Skip to main content

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 48

 அகரமுதல




(அகல் விளக்கு – மு.வரதராசனார். 47. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 20

மாலனுடைய திருமணம் ஆவணி இறுதியில் அமைந்தது. கால் ஆண்டுத் தேர்வு முடிந்துவிட்ட பிறகே திருமணம் நடைபெறுவதால், ஒருவகை இடையூறும் இல்லாமல் திருமணத்திற்கு வந்து போகுமாறு மாலன் கூறிச் சென்றான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெருங்காஞ்சிக்கு ஒருமுறை போய்வரலாம் என்று முடிவு செய்தேன். மாலன் தந்த அழைப்பு அல்லாமல், சந்திரன் அனுப்பிய அழைப்பும் வந்தது. சந்திரன் தனியே கடிதமும் எழுதியிருந்தான். நல்ல காலம், அவனுடைய மனம் மாறியிருக்கிறது என மகிழ்ந்தேன்.

தேர்வு முடிந்ததும் நேரே ஊர்க்குச் சென்றேன். அங்கே நான் கண்ட முதல் காட்சி, எங்கள் வீட்டுத் தோட்டம் ஒரு சிறு பள்ளிக்கூடமாய் மாறியிருந்ததுதான். தென்னை ஓலைகளால் ஒரு சிறு தாழ்வாரம் இறக்கியிருந்தது, தரை நன்றாக மெழகியிருந்தது. இருபது பனந்தடுக்குகள் பரப்பப்பட்டுச் சிறுவரும் உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கு இடையே வெள்ளையாடை உடுத்து அன்புருவாகப் பாக்கியம் உட்கார்ந்து சில சிறுமியர்க்குக் கணக்குக் கற்பித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன்.

“எத்தனை நாளாக இப்படி ஆசிரியர் ஆக மாறிவிட்டீர்கள் அக்கா?” என்று வியப்போடு கேட்டேன்.

“போன ஆண்டு எல்லாம் பாத்திரம் தேய்த்து வேலை செய்து வயிறு வளர்த்தேன். முருக்கிலை ஆலிலை தைத்து வயிறு வளர்த்தேன். அவற்றால் ஒன்றும் குறைவு இல்லை. அப்போது ஓய்வு நேரங்களில் சிறுவர்க்குக் கதையும் கணக்கும் சொல்லிப் பார்த்தேன். அதில் தனி மகிழ்ச்சி இருந்தது. ஏன் அதையே தொழிலாக வைத்துக் கொள்ளக் கூடாது என்று எண்ணினேன். முதலில் இரண்டு பிள்ளைகள் வந்தார்கள். நம் வீட்டு நடையில் உட்கார வைத்துச் சொல்லிக் கொடுத்தேன். இப்போது இருப்பத்திரண்டு பிள்ளைகள் ஆகிவிட்டார்கள். அம்மாவை இடம் கேட்டேன். கையில் இருந்த பணத்தைப் போட்டுத் தென்னங்கீற்று வாங்கி இப்படிச் செய்தேன்” என்றார்.

“நல்லதுதான்” என்றேன்.

“என்ன செய்வது தம்பி! கழுத்தில் இருந்த ஒரு சங்கிலியும் வேண்டும் என்று தம்பி ஆசைப்பட்டான். அப்பா செய்து போட்டது. தனக்கு வேண்டும் என்று கேட்டான். கொடுத்துவிட்டேன். கொடுத்திருக்கக் கூடாது என்று நம் அம்மா கண்டித்தார்கள். போகட்டும் என்று கொடுத்து விட்டேன். இனிமேல் என் சொத்து அன்பும் அறிவும் தான்.”

உள்ளம் உருகி நின்றேன்.

“என்னைப் பற்றிக் கவலைப்படாதே, தம்பி, உடம்பில் பலம் இருக்கிறவரையில் உழைத்துச் சாப்பாடு தேடிக் கொள்வேன். அதற்குப் பிறகு நீங்கள் இருக்கிறீர்கள்” என்றார்.

அந்தக் குரலில் துயரம் இருந்தது என்று சொல்வதற்கில்லை. நம்பிக்கை இருந்ததாகத் தெரிந்தது.

என் தங்கை மணிமேகலை அந்த ஆண்டில் பத்தாவது வகுப்பிலும், தம்பி பொய்யாமொழி ஏழாவது வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய படிப்பு எப்படி இருக்கிறது என்று அறிவதற்காக, அவர்களின் அலமாரிகளை ஆராய்ந்தேன். என்ன என்ன புத்தகங்கள் படிக்கிறார்கள் என்று பார்த்தேன். மணிமேகலையின் அலமாரியில் திரு.வி.க. நூல்களும் காந்தியடிகளின் நூல்களும் விவேகானந்தரின் நூல்களும் பல இருந்தது கண்டேன்.

தங்கையை அழைத்து, “நீ பத்தாவது படிக்கிற பெண், இந்தப் பொதுப் புத்தகங்களைப் படித்துக் காலம் போக்கிக் கொண்டிருக்கலாமா? இவ்வளவு புத்தகங்கள் வாங்கக் காசு ஏது?” என்று சிறிது கடுமையாகக் கேட்டேன்.

“எல்லாம் பாக்கியம் அக்காவின் புத்தகங்கள். மாதம் மூன்று ரூபாய் சேர்த்து ஏதாவது புத்தகம் வாங்கிக் கொண்டிருக்கிறார். நூல் நிலையத்திலிருந்து சிலவற்றை எடுத்த வரச் சொன்னார். அவற்றையும் படிக்கிறார். அக்காவுக்கு இடம் இல்லாததால் இங்கே அலமாரியில் ஒரு பக்கத்தில் வைத்திருக்கிறார்” என்றாள்.

“சரி. போ. அக்கறையாகப் படி” என்று சொல்லி அனுப்பி விட்டேன்.

எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அம்மா நெருங்கி வந்து, “பாக்கியம் முன்போல் இல்லை அப்பா! நீங்கள் படிப்பதைவிட மிகுதியாகப் படிக்கிறாள். அவளுடைய ஒரு வயிற்றுக்காகத் தனியே சமைக்க வேண்டா என்று தடுத்து நம் வீட்டிலேயே சாப்பிடுமாறு சொன்னேன். சும்மா அல்ல, சாப்பாட்டுக்கு இரண்டு பங்காக வேலை செய்கிறாள். ஒரு நொடி சும்மா இருப்பதில்லை. குடும்ப வேலையில் முக்கால் பங்கு அவளே செய்கிறாள். எனக்கு எவ்வளவோ உதவியாக இருக்கிறாள். மற்ற நேரத்தில் மாலையில் இப்படிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறாள். பகல் எல்லாம் படிக்கிறாள். இலை தைக்கிறாள். கிடைக்கிற காசைப் புத்தகம் வாங்குவதற்கும் பத்திரிகை வாங்குவதற்கும் செலவழிக்கிறாள்” என்றார்.

“இன்னும் கொஞ்ச நாளில் ஒரு நூல் நிலையமே ஏற்பட்டு விடும்போல் இருக்கிறதே” என்றேன்.

“வீண் வேலை, வீண் பேச்சு ஒன்றும் இல்லை. அவளுடைய காலம் நல்ல வழியில் கழிகிறது” என்றார் அம்மா.

என் உள்ளம் மகிழ்ந்தது.

மறுபடியும் அம்மா, “இந்த புத்தகங்கள் எல்லாம் மணிமேகலையும் பொய்யாமொழியும் விடுமுறையில் படிப்பதற்காக இங்கே அலமாரியில் இருக்கட்டும் என்கிறாள் புத்தகம் எல்லாம் அவர்களுடைய சொத்தாம்.”

உழைக்கும் பழக்கமும் தொண்டு மனமும் இருந்தால் எப்படியும் வாழ முடியும் என்பதை அந்த அம்மையாரின் வாழ்க்கை தெளிவாக்கியது.

திருமணத்துக்கு வருமாறு அம்மாவை அழைத்தேன். இசைந்தார். மறுநாள் மாலை பெருங்காஞ்சிக்குப் புறப்பட்டோம். வீட்டுக்குள் நுழைந்ததும் கற்பகத்தைக் கண்டு அம்மா சிறிது வருந்தினார். “உன் திருமணத்தைப் பார்க்க அம்மாவும் இல்லையே, அத்தையும் இல்லையே” என்று கற்பகத்திடம் கூறினார். மகிழ்ச்சியான நிகழ்ச்சிக்கு வந்தபோது, துயரத்தை ஏன் நினைவூட்ட வேண்டும் என்று எண்ணி அம்மாவின் பேச்சை மாற்றினேன். கற்பகம் என்னைத் தலைநிமிர்ந்து பார்ப்பாள் என்று எதிர்பார்த்தேன். அவள் என் பக்கமே திரும்பவில்லை. தன் கண் கலக்கத்தை மறைப்பதற்காக அவ்வாறு இருந்தாள் என்று எண்ணி அப்பால் வந்தேன்.

சாமண்ணாவும் சந்திரனும் அன்போடு வரவேற்றார்கள். சாமண்ணாவின் குரலிலும் பார்வையிலும் தளர்ச்சி இருந்தது. கவலை முதுமையை விரைந்து கொண்டு வருதலை உணர்ந்தேன். சந்திரனுடைய முகத்தை நன்கு கவனித்தேன். அவன் முன்னைவிட மிகுதியாகப் பேசினான். ஆனாலும் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது இருந்த உள்ளக் கலப்பு இல்லை.

ரயில் பயணத்தின்போது அன்பு இல்லாமலே ஓயாமலே பேசுகின்றவர்கள் இல்லையா? அந்தப் போக்கில் இருந்தது, சந்திரனுடைய பேச்சு. வேலைக்காரர்களைப் பற்றியும் விலைவாசியைப் பற்றியும் பிள்ளை வீட்டுக்காரரின் மந்தமான போக்கைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தான். சாமண்ணா ஒருமுறை என்னைத் தனியே அழைத்துச் சென்று, “பிள்ளை எப்படி? நன்றாகத் தெரியுமா?” என்று கேட்டார்.

கடிதத்தில் எழுதிய கருத்துக்களையே திரும்பச் சொன்னேன். மகிழ்ந்தார். பிறகு சந்திரனைப் பற்றிச் சில குறிப்புகள் சொன்னார். “திருந்துவான் என்று பார்த்தேன். திருந்துவதாகத் தெரியவில்லை. குடும்பத்திற்குப் பிள்ளை என்று இருக்கிறான். அவ்வளவே தவிர நல்ல பெயர் எடுப்பதாகத் தெரியவில்லை. பொருளிலும் கருத்து இல்லை. வரவு செலவு பார்த்து வாழக் கற்றுக் கொள்ளவில்லை. கேட்டால் உதறிவிட்டுப் போய் விடுவானோ என்று பயமாக இருக்கிறது. அவனுக்கு வந்த மனைவியோ தங்கம். உரிமை கொடுக்கத் தெரியாதவர்கள், அதிகாரிகளாய் உயர்வோடு நடப்பார்கள்; அது முடியாதபோது அடிமைகளாய்ப் பணிந்து நடப்பார்கள் என்று அறிஞர் ஒருவர் சொன்னது பொருத்தம்தான்.”

என்னிடமே உரிமையோடு அன்பாகப் பழக முடியாதவனாக இருக்கிறானே. அன்பும் உரிமையும் இருந்தால், எனக்கு அடிக்கடி கடிதம் எழுதுவானே, நீலகிரியிலிருந்து இவனை அழைத்து வந்தபிறகு இன்றுதானே பார்க்கிறேன்! அன்பாகப் பழக வேண்டும் என்ற ஆர்வமும் நன்றியுணர்ச்சியும் இருந்தால், விடுமுறையிலாவது வாலாசாவுக்கு வந்திருக்கக் கூடாதா? திருமணம் ஆனபிறகு மனைவியோடு வெளியூர்க்குப் போகவேண்டிய காரணத்தை முன்னிட்டாவது அழைத்து வந்திருக்கக் கூடாதா என்று திண்ணை மேல் உட்கார்ந்தபடி பலவாறு எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன்.

“யார்? வேலுவா?” என்று அப்போது ஆசிரியர் வந்தார். “எங்கே வராமல் நின்றுவிடப் போகிறாயோ என்று எண்ணினேன். வந்தது நல்லது. வரப்போக இருந்தால் தான் அன்பும் உறவும் வளரும்” என்றார்.

“தொடர்பும் பழக்கமும் இல்லாதிருந்தாலும் உண்மையான நட்பு நீடிக்கும் என்று திருவள்ளுவர் கூறுகிறாரே” என்றேன்.

உயர்ந்த மக்கள் சிலருக்கு அது உண்மையாக இருக்கலாம். ஆனால் சாதாரணமானவர்களுக்குத் தொடர்பும் பழக்கமும் இல்லாவிட்டால் நட்புக் குறைந்து போகிறது. இளமையில் என்னோடு பழகிய நண்பர்கள் எங்கோ இருக்கிறார்கள். மறந்தே போய்விட்டேனே?” என்றார்.

அப்போது அந்தப் பக்கமாக நீலநிறப் பட்டுச் சேலை உடுத்திச் சென்ற ஒரு பெண்ணைப் பார்த்தேன்.

“அது யார் தெரியுமா?” என்றார் ஆசிரியர்.

“தெரியாதே”

“சந்திரன் உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கவில்லையா? இவள்தான் அவனுடைய மனைவி”

“அறிமுகம் செய்யவில்லை, ஒன்றும் இல்லை. அந்த அன்பான வழக்கங்களை அவன் இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை.”

“என்ன செய்வது? அவன் போக்கே ஒரு மாதிரி.”

“நல்ல பெண்தானே?”

“ஒரு குற்றமும் சொல்ல முடியவில்லை. சந்திரனுடைய அம்மா இருந்திருந்தால் மருமகளைக் கண்ணில் ஒத்திக் கொள்வாள். ஊரெல்லாம் புகழ்ந்து பெருமைப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட பெண். ஆனால், அவன் ஒருவன் மட்டும் பழிக்கிறான், சிறுமைப் படுத்துகிறான். அது ஒரு புராணம். உசு – அதோ அவன் வருகிறான்.”

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue