Skip to main content

தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)



(தந்தை பெரியார் சிந்தனைகள் 33 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 34

(எ) இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நம்நாட்டு மகளிர் மனத்தையும் கொள்ளை கொண்டது. அவர்களும் மொழிப்போரில் ஈடுபட்டனர். 1938 நவம்பர் 13-இல் சென்னையில் மகளிர் மாநாடு நடைபெற்றது. திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் (மறைமலையடிகளின் திருமகளார்) மாநாட்டுத்தலைவர். இம்மாநாட்டில் தந்தைபெரியார் ஆற்றிய சொற்பொழிவு தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்தது; உரிமை உணர்ச்சியை எழுப்பிவிட்டது. இம்மாநாட்டில்தான் ஈ. வெ. இராமசாமி பெயருக்கு முன் பெரியார் என்னும் அடைமொழி கொடுத்து அழைக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

(ஏ) பெரியார் மீது வழக்கு: இம்மாநாடு முடிந்தபின் பல பெண்கள் மறியல் செய்து சிறைபுகுந்தனர். இந்த வீராங்கனைகளைப் பாராட்டும் கூட்டங்களில் நம் ஐயா அவர்களும் பாராட்டினார்கள்; பெண்களின் வீரதீரச் செயல்களை எடுத்துக் காட்டினார்கள். இந்தி எதிர்ப்புக்கும் பெரியாரே காரணம் என்று அரசு கருதியது. ஆதலின் அவரைச் சிறையிலிடக் காலம் கருதியது. பெரியாரின் இருபொழிவுகளைக் கொண்டு அவர்மீது குற்றம் கற்பித்தது. “பெண்களை மறியல் செய்யத் தூண்டினார்” என்பதே அப்பழி. பெரியாருக்கும் அரசு அழைப்பு அனுப்பியது. மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்டார்.

வழக்கு சென்னையில் 1938 திசம்பர் 5, 6ஆம் நாட்களில் நடைபெற்றது. அவர் வழக்கம்போல் எதிர் வழக்காடவில்லை. சர் பன்னீர்செல்வம்குமார ராசா முத்தையா செட்டியார் போன்றவர்கள் எதிர்வழக்காட வற்புறுத்தியும் மறுத்துவிட்டார். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் நோக்கம், தமது அரசியல் கொள்கை ஆகியவற்றை விளக்கும் அறிக்கையொன்றை எழுத்து மூலம் நீதிபதியிடம் கொடுத்ததோடு நிறுத்திக் கொண்டார்.

அவர்கொடுத்த வாக்கு மூலத்தின் சில பகுதிகள்:

“இந்தக் கோர்ட்டு காங்கிரசு அமைச்சர்கள் நிருவாகத்துக்கு உட்பட்டது. நீதிபதியாகிய தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவைதவிர இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரசு அமைச்சர்கள் அதிதீவிர உணர்ச்சியுடன் உள்ளார்கள். அதுவிசயத்தில் நியாயம் அநிநாயம் பார்க்க வேண்டியதில்லை என்றும், கையில் கிடைத்த ஆயுதத்தைப் பயன்படுத்தி ஒழித்தாக வேண்டும் என்றும், இந்தி எதிர்ப்புகிளர்ச்சியைத் திடீரென்று வகுத்து புகுந்த திருடர்களுடன் ஒப்பிட்டும் மாண்புமிகு அமைச்சர் கடற்கரைக் கூட்டத்தில் பேசியுள்ளார். இந்தி எதிர்ப்பு விசயத்தில் அமைச்சர்கள் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் அடக்குமுறையே என்பது என் கருத்து. அடக்குமுறைக் காலத்தில் இம்மாதிரிக் கோர்ட்டுகளில் நியாயம் எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம். இந்த இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சி ஒரு செயல் விளக்கம் (Demonstration) ஆக மேற்கொள்ளப்பெற்று வருகிறதேயொழிய அதில் எவ்வித நிருப்பந்தப்படுத்தும் கருத்தும் இல்லையென்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சி நிறுவனத்தின் கொள்கையில் சட்டம் மீறக்கூடாதென்பது முக்கிய நோக்கமாகும். நான் சம்பந்தப்பட்ட சுயமரியாதை இயக்கம், தமிழரியக்கம், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, நீதிக்கட்சி இயக்கம் ஆகியவையும் சட்டத்திற்கு உட்பட்டே கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற கொள்கையுடைவையே. இதுவரை அக்கொள்கை மாற்றப்படவே இல்லை. என்னுடைய பேச்சு முழுவதையும் படித்துப்பார்த்தால் இது தெளிவாகும். ஆகவே, நீதிமன்றத்தார் அவர்கள் தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் அல்லது அமைச்சர்கள் திருப்தி அடையும் வண்ணம் எவ்வளவு அதிகத் தண்டனை வழங்கமுடியுமோ அதையும், பழிவாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க முடியுமோ அதையும் கொடுத்து, வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன்.”

இந்தவழக்கு சியார்சுடவுன் காவல் நீதிமன்றத்தில் நீதிபதி திரு. மாதவராவு முன்னிலையில் நடந்தது. நீதிபதி வழக்கில் முடிவு கூறினார். “இவர் செய்த குற்றங்கள் இரண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோராண்டு கடுங்காவல், ஒவ்வோர் ஆயிரம் உரூபாய் அபதாரம்அபராதம் செலுத்தத் தவறினால் மீண்டும் அவ் ஆறு மாதம் தண்டனை. இரண்டு தண்டனைகளையும் தனித்தனி காலத்தில் அடையவேண்டும்” என்பது. பின்னர் அரசு கடுங்காவலை வெறுங்காவலாக மாற்றி விட்டது.

இச்செய்திகளை அக்காலத்திலேயே பெரியாருடன் நெருங்கிப் பழகியும் அவர்தம் கொள்கையைக் கடைப்பிடித்தும் ஒழுகிய கவிஞர் நாரா. நாச்சியப்பன்,

நெடுநாட்கள் உறங்கிவிட்ட தமிழ்ப் பெண்கள்
தமையெல்லாம் நீஎழுப்பித்
தொடுப்பீர்போர்தமிழ்த்தாயைத் தொலைக்குவழி தடுத்தென்றே தூண்டி விட்டாய்!
கொடுங்குற்றம் செய்தனைநீ யபராதம் கொடுவென்று
கூறி இன்னும்
கடுங்காவல் தண்டனையிட் டடைத்தார்கள் தாத்தாவைக்
கம்பிக் கூட்டில்.  (குறிப்பு 1) 

என்று பாடலாக வார்த்துக் காட்டி தமிழ் மக்களுக்கு எழுச்சியூட்டினார்.

பெரியார் தண்டனை ஏற்றதுபற்றி அவர்தம் கெழுதகைத் தோழர் திரு.வி.க. அவர்கள் எழுதியது:

“திரு.ஈ.வெ. இராமசாமிநாயக்கர் கடுங்காவல் தண்டனை ஏற்றுச் சிறைக் கோட்டம் நண்ணினர். வெள்ளிய தாடி அசைய, மெலிந்த தோல் திரங்க, இரங்கிய கண்கள் ஒளிர, பரந்த முகம் மலர, கனிந்த முதுமை ஒழுக, ஒழுகத் தாங்கிய தடியுடன் திருநாயக்கர் சிறைபுகுந்த காட்சி அவர்தம் பகைவர், நொதுமலர், நண்பர் எல்லாருள்ளத்தையும் குழையச் செய்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

முதுமைப்பருவம்! காவல்! கடுங்காவல்! என்னே! இந்நிலையை உன்ன உருகுகிறது. திருநாயக்கருடன் மிக நெருங்கிப் பழகிய சிலர் அமைச்சர் பதவியில் வீற்றிருக்கின்றனர். அவர்தம் மனமும் சரிந்தே இருக்கும். வயதின் முதிர்ச்சி எவரையும் அலமரச் செய்யும்”

-நவசக்தி 9.12.1938 தலையங்கம்.

இக்கருத்தினயே மனமுருகிப் பாடிக் குமுறுகின்றார் கவிஞர். நாச்சியப்பன்!

வெள்ளியமென் தாடியசைந் தாடத்தன் மேனியிலே
முதுமை தோன்ற
அள்ளிஉடை ஒருகையில் தடியைமறு கையிலெடுத்
தலர்ந்த பூப்போல்
வெள்ளைமனத் தூய்மையது முகத்தினிலே மலர,உடல்
மெலிந்து கண்டோர்
உள்ளமெலாம் கசியமழை போற்கண்ணி பொழிய
சிறைக்குள்ளே சென்றார். (குறிப்பு 2) 

என்ற ஒரு பாடலில்.

நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டவுடன் பெரியார் அதை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அன்றலர்ந்த செந்தாமரையினை நிகர்த்தது “அவர் முகம்”  (குறிப்பு 3)    ஆனால், அன்பர் பலரும் கண்ணீர் விட்டனர். பன்னீர்செல்வம் போன்ற கலங்கா நெஞ்சினரும் கலங்கிவிட்டனர். நாடெல்லாம் அழுதன. நடுநிலைதவறாத நாளேடுகள் அரசின் போக்கைக் கண்டித்தன. நவசக்தி “ஓய்வு என்பதை அறியாது வீரகர்ச்சனை புரிந்து வந்த கிழச்சிங்கம் இப்பொழுது ஓய்வு பெற்றிருக்கிறது. சிறையில் தலைநிமிர்ந்து நடக்கிறது” (நவசக்தி-9.12.1938. தலையங்கம்) என்று எழுதியது.

பெரியாரைச் சிறையில் வைத்தால் தமிழர் கிளர்ச்சி அடங்கிவிடும் என்று அரசு நினைத்தது. மாறாக அது வலுத்தது. தடுப்பு ஊசி போட்ட பலன் போலாயிற்று. பெரியாரின் வீரகர்ச்சனை தமிழர் காதுகளில் ஒலித்தது. பெரியார் தெளித்த விதைகள் முளைத்து எங்கும் செழித்து வளர்ந்தன. “தமிழ் நாடு தமிழருக்கே” என்று அவர் தந்த மந்திரத்தின் வல்லோசை வானையும் பிளந்தது.

நாமிருக்கும் நாடுநம தென்றறிந்தோம் -இது
நமக்கே உரிமையாம் என்பதுணர்ந்தோம்.  (குறிப்பு 4)     

என்ற பாரதியாரின் கவிதை அடிகள் எம்மருங்கும் குதித்துக் கூத்தாடின.

பெரியார் சிறைப்பட்ட சிலநாட்களுக்குப் பின்னர் 1938 டிசம்பர் 18இல் அவர்தம் மணிவிழா நாடெங்கும் நடைபெற்றது. அவர் பெயரால் அன்னதானங்கள், ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், அவர்கொள்கைக்கு மாறாக அவர் படத்துக்குத் தூபதீப ஆராதனைகள் நடைபெற்றன. தமிழ் நாடெங்கும் மூலைமுடுக்குகளிலும் அவர் விழா கொண்டாடப் பெற்றது. அவர் தியாகத்தை மக்கள் உணர்ந்தனர். “தியாகராசராக” மக்கள் மனத்தில் காட்சி அளித்தார். அரசு செய்வதறியாது திகைத்தது. ஆரவாரித்தனர் தமிழர். இராமன் வனவாசத்தைக் கேட்டபோது அயோத்தி மக்கள் ஆர்த்தெழுந்ததுபோல் இராமசாமியின் சிறைவாசம் கேட்ட தமிழகம் ஆர்த்தெழுந்தது என்று ஒப்பிட்டும் சொல்லலாம்.

நாரா. நாச்சியப்பன் பாடல்கள்: இந்தி எதிர்ப்பு நடைபெற்ற அக்காலத்திலேயே தந்தையொடு நெருங்கி உறவாடிய கவிஞர் நாச்சியப்பன். அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நிரல்படத் தொகுத்து கவிதைகளாக வார்த்து நமக்குத் தந்துள்ளார். அவற்றுள் பலவற்றை ஈண்டுத் தருகின்றேன்.

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.பெருமாள்அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  

பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், 

சென்னைப் பல்கலைக் கழகம்

குறிப்பு  1.  ஈரோட்டுத்தாத்தா-தமிழ்க்காத்த போராட்டம்-17

குறிப்பு 2. மேலது-17

குறிப்பு 3. கைகேயி காடேக வேண்டும் என்பது தந்தையின் கட்டளை என்று சொல்லக்கேட்ட இராமன் முகம்,
அப்பொழுது அலர்ந்த செந்தா மரையினை வென்ற தம்மா

-கைகேயி சூழ்வினை-108

என்று மலர்ந்தது (இது வனவாசம்). இப்போது இராமசாமியின் முகம் செந்தாமரையினை நிகர்த்தது (இது சிறைவாசம்) இராமன் தன்னிச்சையாகத் திரியலாம். இராமசாமிக்கு அந்த உரிமை இல்லை. இதுதான் ‘வேற்றுமை’. இராமன் படத்தை செருப்பாலடித்தற்கு இது ஒருவகைத் தண்டனையோ என்று எதிரிகள் கருதுகின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

குறிப்பு 4. பாரதியார் கவிதைகள், தேசியகீதங்கள்-சுதந்திரப்பள்ளு-5


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்