் வளர்ச்சியில்
பங்கு பெறுகின்றன. பிற தொலைக்காட்சிகளும் தமிழுக்கு முதலிடம் அளித்து
அதிகமான தமிழ்நிகழ்ச்சிகளைத் தரலாம். கூடியமட்டில் தமிழில் பேசுவதையும்
உச்சரிப்பில் கவனம் செலுத்துவதையும் மேற்கொண்டால் தமிழ் எல்லோர்
மனங்களிலும் சிறப்பாகப் பதியும்.
‘விற்பனையை மட்டுமே முதல் நோக்கமாகக்
கொண்ட வணிகத்துறையில் தமிழை வளர்க்க முடியுமா?’ என்றால் முடியும். வணிகம்
செய்யப் பிற நாடுகளுக்குச் சென்ற வெள்ளையர் அந்நாடுகளையே
கைப்பற்றித்தம்மொழியைப் பரப்பினர். அப்படியிருக்க நம் நாட்டில் தாய்
மொழியாம் தமிழ் சிறிது சிறிதாகக் கைவிடப்பட்டுவரும் நிலையில் ஏன்
வணிகத்துறையினால் தமிழை வளர்க்க முடியாது! இன்றளவிலும் வெளிநாட்டு
வணிகர்கள் நம்நாட்டில் இசைவுபெற்று நம்நாட்டுப் பொருள்களை அவர்களின் நிறுவன
அடையாளப் பெயர்களுடன் விற்பனை செய்ய முனைந்துள்ளபோது, ‘நம்மால் ஏன்
முடியாது’ என்ற வினா எழுந்ததன் விளைவே ‘வணிகத் துறையில் தமிழ்’ காணும்
முயற்சி. ‘ஊர் கூடித் தேர் இழுத்தல்’ போல் துறைதோறும் இணைந்து தமிழ்
வளர்ப்போம்.
Comments
Post a Comment