அகல் விளக்கு – மு.வரதராசனார்: 49
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 48. தொடர்ச்சி)
அகல் விளக்கு
அத்தியாயம் 20 தொடர்ச்சி
பிறகு வேறு பேச்சில் ஈடுபட்டவர்போல், “இந்த ஊர் போல் நீர்வளம் உடைய ஊர் வேறு ஒன்றும் இல்லை. ஆனால், ஏரி வறண்டால் ஒரு பயனும் இல்லை” என்று பேசத் தொடங்கினார்.
வந்த சந்திரன் ஆசிரியரோடு பேசாமலே நின்றான். “மேளக்காரர் இன்னும் வரவில்லையா? எத்தனை முறை சொல்லி வைத்தாலும் நாய்களுக்கு உறைப்பதே இல்லை” என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுடைய மனைவி அஞ்சி ஒடுங்கி அந்தப் பக்கமாக வந்து வீட்டுக்குள் நுழைந்தாள். அப்போதாவது அவன் அறிமுகப்படுத்துவான் என்று எதிர்பார்த்தேன். அவன் அதைப் பற்றியே சிந்தித்தவனாகத் தெரியவில்லை.
ஒரு முறை வீட்டினுள் எட்டிப் பார்த்தபோது அம்மாவும் சந்திரனுடைய மனைவியும் நின்று பேசிக் கொண்டிருந்ததைக் கண்டேன். கற்பகம் தன் அண்ணியை அம்மாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கக் கூடும் என்று எண்ணினேன்.
பிள்ளை வீட்டுக்காரர் வருதல், நலுங்கு வைத்தல் முதலியவை முறைப்படி நடந்தன. சந்திரன் மனைவி எல்லா வேலைகளிலும் முன்நின்று பொறுப்புடன் செய்ததும் உணவு பரிமாறியபோது அக்கறையோடு கவனித்ததும் போற்றத்தக்கவாறு இருந்தன. குடும்பத்திற்கு ஏற்ற மருமகள் என்று ஆசிரியர் சொன்னது பொருத்தமாக இருந்தது.
மாசன் என்ற பழைய வேலைக்காரன் எங்கோ வெளியே போயிருந்து வந்தான். என்னைக் கண்டதும் பரிவுடன் பேசினான். அம்மாவும் வந்திருப்பதாகச் சொன்னவுடன் உள்ளே தேடிச் சென்று பேசிவிட்டு வந்தான். பழைய ஆட்களில் தோட்டக்காரன் சொக்கான் ஒருவன்தான் வரவில்லை.
மணமகன் மாலன் நலுங்கு முடிந்ததும் என் பக்கத்திலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தான். அவன் என்னைத் தன் பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.
மறுநாள் காலையில் எழுந்து தென்னந்தோப்பின் பக்கமாகச் சென்றபோது சொக்கானைக் கண்டேன். “என்ன சொக்கான்! எப்படி இருக்கிறாய்” என்று கேட்டேன்.
“நல்லபடி இருக்கிறேன் ஐயா! நீங்கள் எங்கள் ஊர்க்கு வருவதே இல்லையே? மறந்துவிட்டீர்களா?” என்றான். “நீந்தக் கற்றுக் கொண்டீர்களே, நன்றாக நீந்துகிறீர்களா?” என்று கேட்டான்.
அவனுடைய வயது, கண் பார்வை, பசி முதலியவை பற்றி நானும் கேட்டேன். “ஒன்றும் குறைவு இல்லை” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு, “ஆனால்” என்று நீட்டி அமைதியானான்.
“பிறகு என்ன குறை?” என்று கேட்டேன்.
“பெரிய பண்ணைக்காரருக்குப் பிறகு பண்ணை எப்படியோ என்றுதான் கவலையாக இருக்குது” என்றான்.
“சின்னவர் சந்திரன் இருக்கிறாரே” என்றேன்.
வாயைச் சப்பி ஒலித்து, “ஒன்றும் பயன் இல்லைங்க. படித்தும் பயன் இல்லாதவராய்ப் போய்விட்டார். குழந்தை போல் ஒரு பெண்டாட்டி வந்திருக்குது. அதையும் கவனிக்காமல் ஊர் மேய்கிறார். கண்டபடி எல்லாம் திரிகிறார். சொல்ல நாக்குக் கூசுது. நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன். பொலி எருது போல் திரிந்தவர்கள் பலபேரைப் பார்த்திருக்கிறேன். அது ஒரு வாழ்வா? சே!” என்றான்.
“அப்படியா?” என்றேன்.
“இன்றைக்குக் காசு இருக்குது. உடம்பில் வலு இருக்குது என்று ஆடலாம். நாளைக்குக் காலணாவுக்கு மதிக்க மாட்டார்கள்” என்றான்.
அவனுடைய பேச்சில் சந்திரனுக்காக வருந்துவது இல்லாமல், ஆத்திரம் கலந்து பேசுவதை உணர்ந்தேன். பிறகு மாசனிடம் பேசிய போது தான் காரணம் தெரிந்தது. தோட்டக்காரனுடைய பெண்ணோடு உறவுகொண்டு அவள் கணவனோடு வாழாதபடி சந்திரன் கெடுத்துவிட்டான் என்பதை அவன் சொன்னான். அதைக் கேட்டபோது என் உள்ளமும் கொதித்தது.
“பெரியவர்க்காகப் பார்க்கிறேன். இல்லையானால் ஒரு நாளும் இந்த வீட்டில் வேலை செய்யமாட்டேன். சின்னவர் அவ்வளவு கெட்டுவிட்டார்” என்றான் மாசன்.
திருமணம் சடங்குகளோடு நடந்தது. பந்தலுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து நான் கற்பகத்தின் முகத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தேன். என் உள்ளத்தில் ஒரு மூலையில் பழைய கலக்கம் தலையெடுத்தது. உடனே அதை அகற்றி, நண்பன் மகிழட்டும், அதுவே என் கடமை என்று உறுதி பூண்டேன்.
மாலனுக்கு என் உள்ளத்தில் நிகழ்ந்தது இன்னது என்று தெரியாது. அவன் அடிக்கடி என்னைக் கண்டு புன்முறுவல் பூத்தான். ஆனால், அதற்கு முன் கண்டபோதெல்லாம் மகிழ்ந்த கற்பகத்தின் முகத்தில் சிறிதளவும் மகிழ்ச்சி இல்லை. அவளுடைய உள்ளத்தில் என்னைப் பற்றிய ஏக்கம் இருக்குமோ என்று ஐயுற்றேன். அப்படித் தெரிந்திருந்தால் திருமணத்துக்கு வராமலே இருந்திருக்கலாமே என்றும் எண்ணினேன். எனக்குப் பழங்கதையாய்ப் போன அந்த விருப்பம் அவளுக்கும் பழங்கதையாய்ப் போயிருக்க வேண்டுமே என்று எண்ணினேன்.
திருமணம் முடிந்து, விருந்தும் முடிந்து அன்று மாலை விடைபெற்றுப் பிரிந்தபோதாவது கற்பகம் பேசுவாளா என்று பார்த்தேன். அவள் இருந்த இடத்திற்கே சென்று அவளெதிரே நின்றேன். அவளுடைய முகத்தில் கண்ட வெறுப்புணர்ச்சி என் தவறுதலை எனக்கு எடுத்துக்காட்டுவதுபோல் இருந்தது. ஒரு வினாடி என் முகத்தைப் பார்த்தாளே தவிர, என்னோடு பேசவும் இல்லை புன்முறுவல் கொள்ளவும் இல்லை. “போய் வரட்டுமா?” என்று நான் சொன்னபோது தலையை மட்டும் அசைத்தாள்.
மாலன் அன்பாக விடை கொடுத்தான். என் உள்ளத்தில் கற்பகம் ஏற்படுத்திய புண் அவனுடைய அன்பாலும் ஆறவில்லை. அதனால் ஆறாப் புண்ணுடன் திருமண வீட்டைவிட்டு வெளியே வந்தேன். சாமண்ணா சிறிது தொலைவு நடந்து வந்து வழி விட்டார்.
சந்திரன் இன்னும் சிறிது தொலைவு நடந்து வந்தான். அம்மா அவனைப் பார்த்து, “தங்கையின் திருமணமும் முடிந்தது, அப்பா மிகவும் சோர்ந்து போயிருக்கிறார். அவருக்குக் கவலை வைக்காதே, இனிமேல் குடும்பம் உன் பொறுப்பு. நீ நல்லபடி பார்த்துக்கொள்ளணும். உனக்கு நல்ல மனைவியும் வாய்த்திருக்கிறாள். அக்கறையான பெண், அடக்கமான பெண். பார்த்தால் பசிதீரும் என்பார்களே அப்படி இருக்கிறாள். நல்லபடி வைத்துக்கொண்டு சுகமாக வாழணும். அவ்வளவுதான்” என்று அறிவுரையும் வாழ்த்துரையும் கலந்து கூறினார்.
சந்திரனுடைய முகத்தில் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. சொன்னால் சொல்லிப் போகட்டும் என்பதுபோல் கேட்டுக் கொண்டு வந்தான். அவனுடைய முகத்தை நேற்றும் இன்றும் கவனித்த நான், என் உள்ளத்தில் உணர்ந்ததைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். “உன் மூக்கில் முன்பு இல்லாத மினுமினுப்பு இருக்கிறது. காதின் ஓரமும் மாசு படிந்தாற்போல் கொஞ்சம் கறுப்பாக இருக்கிறது. தடிப்பாகவும் தெரிகிறது. தோலில் நோய் வந்தால் உடனே கவனிக்க வேண்டும். எதற்கும் ஒரு மருத்துவரிடத்தில் காட்டிக் கேள். அசட்டையாக இருந்து விடாதே” என்றேன்.
அவன் தன் இடக்கையால் காதைத் துடைத்தபடியே “அதெல்லாம் ஒன்றும் இல்லை” என்றான்.
“எதற்கும் ஒருமுறை போய்ப் பார்த்து வருவது நல்லது” என்று சொல்லி விடைபெற்றேன்.
அம்மாவும் நானும் நடக்க, மாசன் எங்களுக்குத் துணையாக ஏரிக்கரை வரைக்கும் வந்தான். வழியில் முன்பு கண்ட குடிசை வந்ததும், அந்தக் கிழக் காதலர் இருவரையும் நினைத்துக் கொண்டேன். “மாசா! அந்தக் கிழவனும் கிழவியும் இன்னும் இங்கே இருக்கிறார்களா?” என்றேன்.
“இருக்கிறார்கள். அப்படியே இருக்கிறார்கள்?” என்றான் மாசன். அம்மா முன்னே போகட்டும் என்று இருந்து, நான் மட்டும் அந்தக் குடிசைக்குள் எட்டிப் பார்த்தேன்.
“யார் அது?” என்றாள் கிழவி.
“கலியாணத்துக்கு வந்தவன். சந்திரனோடு கூடப் படித்தவன்” என்றேன்.
“முன்னெல்லாம் வருமே, அந்தப் பிள்ளையா?” என்றான் கிழவன்.
“ஆமாம்” என்றேன்.
“மொட்டையம்மா இறந்து போச்சே அப்பா! நல்ல பிறப்பு அது. அது பிறந்த வீட்டில் ஒரு கழுதை வந்து பிறந்திருக்கிறதே.”
கிழவி குறுக்கிட்டு, “பேசாமல் இரு நமக்கு என்ன? யாராவது எந்தக் கதியாவது போகட்டும்” என்று கணவனைத் தடுத்தாள்.
“மெய்தான். பகலில் பக்கம் பார்த்துப் பேசு என்று சொல்லியிருக்கிறார்கள். சின்ன பெண்கள் வெளியே போனால் நாய்போல் திரிகிறானாமே! பெரிய வீட்டுப் பிள்ளை மரியாதையாக நடக்க வேண்டாவா? சேச்சே” என்றான் கிழவன்.
இது போதும் என்று அங்கிருந்து புறப்பட்டேன். ஏரிக்கரையை அணுகி வண்டி நிற்கும் இடத்தில் காத்திருந்தோம். வேலத்து மலைச்சரிவைக் கண்டதும் தாழை ஓடை நினைவுக்கு வந்தது. ஊர்ப்பக்கம் திரும்பியபோது, பழைய அரளிச் செடி இருக்கிறதா என்று பார்த்தேன். மலரும் அரும்பும் இல்லாமல், ஒன்றும் உதவாத இலைகளோடு அந்தச் செடி நின்று கொண்டிருந்தது. அதன் கீழே துளசிச் செடி இருக்கிறதா என்று பார்த்தேன், இருந்தது. ஆனால், ஓர் இலையும் இல்லை. குச்சிகள் இருந்தன. அவையும் உலர்ந்திருந்தன.
Comments
Post a Comment