தந்தை பெரியார் சிந்தனைகள் 35
தன்வாழ்வைத் தொண்டாக்கித் தமிழ்நாட்டை
வளமாக்கத் தகுஞ்செயல்கள்
நன்றாற்றி நம்பெரியார் ஈ.வெ.ரா
முதுமைதனைக் கண்ட போதில்
தென்னாட்டில் தமிழகத்தில் இந்திஎனும்
புன்மொழியைத் தேசப் பேரால்
சென்னைமுதல் அமைச்சரவர் கட்டாயம்
ஆக்கிவிடத் திட்டம் செய்தார்! (1)
தாய்மீதில் விருப்பற்ற ஓரிளைஞன்
தன்னுழைப்பைத் தாய்நாட்டிற்கே
ஈயென்றால் மதிப்பானா? எதிரிமொழி
மதித்துயிரவைத் திருப்பான் பேடி!
தூயதமிழ் நாட்டில்செந் தமிழ்மொழியை
மன்றத்திந்தி தோன்றின் நாடே
தாயென்ற நிலைபோகும்! தமிழ்சாகும்!
இந்தியெனும் கனிமே லாகும்! (2)
ஈதறிந்த ஈரோட்டுத் தத்தாதாம்
ஓயாமல் எழுத்தி னாலும்
மோதியுணர் வலையெழுப்பி மக்களைத்தம்
வயப்படுத்தும் மொழியி னாலும்
தீதுவரும் இந்தியினால்! முன்னேற்றம்
தடையாகும்! தீந்த மிழ்க்கும்
ஆதரவு கிடைக்காமல் அழிவுவரும்!
இந்திஉயர் வாகும் என்றார் (3)
சிறுதுரும்பும் பற்குத்த உதவும் இந்த
இந்தியெனும் தீமை மிக்க
சிறுமொழியால் எட்டுணையும் பயனில்லை!
அதுவளர்க்கச் செலவழிக்கும்
பெரும்பணமோ தமிழர்களின் பணமாகும்;
படிக்கவரும் பெரும்பா லோர்தாம்
வெறும்பேச்சுப் பேசித்தம் வயிறடைக்கும்
வித்தைகற்ற மேலோர் என்றார்! (4)
ஆட்சிசெயும் முலமைச்சர் பார்ப்பனராய்
பேச்சுதனைத் தமிழகத்தில் வளர்த்துத்தீந்
தமிழ்கெடுக்கும் பெருவி ருப்பால்
சூழ்ச்சிசெய்தார்! இவ்வுண்மை தனையறிந்து
மக்களுக்குச் சொன்னார் தாத்தா!
‘சீச்சியிவர் துரோகி’ எனச் செந்தமிழ
ராய்ப்பிறந்தும் சிலர்ப ழித்தார். (5)
தூய்தமிழை வடமொழியாம் நச்சகற்றிக்
காப்பாற்றத் துடிக்கும் நெஞ்சு
வாய்ந்ததிருப் பாரதியார் (குறிப்பு 2) தலைமையிலே
கூடிநின்ற மிக்க ஆர்வம்
பாய்தமிழர் மாநாட்டை குறிப்பு 3. திருச்சியிலே
பார்த்தவர்கள் இதுதான் அந்தத்
தூய்மனத்தார் ஈரோட்டுத் தாத்தாவின்
நினைவொத்த தோற்றம் என்றார். (6)
கிளர்ச்சியினை அடக்கித்தம் இந்தியினைப்
புகுத்திவிடும் கீழ்மை யான
உளவுறுதி முதலமைச்சர்க் கிருப்பதனைத்
தமிழரெல்லாம் உணர்ந்த போதில்
தளர்ச்சியிலை எருமைத்தோல் இல்லையெமக்
கெனவுரைத்து ‘தமிழ்வாழ் கெ’ன்று
கிளர்ந்தெழுந்தார்! பெரியாரே தலைவரெனில்
வேறென்ன கேட்க வேண்டும்? (7)
இந்து-தியா லாசிகல் பள்ளிமுன்னும்
முதலமைச்சர் வீட்டு முன்னும்
செந்தமிழை மீட்பதற்குச் சேர்ந்தபடை
வீரரெலாம் சென்று நின்று
‘இந்தி விழ! தமிழ்வாழ்க!’ எனமுழங்கப்
பல்லடத்துப் பொன்னு சாமி
செந்தமிழைக் காவாமல் எனக்குணவு
செல்லாதென்றாணை யிட்டான்! (8)
தமிழ்காக்கும் வீரரைத்தண் டிக்கவில்லை
மற்றெவர்க்குத் தண்டிப் பென்றால்
எமைவீட்டின் எதிர்நின்று வசைமொழிந்த
தாற்செய்தோம் என்று சொன்ன
அமைச்சர்மொழி கேட்டபின்னர் ஈரோட்டுத்
தாத்தாஓர் அறிக்கை யிட்டார்;
தமிழர்களே! ‘இனிஅமைச்சர் வீட்டின்முன்
கிளர்ச்சியின்றித் தமிழ்காப்பீரே!’ (9)
தலைவர்சொல் பின்பற்றித் தமிழரெலாம்
ஒதுங்கிவிட்ட தன்மை கண்டும்
நிலைமையறி யாமல்ஒரு சிங்கத்தின்
எதிர்வாலை நீட்டி நின்று
அலைக்கழிக்கும் சிறுநரிபோல் உமையெல்லாம்
சிறைக்குள்ளே அடைக்க வல்லோம்!
இலை எம்மைத் தடுப்பவர்கள் எனுமமதை
அரசியலார்க் கேறிற் றன்றே! (10)
மமதையினைத் தமிழரிடம் காட்டுகின்ற
அரசியலை மட்டம் தட்ட
அமைத்தபடை வீரரொரு நூற்றுவரைத்
திருச்சியினின்றனுப்பி வைத்துத்
தமிழ்காத்துத் திரும்பிடுவீர் எனவாழ்த்துக்
கூறியந்தத் தமிழர் போற்றும்
தமிழ்தலைவர் ஈரோட்டுத் தாத்தாநற்
சென்னைக்குத் தாமும் சென்றார்! (11)
சென்னையிலே கடற்கரையில் மற்றுமொரு
கடல்வெள்ளம் சேர்ந்த தேபோல்
மின்னனைய மாதர்களும் ஆடவரும்
இளைஞர்களும் மிகுந்த ஆண்டு
சென்றவரும் தமிழ்காத்தார் எல்லோரும்
சேர்ந்திருந்து செயமு ழக்கம்
நின்றுகடல் செய்தஅலை ஓசையினும்
பெரிதாக நிறைந்த அன்றே! (12)
எழுபதினாயிரமக்கள் ‘தமிழ் வாழ்க’
‘ஒழிக இந்தி’ எனஒ லிக்கக்
கிழவரவர் எனினுமொரு இளைஞரென
முனைந்துதமிழ்க் கிளர்ச்சி செய்ய
எழுந்தனர் அங் கோர்மேடை தனிலேறி
நின்றாரவ் ஈரோட் டண்ணல்!
எழுந்ததுகாண் வீரத்தின் திருத்தோற்றம்
மனிதஉரு வெடுத்துக் கொண்டே! (13)
விழுந்துவிட்ட தமிழினத்தை விழித்துப்போர்
செயச்செய்த வீரப் பேச்சை
எழுந்துதமிழ்ச் சொற்களினால இளைஞர்களைத்
தட்டிவிட்ட இலக்கி யத்தைக்
கொழுந்துவிட்டுத் தமிழார்வம் இன்றெரியச்
செயஅன்றே கொளுத்தி விட்ட
செழுந்தமிழின் வீறாப்பைச் செவிமடுத்தோர்
உணர்வடைந்தார்! சிங்க மானார்! (14)
தாய்மொழியைக் காப்பாற்றத் துடிந்தெழுந்து
கிளர்ச்சிசெய்த தமிழ்ச்சிங் கங்கள்
ஆயிரத்தைந் நூற்றுவரை அரசியலார்
சிறைகூடத் தடைத்து வைத்தார்
நோயிருந்தும் தாளமுத்து நடராசர்
தமிழ்க்குற்ற நோயை நீக்கப்
போய்ச்சிறையில் உயிர்விட்டார் அரசியலார்
கைவிட்டார் பொருமிற் றுள்ளம் ! (15)
மறைமலையார் தமிழ்களித்த திருநீலாம்
பிகைமுதலாய் மாத ரெல்லாம்
நிறை “தமிழ்நாட் டுப்பெண்கள் மாநாட்”டில்
கூடிநின்றோர் (குறிப்பு 4.) நெஞ்சில் பாய
இறைத்துவிட்ட தாத்தாவின் சொல்வெள்ளம்
உணர்வெழுப்ப எங்கும் பெண்கள்
சிறைபுகுதற் கஞ்சாமல் கிளர்ந்தெழுந்த
வரலாறோ சிலம்புக் காதை! (16)
தாத்தாவைச் சிறையிலிட்டுத் தமிழர்களை
எளிதாகத் தாம்அ டக்கப்
பார்த்தார் அவ்வரசியலார் பயனில்லை!
தமிழகத்தைப் பாரதத்தில்
சேர்த்தாளும் முறைமையினால் தமிழழிக்கப்
பகைசூழ்ச்சி செய்த தாய்ந்து
தாத்தாசெந் “தமிழ்நாடு தமிழர்க்கே”
எனுந்திட்டம் தமிழர்க் கீந்தார். (17)
தமிழரெலாம் மாநாடு கூட்டிஅதில்
சிறையிருக்கும் தாத்தா வைப்போல்
அமைந்தஉரு வம்தலைவ ராகப்பன்
னீர்செல்வம் அருகு வந்தார்.
சுமைசுமையாய் மறவரெலாம் தமக்கிட்ட
மாலைகளைத் தூக்கி வந்து
எமதுபெருந் தலைவரே! என்றடிபணிந்து
மாலைபடைத் தெழுந்தார் செல்வம்! (18)
மலைபோலும் மலர்மாலை தனைப்பன்னீர்
செல்வம்அவர் மதிப்பு வாய்ந்த
தலைவர்சிலை முன்படைத்த போதிலங்குக்
கூடிநின்றோர் தாத்தா உள்ள
நிலைநினைந்தார் உளம்நொந்தார்! அருவிஎனக்
கண்களினால் நீர்பொழிந்தார்!
தலைவணங்கிப் ‘பெரியாரே தலைவர்’ என
உறுதிசொன்னார் தமிழ்நாட் டிற்கே (குறிப்பு 5.) (19)
சில பாடல்கள் விடப்பெற்றன; சிலவேறிடத்தில் வந்துள்ளன.
(ஐ) பெரியாரின் சிந்தனைகள்: இவற்றில் சிலவற்றைக் காண்போம். அவை பல்வேறு இடங்களில் பேசிய பேச்சிலும் பல்வேறு ஏடுகளில் எழுதிய கட்டுரைகளிலுமிருந்து தொகுத்த இந்தி எதிர்ப்பு பற்றியவை.
(1) கட்டாய இந்தித் திட்டம் நமது கலைகளுக்கு விரோதமாகப் பார்ப்பனர் மதத்தையும் கலைகளையும் பலப்படுத்தி வித்தரிக்கும் ஒரு குறுகிய நோக்குள்ள திட்டமாகுமென்று நான் அபிப்ராயப்படுவது போன்றே சனாப் சின்னாவும், டாக்டர் அம்பேத்காரும் அபிப்பிராயப்பட்டனர்.
(2) நம்முடைய நாடு தமிழ்நாடு. நாம் பேசும் மொழி தமிழ். இதில் ஆட்சி செலுத்த வேண்டுமென்று முயன்ற பின்பு இந்தி எதற்காகப் படிக்க வேண்டும்? எங்களுடைய நாட்டிலே எங்களுடைய ஆட்சியில் உட்கார்ந்து கொண்டு ‘இந்தி படி?’ என்றால் அஃது எப்படி எங்கள் அரசு ஆகும்.
(3) தமிழ்மொழி நம்முடைய தாய் மொழி; அது மிகவும் உயர்ந்த மொழி; அஃது எல்லா வல்லமையும் பொருந்திய மொழி; சமயத்தை வளர்க்கும் மொழி; பழமையின் மொழி; உலகத்திலேயே சிறந்த மொழி என்று சொல்லப் பெறுகின்ற காரணத்தால் நான் இந்தியை எதிர்த்துப் போராடவில்லை. தமிழுக்கு ஆபத்து வரக்கூடாது என்று நினைக்கிறேன் என்றால் தமிழைவிட இந்தி மோசமான மொழி; தமிழைவிட இந்தி எந்தவிதத்திலும் மேலான மொழி அல்ல; தமிழைவிட இந்தி கீழான மொழி; தமிழுக்குப்பதில் நமக்கு இந்தி வரத்தகுதியற்றது; இந்தி வருவது நன்மை அல்ல என்ற காரணத்திற்காகத்தான்.
(4) அரசு நடந்து கொள்ளும் போக்கில் இந்தியைக் கட்டாயமாக்குவதும், அதை அரசியல் மொழியாக்குவதும் அலுவல் தகுதிக்கு இம்மொழிப் பாண்டித்தியத்தைச் சேர்ப்பதும் திராவிட மக்களை வம்புச் சண்டைக்கு இழுக்கும் அகம்பாவ ஆணவக் காரியமாகும்.
(5) எப்படியாவது இந்தியை ஒழித்துக்கட்ட வேண்டும். அது காட்டுமிராண்டிமொழி. அதற்காகவே அதை வலியுறுத்துகிறார்கள் பார்ப்பனர்கள். இந்தியைவிட மேம்பட்ட மொழி தமிழ் என்பதற்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எனது இந்தி எதிர்ப்புத் தமிழுக்காக அல்ல.
(6) தமிழ் இலக்கியங்களினால் நாம் மூட நம்பிக்கைக்காரர்களாகி விட்டோம். இந்தி வந்தால் நாம் காட்டுமிராண்டிகளாவோம்.
(7) மொழி கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்குத் தேவையானதேயொழிய பற்றுக்கொள்வதற்கு அதில் என்ன உள்ளது? இந்தி தமிழ் நாட்டையும் தமிழனையும் வடநாட்டானுக்கும் பார்ப்பானுக்கும் அடிமைப்படுத்துவதற்கே தவிர அதனால் வேறு பயன் என்ன?
(8) இந்தியை மற்றவர்கள் எதிர்ப்பது எந்தக் காரணத்தைக் கொண்டிருந்தாலும் என்னைப் பொறுத்தவரை சமுதாயத்தைக் கெடுத்து நம் மக்களுக்கு நஞ்சைக்கொடுத்து நமது சமுதாயத்தை முன்னேற்றமடையச் செய்யாமல் அது தடுக்கிறது என்பதாகும்.
(9) சமசுகிருதத்திற்குப் பதிலாக இந்தியைக் கட்டாயமாகப் புகுத்துவதும், இந்தி வேண்டா என்றால் அது பிரிவினைக்கு ஒப்பாகும் என்பதுமாக இருந்தால் இதற்குப் பயந்துகொண்டு இருப்பவர்கள் சமுதாயத்தைக் காட்டிக்கொடுக்கும் துரோகியாகத்தானே இருக்கவேண்டும்.
(10) இந்திமொழியைத் தென்இந்தியர் (தமிழர்) நல்லவண்ணம் தயவுதாட்சணியமின்றி வெறுக்கத் துணியவேண்டும். கெட்ட வற்றின் மீது வெறுப்பு ஏற்பட்டவரையில்தான் மனிதன் யோக்கியனாக இருக்கமுடியும். இந்தி தமிழனுக்குப் பெருங்கேடு விளைவிக்கக்கூடியது. அது காட்டுமிராண்டிமொழி; நமக்குள் வடமொழியையும் வடவர் ஆதிக்கக் கொள்கையும் புகுத்தும் மொழி.
(11) என்னைப் பொறுத்தவரையிலும் இந்தியைப் பற்றிக் கவலை இல்லை; தமிழைப்பற்றிப் பிடிவாதமும் இல்லை.
(12) அலுவலுக்கு இந்தி ஒரு யோக்கியதையாய் வந்துவிட்டால், நம்மவர்கட்குப் பழையபடி பங்கா இழுப்பதும் பில்லைப்போட்டுக்கொள்வதுமான வேலைதான் கிடைக்கும்.
தந்தை பெரியாரின் நீண்டகாலப் பிரச்சாரபலத்தால் காங்கிரசு ஆட்சி அகற்றப்பட்டது; இதனால் ‘இந்திக்கரடிபுகும்’ என்ற அச்சமும் அகன்றுவிட்டது. அண்ணா ஆட்சி அமைவதற்குப் பெரியார் ஆசியே காரணமாக அமைந்தது. அதனால் இருமொழிக்கொள்கை அமுலுக்கு வந்தது. இனி இந்தி அரசு மூலம் வராது. வேண்டுவோர் படித்துக் கொள்ள பல அமைப்புகள் உள்ளன. ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதால் பயன் இருக்கத்தான் செய்யும்.
சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’
பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்),
தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம்,
சென்னைப் பல்கலைக் கழகம்
(தொடரும்)
குறிப்பு 1. சக்கரவர்த்தி இராசகோபாலாசாரியார்
குறிப்பு 2. பசுமலை நாவலர் ச. சோமசுந்தர பாரதியார்
குறிப்பு 3. 1937 திசம்பர் 26இல் கூட்டப்பெற்ற ‘தமிழர் மாநாடு’
குறிப்பு 4. நவம்பர் 13, 1835இல் கூட்டப்பெற்றது.
குறிப்பு 5. ஈரோட்டுத்தாத்தா-தமிழ்காத்தபோராட்டம் (காண்க)
Comments
Post a Comment