Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 26

 அகரமுதல




(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 25 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்

அத்தியாயம் 10 தொடர்ச்சி

 

திருநாவுக்கரசுக்குப் பள்ளிக்கூடப் படிப்பின் கடைசி ஆண்டாக இருந்ததனால் படிப்புச் செலவு சிறிது மிகுதியாயிருந்தது. இப்பொழுது துன்பங்களைப் பெரிதாக நினைத்து அழுந்தி அலைபடுவதே இல்லை அவள். குறைவிலும் நிறைவாக இருக்கிற இரகசியத்தை அரவிந்தன் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தான்.

அன்றைக்கு வெள்ளிக்கிழமை. மங்கையர் கழகத்தில் நல்ல கூட்டம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அதில் எல்லாரும் கலந்து கொண்டு சொற்பொழிவைக் கேட்கலாம். பூரணி அன்று ‘திலகவதியார் சரித்திரம்’ பற்றிப் பேசினாள். அன்றைய தினம் அவள் மனம் பேசவேண்டிய பொருளில் பரிபூரணமாக ஆழ்ந்திருந்தது. சிறுவயதிலேயே இந்தச் சரித்திரங்களையெல்லாம்பற்றிக் கதை கதையாக அவளுக்குச் சொல்லியிருக்கிறார் அப்பா. திலகவதியாருடைய சரித்திரத்தைக் கேட்கும்போதெல்லாம் அவள் மனம் இளகி அழுதிருக்கிறாள். பிற்காலத்தில் அவளுக்கு வயதானபின் சேக்கிழாருடைய கவிதைகளிலிருந்து அப்பா திலகவதியின் காவியத்தை விளக்கிக் கூறியிருக்கிறார். சிறுமியாக இருந்தபோது கதையாகக் கேட்டிருக்கிற அதே வரலாற்றைக் காவியமாகக் கற்றபோதும் அவள் அதிகமாகத்தான் உருகினாள். அப்பா சொல்லியிருக்கிறார் ‘உலகத்திலேயே பெரிய சோகக்கதை இதுதான் அம்மா! இந்தத் திலகவதி என்ற பெண்ணின் கதையைச் சேக்கிழார் எழுத்தாணியால் ஏட்டில் எழுதியிருக்க மாட்டார் பூரணி. ஏட்டில் எழுதுமுன் மனத்தில் இந்தப் பெண்ணைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் கண்ணீரால் பலமுறை எழுதி எழுதி அழித்திருப்பாரம்மா அவர். ஒரு பெண்ணால் தாங்க முடியாத ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்தவள் திலகவதி. உடலால் செத்துப் போய்க்கொண்டே உள்ளத்தால் வாழ்கின்ற இந்த மாதிரி புனிதப் பெண் தமிழ்நாட்டில் தான் அம்மா பிறக்க முடியும். இந்தத் தமிழ் மண்ணில் அந்தப் பழைய புண்ணியம் இன்றும் மணத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான் சில நல்ல காரியங்களாவது இன்னும் இந்த மண்ணில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.’ இந்த வாக்கியங்களை அப்பாவின் வாயிலாகக் கேட்கும்போது தனக்கு முன் சேக்கிழாரின் புத்தகம் விரிந்து கிடப்பதை மறந்து விடுவாள் பூரணி. மாலை மாலையான கண்ணீர் வடியும் அவள் கண்களில். கேட்டுக் கேட்டுக் கற்றுக் கற்று அனுபவித்து உணர்ந்த இந்தச் சோக அனுபவம் அன்று அவள் பேசிய பேச்சில் முழுமையாக எதிரொலித்தது. பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் மனமுள்ள இளகியவர்களுக்குக் கண்களில் ஈரம் கசிந்துவிட்டது.

“திருவாரூரின் அழகிய வீதி ஒன்றில் ஒரு வேளாளர் வீடு, பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சி. அந்த வேளாளர் வீட்டில் இளமை அழகு மொட்டவிழ்ந்த முழுமலராய் ஒரு பெண். முல்லை நகை, முழுமதி முகம், மின்னல் நிற உடல், மணப் பருவம், வலது கையில் தம்பியைப் பிடித்துக் கொண்டு அவள் தன் வீட்டு வாயிலில் நிற்கிறாள். அழகு மலர்ந்து அனுபவமிக்கக் கவிதைகளைத் தேடும் கருவண்டுக் கண்களாலேயே பார்த்துக் கொண்டு நிற்கிறாள் அந்தப் பெண். கண்களில் எவருடைய வரவையோ தேடுகிற ஆவல். பக்கத்தில் பால்வடியும் முகத்தோடு நிற்கும் சிறுவனாகிய அவள் தம்பிக்கு அக்காவின் ஆவலுக்குக் காரணம் விளங்க முடியாதுதான். யாரோ பல்லக்கில் வந்து இறங்குகிறார்கள். உள்ளே போய் அந்தப் பெண்ணின் பெற்றோர்களிடம் பேசிவிட்டுப் போகிறார்கள். சிறிது நேரம் கழித்து தந்தை வந்து சொல்கிறார்:

“திலகவதி! சோழநாட்டுத் தளபதி கலிப்பகையார் உன்னை மணந்து கொள்வதற்கு விரும்புகிறாராம். மணம் பேச வந்தார்கள். நான் இணங்கிவிட்டேன். நீ பெரிய பாக்கியசாலி, அம்மா. ஒரு நாட்டின் வீரத் தளபதியே உன்னை விரும்பி மணக்க வருகிறார்.”

திலகவதி நாணத்தால் முகம் கவிழ்த்துக் கொண்டு ஓடி விடுகிறாள். அக்கா ஏன் இப்படி முகம் சிவக்க ஓடுகிறாள் என்பதும் அந்தத் தம்பிக்குப் புரியவில்லை. காலம் ஓடுகிறது. தாய், தந்தையர்கள் இறந்து போகிறார்கள். விதி பொல்லாதது. முன்பு பேசியபடி திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. திலகவதி உள்ளமெல்லாம் பூரித்து நினைவெல்லாம் கனவாக, கனவெல்லாம் இன்பமாக, மண அழகு பொழியும் கோலத்தோடு இருக்கிறாள். அந்தச் சோழநாட்டு வீரத்தளபதியின் அழகு முகம், திரண்ட தோள்கள், பரந்த மார்பு எல்லாவற்றையும் அவள் கண்கள் கற்பனை செய்து கனவு கண்டு களித்துக் கொண்டிருந்தன. அழித்து அழித்து மேலும் நன்றாகப் போடும் கோலம்போல அவள் மனம் வரப்போகிற கணவனின் அழகை நாழிகைக்கு நாழிகை அதிகமாக்கி, வளர்த்து எண்ணிக் கொண்டிருந்தது. அந்த அழகன் வரவில்லை. செய்தி வந்தது. சோழநாட்டுத் தளபதி போரில் மாண்டு போனாராம். திலகவதி குமுறிக் குமுறி அழுதாள். கனவுகளில் பார்த்துக் கண்ணால் பார்க்காத அந்தக் கணவனுக்காக அழுதாள். அழுதழுது உயிர்மூச்சுக் காற்றையே விட்டுவிட நினைத்தாள். இனி என்ன இருக்கிறது வாழ? ‘அக்கா நான் இருக்கிறேனே, எனக்காக வாழுங்கள்’ என்று கெஞ்சினான் தம்பி. வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் சந்தனக் கட்டைபோல் விதியின் கைகளில் அறைபட்டாள் திலகவதிஅந்த வாழ்வில் மணம் பிறந்தது. அவளுக்கு மணம் கிடைக்கவில்லை. ஆனால் மணம் பெறாத அந்த வாழ்வு உலகத்துக்கெல்லாம் தெய்வீகத் திருமணம் நல்கிற்று. காவியமாய் உயர்ந்தது, கவிதையாய் எழுந்தது.”

இந்தச் சொற்பொழிவை உணர்ச்சிகரமாகச் செய்து முடித்தாள் பூரணி. சந்தனத்தைத் தொட்டுவிட்ட பிறகு கழுநீரிலே கை தோய்ப்பதுபோல் மங்களேசுவரி அம்மாவின் மூத்த பெண் வசந்தா இந்தப் பேச்சைக் கேட்டு விட்டுப் பூரணியை ஒரு கேள்வி கேட்டு மடக்கினாள்:

“திலகவதிக்கும், கலிப்பகையாருக்கும் மணம்தானே பேசினார்கள்? அவர் இறந்தால் இவள் ஏன் வேறு கணவனுக்கு வாழ்க்கைப்படக் கூடாது?”

“நீ இன்றைய நாகரிகம் பேசுகிறாய் வசந்தா! ஒருவனைக் கணவனாக மனத்தில் நினைக்கும்போதே, அவனுக்கு வாழ்க்கைப்பட்டு விடுவார்கள் இந்த நாட்டுப் பெண்கள். ‘அனிச்சம் பூப்போல அவர்களுடைய வாழ்வு மெல்லியது’. அதற்கு ஒரு நுகர்ச்சிதான் உண்டு. அந்த நுகர்ச்சியோடு அது வாடி விடுகிறது” – என்று பூரணி பதில் கூறியதும் மற்றவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். வசந்தாவுக்கு முகத்தில் கரி பூசினாற் போல் ஆகிவிட்டது. அன்று தன்னுடைய சொற்பொழிவு பலபேருடைய உள்ளத்தில் புகுந்து வேலை செய்திருக்கிறதென்பதைக் கூட்டம் முடிந்ததும் அவர்கள் தன்னைச் சூழ்ந்து கொண்டு பாராட்டிய பாராட்டுரைகளிலிருந்து தெரிந்து கொண்டாள் பூரணி. ‘அப்படியே உணர்ச்சிகளைப் பிசைந்தெடுத்துவிட்டீர்களே அக்கா’ என்று மங்களேசுவரி அம்மாளின் இளைய பெண் செல்லம் பாராட்டினாள். பூரணி அந்தப் பாராட்டு வெள்ளத்தில் திணறிக் கொண்டிருந்தபோது, “காரியதரிசி அம்மா மேலே மாடியிலே இருக்கிறாங்க, உங்களைக் கூப்பிடுறாங்க” என்று மங்கையர் கழகத்து வேலைக்காரப் பெண் வந்து அழைத்தாள். பூரணி எழுந்து சென்றாள். அவள் நடையில் ஒரே பெருமிதம் தோன்றியது.

“இதுவரை இப்படிச் சொற்பொழிவு நான் கேட்டதில்லை பூரணி” என்று காரியதரிசியாகிய அந்தம்மாள் மங்கையர் கழகத்து நிருவாகிகள் சார்பில் தன்னைப் பாராட்டப் போவதைக் கற்பனை செய்துகொண்டே மாடிப்படிகளில் ஏறினாள் பூரணி. மனதுக்குள் புகழின் படிகளில் ஏறுவது போல் ஓர் இன்பப் பிரமை எழுந்தது.

காரியதரிசியின் அறைக்குள் தான் நுழைந்தபோது அந்த அம்மா ‘வா’ என்று கூடச் சொல்லாதது ஒரு மாதிரிப் பட்டது பூரணிக்கு. வழக்கமாகச் சிரிக்கும் சிரிப்புக்கூட அந்த அம்மாள் முகத்தில் இல்லை. பூரணி நின்றாள். மரியாதைக்காக, ‘உட்கார்’ என்று கூடச் சொல்லவில்லை காரியதரிசி. பூரணி திகைத்தாள்.

“இந்தா! இந்தக் கழகத்தில் இதுவரை யாருக்கும் எதைப் பற்றியும் இந்த மாதிரியெல்லாம் கன்னாபின்னாவென்று மொட்டைக் கடிதம் வந்ததில்லை. நீ என்னவோ புனிதம், பண்பு, ஒழுக்கம் என்று பேச்சில்தான் முழங்குகிறாய், நடத்தையில் ஒன்றும் காணோம். போதாக்குறைக்கு இங்கேயே சிலர் உன்னைப் புகழுகிறார்கள். இதெல்லாம் அவ்வளவு நல்லதில்லை.”

சொல்லிவிட்டு ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினாள் அந்த அம்மாள். அதைச் சிறிது படித்ததுமே பூரணிக்கு உள்ளம் துடித்தது. “கடவுளே! நீ பாவிகள் நிறைந்த இந்த உலகத்தைப் படைத்ததற்காக உன்னை நான் ஒரு போதும் மன்னிக்க முடியாது. இந்த உலகில் இவர்களிடையே நானும் ஒருத்தியாக இருப்பதற்காக நீ என்னை மன்னித்துத்தான் ஆகவேண்டும்” என்று குமுறினாள் அவள்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்