ஈழத்து நாடக இலக்கியம் – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி)
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 15
6. நாடகம்
ஈழத்துத் தமிழ் நாடகங்களை மரபுவழி நாடகங்கள், நவீன நாடகங்கள் என்ற இரு பெரும் பிாிவுகளுக்குள் அடக்கலாம். பண்டைய கூத்து முறைப்படி அமைந்த நாடகங்களே மரபு வழி நாடகங்களாகும். ஆங்கிலேயர் வருகையின் பின்னர் வந்து புகுந்த வசனம் பேசி நடிக்கும் நாடகங்களும் அதையொட்டிப் பின்னர் எழுந்த நவீன பாணி நாடகங்களும் நவீன நாடகங்களாகும்.
மரபுவழி நாடகங்களைக் கூத்துக்கள் எனவும் அழைப்பார். இக் கூத்துக்களின் ஆரம்பகாலம் எது எனத் திட்டவட்டமாகக் கூறமுடியாது. ஈழத்தில் நாடக வடிவ இலக்கியங்களான பள்ளு குறவஞ்சி நூல்களின் தோற்றக் காலமான 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் ஈழத்தில் பல மரபுவழி நாடகப் பிரதிகள் தொடர்ச்சியாகத் தோன்றத் தொடங்கின என்று அறிகிறோம். கணபதி ஐயரே (1709-1794) ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முதலாசிாியர் என்பர். இவர் வாளபீமன் நாடகத்தை எழுதினார். இதுவரை கிடைத்த பல்வேறு தகவல்களிலிருந்து ஈழத்தில் ஏறத்தாழ 200க்கு மேற்பட்ட மரபுவழி நாடக நூல்கள் இருந்ததாக அறிய முடிகிறது. ஆனால் ஏட்டுருவிலோ அச்சுருவிலோ கையிற் கிடைப்பவை அவற்றினும் பாதியே.
போத்துக்கேயர் வருகையின் பின் ஈழத்தில் வளர்ச்சி பெற்ற கத்தோலிக்க மதத் தாக்கத்தினால் கத்தோலிக்க மதச் சார்பு பொருந்திய கூத்துக்களும் தோன்றின. என்றிக்கு எம்பரதோர் நாடகம், ஞானசவுந்தாி நாடகம் என்பன இதற்கு உதாரணங்களாகும். ஈழத்து மரபுவழி நாடகங்களில் கத்தோலிக்காின் பங்கு குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, மலைநாடு ஆகிய இடங்களிலெல்லாம் இம் மரபு வழி நாடகங்கள் இன்றும் வழக்கிலுள்ளன. இவற்றிற்கிடையே பிரதேசத்திற்குப் பிரதேசம் சிற்சில வேறுபாடுகளிருப்பினும் இவை அனைத்தும் ஓாிடத்திலுருவாகி, பின்னர் ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களிற் சுவறின என்பதற்கு ஆதாரங்களுண்டு. இம்மரபுவழி நாடகங்களே ஈழத்து நாடக மரபின் ஆரம்பமாகும்.
பார்சி வழி நாடகக்காரரது வரவினால் 18 ஆம் நூற்றாண்டில் விலாசம் என்றொரு நாடக வடிவம் ஈழத்தில் வந்து புகுந்தது. அாிச்சந்திர விலாசம், மதனவல்லி விலாசம் என்பன இதற்கு உதாரணம். கூத்திலிருந்த ஆட்ட முறைகள் நீக்கப்பட்டமையும் கருனாடக சங்கீத இசை இடம் பெற்றமையும் விலாசத்தை கூத்தினின்றும் வேறுபடுத்திக் காட்டிய அம்சங்களாகும். கூத்து ஆட்ட முறைகளை விட்டு கருனாடக இசையுடன் மேற்கத்திய, இந்துத்தானி இசைகளும் கலந்து சபா, டிறாமா போன்ற நாடக வடிவங்களும் 19 ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் எழுந்தன. நாட்டுக்கூத்திற் காணப்படாத காட்சியமைப்பும் விறுவிறுப்பான கதையோட்டமும் இந்நாடகங்களின் பிரதான அம்சங்களாகும்.
நவீன நாடக மரபு உருவாகியதைத் தொடர்ந்தும், தென்னிந்திய சினிமாக்களின் வருகையினாலும் இம் மரபுவழி நாடகங்கள் நகரப்புறங்களிற் செல்வாக்கு இழந்து, கிராமங்களைச் சென்றடைந்தன. இந் நாடக மரபு மீண்டும் ஈழத்து நாடக உலகில் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேதான் பிரகாசம் பெறத்தொடங்குகிறது.
ஆங்கிலேயர் வருகையுடன் இலங்கை வரலாற்றில் புது அத்தியாயம் ஒன்று ஆரம்பிக்கப்படுகின்றது. இன்று வரை எமது நாட்டின் பொருளாதாரத் தலைவிதியாக இருந்து வந்துள்ள காலனித்துவப் பெருந்தோட்டப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே. இப்பொருளாதார அமைப்புமுறை ஈழத்திற் பல அடிப்படையான மாறுதல்களை ஏற்படுத்தியது. ஆங்கிலேயர் தமது அரசியற் தளத்தை நிலைப் படுத்துவதற்காகப் பலவகைக் கலாசார ஆக்கிரமிப்பிலும் ஈடுபட்டனர். ஆங்கில மொழி, கிறித்தவ மதம் ஆகியவற்றின் மூலம் சுதேசிகளை ஐரோப்பிய மயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆங்கில அறிவு முக்கியமானதாக மாத்திரமன்றி வருமானம் தருவதாகவும் மாறியது. பிாிட்டிசாாின் நிருவாக சேவையில் வேலை செய்ய ஆங்கிலம் கற்ற லிகிதர்கள் கூட்டம் ஒன்றும், அவர்களுக்குத் தேவையாக இருந்தது. தாபிக்கப்பட்ட புதிய பாடசாலைகளில் இவர்களும், ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிாியர்களும் உற்பத்தி செய்யப்பட்டார்கள். இவர்களே ஈழத்து அரசியல் அரங்கில் புதிதாகத் தோன்றிய மத்தியதர வர்க்கத்தினராவர்.
இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இலக்கியத்தில் இவ் வகுப்பினாிலிருந்து வந்தோாின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவர்களே நவீன இலக்கிய வடிவங்களான சிறுகதை, நாவல் ஆகியவற்றை ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகம் செய்து வைத்தனர். நாடகத்துறையிலும் இவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஈழத்துக் கூத்து மரபிலிருந்து விடுபட்டு நவீன நெறியில் நாடகம் செல்லக் காலாயிருந்தோர் இவர்களே.
மேனாட்டு இலக்கியப் பயிற்சி காரணமாக இவர்கள் நாடகத்தைப் புதிய திசைக்கு எடுத்துச் சென்றார்கள். தமிழ் நாட்டில் சுந்தரம்பிள்ளை போன்ற பேராசிாியர்களும், பம்மல் சம்பந்த முதலியார் போன்ற நியாயவாதிகளும் நாடகத் துறையுட் புகுந்தனர். ஈழத்திலும் இதுவே நடந்தது. நாடகத்தினைத் தொழிலாகக் கொள்ளாமல் சபாக்கள் அமைத்தும், மன்றங்கள் தொடங்கியும் இவர்கள் நாடகத்தினை வளர்த்தனர். 1913 சூலையில் கொழும்பில் இலங்கா சுபோதசபை தாபிக்கப்பட்டது. 1914 இல் யாழ்ப்பாணத்தில் சரசுவதி விலாச சபை அமைக்கப்பட்டது. 1920 இல் மட்டக்களப்பில் சுகிர்த விலாச சபை தோன்றியது. 1933 இல் The Tamil Amateur Dramatic Society என்ற ஆங்கிலப் பெயர் கொண்ட நாடக சபை கொழும்பில் அமைந்தது.
இச் சபைகளில் ஆங்கிலம் கற்ற மத்தியதர வகுப்பினரே பெரும்பங்கு கொண்டனர். 1913 சூலையில் கொழும்பில் தாபிக்கப்பட்ட இலங்கா சுபோத சபைக்குத் தலைவராயிருந்தவர் பிரபல அப்புக்காத்தும் (வழக்குரைஞரும்) சட்டசபை அங்கத்தவருமான சேர் அம்பலவாணர் கனகசபை ஆவர். உபதலைவர் கோபாலசிங்கமும் இத்தகைய தகுதிகள் வாய்ந்தவரே. காாியதாிசியான ஏ.தளையசிங்கம் அப்புக்காத்தாக இருந்தவர். தனாதிகாாி நெஷனல் வங்கிச் சிறாப்பராவர். இத் தகவல்களிலிருந்து நாடக உலகில் மத்தியதர வர்க்கத்தினாின் வருகை துல்லியமாகப் புலனாகின்றது.
இம் மத்தியதர வகுப்பினாின் வருகையுடன் அவர்களின் இரசனைக்கும், ஓய்வு நேரத்திற்கும், கல்வித் தரத்திற்கும் ஏற்ப புதிய நாடக மரபு உருவாயிற்று. பாடல்கள் குறைந்து வசனம் பெருமிடத்தைப் பிடித்தது. நாடகம் இறுக்கமான ஒரு வடிவத்தைப் பெறலாயிற்று. நாடக இலக்கியம் என்ற பேச்சும் எழலாயிற்று. ஆங்கில நாடகப் பண்புகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்யும் மதங்க சூளாமணி, விபுலானந்த அடிகளால் எழுதப்பட்டு இக் காலகட்டத்தில் (1926 இல்) மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் வௌியிடப்பட்டது.
இந் நவீன நாடக மரபில் கலையரசு சொர்ணலிங்கம் முக்கிய இடம் பெறுகிறார். கலையரசு அவர்கள் இலங்கையில் அக் காலத்திற் பெருமதிப்புப் பெற்றிருந்த ஆங்கில நாடகக் கோட்பாடுகளுக்கியைய குறைந்த நேரத்தில் பொருத்தமான அரங்க அமைப்பும், வேடப் புைைவும், நடிப்புத் துாிதமும் கொண்ட நாடகங்களை மேடையேற்றினார்.
வளர்ந்து வந்த நகர்ப்புற மக்களுக்கு இத்தகைய நாடகங்கள் சிறந்த பொழுதுபோக்காயின. கலையரசின் நாடகங்கள் அதிகமாகக் கொழும்பு நகாிலேயே மேடையேறின என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நிலமானிய அமைப்பு முற்றாகச் சிதையாமல் இருந்தமையினால் கூத்துகளின் செல்வாக்கினின்றும் நவீன நாடகம் தன்னை முற்றாக விடுவித்துக் கொள்ள முடியாமல் இருந்தது. உருவத்தைப் பொறுத்தவரை சிறிது மாறுபாடிருப்பினம் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை இந் நவீன நாடகங்கள் பழைய புராண இதிகாசக் கதைகளையே கொண்டனவாகவும். ஆங்கில – சமசுகிருத மொழிபெயர்ப்புகளாகவும் இருந்தன. சேக்சுபியாின் செல்வாக்கினை இக்காலத்தெழுந்த பல நாடகங்களிற் கண்டு கொள்ள முடிகின்றது.
இக்காலத்தெழுந்த கதிர்காமர் கனகசபையின் நற்குணனில் (1927) ஆங்கில நாடக முறையைத் தழுவி Blank Verse இனை ஒத்த அகவல் யாப்பில் நாடகப் பாத்திரங்களின் உரையாடல் அமைந்துள்ளது. ஆங்கில நாடக மரபைப் பின்பற்றி தமிழில் தான் செய்த முயற்சியே இது என நூலின் ஆசிாியர் குறிப்பிட்டுள்ளார். ஈழத்தில் அச்சு வடிவில் வந்த முதற் கவிதை நாடகம் இது என்பர். பேராசிாியர் சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியம் போன்று இது நடிப்பதற்கன்றி படிப்பதற்கேயுகந்தது. ஆங்கில சமசுகிருத நாடக முறைகளைப் பின்பற்றி எழுந்த இப் புதிய மரபு நாடகங்களுக்கு உதாரணமாகப் பிரான்சு கிங்குசுபொியின் சந்திரகாசம் (1940) மனோன்மணியம் (1941) வெள்ளவத்தை மு.இராமலிங்கத்தின் அசோகமாலா (1943) பேராசிாியர் கணபதிப்பிள்ளையின் மாணிக்கமாலை (1943) ஆகியவற்றைக் கூறலாம்.
கிறித்தவ மதத்திற்கு எதிராக எழுந்த இந்துசமய மறுமலச்சியின் மரபில் வந்த படித்தவர்கள் நாடகத்தைத் தம் கொள்கை பரப்பும் ஊடகமாகவும் கொண்டனர். கிறித்தவம் தமது மரபுகளையும் ஒழுக்கங்களையும் விழுமியங்களையும் சிதைப்பதாகக் கருதிய இவர்கள் அப் பாரம்பாியத்தை மீண்டும் நிலைநாட்டக் கருதி நாடகத்தில் அறநெறிப் பண்புகளைப் போதித்தனர். க.சிதம்பரநாதனின் சாவித்திாிதேவி சாிதம் (1917), க. இராமலிங்கத்தின் நமசிவாயம் அல்லது நான் யார் (1929), சோமசுந்தரப் புலவாின் உயிாிளங்குமரன் (1936), சு. செல்வநாயகத்தின் சாமளா அல்லது இன்பத்தில் துன்பம் (1937) சாரா எழுதிய சத்தியேசுவாி (1938) என்பவற்றை இந்நாடகங்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.
ஐரோப்பிய, வடமொழி நாடக மரபையொட்டி எழுதப்பட்ட மேற்குறிப்பிட்ட நாடகங்களில் பெரும்பாலானவை வடமொழி மரபைப் பின்பற்றித் தலைமைப் பாத்திரங்களும் உயர்வான பாத்திரங்களும் செந்தமிழ் நடையில் உரையாடுவதாகவும் வேலைக்காரன் போன்ற சமூக மதிப்பற்ற பாத்திரங்கள் பேச்சுத்தமிழைக் கையாள்வதாகவும் சிருட்டிக்கப்பட்டுள்ளன. இக் காலக்கட்டத்தில் பேச்சுத் தமிழ் நகைச்சுவைக்கே பயன்படுத்தப்பட்டது. எனினும் பேச்சுமொழி நாடகத்தில் இடம்பெறத் தொடங்கியமை ஒரு சிறப்பு அம்சமே. படிமுறை வளர்ச்சிப் போக்கில் பார்க்கையில், ஆரம்பத்தில் பாடல் வடிவில் அமைந்த கூத்து முறையில் இருந்து விலகி வசன அமைப்பில் உருவாகிய நவீன நாடக மரபு, பேச்சு மொழியினைத் தன்னுட் சேர்த்துக் கொள்ளும் பண்பினைக் காண்கின்றோம். சமூக அரசியல் வளர்ச்சி காரணமாக சாதாரண மனிதர்கள் சமூகத்தில் முக்கியத்துவம் பெற அவர்கள் நாடகத்திலும் இடம் பெறத் தொடங்கினர். நாடகத்தில் இடம்பெறும் சகல பாத்திரங்களும் பேச்சு மொழியிலேயே பேசுவதனை நவீன நாடக வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற் காணுகிறோம்.
Comments
Post a Comment