Skip to main content

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 50

 அகரமுதல




(அகல் விளக்கு – மு.வரதராசனார். 49. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 21

பி.ஏ. தேர்வு நன்றாகவே எழுதி முடித்தேன். நல்ல வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. மாலன் அவ்வளவு நம்பிக்கையோடு பேசவில்லை. மூன்றாம் பகுதியைப் பற்றிக் கவலைப்பட்டான். “நீ எப்போதும் இப்படித்தான். உனக்கு எத்தனையோ நம்பிக்கைகள் உண்டு. உள்ளதைச் சொல்ல மாட்டாய்” என்றேன்.

“உனக்கு ஒரு நம்பிக்கையும் இல்லையா?” என்றான்.

உழைப்பில் நம்பிக்கை உண்டு. அறத்தில் நம்பிக்கை உண்டு.”

“கூடிய வரையில் உழைக்கிறோம். எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் சொல்வது?”

“ஒன்று. நம் உழைப்பிலேயே ஏதாவது குறை இருப்பதாகக் கருதவேண்டும். அல்லது, உலகம் ஏமாற்றிவிட்டதாகக் கருதவேண்டும்.”

இப்படிப் பேசிக்கொண்டே புத்தகம், படுக்கை முதலியவற்றைக்  கட்டி ஒழுங்கு செய்தேன். விடுதியை விட்டுப் புறப்பட்டபோது வருத்தமாக இருந்தது. அடுத்த ஆண்டில் எம்.ஏ. வகுப்பில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒரு புறம் இருந்தபோதிலும், வேண்டா என்று தந்தையார் தடுத்து நிறுத்திவிட்டால், இனி விடுதி வாழ்க்கை ஏது என்று வருந்தினேன். உள்ளத்தில் விடுதிக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டேன். வழக்கம்போல் மாலனும் நானும் ஒன்றாகவே பயணம் செய்தோம். அரக்கோணத்தில் அவன் பிரிந்தான். பிரிந்தபோது, “நம்முடைய மாணவ வாழ்க்கை இன்றோடு முடிந்தது” என்றான். “ஆனாலும் நாம் என்றும் நண்பர்களாக இருக்கவேண்டும்” என்று சொல்லி விடைபெற்றேன்.

படிப்பு முடிந்ததும் விடுதலையுணர்ச்சி ஏற்படும் என்று அதற்குமுன் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், அதற்கு மாறாக, அதுவரையில் இருந்த உரிமை வாழ்வு குறைவது போல் உணர்ந்தேன். வீட்டில் தங்கையின் திருமணம் பற்றிய பேச்சு மிகுந்திருந்தது. அதைப்பற்றிப் பேசியபோது தாயின் முகத்தில் கவலை இருந்தது. தந்தையின் முகத்தில் என்றும் இருந்த கவலை அப்போது மிகுதியாகத் தோன்றியது. சென்னையிலிருந்து ஒரு குடும்பத்தார் வந்து பெண் கேட்டார்களாம்.

பிள்ளை எம்.ஏ. படித்த பிள்ளையாம். ஒரு வீடு சென்னையில் வாங்கி எழுதி வைத்து கையில் ஐயாயிரம் கொடுத்து, திருமணச் செலவும் செய்ய வேண்டுமாம். குடும்பத்தையே விற்றாலும் அவ்வளவு செலவு செய்யமுடியாது என்று தந்தையார் வருந்தி அனுப்பிவிட்டாராம். வேலூரிலிருந்து இன்னொரு குடும்பத்தார் வந்தார்கள். பிள்ளை பி.ஏ. படித்தவனாம். பத்தாயிரம் உரூபாய் கொடுத்துத் திருமணம் நடத்தி வைக்கவேண்டும் என்றார்களாம், அதுவும் முடியாது என்று தந்தையார் மறுத்துவிட்டாராம். சேலத்திலிருந்து ஒரு குடும்பத்தார் வந்து, பணம் கேட்காமல் பெண் கேட்டார்களாம். பிள்ளை இண்டர் படித்தவராம். ஆனாலும், முதல் மனைவி இறந்து இது இரண்டாம் திருமணமாக இருப்பதால் தாய் விருப்பம் இல்லாமல் மறுத்துவிட்டாராம்.

கடைசியில் பத்தாவது படித்துப் பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருவரின் குடும்பத்தார் வந்து பெண் கேட்டார்கள். பணம் ஒன்றும் தேவையில்லை என்றும், எளிய முறையில் திருமணம் செய்து வைத்தால் போதும் என்றும் கூறினார்கள். பெண்ணும் பத்தாவது படித்தவள் அல்லவா என்று அம்மா கொஞ்சம் தயங்கினார். “பையனை நான்கு ஆண்டுகள் விடுதியில் சேர்த்துக் கல்லூரியில் படிக்க வைத்ததற்கே எவ்வளவோ செலவு ஆயிற்று. சின்ன மளிகைக் கடையில் எவ்வளவுதான் நான் ஒருவன் சம்பாதிக்க முடியும்? பி.ஏ., எம்.ஏ., பார்த்துப் பத்தாயிரம் பதினைந்தாயிரம் கொடுக்க என்னால் முடியாது. நீங்கள் எப்படியாவது போங்கள்” என்று அப்பா தம் உள்ளத்தின் குமுறலை எடுத்துரைத்த போது அம்மா பேசாமல் இசைந்துவிட்டார்.

படித்த மாப்பிள்ளை வீட்டாரின் இரக்கமற்ற பண வேட்டையையும் பெண்ணைப் பெற்ற பெற்றோரின் மனவேதனையையும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், என் குடும்பத்திலேயே இந்த அனுபவத்துக்கு ஆளானபோது, உலகப் போக்கை மிக மிக வெறுத்தேன். படிப்பு எங்கே? பண்பு எங்கே? அழகுக்கு அழகு; அறிவுக்கு அழகு; அன்புக்கு அழகு என்று விலை போகும் கொடுமையை நன்றாக உணர்ந்தேன். சான்றோர்கள் நூற்றுக்கணக்காகப் பிறந்த நாடு, உயர்ந்த நூல்கள் பற்பல தோன்றிய நாடு, கோயில்களும் அறநிலையங்களும் மலிந்த நாடு என்று பெருமை பேசிக்கொள்கிறோம்.

தொன்றுதொட்டே இந்த நாடு ஒன்றுதான் பாரமார்த்த நாடு என்றும், மற்ற நாடுகள் இன்று வரையில் உலகாயதப் போக்கிலேயே உழன்று வருகின்றன என்றும் மற்ற நாடுகளைக் குறை கூறிப் பெருமை கொள்கிறோம். ஆனால், படித்த இளைஞர்களும் பண்புள்ள அழகிகளும் பணத்துக்காக விலைபோகும் கொடுமை வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மலிந்துள்ளதாகக் கூறமுடியாது.

திருமணக் காலங்களில் குடும்பங்களில் நடக்கும் பேச்சைச் செவிக்கொடுத்துக் கேட்டால் இந்த நாட்டிற்கு ஆத்துமீகத் தொடர்பு மிகுதி என்று சொல்வதற்கு வாய் கூசும். இவ்வாறு எண்ணிக் கொதித்த என் மனத்தில் கோயில்களும் பணத்துக்குத் தக்கவாறு மூர்த்தியின் பெருமையும், பணம் கொடுப்பவர்களின் பெருமைக்கு ஏற்றவாறு அவர்களுக்கு அங்கே தரப்படும் சலுகைகளும் சிறப்புகளும், மடங்களிலும் மற்ற அறநிலையங்களிலும் பணத்துக்கு வரவேற்பு அமைந்துள்ள சிறப்பும் பெருமையும் ஆகிய எல்லாம் நினைவுக்கு வந்தன.

எப்படியோ என் தங்கை மணிமேகலையை ஏழை ஆசிரியர் ஒருவர்க்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கு முடிவு ஆயிற்று. அடுத்து, என் பேச்சு வந்தது. இனிமேல் படிக்க வைக்க முடியாது என்பதை அப்பா தெளிவாக்கி விட்டார். முன்பின் தெரியாத குடும்பத்துப் பெண்ணைக் கொண்டுவந்து மருமகளாகக் கொண்டால், இந்த ஏழைக் குடும்பம் என்ன ஆகுமோ, தெரிந்த வீட்டில் வேலூரில் உள்ள பெண்ணே நமக்குப் போதும் என்ற கருத்தையும் தெரிவித்தார். அம்மா ஒன்றும் கூறாமல் அமைதி ஆனார். நானே அம்மாவிடம் என் தயக்கத்தைச் சொன்னேன்.

“அத்தை மகள் என்பது ஒன்றுதான் குறை; பெண்ணைப் பொறுத்த வரையில் வேறு குறை இல்லை. மற்ற எல்லாப் பொருத்தமும் இருந்து ஒரு குறை இருந்தால் இருந்து போகட்டும்” என்றார். “வாய் துடுக்கு அல்லவா அம்மா?” என்றேன். “சின்ன வயதில் அப்படி இருந்தாள். இப்போது இல்லை. தவிர, நாம் புது உறவு தேடிப்போனால், அங்கே அந்தப் பெண்ணைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? இயற்கையாகவே வாய் துடுக்காக இருந்தாலும் முதலில் அடக்கமாகப் பழகுவாளே, அப்போது ஏமாறுவோம் அல்லவா,” என்றார். வேறு வழி இல்லைபோல் தோன்றியது. “தேர்வு முடிவு தெரியட்டுமே” என்றேன். “அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. இரண்டு திருமணமும் ஒன்றாக நடந்தால் செலவு குறையும்” என்றார்.

கல்லூரியில் படித்த காலத்தில், அது ஓர் அறை என்றும், படித்து முடித்த பிறகு புகும் உலகம் திறந்தவெளி என்றும் கற்பனை செய்து கொண்டிருந்தேன். தங்கையின் திருமணப் பேச்சும் என் திருமணப் பேச்சும் அவற்றை ஒட்டிய சிக்கல்களும் எனக்கு உண்மையை உணர்த்தின. நான் இதுவரையில் இருந்ததுதான் திறந்தவெளி என்றும், இப்போது புகும் வாழ்க்கைதான் புழுக்கம் மிகுந்த அறை என்றும் உணர்ந்தேன்.

என் கவலையையும் சோர்வையும் பாக்கிய அம்மையார் உணர்ந்து கொண்டார். “கயற்கண்ணியைவிட நல்ல பெண்ணாக, தெரிந்த பெண்ணாக, இருந்தால் சொல், நானே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சொல்லி ஏற்பாடு செய்வேன்” என்றார்.

சொல்லத் தெரியாமல் விழித்தேன்.

“தங்கையைப் பற்றி நீ கவலைப்பட்டுப் பயன் இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று திருவள்ளுவர் அந்தக் காலத்திலேயே சொன்னாரே” என்றார்.

திருக்குறளை மேற்கோளாகச் சொன்னவுடன் எனக்கு வியப்பாக இருந்தது. அந்த அம்மையாரின் படிப்பு திரு.வி.க நூல்களிலிருந்து திருவள்ளுவர் வரையில் போய் விட்டதே என்று வியந்தேன். ஏதாவது மறுமொழி சொல்லியாக வேண்டுமே என்று, “இன்னும் கொஞ்ச காலம் பொறுக்கலாமே” என்றேன்.

“பொறுப்பதால் பயன் இல்லையே; தங்கைக்கு வயது பதினெட்டு ஆகிவிட்டது. இனிமேல் பொறுத்தால் மட்டும் நல்ல மாப்பிள்ளையாகக் கிடைப்பானா? வயது ஆக ஆக மாப்பிள்ளை வருவது குறையும். படிப்பும் பணமும் இருந்தால், அல்லது பணம் மட்டும் இருந்தாலும் சரி, முப்பது வயது வரையில் பொறுத்திருக்கலாம். வாழ்க்கையில் செல்வாக்கு இருந்தால், அதற்கு மேலும் பொறுத்திருக்கலாம். நம்மைப் போன்றவர்கள் பொறுத்திருப்பதால் பயன் இல்லையே.”

“தங்கைக்கு அல்ல, எனக்குச் சொல்கிறேன்.”

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்