சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) செ.வை. சண்முகம்
மையக்கருத்துரை
5. கூடுதல் பொருள்
கருப்பொருள், உள்ளுறை, இறைச்சி
என்ற இரண்டு நிலையில் கூடுதல் பொருள் உணர்த்துவதாகத் தொல்காப்பியர்
விளக்கியுள்ளார். இலக்கியத்தில் இறைச்சியில் முதலும் கூடுதல் பொருள்
உணர்த்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது (சண்முகம், 2009: 13, 2012: 300).
5. 1. உள்ளுறை
கவிதையியல் நோக்கில் உவமையை உள்ளுறை
உவமம், ஏனை உவமம் என வகுக்கும் சூத்திரத்திலேயே ( அகத்திணை 46 )
‘தள்ளாதாகும் திணைஉணர் வகையே’ என்று கூறியது அவை சுற்றுச் சூழலோடு உறவு
உடையது என்பதைப் புலப்படுத்திவிடுகிறார். அடுத்த சூத்திரத்தில் உள்ளுறை
உவமம் ‘ தெய்வம் ஒழிந்ததை நிலன் எனக் கொள்ளும்’ என்று விளக்கியுள்ளது
கருப்பொருள்கள் என்பதால் உள்ளுறை உவமம் கருப்பொருள் அடிப்படையாகக்
கொண்டது என்பதும் கருப்பொருள்கள் உவமானமாகவும் அவைகளுக்கு உரிப்பொருள்கள்
உவமேயமாகவும் கேட்போர் அல்லது வாசிப்போர் கொள்வதால் உள்ளுறை என்றும்
குறிப்பிடப்படுகிறது. அதாவது பேசுவோர், தான் கூறும் உரிப்பொருள் கருத்தை
வெளிப்படையாகக் கூறாமல் கருப்பொருள் வருணனை மூலம் கூறுவது ஆகும்.
‘மனைகெழு வயலை வேழம் சுற்றும்
துறைகேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும் யாமே
அல்லன் என்னும்என் தடமென் தோளே’ .
என்பது ஐங்குறுநூறு 11ஆம் பாடல். வீட்டில்
வளர்க்கப்பட்ட வயலைக் கொடி நாணலைச் சுற்றி வரும் ஊரனின் கொடுமைக்கு
வெட்கப்பட்டு தலைவி, தலைவன் நல்லவன் என்று சொல்ல அவளுடைய தோள் இளைத்ததன்
மூலம் நல்லவன் அல்லன் என்று கூறும். இங்கு ‘ஊரன்’ அடையாக வந்துள்ள முதல்
அடி, கொடி என்பதால் கருப்பொருள். ஏனையவை தலைவி உடல் இளைத்து தலைவன் நல்லவன்
அல்லன் என்பதால் உரிப்பொருள். அதற்குக் காரணம் தலைவன் ‘கொடுமை’ என்று கூறி
அது பாட்டில் நேரடியாக விளக்கப்படவில்லை. ஆனால் கருப்பொருள் வருணனையைக்
கவனித்தால் வீட்டில் வளர்க்கப்பட்ட வயலை வீட்டைச் சுற்றாமல், அருகிலுள்ள
வேழத்தைச் சுற்றுகிறது என்று கூறியது வீட்டிலுள்ள மனைவியை நாடாமல்,
பரத்தையை நாடிச் சென்று விட்டான் என்பது புலனாகும். அதாவது கருப்பொருள்
வருணனை உவமமாக அமைந்து அதற்குரிய உவமேயமான உரிப் பொருள் கருத்து கேட்போர்/
வாசகர் ஊகத்துக்கு விடப்பட்டுள்ளதால், கருப்பொருள் வருணனை உள்ளுறை உவமம்
என்று கொள்ளப்பட்டு, உரிப்பொருளில் கொடுமை உள்ள எப்படி என்று கருப்பொருள்
வருணனை உவமமாகக் கொள்ள வைத்ததால் அது உவம உள்ளுறை என்று கொள்ளப்படுகிறது.
‘அமிழ்தம் உண்கநம் அயலி லாட்டி
பால்கலப் பன்னதேக்கொக்கு அருந்துபு
நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை
நெல்லி யம்புளி மாந்தி அயலது
நெல்லி யம்புளி மாந்தி அயலது
முள்ளில்அம்பணை மூங்கில் தூங்கும்
கழைநிவந் தோங்கியசோலை
மலைகெழு நாடனைவருமென்றோளே’ ( குறுந். 201).
( ஆசிரியர் பெயர் தெரியவில்லை. கடிநகர்
வேறுபடாது நன்கு ஆற்றினாய் என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. பொருள் : நம்
பக்கத்துக்கு வீட்டுப்பெண் அமிழ்தம் உண்பாளாக. (ஏனெனில்) வௌவால் முதலில்
இனிய மாம் பழத்தையும் பின்னர் புளித்த நெல்லிக் காயையும் தின்றுவிட்டு,
மூங்கில் கிளையில் தூங்கும் நாடன் வரும் என்று சொன்னாள்.
இங்கு முதல் அடியும் கடைசி அடியும்
உரிப்பொருள். ஏனையவை கருப்பொருள். உரிப்பொருளில் பக்கத்து வீட்டுப் பெண்
தலைவன் வருகிறான் என்று சொன்னதால் அவள் கிடைத்தற்கு அரிய அமிழ்தம்
உண்ணட்டும் என்று வாழ்த்துகிறாள். அப்படியானால் தலைவன் வருவது ஒரு சிறப்பு
செய்தி ஆகிறது என்று நாம் ஊகிக்கலாம். அது என்ன என்பதுதான் என்ன என்பது
உள்ளுறையாகக் கருப்பொருளில் கூறப்பட்டிக்கிறது.
வௌவால் = தலைவன், அது இனிய
மாம்பழமாகிய உண்டது போலதலைவியை அனுபவித்தல்புளிக்கும் நெல்லிக் காயை உண்டது
போல பரத்தையைத் துய்த்தல், மூங்கில் கிளையில்தூங்குதல் போல் தலைவியைப்
பார்க்க வராதது. அதாவது இதுவரை பரத்தையைத் துய்த்துவிட்டுத் தலைவியைப்
பார்க்க வராமல் வீட்டில் இருந்த தலைவன் வருகிறான்என்று பக்கத்து
வீட்டுக்காரி சொன்னது பிரிந்த தலைவன் வருகிறான் என்பது தலைவிக்கு மிகுந்த
மகிழ்ச்சி. எனவேதான் பக்கத்து வீட்டுக்காரிகிடைத்தற்கு அரிய அமிழ்தம்
பெற்று உண்ணட்டும் என்று சொல்கிறாள். அதாவது தலைவனின்காதல் உணர்வும்,
பரத்தைமைஒழுக்கமும், தலைவியைப் பார்க்க வராதிருந்த செய்தியும் கருப்பொருளை
உள்ளுறை உவமமாகக் கொண்டு விளக்கப்பட்டிருப்பதால் இது ஒரு உள்ளுறை உவமம்.
இது உரிப் பொருளுக்கு உரிய கருத்தை விளக்குவதால் அது உடனுறைதாகக் கொண்டு
உடனுறை உள்ளுறை உவமம் என்ற வகையாகக் கருதப்படுகிறது.
இது, சுற்றுச் சூழல் நோக்கில் கருப்பொருள்
உரிப்பொருள் கருத்தை உள்ளடக்கியிருக்கிறது என்று பொருள். அதாவது கவிஞன்
விலங்கு, பறவை நிகழ்வுகளை மனித நிகழ்வாகப் பார்க்கிறான். அதுஇலக்கிய
நோக்கில்கருப்பொருள் வருணணை கருத்தாடல் உத்தியாகக் கையாளப்படுகிறது என்றும்
கருதலாம்.
கவிதையியல் நோக்கில் உரிப்பொருள் 2 அடி
(முதலும் கடைசியும்), ஏனைய 5 அடிகள் கருப்பொருள். எனவே யாப்பு நோக்கில்
கருப்பொருள் முக்கியத்துவம் பெறுகிறது. சுற்றுச் சூழலியல் நோக்கில்
கருப்பொருள் மனித வாழ்வுக்குப் பெரிய துணையாக இயங்குகிறது என்பது அளவு
அல்லது இடம் நிரப்புதல் என்று மாறுபாடு புலப்படுத்துவதும் உணரத் தகுந்தது.
உண்மையில் சங்க இலக்கியத்தில் பெரும்பாலான படல்களுக்கு இது பொருந்தும்.
செ.வை. சண்முகம்
திருவேரகம்
194. மாரியப்பாநகர்,
அண்ணாமலை நகர் அஞ்சல்
சிதம்பரம் 608 002
அலைபேசி 98651 96476E Mail: svs.anr2@gmail.com
(தொடரும்)
Comments
Post a Comment