சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம்
(நவம்பர் 23, 2014 இன் தொடர்ச்சி)
மையக்கருத்துரை
4. தொல்காப்பியர் நோக்கு
தொல்காப்பியரே சுற்றுச்சூழல்
திறனாய்வுக்கு முன்னோடி எனலாம். அது இரண்டு நிலையில் அமைந்துள்ளதாகத்
தோன்றுகிறது.1. பலரும் எடுத்துக் காட்டும் முதல்,கரு, உரி என்ற பாகுபாடு,
2. அவருடைய உள்ளுறை, இறைச்சி என்ற கருத்தமைவுகள் மூலம் புலனாகும் சுற்றுச்
சூழல் திறனாய்வு கருத்துகள்.
4.1.முதல், கரு, உரி
‘முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறை சிறந்த னவே
பாடலுள் பயின்றவை நாடுங் காலை’
என்று தொல்காப்பியர் பொருளதிகாரத்தின்
முதல் இயலான அகத்திணையியலில் (3) என்று குறிப்பிட்டுள்ளார். இங்குள்ள,
முதல், கரு, உரி என்ற சொற்களின் பொருளும் அவைகளின் விளக்கமும் மட்டும்
அல்லாமல் அவைகளின் வரிசை புலப்படுத்தும் வரலாற்று உண்மை சுற்றுச்சூழலியல்
நோக்காக அமைந்து, அவை உலகத் தோற்றம், வளர்ச்சி பற்றிய குறிப்பாகவும்
அமைந்துள்ளது அறியத் தகுந்தது.
‘முதல் எனப்படுவது நிலம் பொழுது
இரண்டு’ என்பது தொல்காப்பிய (அகத்திணையியல்-4) விளக்கம். அது வரலாற்றுக்
குறிப்புடையதாகத் தோன்றுகிறது.
வான இயலார் சூரியன் சுழற்சி காரணமாகச்
சூரியனின் ஒரு பகுதி சிதறியதே இந்த நிலப் பரப்பு என்றும், அது குளிர்ச்சி
அடைந்த பிறகே தாவரங்கள், விலங்குகள், பறவைகள் தோன்றிய பிறகே மனிதன்
தோன்றினான் என்றும் கூறுவார்கள். எனவே சூரியன், பொழுதோடு தொடர்பு உடைய
நிலம், பொழுது ஆகிய இரண்டையும் தொல்காப்பியர் ‘முதல்’ என்று கூறியது தொல்
வரலாற்றைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இளம்பூரணர் அகத்திணை முதல் சூத்திர
உரையில் ‘முதல்பொருள், நிலம் எனவே, நிலத்திற்குக் காரணமாகிய நீரும்,
நீருக்குக் காரணமாகிய தீயும், தீக்குக் காரணமாகிய காற்றும், காற்றிற்குக்
காரணமாகிய ஆகாயமும் பெறுதும்’ என்று விளக்குவது முதல் என்பதே கூடுதலான
சுற்றுச் சூழலை உள்ளடக்கியதாகிறது.
தொல்காப்பியர் கரு என்பது ‘தெய்வம்,
உணாவே, மா (விலங்கு), மரம், புள் (பறவை), பறை, செய்தி (தொழில்), யாழ்
அவ்வகை பிறவும்’ என்றும், அடுத்த சூத்திரத்தில் பூவும் உள்ளடங்கியதாகக்
கூறியுள்ளதில் (அகத்திணை -18, 19) மரம், பூ , விலங்கு, பறவை ஆகியவை
சுற்றுச் சூழல் பொருள்கள்; தெய்வம், உணா, பறை, தொழில், யாழ் ஆகியவை மனித
வாழ்வின் பண்பாட்டுச் சூழல் என்று கொள்ளலாம். அதாவது கருப்பொருள்
வருணனையிலே மனிதனின் பண்பாட்டு வாழ்வும் இயற்கைச் சுற்றுச்சூழலோடு தொடர்பு
உடையது என்று புலப்படுத்தப்பட்டுள்ளது எனலாம். இளம்பூரணர் அகத்திணை முதல்
சூத்திர உரையில் ‘கருப் பொருளாவது இடத்திலும், காலத்திலும் தோற்றும்
பொருள். அது தேவர், மக்கள்,விலங்கு முதலாயினவும், உணவு, செயல் முதலாயினவும்
பறை, யாழ் முதலாயினவும் இன்னவான பிறவும் ஆகிப் பல வகைப்படும்’ என்று
கூறியுள்ளது அதன் பன்முகத்தன்மையைப் புலப்படுத்தும்.
சங்கக் காலத்தில் கரு என்பது பல
பொருள் ஒரு சொல்லாக கரிய, பெரிய என்ற பொருள்களோடு சூல் என்ற பொருளும்
உடையது.(‘நீலத்தன்ன நீர்பொதி கருவின் மா விசும்பு’ =நீல மணி போல நீருண்ட
மேகம் கருக்கொண்டு பரந்த ஆகாயம் அகநானூறு. 314.1-2). எனவே நிலம் தோன்றி
சூரிய ஆற்றலால் தட்ப வெப்ப நிலை மாறுபட, உயிர்கள் குறிப்பாக விலங்கு, பறவை,
செடி, கொடிகள் தோன்றிய பின்னரே மனிதன் தோன்றுகிறான். ஆனால் இந்தச்
சூத்திரம் மனிதப் பண்பாட்டை முதன்மைப்படுத்துவதாக அமைந்துள்ளதற்குத்
தொல்காப்பியருடைய அடிப்படை நோக்கு, இலக்கியமே காரணம்.
உரி என்பது புணர்தல், பிரிதல்,
இருத்தல், இரங்கல், ஊடல் என்ற ( அகத்திணை -14) கூறியது குடும்ப நடத்தைகள்
ஆகும். உரி என்பது உரியது (belonging) என்றும் உரிமை (right) என்று
பொருள்படும். அவை மனிதன் குடும்ப வாழ்வில் உள்ள கூறுகள் ஆகும்.
இளம்பூரணர் அகத்திணை முதல் சூத்திர உரையில் ‘உரிப்பொருளாவது மக்கட்கு உரிய
பொருள். அஃது அகம், புறம் இருவகைப்படும்’என்று கூறி அவைகளை விரிவாக
விளக்கியுள்ளார்.
எனவே முதலும், கருப்பொருளில்
சிலவும் ( மா, புள், பூ ) இயற்கைச் சுற்றுச் சூழல்களாகவும், ஏனையவையும் (
தெய்வம்,உணா, பறை முதலியன ) மனிதனின் பண்பாட்டுச் சூழலாகவும், உரி என்பது
குடும்ப வாழ்க்கையாகவும் அமைகின்றன. ஆனால் தொல்காப்பியர் இங்கு மூன்றையும்
ஒருங்கே கூறியுள்ளதால் அவை ஒத்த சிறப்பு உடையன என்று அவர் கருதுகிறார்
என்றும் நாம் உணர வேண்டும்.
விசயராணி ( 2014 ) இன்றைய
சுற்றுச் சூழல் ஆய்வு அடிப்படையில், சூழல் கட்டமைப்பு என்று உயிருள்ள
காரணிகள், உயிரற்ற காரணிகள் என்று இரண்டு பெரும் பிரிவாகப் பிரித்து;
உயிருள்ள காரணிகளை மானிட உயிரினச் சூழல், மானிடப் பண்பாட்டு சூழல்,
அரசியல் அமைப்புகள் என்றும் மானிடற்ற உயிரினச் சூழல் , தாவரங்கள்,
விலங்குகள், பறவைகள், நச்சுயிரி(virus), நுண்ணுயிரி(bacteria)என்றும்
இரண்டு வகை சிறு கூறுகளாகவும்; உயிரில்லாக் காரணிகளை இயற்கைச்சூழல் நிலம்,
நீர், காற்று, விண்வெளி, தாதுப்பொருள்கள், வெப்பம் என்று உள் கூறுகளாகவும்
பகுத்துள்ளார். இது விளக்க முறை நோக்கு ஆகும். மாறாகத் தொல்காப்பியர்
வகைப்பாட்டில் கவிதைக்கூறும், வரலாறும் அடங்கியுள்ளன.
இன்னொரு நிலையில் சொற்களைப்
பிரிக்கும்போது தொல்காப்பியர், மனிதன் உயர்திணை என்றும் ( ‘உயர்திணை என்பது
மக்கட் சுட்டே’ ) என்றும், ஏனையவை அஃறிணை ( ‘அஃறிணை என்மனார் அவரல பிறவே’)
என்றும் சொல்லதிகார முதல் சூத்திரத்தில் கூறியது இலக்கண நோக்கு என்றாலும்,
சுற்றுச் சூழலில் மனிதன் சூத்திரதாரியாகச் செயல்படுகிறான் என்றும் ஆகிறது.
தொல்காப்பியர் உரிப்பொருள்களை
விளக்கும் சூத்திரத்திலேயே ( அகத்திணை. 14 ) அவற்றைத் ‘திணைக்குரிப்
பொருள்’ என்றும் குறிப்பிட்டு அதன் அடிப்படையில் அவற்றுக்குக் குறிஞ்சி,
பாலை, முல்லை, நெய்தல், மருதம் பெயரிட்டது அவற்றைச் சுற்றுச் சூழல்
பொருள்களோடு இணைத்துக் காட்டியதாகும்.
முதலில் மனித உலகக் குடும்ப
வாழ்வைக் ‘கைக்கிளை (ஒரு தலைக்காதல், காதல் தொடக்கம், அகத்திணை- 50)
முதலாப் பெருந்திணை’ (மிகுந்த காமத்தால் ஏற்படும் நிலைகள் அகத்திணை-51)‘ஏழு
திணை’ என்று அகத்திணை முதல் சூத்திரத்தில் கூறிவிட்டு , அடுத்த
சூத்திரத்தில் ‘ஐந்திணை’ என்றும் பின்னர் ‘அன்பொடு புணர்ந்த ஐந்திணை’
என்றும் (களவியல் -1) குறிப்பிட்டுப் பின்னர் ( அகத்திணை-5 )குறிஞ்சி,
முல்லை, பாலை மருதம், நெய்தல் என்றும் விளக்கியுள்ளார். ஐந்தணைப் பெயர்கள்
பொதுவாக அந்தந்த நிலத்துக்குரிய சிறப்புப் பூவின் பெயரால்
குறிப்பிடப்படுவதாகக் கொண்டு காரணப் பெயர்கள் என்று இளம்பூரணரும், ‘அவ்வந்
நிலங்கட்கு ஏனைப் பூக்களும் உரியவாகலின்’ காரணப் பெயர் இல்லை என்று
நச்சினார்க்கினியரும் கருதுகிறார்கள். எப்படியானாலும், அவை அந்தந்த
நிலத்தில் உள்ள பூக்கள் என்பதால், பூவால் மனித வாழ்க்கைக் கூறுகள்
பெயரிடப்பட்டுள்ளது சுற்றுச்சூழலோடு மனித வாழ்க்கையை இணைத்துக் காட்டும்
தொல்காப்பியரின் சிந்தனை சிறப்பானது, சுற்றுச்சூழலோடு தொடர்பு உடையது.
புணர்தல் = குறிஞ்சி (மலையும் மலை
சார்ந்த இடமும்), இருத்தல் = முல்லை (காடும் காடு சார்ந்த இடமும்), இரங்கல்
= நெய்தல் (கடலும் கடல் சார்ந்த இடமும்), ஊடல் = மருதம் (வயலும் வயல்
சார்ந்த இடமும்), பிரிதல் = பாலை (தனி நிலம் கிடையாது- அகத்திணை-5). எனவே,
மனிதக் குடும்ப வாழ்வின் கூறுகளை நில அடிப்படையில் குறுக்கி (புணர்ச்சி =
குறிஞ்சி, இரங்கல் = நெய்தல் போன்று) இணைப்பது மனித வாழ்வைச்
சுற்றுச்சூழலோடு இணைக்கும் கவித்துவ தீவிரநோக்கே தவிர, உண்மையான வாழ்வு
நோக்கு அல்ல. ஏனெனில் அந்த ஐந்திணை ஒழுக்கமும் உலக வாழ்க்கையில் எல்லாத்
திணை நிலத்திலும் நடைபெறுவதே. எனவே, தொல்காப்பியர் கருத்தைச் சூழலியல்
நோக்கில் தீவிர வாதம்தான் என்று கொள்ள வேண்டும்.
முதல், கரு உரி ஆகிய மூன்றையும் 1.
‘பாடலில் பயின்றவை’ என்றது ஒரு பாடலில் உள்ள கருத்தன் என்ற மூன்று பெருங்
கூறுகள் என்ற முறையில் கருத்தாடல் நோக்கு ஆய்வுக்கும், சுற்றுச் சூழலியல்
இலக்கியத் திறனாய்வுக்கும் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் அமைந்துள்ளது.
‘முறை சிறந்தனேவே’ என்று கூறியதால் 1. ‘ஒரு செய்யுட்கண் முதற்
பொருளும், கருப்பொருளும் வரின் முதற் பொருளால் திணையாகும் என்பதூஉம், 2.
முதல்பொருள் ஒழிய ஏனைய இரண்டும் வரின் கருப்பொருளால் திணையாகும் என்பதூஉம்.
3. உரிப்பொருள் தானே வரின் அதனால் திணை ஆகும் என்பதூஉம் ஆகும்’ என்று
இளம்பூரணர் விளக்கத்தில், அவை கட்டாயக் கூறுகள் இல்லை, விருப்பக் கூறுகள்
என்று பெறப்படுவதோடு முதல் இரண்டு நிலைகளிலும் ( முதலும் கருவும்
வருபவை,கருவும் உரியும் வருபவை) கருப்பொருள் திணை உணர உதவும் என்று கூறியது
கருப்பொருளின் சிறப்பும், அதன் மூலம் சுற்றுச் சூழல் சிறப்பும் புலனாகும்.
அது தருக்கரீதியாகச் சிந்தனை அடிப்படை ஆகும். சங்கப்
பாடல்களில் எப்படி அமைந்துள்ளது என்று ஆராய வேண்டும். எப்படியிருந்தாலும்,
பாடல்களில் 1. முதல் கரு உரி ஆகிய மூன்றும் வருவனவும், 2.முதல், கரு
மட்டும் வருவனவும் 3. கரு, உரியும் மட்டும் வருவனவும், 4. உரிப் பொருள்
மட்டும் வருவனவும் என்று நாலு வகை உள்ளதாக இளம்பூரணர் விளக்கம்
புலப்படுத்துகிறது. அவைகளில் முதல் மூன்று வகையே சுற்றுச்சூழல் நோக்கில்
அமைந்த பாடல்களாகக் கருதவேண்டும். இந்த வகைகளுக்கான சங்க இலக்கிய
உதாரணங்களைக் கண்டு அதன் வன்மை மென்னமையும் மதிப்பிட வேண்டுவது ஆய்வாளர்
கடமை. இங்கு, வகைக்கு ஒரு பாடல் மட்டுமே எடுத்துக்காட்டப்படும்.
Comments
Post a Comment