Skip to main content

ஈழத்து நாடக இலக்கியம் – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

 அகரமுதல




(முன்னிதழ்த்தொடர்ச்சி)

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 16

நாடக இலக்கியம் தொடர்ச்சி

2

 

ஆங்கிலக் கல்வி சிருட்டித்துவிட்ட மத்தியதர வருக்கத்தின் ஒரு பிாிவினர் மேனாட்டு மொழிபெயர்ப்பு நாடகங்களையும் புராண இதிகாசக் கதைகளையும் கையாண்டு நாடகத்தைப் பொழுதுபோக்குச் சாதனமாகக் கொள்ள இன்னொரு பிாிவினர் ஈழத்துத் தமிழ் மக்களின் வாழ்க்கையையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் மண்வளம் ததும்பிய சமூகநாடகங்களை நாடக உலகுக்கு அளித்தனர். இவர்களே ஈழத் தமிழ் நாடக உலகில் இயற் பண்பு வாய்ந்த நாடக நெறி ஒன்றினை உருவாக்கினர். இவர்கள் கையில் நாடகம் வெறும் பொழுதுபோக்குச் சாதனமாகவன்றி சமூகமாற்றச் சாதனமாயிற்று. இப்போக்கின் முன்னோடிப் பேராசிாியர் கணபதிப்பிள்ளை ஆவார். அவருடைய நாடகங்கள் 1936 முதல் மேடையேற்றப்பட்டன. இலங்கைப் பல்கலைக்கழகம் பேராசிாியர் நாடகங்களுக்குக் களமாக அமைந்தது. பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவரும் மாணவியரும் பேராசிாியர் நாடகங்களில் நடித்தமை குறிப்பிடத்தக்கது.

பேராசிாியாின் நாடகங்கள் பெரும்பாலும் சமூகப்பண்புடையனவாகக் காணப்பட்டன. யாழ்ப்பாண மத்தியதர வருக்கத்துக் குடும்ப, சமூகப் பிரச்சினைகளைப் பேராசிாியர் கணபதிப்பிள்ளை தமது நாடகங்களிற் கொணர்ந்தார். சாிந்து கொண்டு வந்த நிலமானிய உறவுகளையும் நகர வாழ்க்கை மனித உறவுகளைப் பாதிக்கும் விதத்தினையும் நகர வாழ்க்கை மனித உறவுகளைப் பாதிக்கும் விதத்தினையும் இவரது நாடகங்கள் எடுத்துக்காட்டின. ஈழத்துத் தமிழ் நாடக உலகில் முதன் முதலாக ஈழத்துக் கதா பாத்திரங்கள் – சிறப்பாக யாழ்ப்பாணத்துக் கதா பாத்திரங்கள் உலவத் தொடங்கின. பேராசிாியர் கணபதிப்பிள்ளையவர்கள் மொழியியல் துறையில் விற்பன்னராய் இருந்தமையினால் போலும் முன்னைய நாடக ஆசிாியர் போலன்றி பிரக்ஞை பூர்வமாகப் பேச்சு மொழியினைக் கையாண்டார். இவர் நாடகங்களிற் தோன்றிய பாத்திரங்கன் அன்றாடம் தாம் பேசும் மொழியிலேயே பேசின. தமது நாடக முன்னுரையில் பேராசிாியர் இது பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“. . . . . . நாடகம் என்பது உலக இயல்பை உள்ளது உள்ளபடியே காட்டுவது. ஆகவே வீட்டிலும் வீதியிலும் பேசுவது போலவே அரங்கிலும் ஆடுவோர் பேச வேண்டும். இந் நான்கு நாடகத்திலும் வழங்கிய பாடை யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குப் பொதுவாகவும் பருத்தித்துறைப் பகுதிக்குச் சிறப்பாகவும் உள்ளது.”

உலக இயல்பை உள்ளது உள்ளபடிக் காட்டுவது என்ற அவர் கூற்றில் அவரது இயற்பண்பு வாத நெறிசார்ந்த போக்கும் புலப்படுகிறது. பிரச்சினைகளை இவை வௌிப்படுத்தினவே தவிர அதற்கான காரணங்களை ஆராய்ந்து வழிகாட்டவில்லை. எனவேதான் இவரை இயற்பண்பு நாடக நெறி ஆசிாியர் என்று விமர்சகர் கூறுவர்.

சுருங்கக் கூறின் கற்பனாலோகத்தில் வாழ்ந்த நாடக உலகை நடப்பியல் உலகுக்கு இழுத்து வந்த பெருமை இவருக்கேயுண்டு. ஈழத்தில் மாத்திரமன்றி முழுமையாகத் தமிழ் நாடக உலகிலேயே இம்மாற்றத்தை ஏற்படுத்திய பெருமையும் இவருக்கேயுண்டு, பேராசிாியாின் நாடகங்கள், நானாடகம் (1930), இருநாடகம் (1952), மாணிக்கமாலை (1952), சங்கிலி (1953) என்ற பெயர்களில் நூலுருப் பெற்றன. இவற்றுள் மாணிக்கமாலை சமஸ்கிருத நாடகமான ரத்னாவலியின் தழுவல் நாடகமாகும். சங்கிலி சாித்திர நாடகமாகும்.

இவ்வண்ணம் நவீன நாடக மரபு கலையரசு வழியில் ஒரு மரபாகவும். பேராசிாியர் கணபதிப்பிள்ளை வழியில் இன்னொரு மரபாகவும் இரு கிளைப்பட்டு வளர்ந்தது.

1950களில், தமிழ் நாட்டில் அரசியல் ரீதியில் வளர்ச்சியடைந்த திராவிடர் முன்னேற்றக் கழகம் இங்குள்ள இளைஞர்களுக்கு ஆதர்சமாயிற்று. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் நூல்களும், ஏடுகளும் ஈழத்துக்கு இறக்குமதியாயின. இவை ஈழத்து நாடக உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தின.

திராவிட முன்னேற்றக் கழக நாடகங்கள் போலமைந்த சீர்த்திருத்தக் கருத்துகள் மலிந்த செயற்கைப் பாங்கான பல தமிழ் நாடகங்கள் இங்கு உருவாயின. நாட்டின் பல பாகங்களிலும் இத்தகைய நாடகங்கள் பெருவாாியாக மேடையேறினும் நூலுருவம் பெற்றவை குறைவே. அப்பாசு எழுதிய கள்ளத்தோணி (1960) அ.பொ. செல்லையா எழுதியார் கொலைகாரன் என்பன. இதற்கு உதாரணங்களாகும். இத்தகைய நாடகங்களிற் தமிழ்ச் சினிமாவின் செல்வாக்கையே பெருமளவு காணமுடிகிறது. பெரும்பாலான தமிழ்ப் பிரதேசங்களில் இன்றும் இம்மரபு நின்று நிலைக்கிறது.

1956ஆம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தையொட்டி தேசிய உணர்வும், தமது சொந்தப் பண்பாடு பற்றிய பிரக்ஞையும் ஈழத்தில் ஏற்பட்டது.

சுய பண்பாட்டுப் பிரக்ஞையின் வௌிப்பாடாகவே 1959 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த ஒரு தசாப்த காலம் வரை ஈழத்து நாடக உலகில் பாரம்பாியக் கூத்துக்களை பேணுகின்ற, அவற்றை நவீனப்படுத்துகின்ற தன்மைகளைக் காணுகின்றோம்.

1957க்குப் பின்னர் அரசாங்க ஆதரவில் இயங்கிய கலைக்கழகத் தமிழ் நாடகக் குழு, பேராசிாியர் சு. வித்தியானந்தன், பேராசிாியர் கா. சிவத்தம்பி ஆகியோாின் வழிகாட்டலின் கீழ்ச் செயற்படத் தொடங்கியது. கலைக் கழகத் தலைவராயிருந்த பேராசிாியர் வித்தியானந்தன் அவர்களின் முயற்சியினால் மரபு வழி நாடக வளர்ச்சியில் பாாிய பாதிப்பினைக் கலைக் கழகத்தால் ஏற்படுத்த முடிந்தது. மரபு வழி நாடகங்கள் பலவற்றைக் கலைக் கழகத்தின் ஆதரவுடன் பேராசிாியர் வித்தியானந்தன் பதிப்பித்தார். மட்டக்களப்பு தென்மோடி நாடகமான அலங்கார ரூபன் (1962), என்றிக்கு எம்பரதோர் (1964), மூவிராசாக்கள் நாடகம் (1966), ஞானசௌந்தாி (1967) ஆகியவை இவரால் பதிப்பிக்கப்பட்டன, பேராசிாியர் கா. சிவத்தம்பி பல்கலைக் கழக இந்து மாணவ மன்றத்தின் ஆதரவில் மார்க்கண்டேயன் (1961) வாளபீமன் (1963) ஆகிய நாடகங்களைப் பதிப்பித்தார்.

ஏட்டுருவில் இருந்த பழைய மரபு வழி நாடகங்கள் அச்சுருவில் வந்தமை ஈழத்து நாடக உலகில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். கலைக் கழகம் தானே நூல்களைப் பதிப்பித்ததுடன் பிரதேச கலாமன்றங்களையும் இப்பணியில் ஊக்குவித்தது. இதன் காரணமாக அனுருத்திர நாடகம் (1969) இராம நாடகம் (1969) எசுதாக்கியார் நாடகம் (1967) மாியதாசன் நாட்டுக் கூத்து (1972) தேவசகாயம் பிள்ளை நாட்டுக் கூத்து (1974) விசய மனோகரன் (1968) போன்ற நாட்டுக் கூத்து நூல்கள் அச்சில் வந்தன. அச்சிடப்பட்டவற்றுள் பல, பழைமையானவை. சில, புதிதாக ஆசிாியர்களால் இயற்றப்பட்டவை. தவிர, கலைக் கழகம் அண்ணாவிமார் மகாநாடுகள் நடத்தியும், அண்ணாவிமாரைக் கௌரவித்தும், பாடசாலைகளுக்கிடையே நாட்டுக் கூத்துப் போட்டிகள் நடத்தியும் நாட்டுக் கூத்து உணர்வு மக்களிடம் வளரக் காலாயமைந்தது.

நாட்டுக் கூத்துக்களைப் பேணுகின்ற முயற்சி மாத்திரமன்றி அவற்றை நவீனப்படுத்தும் முயற்சியும் இதே காலக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. பேராதனைப் பல்கலைக் கழத்தில் சிங்களத் துறையைச் சேர்ந்த பேராசிாியர் சரச்சந்திர போன்றோர் 1956 முதல் புகழ்பெற்ற மனமே, சிங்கபாகு போன்ற நவீனப்படுத்தப்பட்ட சிங்களக் கூத்துகளைத் தயாாித்து மேடையேற்றினர். இதே பணியினை 1960களிலே பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ் துறையைச் சார்ந்த பேராசிாியர் சு.வித்தியானந்தன் அவர்கள் செய்தார். 1962 தொடக்கம் 1968 வரை அவர் பல்கலைக் கழக மாணாக்கரைக் கொண்டு மட்டக்களப்புக் கூத்துகளை நவீனப்படுத்தியளித்தார். யாழ்ப்பாண அண்ணாவி மரபு நாடகத்தைப் பிரபல்யப்படுத்தினார். கருணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன், வாலிவதை என்பன அவர் நவீனப்படுத்திய மட்டக்களப்புக் கூத்துகளாகும். நவீன மேடை, ஒலி, ஒளி உத்திகளைக் கையாண்டு, கிராமங்களில் இரா முழுவதும் ஆடப்படும் கூத்துக்களின் கால அளவைச் சுருக்கி அவர் நகர்ப்புறப் பார்வையாளர்களும் இரசிக்கக்கூடியதாக்கினார். ஈழத் தமிழாின் மரபு வழி நாடக மரபு நகர்புற மேடைகளில் நகர்ப்புற மாந்தரால் வரவேற்கப்பட்டது.

நாட்டுக் கூத்தினை வளர்த்த கலைக்கழகம் நவீன நாடக எழுத்துப் பிரதிகட்குச் சன்மானம் வழங்குவதன் மூலமும், அவற்றை அச்சிடுவதன் மூலமும் நவீன நாடகத் துறையை வளர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டது.

சொக்கனின் சிலம்பு பிறந்தது (1962), சிங்ககிாிக்காவலன் (1963), முத்து சிவஞானத்தின் சேரன் சமாதி (1968) ஆகிய கலைக்கழகப் பாிசு பெற்ற நாடக நூல்களைக் கலைக்கழகமே வௌியிட்டது. கலைக்கழகப் பாிசுபெற்ற ஏ.ரி. பொன்னுத்துரையின் நாடகம் என்னும் நாடகம் (1969), தேவனின் தென்னவன் பிரமராயன் (1963), முல்லைமணியின் பண்டாரவன்னியன் (1970), சண்முகசுந்தரத்தின் பூதத்தம்பி (1964) போன்ற நூல்கள் பின்னாளில் நூலுருவம் பெற்றன. கலைக்கழகப் பாிசுபெற்ற நாடகங்களில் பெரும்பாலானவை வரலாற்று நாடகங்களாகும். அத்தோடு சமய, இலக்கிய நாடகங்களும் இவற்றுட் காணப்பட்டன. இலக்கிய வரலாற்று நாடகங்கள் கலைக்கழகப் பாிசுபெற்று அச்சில் வந்தமையைத் தொடர்ந்து இதே தன்மை கொண்டதான பல நாடகங்கள் ஈழத் தமிழ் நாடக உலகில் எழ ஆரம்பித்தன. சண்முகசுந்தரத்தின் வாழ்வுபெற்ற வல்லி (1962), இறுதி மூச்சு (1965), சதா சிரீனிவாசனின் இலங்கை கொண்ட இராசேந்திரன் (1960), சி.ந. தேவராசனின் விசயன் விசயை திருமணம் (1965), கங்கேசுவாி கந்தையாவின் அரசன் ஆணையும் ஆடக சவுந்தாியும் (1965), செம்பியன் செல்வனின் மூன்று முழு நிலவுகள் (1965), கரவை கிழானின் தணியாத தாகம் (1968), மு.கனகராசனின் கைமுனுவின் காதலி, எசு, பொன்னுத்துரையின் வலை (1972) ஆகியவற்றை இப்போக்கிற்கு உதாரணங்களாகக் காட்டலாம்.

இவற்றுட் சில நாடகங்கள் இன உணர்வும் பழமைச் சிறப்பும் பேசினசில நாடகங்கள் இன ஒற்றுமையை மறைமுகமாகக் கூறின. சில இந்திய சாித்திர நிகழ்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்டன.

இக்காலக் கட்டத்தில் முன்னணியில் நின்ற நாடக ஆசிாியர்களாகத் தேவன். சொக்கன், ஏ.ரி. பொன்னுத்துரை ஆகியோரைக் குறிப்பிடலாம்.

1956 இன் பின் இலங்கைத் தமிழாிடையே தோன்றிய இன உணர்வும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடகத்துறைச் செல்வாக்கும் இத்தகைய நாடகங்கள் பெருவாாியாக எழக் காரணங்களாயின. புனைகதைகளிலும் பார்க்க நாடகம் மூலம் மொழி அபிமானத்தை எடுத்துணர்த்துவது சுலபமாகும். எனவேதான் மொழி அபிமானமும், இன உணர்வும் தமிழர் மத்தியில் அரசியல் வடிவம் பெற்ற காலத்தில் இத்தகைய பல நாடகங்கள் தோன்றத் தொடங்கின.

தம்மை எதிர் நோக்கிய சமூக மாறுதல்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு போராடி வெல்ல முடியாத தமிழர் சமூகம் தன்னுடைய பழமைக்குள் நிம்மதி தேடியது. யுசென்ற காலம் இனி மீளாதா? என்று பழைய காலத்தை இந்நாடகங்களிற் சில மீண்டும் நினைவு கூர்ந்தன. பண்டைய மன்னர்களைத் தமிழ் உணர்வு பெற்றவர்களாகச் சித்தாித்துத் தமிழ் மக்களிடை தமிழ் உணர்வு ஊட்ட முயற்சித்தன. இத்தகைய நாடகங்கள் உருவ அமைப்பில் தமக்கு முன்னோடியாக விளங்கிய கலையரசு சொர்ணலிங்கத்தின் நாடக மரபினையே பின்பற்றின. நவீன நாடக அரங்கு பற்றிய சிந்தனை இவற்றில் காணப்படவில்லை என்பது மனம் கொள்ளத் தக்கது.
 

(தொடரும்)

சிமௌனகுருமௌசித்திரலேகா & எம்நுஃமான்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue