பாடி மகிழ்வோம் பைந்தமிழில் – இலக்குவனார் திருவள்ளுவன்
பாடி மகிழ்வோம் பைந்தமிழில்
உலகில் தோன்றிய முதல்
மொழி தமிழே. எனவே, பிற அனைத்து மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்கிறது.
ஆதலின்,,இசை, கூத்து ஆகிய மூன்றிலும் தாய்மைச் சிறப்புடன் இலங்குகிறது.
இசைச் செல்வம் மிகுந்தது தமிழ் என்பதை மறந்து பிற மொழிகளில் பாடுவதையே
பெருமையாகக் கொள்வது நமது பழக்கமாக உள்ளது. புலவர்களின் இசைப் பாடல்களைச்
சிறு அகவையிலேயே நாம் சிறுவர் சிறுமியருக்குப் பயிற்றுவிக்க வேண்டும்.
நமக்குத் தெரிந்த அல்லது எளிமையான பாடல் மெட்டுகளில் பாடிப் பழகுவது
தமிழ்ப் பாடல்களில் ஈடுபாட்டை ஏற்படுத்தும். எனவே, சில பாடல்களை
மெட்டுகளுடன் இப்பகுதியில் பார்க்கலாம்.
ஆண்டுதோறும் அனைவருக்கும் வரும்
கொண்டாட்டம் பிறந்த நாள் விழா. ஆனால், தமிழில் வாழ்த்துவது என்பதைத்தான்
மறந்து விடுகிறோம். “ஃகேப்பி பர்த் டே”(Happy Birth Day) எனக் கூக்குரல்
இடுவதுதான் நமக்கு விருப்பமாக உள்ளது. நமது தாய்த்தமிழில் நம்மவரை
வாழ்த்துவதுதானே உண்மையான வாழ்த்தாய் அமையும். எனவே, பிறந்த நன்னாளில்
பின்வருமாறு வாழ்த்தி மகிழ்வோம்.
நன்னாள் பொன்னாள் இந்நாள்!
வாழ்க நலமாய்ப் பாரிலே!
நூறு நூறு ஆண்டுகள் ஆயினும்
வாழ்க வாழ்க தமிழுடன் என்றுமே!
திரைப்படங்களில் இப்படிப்பட்ட தமிழ் வாழ்த்துகள் இடம் பெற்றால் தமிழில் வாழ்த்தும் பாங்கு எங்கும் பரவும் அல்லவா?
இப்பாடலை புல்லாங்குழல், வீணை, முழவு, விசை இசை, வில்யாழ் முதலிய கருவியிசையிலும் இயம்பலாம்.
மழலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் சில
பாடல்களின் மெட்டுகளில் சில பாடல்களைப் பார்ப்போம். பொதுவாக ஆங்கில மழலைப்
பாடல்கள் பல ஒலிக் குறிப்புகளை அறியவே கற்பிக்கப்படுகின்றன. சில மட்டுமே
பொருள் உள்ள பாடல்களாக உள்ளன. ஆனால்ää தமிழிலுள்ள குழந்தைப் பாடல்கள்
யாவும் அறிவுரையாகவோ அறவுரையாகவோ அறிவியலுரையாகவோ அமைந்துள்ளன. இருப்பினும்
தெரிந்த மெட்டின் அடிப்படையில் பாடல்களை அறிவது குழந்தைகளை ஈர்க்கும்
என்பதால் பின்வரும் பாடல்கள் குறிக்கப் படுகின்றன.
வாழ்க்கைக்கு அடிப்படை தூய்மை.
மனத்தூய்மை வாய்மையால் அமையும் என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
சுற்றுப்புறத் தூய்மைக்கு அடிப்படை குப்பைக் கூளங்களைச் சுற்றிலும்
பரப்பாமல் குப்பைக் கூடைகளைப் பயன்படுத்தல் ஆகும். அந்த வகையில் தூய்மையைப்
பற்றியும் குப்பைத்தாள்களை அகற்றுவதும் குறித்தும் பின் வரும் பாடல்களைப்
பாடி மகிழலாம்.
“Baa, Baa, Black Sheep” என்னும் பாடல் 1731இல் இருந்து ஆங்கிலத்தில்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதே மெட்டில் பின்வரும் பாடலைப் பாடி
மகிழுங்கள்.தூய்மை தூய்மை தூய்மையே செல்வம்
தூய்மை இன்றேல் நோய்தான் ஆளும்
நோயில் வீழ்ந்து நலிவது நன்றா?
தூய்மையாய் வாழ்ந்து பொலிவது நன்றா?
சொல்வீர் சொல்வீர் நல்லதைச் சொல்வீர்!
தூய்மையே நன்றெனத் தெளிவீர் இன்றே!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அல்லவா? நலமான வாழ்விற்குத் தூய்மையே அடிப்படை என்பதை வளரும் குழந்தைகளுக்கு உணர்த்துவோம்.
குப்பையை அகற்றப் பின்வரும் பாடல் அறிவுணர்த்தும்.
துண்டுத் தாள்கள் துண்டுத் தாள்கள்
கிடக்குது பார்! இங்கே கிடக்குது பார்!
துண்டுத் தாள்கள் துண்டுத் தாள்கள்
கெடுக்குது பார்! அழகைக் கெடுக்குது பார்!
பொறுக்கி எடு! நீ பொறுக்கி எடு!
பொறுக்கி எடு! நீ பொறுக்கி எடு!
கூடையில் போடு! குப்பைக் கூடையில் போடு!
தூய்மை ஆக்கு! நீ தூய்மை ஆக்கு!
‘Bits of Paper” பாடல்; நினைவிற்கு வருகிறதா? அதே பாடல்தான். அன்னைத் தமிழில் இதனைக் கூறும் பொழுது எவ்வளவு அழகாக உள்ளத்தில் பதிகின்றது.
1744 இல் எழுதப்பெற்ற “London Bridge Is Falling Down” என்றொரு மழலைப் பாடலை அனைவரும் அறிவர். “வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்” என்னும் கலைஞரின் கருத்தை இப்பாடல் முறையில் பொருத்திப் பாருங்கள். பின்வரும் இனிய பாடல் கிடைக்கும்.
வேண்டிய மட்டும் வீழட்டும்! – மழை
வீழட்டும் வீழட்டும் – பாரில்
வேண்டிய மட்டும் வீழட்டும்!
மழை
எங்கெங்கும் வீழட்டும்!
நீயும் நானும் வீழ்ந்தாலும் – தமிழ்
வாழட்டும்! வாழட்டும்! – பாரில்
நீயும் நானும் வீழ்ந்தாலும் – தமிழ்
என்றென்றும் வாழட்டும்!
தமிழ்
என்றென்றும் வாழட்டும்!
“Rain Rain go away” என மழையை விரட்டாமல், பெய்தும் பெய்யாமலும் கெடுக்காமல், நமக்கு வேண்டிய அளவு மட்டும் மழை பொழிய வேண்டுவது பொருத்தமானதுதானே!
குழந்தைகளுக்குக் கண், காது முதலிய புலனுறுப்புகளைச் சொல்லித் தர உதவும் பாடல். “Ten little fingers” என்னும் பாடல் முறையில் அமைந்தது. பாடிப் பாருங்கள். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
கைகள் இரண்டு ஊருக்குதவ
கால்கள் இரண்டு நல்வழி நடக்க
கண்கள் இரண்டு கனிவாய்க் காண
செவிகள் இரண்டு கருத்தாய்க் கேட்க
நிறைவாய்க் கேட்டுக் குறைவாய்ப் பேச
வாயோ நமக்கு ஒன்றே ஒன்று!
வாயோ நமக்கு ஒன்றே ஒன்று!
குழந்தைகளுக்கு நாம் கடமைகளைச் சொல்லித் தரவேண்டாவா?
“Yellow Ribbons” என்னும் பாடல் மெட்டில் பின்வரும் பாடலைச் சொல்லித் தாருங்கள். கடமைகளை அறிவதுடன் கன்னித்தமிழ் மீதான பற்றினையும் பெறுவார்கள்.
காலை எழுந்ததும் பாடம் படிப்போம்
மாலை முழுவதும் ஆடிக் களிப்போம்
விளையாடிக் களிப்போம்
பாரதி அன்று சொன்னதைக் கேட்டு நடப்போம்!
பாடிஆடி மகிழ்ந்து நாம் கலையை வளர்ப்போம்-தமிழ்க்
கலையை வளர்ப்போம்!
கூடுவோம் ஒன்றாய்க் கூடுவோம்!
பாரதி அன்று சொன்னபடிக் கூடி ஆடுவோம்! – ஒன்றாய்க்
கூடி ஆடுவோம்!
வாழ்த்துவோம்! சேர்ந்து வாழ்த்துவோம்!
நாளும் தொழுது படித்து நாம் தமிழை வாழ்த்துவோம் – நம்
தமிழை வாழ்த்துவோம்!
அனைவருக்கும் பிடித்த பாடல், (1857 இல் எழுதப்பெற்ற) “Jingle Bells” என்பதாகும். இந்த மெட்டிலான பின்வரும் பாடலைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்; தாருங்கள்; தமிழ்ப் பாலையும் கலந்து ஊட்டுவதாக அமையும்.
எண்ணுக எண்ணுக தமிழில் என்றுமே!
எழுதுக எழுதுக தமிழில் எதையுமே!
பேசுக பேசுக நல்ல தமிழிலே!
பயிலுக பயிலுக நமது தமிழிலே!
மொழியை மறந்தாலோ
வாழ்வை இழப்போமே!
வாழ்வை இழந்தாலோ
நாமும் இல்லையே!
நம் இனமும் இல்லையே!
போற்றுவோம் போற்றுவோம் – அன்னைத் தமிழையே!
பேணுவோம் பேணுவோம் அருமைத் தமிழையே!
நம் உரிமைத் தமிழையே!
தமிழை மறந்தால் தமிழினம் அழியும் என்பதை இப்பாடல் மூலம் நம் பிள்ளைகளுக்கு உணர்த்துவோம்.
உலகமக்கள் ஒற்றுமைக்காக ஒரு பாடல்!
(“அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்” என்னும் திரைப்பட மெட்டில் இதனைப் பாடலாம்.)
உலகெனும் வீட்டில் அனைவரும் உறவினர்
என்று சேர்ந்து வாழ்வோம் – நாம்
என்றும் சேர்ந்து வாழ்வோம் – இந்த
வீடும், நாடும் கடந்த உலகம்
ஒன்று என்று வாழ்வோம் – நாம்
ஒன்று பட்டு வாழ்வோம்.
நிறமென்ன உருவென்ன
பிறப்பென்ன தொழிலென்ன
எல்லாம் ஒன்று என்போம்
எல்லாம் ஒன்று என்போம்
பகையில்லை போரில்லை
இழிவில்லை தாழ்வில்லை
என்று இணைந்து வாழ்வோம் -இனி
என்றும் இணைந்து வாழ்வோம்
புதிய பாடல்கள் இல்லாமல் இருக்கின்ற
மெட்டுகளில் ஏன் பாடவேண்டும் எனச் சிலர் எண்ணலாம்.தெரிந்த மெட்டில்
தமிழுணர்வுப் பாடல்களைச் சொல்லித் தந்தால் பதிவது எளிதாக இருக்கும். அதன்
பின்னர் நாம் புது புது பண்களில் பாடல் சொல்லித் தரலாம்.!
- இலக்குவனார் திருவள்ளுவன்
Comments
Post a Comment