சொல் மந்திரம் – செயல் எந்திரம் : அ.ஈழம் சேகுவேரா
சொல் மந்திரம்
செயல் எந்திரம்
நாம்
விதைப்பதற்காக
நிலத்தைக் கிளறினோம்,
அவர்கள்
புதைப்பதற்காக
நிலத்தைக் கிளறினார்கள்.
நாம் கதிரறுக்கக்
கத்தி எடுத்தோம்,
அவர்கள் கருவறுக்கக்
கத்தி எடுத்தார்கள்.
நாம்
சூடு மிதித்தோம்,
அவர்கள்
சூடு வைத்தார்கள்.
பாடுபட்டு
விளைஞ்சதெல்லாம்
வீடு கொண்டு வந்து
சேர்க்க முயன்றோம்
வழி மறித்தார்கள்.
நம் மடியில்
கை வைத்தார்கள்.
கலங்கப்பட்டோம்
கலவரப்பட்டோம்
கூனிக்குறுகியது ஆத்மா.
விளைபூமி வினைபூமியாயிற்று.
இசைந்து போதல் சுகம்
என்றார் சிலர்.
மசிந்து போனாலே இருப்பு
என்றார் சிலர்.
கட்டுடைத்து குலைந்து போனது
ஒரு கூட்டம்
அவர்கள் வழி ஒற்றி.
தக்கனப்பிழைத்தலுக்கு
கற்பிதம் வேறு சொல்லி.
மாறாக நீயோ
“வலியது வாழும்”
பிரளயம் செய்தாய்.
நம் கூனல்களை நிமிர்த்திக்
குத்து வரியாக்கி
இனியொரு விதி செய்தாய்.
கச்சைகளும் கந்தைகளும்
உருவப்பட்டு
உறுத்திக்கொண்டிருந்த
நம் அம்மணத்தை மறைக்க
சோழக்கொடியில்
ஆடை தந்தவன் நீ.
எமக்குச்
சிராய்ப்புக்காயமெனில்
அவர்க்கு
விழுப்புண் கொடுத்தாய்.
எமக்கு
உடல் காயமெனில்
அவர்க்கு
உளக்காயம் கொடுத்தாய்.
எங்கள் பத்தாயங்களில்
தானியங்கள் குவிந்திற்று.
மடியில் கணம் கூடிற்று.
பசித்து வந்தார்க்கு
அறுசுவை அமுதிட்டோம்.
நிலப்பசி எடுத்து வந்தார்க்கும்
மனம் ஒப்பி
படையல்கள் வைத்தோம்.
ஒரு பிடி மண்ணும்
பகைவனைக் கொல்லும்
அதிசயம் நிகழ்த்தினாய்.
நாடியும் நாளமுமாக
உள்ளோடி
தமிழ் மண்ணும் சுவாசிக்கும்
அற்புதம் காட்டினாய்.
திரை கடலோடிய தமிழன்
வானோடினான் என்று
வரலாற்றைத் திருத்தி
எழுதினாய்.
இனி எவனும்
இங்கிருந்துதான்
வரலாற்றை
எழுதத்தொடங்க வேண்டும்.
எல்லோரும் தம்
முற்றத்து வேலிகள் பற்றிச்
சிந்தித்திருக்க,
தேசத்தின் எல்லைகள் பற்றிச்
சிந்தித்தவன் நீ.
ஆதலால்தான்,
உன்னால் மட்டும்
முடிகிறது
எங்கள் நினைவுகளில்
இன்றுவரை பயணிக்க.
எனது தூரிகைக்கு
வண்ணமாய் உனைத்தொட்டு
படைப்புகள் தருவதே
சிறப்பாயிற்று.
எனது எழுதுகோலும்
உனைப்பற்றியே அதிகமாக
எழுதி எழுகிறது.
உனக்குள் நாமும்
எமக்குள் நீயுமாக
கலந்திருந்த
அன்றைய பொழுதுகளை
நினைக்கும் போது
நீயில்லா
இன்றைய பொழுதுகள்
இலங்கையில்
“கொலைக்களம்”
எல்லோரும் நீ
வருவாய் வருவாய் என்றே
சொல்கிறார்கள்,
எமக்குள் தான்
நீ இருக்கிறாய்
என்பதை அறியாமல்!
***
wetamizhar@gmail.com
Comments
Post a Comment