Skip to main content

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 2

thiruvalluvamaalaiyin_melaanmai
 நுட்பம்அமைந்தசொல்லின்தகவு / தகைமை எப்படி இருத்தல் வேண்டும் என்று ஆய்தலும் இங்குத் தேவையாகின்றது. அடைப்புக்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள எண்கள் திருக்குறட் பாக்களின் எண்கள்.
     ஆக்கம் தருவதாய் இருத்தல் [0642]. கேட்போரை ஈர்த்து, அவரது உள்ளத்திற்குள் சென்று பதியும் திறன்உடைத்தாதல் [0643], அறனும், பொருளும் அளிக்கும் திறன் பெற்றிருத்தல் [0644], நுட்பச்சொல்லைச் சொல்லும்பொழுது, அச்சொல்லை வெல்லும் வேறு ஒரு சொல் இல்லாதபடிச், சொல்லும் சொல்லே வெல்லும்படி அமைதல் [0645], கேட்போர் விரும்பும்படித் திறன் உடைத்தாதல் [0646], மாசு இல்லாத ஒரு சொல்லில் பல் நுண்பொருள்கள் அமைதல் [0649] போன்ற தகவுகளை உள்ளடக்கமாக நுட்பம் அமைந்த சொல் / சொல்நுட்பம் நிலைபெறல் வேண்டும். அத்தகவுகளால்தான், சொல்லுக்கும், சொல்வோர்க்கும் மதிப்பு, கற்போர்க்கும், ஆய்வோர்க்கும் மகிழ்வு. ஆய்வுக்கும்சிறப்பு.
7.0. சொல்நுட்பப்பயன்கள்
      பொருள்ஆழம், பொருள்அழுத்தம், ஒரு சொல்லில் பல பொருள்அமைவு, இலக்கியஇன்பம், சொல்திறன், புலவர்களின் சொல்மேலாண்மைத் திறன்கள், பொருள் புலப்பாட்டுத்திறன், கவிதைத்திறன், சொல்நுட்பத்தைப் படித்துஉணர்ந்தோர் மனத்தில். மகிழ்வும், வியப்பும் முகிழ்த்தல், தமிழ்ச்சொல்லின் அருமையும், பெருமையும் வெளிப்படல் போன்றவை சொல்நுட்பப் பயன்கள்ஆம்.
     திருவள்ளுவமாலையில் அமைந்த சொல்நுட்பங்கள் திருக்குறளின் அருமை, பெருமை, மதிப்பு, சிறப்பு, மாண்பு, நுட்பம், திட்பம், ஒட்பம், உயர்வு, விரிவு, அழகு, ஆழ்மை, வன்மை, மென்மை, பொதுமை, எளிமை, இனிமை, செம்மை, செழுமை, முதிர்மை   [பக்குவம்] செப்பம், ஓசைநயம் போன்ற பன்முகத் தன்மைகளை நன்முறையில் பெருக்கியும், விரித்தும் காட்டுதல் கற்போர்க்கும், ஆய்வோர்க்கும் நற்பயன்களை நல்கும்.
8.0. நற்றமிழ் இலக்கணிகளின் நுட்பஇயல் ஆய்வு
நற்றமிழ் இலக்கணிகள் நுட்பஇயலை நுணுகி ஆய்ந்துள்ளார்கள். அவ் ஆய்வை இங்கு ஆய்வோம். விரிவு அஞ்சி எல்லாவற்றிற்கும் சான்றுகள் தர இயலவில்லை.
8.1. தற்குறிப்பேற்றஅணி:  
      இயற்கையாக/ இயல்பாகநடக்கும் நிகழ்வுஒன்றில், புலவர் தாம்கருதியகுறிப்பை / நுட்பத்தை ஏற்றிச் சொல்லுவது.
8.2. ஒட்டு / பிறிதுமொழிதல் / நுவலாநுவற்சிஅணி
     புலவர் தாம் கருதிய பொருளை அங்ஙனமே சொல்லாது, மறைத்து, அதை விளக்குவதற்கு அதைப்போன்ற பிறிதுஒன்றினை நுட்பமாகச் சொல்லி விளக்குவது.
     சொல்நுட்பம், தொடர்நுட்பம், முற்றுத்தொடர்நுட்பம் ஆகியவற்றையும் தாண்டிப் பாடல்நுட்பம் என்பதையும் இலக்கணிகள் சிந்தித்துள்ளார்கள். பாடல்நுட்பம் என்னும் வகைப்பாட்டில் ஒட்டுஅணி அமையும்.
8.3. நுட்பஅணி
      ஒன்றினை வெளிப்படையாகச் சொல்லாமல் கேட்போர் புரிந்து கொள்ளுமாறு நுட்பமாகச் சொல்லித் தெரிவிப்பது.  இது புறத்திணை இயலில் வருவது.
8.4. உள்ளுறைஉவமம்
      புலவர் தாம் புலப்படச் சொல்லும் உவமையாலே, புலப்படச் சொல்லப்பட்டதே அன்றிப், புலப்படச் சொல்லாத / மறைந்திருக்கும் பொருளை / கருத்தை உவமையோடு ஒத்து முடிவதாக உள்ளத்தேகருதி, அதனை உள்ளுறுத்து நுட்பமாகச் சொல்வது.
8.5. இறைச்சிப்பொருள்
      உள்ளுறை உவமத்தில் உவமை மட்டுமே சொல்லப்பட்டிருக்கும். . அதிலிருந்து குறிப்பாக நுட்பமாக உள்ள பொருளை எடுத்துக்கொள்ளுவது. இத்தோடு உள்ளுறை முடிந்துவிடும்.    இறைச்சிப்பொருள் இத்தோடு நின்றுவிடாது. இதற்கு அப்பாலும் அத்தோடு தொடர்புடைய ஒரு பொருள் உள்தங்கி இருக்கும். அந்நுட்பப் பொருளைக் குறிப்பில் உணரும் நுண்திறத்தர் ஆய்ந்துகாண்பர்.      உள்ளுறை உவமையும், இறைச்சியும் அகத்திணை இயலில் முகம்காட்டும்.
8.6. குறிப்பெச்சப்பொருள்
     சொல்லிய சொல்லுக்குள்ளே இருக்கும் குறிப்பினை / நுட்பத்தை ஆய்ந்து உணருமாறு எஞ்சி நிற்கும் பொருள்.
8.7. அருத்தாபத்தி
      ஒன்றைச் சொல்லி அதன் வாயிலாக இன்னொன்றை விளக்குகின்ற முறையை அருத்தாபத்தி என்பர்.
     சான்று:அவன்பகலில்உறங்குவதுஇல்லை
அவன் இரவில் மட்டுமே உறங்குவான் என்னும் பொருள்நுட்பம் இம் முற்றுத்தொடரில் இருக்கின்றது.
     மேற்காணும் சான்றுகளால் தமிழ் இலக்கணிகள் சொல்நுட்ப இயல், தொடர்நுட்ப இயல், முற்றுத்தொடர்நுட்பஇயல் ஆகியவற்றை மிகநுட்பமாக ஆய்துள்ளார்கள் என்பது அறியப்படுகின்றது. அவ் இலக்கிய உத்திகளை இலக்கியப் புலவர்கள் தங்கள் பாடல்களிலும் இலங்குமாறு அமைத்து இலக்கிய இன்பத்தை வழங்கியுள்ளார்கள்.
9..0. திருக்குறளில்நுட்பம்
      திண்மை, திட்பம்எனவும்; ஒண்மை, ஒட்பம்எனவும்;  தண்மை, தட்பம் எனவும் மாறும். அவற்றைப் போலவே,  நுண்மை, நுட்பம் ஆயிற்று.
     நுட்பம் திருக்குறளில் ஒரே ஒரு திருக்குறட்பாவில் [0636] இருமுறை வந்துள்ளது. நுட்பம் என்னும் பொருள் சுமக்கும் நுண்மை, பல்வேறு வடிவங்களில் திருக்குறட்பாக்களில் 9 இடங்களில் அமைந்துள்ளது. அவையாவன:
  •      நுண்         –- 0407, 0424, 0726
  •      நுணங்கிய   –- 0419
  •      நுணுக்கம்   –- 0132
  •      நுண்ணிய   –- 0373
  •      நுண்ணியம் — 0710
  •      நுண்ணியர்   — 1126 .
       இதன் நுண்திறனை எண்ணியே நுண்ஆய்வாளர் திருவள்ளுவப்பேராசான், அச் சொல்லை 11 இடங்களில் அமைத்துச் சிறப்புச் செய்துள்ளார். இவ் ஆய்வுக்கட்டுரையில் இதுபற்றி ஏன் ஆராய்தல் வேண்டும் எனும் வினா எழலாம். அதற்கு விடை இதுதான்.
     திருக்குறளை எழுத்து எண்ணிக் கற்று நுண்ஆய்வு மேற்கொண்ட திருவள்ளுவமாலைப் பெரும்புலவர்கள், அச் சொல்லின் அருமை, பெருமை, சிறப்பு, சீர்மை கண்டுணர்ந்தார்கள். திருவள்ளுவப் பெருந்தகை வழியில் தாங்களும் அவ் உத்தியைப் பயன்படுத்தல் வேண்டும் என்னும் நோக்கு அவர்களிடம் ஆக்கம் பெற்றது.
     அவ் ஆக்க நோக்கமே, சொல்லில், தொடரில் நுடபங்களை உள்நுழைத்து ஆக்கும் நன்முயற்சியில் நுழையவைத்தது. வெற்றிகளும் விளைந்தன.
 arangarasan pic
(தொடரும்)


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்