Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 24

 அகரமுதல






(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 23 தொடர்ச்சி)


குறிஞ்சி மலர்
அத்தியாயம் 10

 உடல்குழைய என்பெலாம் நெக்குருக
விழிநீர்கள் ஊற்றென வெதும்பி ஊற்ற
ஊசி காந்தத்தினைக் கண்டணுகல் போலவே
ஓர் உறவும் உன்னியுன்னிப்
படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற…
      — தாயுமானவர்


இயல்பாகவே அரவிந்தனுக்கு மென்மையும் நளினமும் இணைந்த உடம்பு வாய்த்திருந்தது. எந்த இடத்திலாவது இலேசாகக் கிள்ளினால் கூட இரத்தம் வருகிற உடம்பு அது. உரோஜாப்பூவின் மென்மையும் சண்பகப் பூவின் நிறமும் கொண்ட தேகம் அவனுடையது. அந்த உடலில் வலிமை உண்டு. ஆனால் முரட்டுத்தனம் கிடையாது. அழகு உண்டு; ஆடம்பரம் கிடையாது. பள்ளிக்கூடத்தில் படிக்கிற நாளில் ஆசிரியர் சற்று அழுத்திக் கொட்டி விட்டால் கூடச் சில்லுமூக்கு உடைந்து இரத்தம் வந்துவிடும் அவனுக்கு. அவ்வளவு மென்மையான உடல் அவனுடையது.

அன்று தன் வீட்டில் புது மண்டபத்து முரட்டு மனிதனிடம் அரவிந்தன் வாங்கிய அறை தன் முகத்திலேயே விழுந்தது போல் உணர்ந்து, வெதும்பித் துடித்தாள் பூரணி. விழிகளில் நீரரும்பித் துக்கம் ஊற்றெடுத்து வர நெஞ்சம் பதைத்தது. உள் நடுங்கி நின்றாள் அவள். காந்தத்தில் இணையும் ஊசி போல் அவன் அறை வாங்கிய வலியின் வேதனையில் பங்கு கொள்வதற்காக அவள் மனம் விரைந்து அந்த வேதனையில் போய் இணைந்தது.


“நீங்கள் எதற்கு அழுகிறீர்கள்? அரிச்சந்திரனுடைய தலைமுறையில் உண்மையைச் சொன்னால் கழுத்தில் மாலை விழுந்திருக்கலாம். நீங்களும் நானும் வாழும் தலைமுறையில் உண்மையைச் சொன்னால் கன்னத்தில் அறை விழுகிறது. கூடிய வரை உண்மைகளைச் சொல்லிவிடக் கூசிக் கொண்டு சும்மா இருந்து விடுவதுதான் இன்றைக்கு நாகரிகம். உண்மையைச் சொன்னால் பெருமைப்பட்ட காலம் போய்விட்டது. இப்போதெல்லாம் உண்மைகளைச் சொன்னால் யாரைப் பற்றிய உண்மையோ, அவர்களுக்கும் கோபம் தான் வருகிறது” என்று அவளிடம் கூறினான் அரவிந்தன். அடித்தவர் நின்று கொண்டிருக்கவில்லை. கோபத்தோடு வெளியேறிச் சென்று விட்டார். மிகச் சில விநாடிகளே அரவிந்தனின் முகத்தில் மலர்ச்சி இழந்த நிலையைக் கண்டாள் அவள். நீர் கிழிய எய்த வடுபோல் அந்த நிலை அப்போதே மாறி இயல்பான தோற்றத்துக்கு அவன் வந்ததையும் உடனே கண்டாள்.

பூரணி செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். சில்லுமூக்கு உடைந்து குருதி வடிந்திருந்த மூக்கைக் கழுவிக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான் அவன். அப்படிக் கழுவித் துடைத்த போதே சினத்தையும் கொதிப்பையும் சேர்த்துக் கழுவித் துடைத்துவிட்ட மாதிரி அதை மறந்து பூரணியிடம் தான் வந்த காரியத்தை முடித்துக் கொண்டு கிளம்பினான் அரவிந்தன். அவனை வழியனுப்பும்போது பூரணியின் நெஞ்சு பொறுக்க முடியாத அளவுக்கு வேதனையால் பொங்கியது.


‘அரவிந்தன் நீங்கள் அன்று எனக்காக மழையில் நனைந்தீர்கள். இன்று எனக்காக நாகரிகமில்லாத எவனோ ஒரு முரடனிடம் அறை வாங்கினீர்கள். இன்னும் என்னென்ன துன்பங்களையெல்லாம் உங்களுக்குத் தரயிருக்கிறேனோ இந்தப் பாவி’ என்று நினைத்து உள்ளம் புழுங்கினாள் அவள்.


இந்த நிகழ்ச்சி நிகழ்ந்த அன்று இரவு தன் நாட்குறிப்பில்  அரவிந்தன் பின்வருமாறு எழுதினான்:

“உண்மையைச் சொன்னதற்காக ஒரு கயவன் மூக்கில் இரத்தம் ஒழுகும்படி அறைந்தான். வாழ்க்கை ஓர் உயர்தரமான செருப்புக் கடை. அங்கே சோறு போட்டுத் துணி உடுத்தி, உயிருள்ள தோல்களைப் பதனிட்டு அடுக்கி வைத்திருக்கிறார்கள். அந்தத் தோலுக்குள் பண்புகள் பொதிந்து வைக்கப் பெறவில்லை. கயமைதான் கனத்துக் கிடக்கிறது.”

கூர்மைக்கு மற்றவற்றைத் துளைத்துக் கொண்டு போகும் ஆற்றல் உண்டு. மற்றவை வழிவிடத் தயங்கினாலும் கூர்மை தன் வழியைத் தானே உண்டாக்கிக் கொண்டு முன்செல்லும். அரவிந்தன் நோக்கிலும், நினைப்பிலும் கூர்மையுள்ளவன். அவன் உள்ளத்துக்கும், பண்புகளுக்கும் மற்றவற்றையும் மற்றவர்களையும் உணரும் ஆற்றல் அதிகம். பயிற்சியும் கருத்தாழமும் உள்ள பாவலன் இயற்றிய கவிதையை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மேலும் ஒரு புது அழகு புரிவது போல் பழகப் பழக அரவிந்தனின் புதுப்புது பண்புகள் பூரணிக்குப் புரிந்தன.

ஒருமுறை அவள் அரவிந்தனைத் தேடிக்கொண்டு அச்சகத்துக்குப் போயிருந்தாள். அரவிந்தன் இல்லை. முதலாளி மீனாட்சிசுந்தரமும் அவனும் எங்கோ வண்டியில்(காரில்) புறப்பட்டுப் போயிருக்கிறார்கள் என்றும், சிறிது நேரத்தில் திரும்பிவிடுவதாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள் என்றும் அச்சகத்து ஆட்கள் அவளிடம் கூறினர். காத்திருந்துப் பார்த்துவிட்டுப் போகலாமா? நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாமா? என்று பூரணி தயங்கிக் கொண்டிருந்தபோது வாயிலில் வண்டி வந்து நிற்கும் ஒலி கேட்டது. அவர்கள் வந்துவிட்டார்கள். மீனாட்சிசுந்தரம் அவளை முகம் மலர வரவேற்றார்.

“வா அம்மா! நீ வந்து நாழிகையாயிற்றா? சிறிது நேரத்துக்கு முன்புதான் நாங்களே இங்கிருந்து வெளியேறினோம். வேறொன்றுமில்லை, சும்மா இவனை அழைத்துக் கொண்டு துணிக்கடை வரையில் போய்விட்டு வந்தேன். நீயே சொல் அம்மா. இராப்பகல் பாராமல் உழைக்கத் தெரிந்தால் மட்டும் போதுமா? தன் உடம்புக்கு வராமல் பேணிக் காத்துக் கொள்ளத் தெரிய வேண்டாமோ? இத்தனை வயதான பிள்ளை ‘கொள்ளுக் கொள்’ளென்று இருமுகிறான். உதடெல்லாம் பனிப்புண். என்னடா சங்கதி என்று பார்த்தால் கம்பளி ஆடை (சுவெட்டர்) இல்லாமல் போர்வை இல்லாமல் பனியில் கிடந்து தூங்குகிறான். சுவரை வைத்துத்தானே சித்திரம் எழுத வேண்டும்? உடம்பு நன்றாக இருந்தால் தானே இன்னும் உழைக்கலாம்? ‘மாட்டவே மாட்டேன், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்’ என்று தட்டிக் கழிக்கப் பார்க்கிறான். கண்டித்துச் சொல்லிக் கையோடுக் கூட்டிக் கொண்டுபோய் இரண்டு கம்பளி ஆடையும் போர்வையும் வாங்கிக் கொடுத்து அழைத்துக் கொண்டு வருகிறேன். தன் தேவை தெரிய வேண்டாமோ மனிதனுக்கு…?”

அரவிந்தன் அவருக்குப் பின்னால் கம்பளி ஆடையும் போர்வையும் அடங்கிய துணிக்கடைப் பொட்டலங்களோடு முறுவல் பூத்துக் கொண்டு நின்றான். மீனாட்சிசுந்தரமும் அவற்றை அவன் கையிலிருந்து வாங்கிப் பெருமையோடு பூரணிக்குப் பிரித்துக் காட்டினார். ‘அரவிந்தன் மேல் தான் இந்த மனிதனுக்கு எத்தனை பாசம்! எவ்வளவு உரிமை!’ என்றெண்ணி வியந்தாள் பூரணி.

இது நடந்து பத்துப் பனிரண்டு நாட்களுக்குப் பின் வண்டி நிலையத்துக்கு வடப்புறம் மேம்பாலத்துக்கு ஏறுகிற திருப்பத்தில் ஒரு கிழட்டுப் பிச்சைக்காரனுடைய உடம்பைப் போர்த்திக் கொண்டு கிடந்தது அந்தப் போர்வை. பூரணி அதைப் பார்த்தாள். ‘என் சந்தேகம் வீணானது, இந்த மாதிரியான போர்வை அரவிந்தனிடம் மட்டும்தானா இருக்கும்? வேறு யாராவது கொடுத்திருப்பார்கள்’ என்று நினைவை மாற்றிக் கொள்ள முயன்றாள். ‘இந்த மாதிரி போர்வைகள் எல்லோரிடமும் இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி இரக்கமும் நெகிழ்ச்சியும் எல்லோரிடமும் இருக்க முடியாது’ என்று அதே நினைவு மாறாமல் மீண்டும் உறுதிப்பட்டது அவள் மனத்தில். அரவிந்தனையே நேரில் சந்தித்து இந்தச் சந்தேகத்தைக் கேட்டாள். அவன் தலையைக் குனிந்து கொண்டு மௌனமாகச் சிரித்தான். ஆனால் பதிலொன்றும் சொல்லவில்லை.

“இப்படி எத்தனை நாளைக்கு விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கப் போகிறீர்கள்? தனக்குக் கண்டு மீதமிருந்தால் அல்லவா தான தருமம் செய்யலாம்?”

“நீங்கள் என்னைப்பற்றி மட்டும் கவலைப்படுகிறீர்கள். நான் எல்லோரைப் பற்றியும் கவலைப்படுகிறேன். மூன்று கோடி தமிழருக்குள் ஒவ்வொரு கோடியிலும் ஏழ்மையைப் பார்க்கும் போது என் மனம் நெகிழ்ந்து விடுகிறது. முப்பது கோடி இந்தியர்களில் எல்லோருமா இந்நாட்டு மன்னர்களாக இருக்கிறார்கள்? பலர் இந்நாட்டு மன்னராக – மண்தரையைத் தவிர இருக்க இடமற்றவர்களாக அலைந்து திரிகிறார்களே. இவர்கள் பிறந்த நாட்டில் இவர்களோடு இவர்களில் ஒருவனாகத் தானே நானும் பிறந்திருக்கிறேன்.”

“அரவிந்தன் நீங்கள் அபூர்வமான மனிதர். உங்களிடம் வாதம் புரிய என்னால் முடியாது. உங்களுடைய சிந்தனைகள், செயல்கள் எல்லாவற்றையும் சாதாரண மனத்தால் அளவிட முடிவதில்லை” என்று பூரணி கூறியபோதும், பதில் சொல்லாமல் அவள் முகத்தை நோக்கிச் சிரித்துக் கொண்டு நின்றான் அரவிந்தன். இன்னொரு நாள் இரயில் நிலையத்திலிருந்து வெளியே வருகிற பாதையில் மதுரைக் கல்லூரி உயர்நிலைப் பள்ளி அருகில் விந்தையான சூழ்நிலையில் அரவிந்தனைப் பார்த்தாள் அவள். பரட்டைத் தலைகளும் ஒட்டுப்போட்டும், ஒட்டுப் போடாமலும் கிழிந்த ஆடைகளுமாக அப்பகுதியில் வாழும் அநாதைக் குடும்பங்களின் சிறுவர், சிறுமியர்கள் அரவிந்தனைச் சூழ்ந்து கொண்டு நின்றார்கள். அந்தக் குழந்தைகளின் முகங்கள் அரவிந்தனை நோக்கி மலர்ந்திருந்தன. பக்கத்து மரத்தடியில் உட்கார்ந்து வாழைப்பழம் விற்றுக் கொண்டிருந்த ஒரு கூடைக்காரியிடம் போய் அந்த ஒரு கூடைப் பழத்தையும் மொத்தமாக விலைபேசி அக்குழந்தைகளுக்குப் பங்கிட்டு அளித்தான் அவன். வண்டி நிலையத்தில் இறங்கி மங்கையர் கழகத்துக்குப் போகுமுன் இரயிலில் அவசரமாக ஒரு கடிதத்தை தபால் செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்தக் காட்சியைக் கண்டாள் பூரணி. அரவிந்தன் தன்னைக் கண்டுவிடாமல் சிறிது விலகி ஒரு மரத்தின் மறைவில் ஒதுங்கி நின்று அதைப் பார்த்தாள் அவள். அவன் தன்னுடைய அந்த அன்பு விளையாட்டை முடித்துக் கொண்டு புறப்பட்ட போது அவளும் பின்னால் நடந்தாள். அரவிந்தன் அவள் வருவதைப் பார்க்கவில்லை. மிக அருகில் நெருங்கி, “இதோ இன்னும் ஓர் அநாதைக் குழந்தை பாக்கி இருக்கிறது. ஏதாவது கொடுத்துவிட்டுப் போகக் கூடாதா? கொஞ்சம் திரும்பித்தான் பாருங்களேன்” என்று கையை நீட்டிக் கொண்டே குறும்பாக சொல்லிக் கூப்பிட்டாள் பூரணி. அரவிந்தன் திரும்பினான். அவள் சிரிப்பு மலர நின்றாள். ‘நீங்களா அநாதைக் குழந்தை? உங்களுக்குத்தான் என்னையே கொடுத்து விட்டேனே’ என்று பதில் சொல்ல நினைத்தான் அரவிந்தன்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue