Skip to main content

ஈழத்துத் திறனாய்வு (தொடர்ச்சி) – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

 அகரமுதல




(முன்னிதழ்த்தொடர்ச்சி)

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 20

திறனாய்வு (தொடர்ச்சி)

2

உரைநடையில் அமைந்த நவீன இலக்கியங்கள் செல்வாக்குப் பெறத் தொடங்கியதை அடுத்து 1940 களிலேயே ஈழத்தில் நவீன விமர்சனம் துளிர்விடத் தொடங்கியது எனலாம். இக்காலக் கட்டத்தில் புனைகதைத் துறையில் ஈடுபட்டோரே இவ்விமர்சனத் துறையிலும் ஈடுபட்டனர். நவீன இலக்கிய வடிவங்களின் தோற்றம் நவீன சிந்தனை முறையின் தோற்றமும் ஆகும். அதனால் பழைய சிந்தனை மரபுக்கும் புதிய சிந்தனை மரபுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்த முரண்பாட்டின் விளைவாகவே நவீன இலக்கிய விமர்சனம் தோன்றியது. தாம் படைத்த இலக்கியங்களின் புதுமையை நியாயப்படுத்தி எழுதவேண்டிய அவசியம் இக்கால எழுத்தாளர்களுக்கு இருந்தது.

இலக்கிய உலகிலே பழைய, வரட்டுத்தனமான பண்டித மனப்பான்மையின் செல்வாக்கை எதிர்த்த, உயிர் உணர்ச்சியுள்ள ஒரு கவிஞனை கதாபாத்திரமாகக் கொண்டு 1940 அளவில் இலங்கையர்கோன் எழுதிய ‘நாடோடி‘ என்னும் கதையில், இலக்கியத்தில் இப்பண்டித மனப்பான்மைக்கு எதிரான கலகக் குரலையும் நவீன இலக்கிய விமர்சனக் கண்ணோட்டத்தின் தொடக்கத்தையும் காணலாம்.

“காளிதாசனுடைய ஒப்புயர்வற்ற தெய்வக் காவியமாகிய இரகு வம்சத்தைச் சுவை நைந்த உயிரற்ற வெறும் சொற் குவியலாகத் தமிழில் மொழிபெயர்த்த அரசகேசாியின் சகாக்களிடம் இருந்து நான் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்! பழமை பழமையென்று பிதற்றிக் கண்களை மூடிக்கொண்டு தம் அற்பத் திறமையில் இறுமாந்து உட்கார்ந்திருக்கும் இவர்களுக்குப் புதுமையும் முற்போக்கும் எங்கே பிடிக்கப்போகின்றது? திருக்கோவையாரைப் படித்துவிட்டு அதில் வெட்டவௌிச்சமாய் இருக்கும் அழகையும், சீவனையும், ஓசையையும் தேனையும் அமுதத்தையும் சுவைத்து உணர முடியாது அதற்குள் ஏதோ சித்தாந்தக் கருத்து மறைந்து கிடக்கிறது என்று பாசாங்கு செய்யும் இந்தப் பழமைப்புலிகள். . . . .”

“இனி வரப்போகும் தமிழின் மறுமலர்ச்சிக்கு வந்தனை செய்கின்றேன்.”

இலங்கையர்கோனின் கதையில் வரும் மேற்காட்டிய கூற்றுகள் ஈழத்தில் நவீன இலக்கிய சிந்தனையின் தோற்றத்தைக் காட்டுகின்றன என்பதில் ஐயமில்லை. அரசகேசாி காலத்தில் அவர் கதையை அமைத்திருந்தாலும், அது அவரது சமகால இலக்கியப் பிரச்சினையின் வௌிப்பாடேயாகும். இவ்வாறு புதுமைக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு 1940களில் இலக்கிய விமர்சனத் துறையில் ஈடுபட்ட எழுத்தாளர்கள் பற்றி பேராசிாியர் க. கைலாசபதி பின்வருமாறு கூறுகின்றார்.

“இவர்கள் பெரும்பாலும் சமகால இலக்கியங்களைப் படித்துச் சுவைத்து அவைபற்றித் தருக்கித்துச் சொல்லாடி இலக்கியத்தில் ஆத்மார்த்த அனுபவத்தையும், நிறைவையும் தேடியவர்கள். திறனாய்வு அவர்களின் பிரதான அக்கறையாக இல்லாதுவிடினும் தமது தொழிலின் நுட்பங்களைப் பற்றிய வாதப் பிரதிவாதங்களிலும் சருச்சைகளிலும் இவர்கள் தயங்காது பங்கு பற்றினர்.”

மேல்நாட்டு இலக்கியங்களை ஆங்கில மொழி மூலமாகவே அறிந்துகொண்ட இவர்களின் விமர்சன அளவுகோலும் ஆங்கில மொழி வழியாகப் பெறப்பட்டதேயாகும். ‘ஈழகேசாி’ இவர்களுக்கு வௌியீட்டுத் தளமாயிற்று. சோ.சிவபாதசுந்தரம், சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் ஆகியோரும் ஈழகேசாியில் சமகாலப் புனைகதை இலக்கியம் பற்றி விமர்சனக் கட்டுரைகள் எழுதினர். அத்தோடு நாடகம், பிறகலைகள் பற்றியும் அவர்களின் விமர்சனம் அமைந்தது. இவ்வகையில் அகிலனின் சிநேகிதி, க.நாராயணனின் இலட்சியப்பாதை, சு.வித்தியானந்தனின் தமிழர் சால்பு ஆகிய நூல்கள் பற்றியும் பேராசிாியர் கணபதிப்பிள்ளையின் தவறான எண்ணம் நாடகம் பற்றியும், டி.கே.எசு. சகோதரர்களின் நாடக விழா பற்றியும் இலங்கையர்கோனின் விமர்சனங்கள் குறிப்பிடத்தக்கன. அகிலனின் ‘சிநேகிதி’ பற்றி இலங்கையர்கோன் ஈழகேசாியில் எழுதிய ஒரு விமர்சனக் குறிப்பை உதாரணமாகத் தரலாம்.

“. . . . . .தமிழில் ஒரு துணிகரமான முயற்சி என்றே சொல்ல வேண்டும். ஐரோப்பிய நாவல்கள், நாடகங்கள் பலவற்றில் இப்பொருள் பல கோணங்களில் வைத்து ஆராயப்பட்டிருக்கிறது. விரசமான விசயமாக இருந்தாலும் அதை அலசிப் பார்க்கும் முறை கொஞ்சமும் விரசம் இல்லாமலே கையாளப்பட்டிருக்கிறது. . . . . . கள்ளக் காதல் மனித வாழ்க்கைக்குப் புறம்பானதல்ல. ஆனால் நாராயணசாமி என்ற பாத்திரம் புறம்பானவராகவே காணப்படுகிறார். ஒரு கணவன் தான் விரும்பி மணந்துகொண்ட மனைவியை, அவன் எவ்வளவுதான் நபுஞ்சகனாக இருந்த போதிலும், இன்னொருவனை வீட்டுக்கு அழைத்துத் தன் மனைவியுடன் பழகச் செய்து பிறகு அவளை அவனுடைய கையில் ஒப்படைப்பதென்றால்-அந்தக் கணவனை என்ன என்று சொல்வது?- நாவலின் போக்கும் தமிழ் நடையும் அகிலனுக்குாிய சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது.”

இவை எல்லாம் செயல்முறை விமர்சனத்தின் பாற்படும் கட்டுரைகளேயாகும். இதே காலப்பகுதியில் இலக்கிய விமர்சனக் கொள்கைகளை முன்வைக்கும் கட்டுரைகளும் எழுதப்பட்டன. இலக்கியத்தின் உருவம் உள்ளடக்கம், அதன் சமூகச் சார்பு முதலியவைபற்றி கொள்கைரீதியாக இக்கட்டுரைகள் அமைந்தன. இலங்கையர்கோன், அ.ந. கந்தசாமி, கே.கணேசு, பேராசிாியர் கணபதிப்பிள்ளை, போன்றோர் இக்காலப் பிாிவில் இத்தகைய கட்டுரைகள் பலவற்றை எழுதினர். இலக்கியத்தின் நோக்கம், சமூகப்பணி ஆகியவை பற்றி அ.செ.முருகானந்தம் 1942-இல் வௌிவந்த ஈழகேசாியில் பின்வருமாறு எழுதினார்.

“தமிழின் கதை இலக்கியத்தின் காணப்படும் முக்கிய குறைபாடு இதுதான். அதாவது இலட்சியக்கதைகள், சீர்திருத்தக்கதைகள் மிகவும் குறைவுஅத்தியாவசியமாக வேண்டப்படுவதும் அதுதான். பொழுதுபோக்குக்கதைகள் போதுமென்றபடி ஏராளமாகச் சேர்ந்துவிட்டன. இனி அவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தமிழ் நாட்டை அப்படியே தூக்கி காட்டும், தேசத்தின் வறுமை, துன்பம். அரசியல் நிலைமை முதலியவற்றை உணர்ச்சி ஊட்டக் கூடிய கூடிய முறையில் சித்திாிக்கும் இலட்சியக் கதைகள் பெருகவேண்டும், எழுத்தாளர் என்று பேனா தூக்கியவர்கள் இனி இத்துறையில் முயற்சிப்பார்களா?”

தேசத்தின் வறுமை, துன்பம், அரசியல் நிலைமை என்பனவே எமது இலக்கியத்தில் இடம்பெற வேண்டும் என்ற அ.செ. மு.வின் கூற்று புனைகதையின் உள்ளடக்கத்தை வலியுறுத்தியது. நமது தேசத்தின் அபிலாசைகளை இலக்கியம் பிரதிபலிக்க வேண்டும் என்ற தேசிய இலக்கிய நோக்கு விமர்சகர்களிடம் ஏற்படத் தொடங்கியது. இக்காலக்கட்டத்தில் மறுமலர்ச்சிப் பத்திாிகையில் இது சம்பந்தமான கட்டுரைகள் வௌிவந்தன. இப்பத்திாிகையில் இலங்கையர் கோன் எழுதிய ‘தமிழின் மறுமலர்ச்சி’ என்ற கட்டுரை முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. இதே காலப்பகுதியில் கே. கணேசு நடத்திய ‘பாரதி’ இதழிலும் இலக்கியத்தின் சமுதாயப் பணியை வற்புறுத்திக் கட்டுரைகள் வௌியாயின.

(தொடரும்)

சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்