தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார் – முனைவர் மறைமலை
தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார்
எண்ணற்ற பேராசிரியர்கள்
தமிழுக்குத்தொண்டாற்றியுள்ளனர். தமது ஆய்வு நூல்களின் வழியாகவும் உரைகளின்
மூலமும்சொற்பொழிவுகளின் வாயிலாகவும் தமிழ் இலக்கிய இலக்கணங்களின் பெருமையை
எடுத்தியம்பியுள்ளனர். ஆனால் தமிழுக்குத் தீங்கென்று உரைக்கக்
கேட்டமாத்திரத்திலே நரம்பெல்லாம் இரும்பாக்கி நனவெல்லாம் உணர்வாக்கிக்
கிளர்ந்தெழுந்து உரிமைப் போர்க்களம் புகுந்த போராளியாகத் திகழ்ந்த ஒரே
பேராசிரியர் இலக்குவனார் மட்டுமேயாவர். தமிழ் வளர்த்த பேராசிரியராக
மட்டுமின்றித் தமிழ் உரிமைப் போராசிரியராகவும் அவர் திகழ்ந்தமையாலேயே
என்னைப் போன்ற அவருடைய மாணவர்கள் நெஞ்சிலே அவர் நிறைந்துள்ளார்.
அவருடைய புதல்வர்களில் ஒருவன் என்னும்
பெருமையும் வாய்ப்பும் அளப்பரியது என்றாலும் அவருடைய மாணவர்களில் ஒருவன்
என்னும் சிறப்பு அதனைவிடப் பெரியது எனலாம். 1966-ஆம் ஆண்டு சூன் திங்களில்
என்னுடைய பட்டப்படிப்பை நிறைவுசெய்துவிட்டு அவர் தொடங்கிய “குறள்நெறி’’
நாளிதழுக்குப் பொறுப்பாசிரியராகப் பணியேற்று அவருடைய ஊழியர்களில் ஒருவனாகத்
தொண்டாற்றும் வாய்ப்பும் பெரும்பேறாகப் பெற்றதனால் அவருடைய ஆளுமையின்
பன்முகப் பாங்கையும் அறிந்துகொள்ளும் வாய்ப்புப் பெற்றேன்.
“கெடல் எங்கே தமிழின் நலம்?-
அங்கெல்லாம்தலையிட்டுக் கிளர்ச்சி செய்க’’ என்னும் பாரதிதாசனின் வேண்டுகோள்
தம்மை முன்னிறுத்தியதாகவே அவர் எஞ்ஞான்றும் கருதிச் செயற்பட்டார்.
தோளிலே வில்லைத் தாங்கி நெஞ்சிலே
வீரம்தேக்கிக் கண்களில் சீற்றத்துடனும் விழிப்புணர்வுடனும் இராமனுக்கு
யாராலே எப்போது தீங்கு வந்துவிடுமோ என்று போர்க்கோலம் பூண்ட இராமாயண
இலக்குவனைக்காட்டிலும் மிகுந்த முனைப்பும் வீறுணர்வும் கொண்ட தமிழ் உரிமைப்
போராளி என்பதே அவரைப் பற்றிய சரியான மதிப்பீடு எனலாம்.
தமது பள்ளிப்பருவத்திலே
தம்முடையதமிழாசிரியர் சாமி.சிதம்பரனார் ஊட்டிய தனித்தமிழுணர்வும்
சுயமரியாதை வீறுணர்ச்சியும் பசுமரத்தாணியாக அவர் உள்ளத்தைப் பற்றிக்கொண்டன.
திருவையாறு அரசர் கல்லூரியில் அவர் புலவர் வகுப்பு மாணாக்கராகப்
பயின்றபொழுது அவருடைய ஆசிரியராகப் பாடம் நடத்த வந்த பி.சா.சுப்பிரமனிய
சாத்திரியாரிடமே அவர் தமிழுரிமைப் போர் தொடக்கம் பெற்றது. சாத்திரியார்
தமிழிலும் சமற்கிருதமொழியிலும் புலமை பெற்றவர். தமிழின்மேல் அவருக்கு
வெறுப்பு இல்லை யெனினும்சமற்கிருதத்தின் மேல் அளவிறந்த ஈடுபாடும்
சமற்கிருதத்தின் வாயிலாகவே தமிழ் தழைத்தது என்னும் எண்ணமும் மிக்கிருந்தது.
இதன் விளைவாகத் தொல்காப்பியப்பாடம் நடத்தவந்த சாத்திரியார் வடமொழி
இலக்கணங்களின் வழிநின்றே தொல்காப்பியம் இயற்றப் பெற்றது எனக் கூறினார்.
மாணாக்கர் இலக்குவனார்எழுந்துநின்று மறுப்புரைத்தார்; சாத்திரியார் அவருடைய
ஆசிரியர் மட்டுமல்லர். அக் கல்லூரியின் முதல்வருமாவார். ஆனால்
சிங்கக்குருளை அச்சமறியுமா? தொல்காப்பியத்தைப் பாணினியத்தின் வழிநூல் என
ஆசிரியர் கூறியதை ஏற்கமறுத்து எதிர்வாதம் புரிந்தார் இலக்குவனார்.
இந்த நிகழ்வு தொல்காப்பியத்தை
ஆழக்கற்கவும் உரையாசிரியர்களை ஊன்றிப் பயிலவும் கால்டுவெல் இயற்றிய
“திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்’’ என்னும் ஆங்கில நூலைக் ‘கரைத்துக்
குடிக்கவும்’ இலக்குவனாரைத் தூண்டியது என்கிறார் அப்போது விடுதியில்
அவருடைய அறைத்தோழராக உடனுறைந்த மேசர் அ.கிருட்டிணமூர்த்தி.
சாத்திரியார் தொல்காப்பியத்தை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்ட தறிந்து அவரது ஓரவஞ்சனை
நிறைந்த கூற்றுகளை மறுத்துத் தொல்காப்பியத்தின் தனிச் சிறப்பை
உணர்த்தும்வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அகிலமெங்கும் தமிழின்
பெருமையைப் பரப்பத்திட்டமிட்டார் இலக்குவனார்.
நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில்
தமிழாசிரியராகப் பொறுப்பேற்ற நாள்முதல் தொல்காப்பியம், திருக்குறள்,
சங்கஇலக்கியம், சிலப்பதிகாரம் இவற்றை மாணவர் நெஞ்சில் ஊன்றவும்
மக்கள்மன்றத்தில் பரப்பவும் ஓய்வறியாது உழைத்தார் இலக்குவனார்.
தொல்காப்பியர் விழா, திருவள்ளுவர் விழா,
ஔவையார் விழா, இளங்கோவடிகள் விழா, தமிழ் மறுமலர்ச்சி விழா எனத்
தாம்பணியாற்றிய பள்ளிகளில் அவர் நடத்திய விழாக்கள் மாணவர்களுக்கு
எழுச்சியூட்டவும் பெற்றோர் உள்ளத்தில் தமிழின் சிறப்பைப் பதியவும்
வழிவகுத்தது. ஆனால் இவையெல்லாம் அவர் சார்ந்திருந்த திராவிடர் கழகத்தின்
வெளிப்பாடே எனச் சிலர் பிறழ உணர்ந்து அவருக்குத் தொல்லையளிக்க முனைந்தனர்.
இத்தகைய தொல்லைகள் அவருடைய வாழ்நாள் முழுமையும் அவருக்குத் தொடர்ந்தன.
அவர் நடத்திய விழாக்களிலோ ஆற்றிய
பொழிவுகளிலோ குறைகாண முடியாதவர்கள் அவர் ”நடத்தாத விழாக்கள்’’ எனப்
பட்டியலிட்டுக் குறைகூற முற்பட்டனர். ஏன் கம்பருக்கு விழா இல்லை?
பாரதியாருக்கு ஏன் விழா எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினர்.
அரசியல்வேறுபாடு மறந்து அன்னைத் தமிழைப் போற்ற அனைவரும் ஒன்றுபடவேண்டுமென
முழங்கிய இலக்குவனாரின் மீது அழுக்காறு கொண்டோர் அரசியல் சாயத்தை
அவருக்குப் பூசிப்பழிகூறினர்.
இலக்குவனார் தமது போர்முறையைத் தெளிவாக வரையறுத்துக்கொண்டார்.
1) தமிழிலும் ஆங்கிலத்திலும், நூல்கள் இயற்றி ஆய்வுலகத்தில் கருத்துப் போர் புரிதல்
2) ஏடுகள் நடத்தியும் மன்றங்கள் அமைத்தும் மக்கள் மன்றத்தில் மொழிஉரிமையுணர்வைப் பரப்பல்
3) ஊர்வலங்கள், கூட்டங்களின் மூலம் மக்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளல்
4) மாணாக்கர்கள் உள்ளத்தில் தனித் தமிழுணர்வை ஆழப் பதியச் செய்தல்
சுருக்கமாகச் சொன்னால் ”எழுதுதற்கு ஏடும்
பேசுதற்கு மேடையும் எப்போதும் வேண்டும் தமிழ்பரப்ப’ என்னும் இலக்குவனாரின்
முழக்கமே அவர்தம் செயல்திட்டத்தை விளக்கப் போதும் எனலாம்.
இந்தச் செயல்திட்டம் மட்டுமல்ல இன்னும்
மேலே, அரசியல் தலைவர்களாயினும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் என்றாலும்
‘நெற்றிக்கண் காட்டினாலும் குற்றம் குற்றமே’’ என அஞ்சாது இடித்துரைத்த
நக்கீரப் பண்பே அவரின் தலையாய ஆளுமையாக விளங்கியது.
தமது இயக்கத்தவரேயாயினும்
தவறுகண்டவிடத்துச் சுட்டிக் காட்டும் இலக்குவனாரின் தறுகண்மையே ஒரு சூழலில்
அறிஞர் அண்ணாவையே எதிர்த்து வினாத் தொடுத்து எதிர்வாதம் செய்யத் தூண்டியது
எனலாம். பெரியார் இராமாயணத்தின் ஆரியச் சார்பைக் கூறிக் கருத்துவிளக்கப்
பொழிவு நிகழ்த்தி வந்தபோது “தீ பரவட்டும்’’ எனப் பரபரப்புடன் அறிஞர்
அண்ணாமக்களின் கருத்தைக் கவரும்வண்ணம் பொழிவாற்றி வந்தார். பெரும்
புலவர்களாகிய இரா.பி. சேதுப்பிள்ளையும் நாவலர் சோமசுந்தர பாரதியாரும்
அண்ணாவின் அடுக்கடுக்கான வாதங்களுக்கு விடைவழங்காமல் திகைத்துநின்ற காலம்!
பேராசிரியர் இலக்குவனார் அண்ணாவுக்கு முப்பத்தேழு வினாக்களை
அனுப்பிவைத்தார். அவ் வினா நிரல் இப்போது கிடைக்கப் பெறவில்லையெனினும்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைக் கூறி ஒவ்வோர் இலக்கியத்தைக் கொளுத்த
முனைந்தால் தமிழ் இலக்கியங்களில் எத்தனை மிஞ்சப்போகிறது என்னும் வினாவும்
தமது கொள்கைச்சார்புக்குப் பொருந்தாத இலக்கியத்தைக் கொளுத்திவிடுதல்
என்னும்போக்கு தமிழினத்திற்கும் தமிழிலக் கியத்திற்கும் நன்மை பயவாது
என்பதுமே இலக்குவனாரின் கருத்தாக இருந்தது எனத் தெரிகிறது.
இவ் வினாக்களுக்கு விடையாக அறிஞர்
அண்ணாமுன்வைத்த இருபத்துநான்கு வினாக்கள் “தமிழ்ப்பண்டிதர்கட்கு”
என்னும்தலைப்பில் ”திராவிடநாடு” இதழில் வெளிவந்தது.
அவ் வினாக்களுள் இரு வினாக்களை அண்ணாவின் தீவிரப் போக்குக்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம்.
6. தொல்காப்பியம் ஓர்
ஆரியரால் எழுதப்பட்டதென்று சொல்வதை நீங்கள் ஒப்புகிறீர்களா? அதில்
ஆரியத்திற்கு ஆதரவும் உயர்வும் அளிக்கப்பட்டிருக்கிற தென்பதை, நீங்கள்
மறுக்க முடியுமா?
7. சங்க இலக்கியங்கள்
பலவற்றில், ஆரியக்கொள்கைகள் புகுத்தப்பட்டிருக்கவில்லையா? தமிழ்க்கலைகளில்
ஆரியத்திற்குஇடமிருக்கலாமா? அவற்றைப்போக்க நீங்கள் ஏதேனும் முயற்சி
செய்ததுண்டா? முயல்வீர்களா? (“திராவிடநாடு’’ 8/8/1943-)
தொல்காப்பியத்தையும் சங்க
இலக்கியங்களையும் பற்றிய அண்ணாவின் பார்வை பிற்காலத்தில் மாற்றம் பெற்றது
என்பதற்கு அண்ணாவின் எழுத்துகளே சான்றாக விளங்குகின்றன.
எடுத்துக்காட்டாகப்பேராசிரியர் சி.இலக்குவனாரின் ஆங்கிலத் தொல்காப்பியத்
திற்கு அண்ணாவழங்கியுள்ள அணிந்துரையில் தொல்காப்பியம் பண்டைத் தமிழரின்
அறிவுக்கருவூலம் எனவும் பண்பாட்டுக் களஞ்சியம் எனவும் தெளிவுற
மொழிந்துள்ளார். தொல்காப்பியத்தில் காணப்படும் ஆரியச்சார்பான சில
நூற்பாக்கள் இடைச்செருகலாகப் புகுத்தப் பட்டனவே என்பதனை இலக்குவனார்
சான்றுகளுடன் நூலில் விளக்கியுள்ளார்.
சங்க இலக்கியம் தமிழினத்தின் முகவரி
என்பதையும் தமிழினம் தன்னாண்மை பெற்றுத் தனிச்சிறப்புடன் விளங்கிய
பொற்காலமே சங்கக்காலம் என்பதனையும் பிற்காலத்தில் அண்ணா தமது
பல்வேறுகட்டுரைகளின் மூலம் தெளிவுறுத்தியுள்ளார். இங்கே இவற்றை யெல்லாம்
விரிவாக விளக்க முயன்றால் தனி நூலே எழுதவேண்டிவரும்.
இங்கே கவனிக்கவேண்டியது,
தாம்சார்ந்திருந்த திராவிட இயக்கத்தில் கூறப்படும்
கருத்தாயினும்தமிழ்நலத்துக்கு ஒவ்வாதது எனக் கருதினால் எதிர்த்துரைக்கும்
இலக்குவனாரின்அஞ்சாமையே.
சிரீ பிரகாசா என்பவர் தமிழ்நாட்டு
ஆளுநராக இருந்தவேளையில் தமிழ்ப் பெண்களைப் பற்றிய தரங்குறைந்த மதிப்பீடு
ஒன்றினை வெளியிட்டார். இலக்குவனார் தாம் நடத்திவந்த “திராவிடக்கூட்டரசு’’
என்னும் இதழில் ஆளுநரின் அடாத செயலை வன்மையாகக் கடிந்துரைத்தார்.
செட்டி நாட்டரசர் முத்தையாச்
செட்டியார்தமிழ் எம்.ஏ.படித்தவர்கள் வேலையின்றித் திண்டாடுவதால் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் தமிழ் எம்.ஏ.வகுப்பை நீக்கிவிடப் போவதாக
அறிவித்திருந்தார். 1959-ஆம் ஆண்டில் புதுக்கோட்டை அண்ணலார்
பு.அ.சுப்பிரமணியனாரின் மணிவிழாவுக்குச் செட்டி நாட்டரசர் வந்தபோது,
இலக்குவனார் தமது பொழிவில் இக்கருத்தை மறுத்து, தமிழ்
எம்.ஏ.வகுப்பைநீக்கப்போவதில்லை என அந்தக் கூட்டத்திலேயே
அறிவிக்கவேண்டுமெனவலியுறுத்தினார். தம்மை எதிர்த்துப் பேசப் பலரும் அஞ்சும்
சூழலில் இலக்குவனார் காட்டிய அஞ்சாமையைப் பாராட்டிய செட்டிநாட்டரசர்
அந்தக் கூட்டத்திலேயே அந்த உறுதிமொழியை வழங்கினார்.
இவ்வுலக வாழ்க்கை சிறந்தோங்க வழி
காட்டும்திருக்குறள், மேலுலகு பற்றிய ஆய்வை முன்னிறுத்தும் வேதங்களையும்
உபநிடதங்களையும் விடச் சிறந்தது எனப் பாராட்டிய மெய்யியல் அறிஞர்
ஆல்பர்ட்டுசுவைட்சரின் புத்தகத்திற்குத் தடை விதிக்கக் காரணமாக இருந்த
முனைவர்.இராதாகிருட்டிணன் அவர்களின் போக்கைச் சுட்டிக்காட்டி அவரின்
ஓரவஞ்சனையை இலக்குவனார் கண்டித்த தறுகண்மை காவியச்சிறப்பு வாய்ந்தது.
அப்போதுகுடியரசுத் தலைவராகத் திகழ்ந்த அவரைக் கொண்டு இலக்குவனாரின் தொல்
காப்பியஆங்கில நூலை வெளியிடுதற்கு அவரது நண்பர்கல் ஏற்பாடு செய்திருந்தனர்.
பெரும்பதவியில் இருப்பவரேயாயினும் தமிழ்க்குக் கேடு சூழ்வோரால் தமக்கு
எத்தகையசிறப்பும் தேவையில்லை எனக் கூறி இலக்குவனார் விழாவை
நிறுத்திவிட்டார்.
சென்னை மாகாணம் தமிழ்நாடு எனப்பெயர்மாற்றம்
பெறவேண்டும் எனத் தமிழர்கள் அனைவரும் விழைந்தனர். சங்கரலிங்கனார்இவ்
வேண்டுகோளை முன்னிறுத்தி உண்ணா நோன்பு மேற்கொண்டு தமது இன்னுயிரைநீத்தார்.
இத்தகைய சூழலில் தமிழ்நாடு என்னும்
பெயர்தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப் படவில்லை என அப்போது
கல்வியமைச்சராயிருந்த சி.சுப்பிரமணியனார் கூறினார். இலக்குவனார் தமிழ்
இலக்கியச்சான்றுகளுடன் அமைச்சர் கூற்றை மறுத்தார். அமைச்சருக்கும்
இலக்குவனாருக்கும்இடையே அறிக்கைப் போர் ஒருவார காலம் நீடித்தது.
“செந்தமிழ்நாடு என்னும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே”
என்னும் பாரதியாரின் வாக்கிற்கிணங்கத்
தமிழர் செவிகளில் இன்பத்தேன் பாய்ச்சக்கூடாதா என்னும்
இலக்குவனாரின்வினாவுடன் அறிக்கைப்போர் முடிவுக்கு வந்தது.
தி.மு.க.ஆட்சிக்கு வந்த புதிதில் தமிழில்
அறிவியல்நூல்கள் இல்லையென்பதால் தமிழ் பயிற்றுமொழியாக வெற்றிபெற இன்னும்
ஒரு தலைமுறை பொறுத்திருக்கவேண்டும் எனக் கல்வியமைச்சர் நாவலர்
கூறியுள்ளார்.
“தமிழ் நாவலர் என எங்களால்
போற்றப்படும்கல்வியமைச்சர் ஆங்கிலக் காவலராக முயலலாமா?’’ என்னும் நயத்தக்க
நாகரிகமிக்க இலக்குவனாரின் வினா, அமைச்சரைத் தவிர, அனைவராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டது
இலக்குவனாரின் தமிழ் உரிமைப் போர் குறித்து ஒரு காப்பியமே இயற்றலாம்.
சுருங்கச் சொல்வதானால் அவர்
மறைவுக்குப்பின் உரைவேந்தர் ஔவை.சு.துரைசாமி அவர்கள் கூறிய கருத்தைக்
கூறிக் கட்டுரையைநிறைவு செய்யலாம்.
“நாம் அனைவரும் தமிழைத் தாயென்று
போற்றிக்கொண்டாடுகிறோம். மூவர் இப் போக்கிற்கு விதிவிலக்கானவர்; மறைமலை
யடிகள், பாரதிதாசன், இலக்குவனார் எனும் மூவரும் தமிழைத் தாய் எனக்
கருதவேயில்லை. அவர்கள் தமிழைத் தமது குழந்தையாகக் கருதினார்கள். தன்
பிள்ளைக்குச்சாலையில் செல்லும் ஊர்திகளாலோ, முரடர்களாலோ, நோய்களாலோ, இனப்
பகைவராலோ தீங்கு வந்துவிடக்கூடாதே என்னும் பதைபதைப்புடன் ஒரு தாய் தன்
பிள்ளையை அரணிட்டுக் காப்பது போலவே இலக்குவனார் எந்நேரமும் தமிழைக்
கண்ணும்கருத்துமாகக் காக்கும் பொறுப்பை மேற்கொண்டார். ஆய்வுலகிலோ,
ஆட்சியிலோ, மக்கள்மன்றத்திலோ எங்கேனும் தமிழுக்குத்
தீங்குவந்துவிடக்கூடாது என்னும் விழிப்புணர்வுடன் தீங்குற்ற நேரத்தில்
முந்திச் சென்று தமிழ்நலன்காக்கும் பணியிலும் ஈடுபடுவதே தம் கடனெனக் கருதி
வாழ்ந்தவர் இலக்குவனார். நமக்குத் தமிழ் தாய்; இலக்குவனார் தமிழின் தாய்’’
என உணர்வு பொங்கப்பெரும்புலவர் ஔவை துரைசாமி அவர்கள் கூறியது, முற்றிலும்
பொருந்தும்.
- முனைவர் மறைமலை இலக்குவனார்
தரவு : கேசவன்
Comments
Post a Comment