ஈழத்து நாடக இலக்கியம் தொடர்ச்சி – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த்தொடர்ச்சி)
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 17
நாடக இலக்கியம் தொடர்ச்சி
இயற்பண்பு சார்ந்த நாடக நெறி பேராசிாியர் கணபதிப்பிள்ளைக்குப் பின் இரு கிளைப்பட்டு வளர்ந்தது. ஒரு பிாிவினர் பேராசிாியர் கையாண்ட யாழ்ப்பாணத் தமிழை வைத்து முழுக்க முழுக்க நகைச்சுவை, கிண்டல் நாடகங்களைத் தயாாித்தனர். நூலுருவம் பெற்ற அசட்டு மாப்பிளை இதற்கு உதாரணமாகும். இது தவிர புரோக்கர் கந்தையா, பார்வதி பரமசிவன், கலாட்டா காதல், ஆச்சிக்குச் சொல்லாதே, இலண்டன் கந்தையா, புளுகர் பொன்னையா ஆகியவையும் இத்தகைய நாடகங்களுக்கு எடுத்துக்காட்டுக்களாகும்.
வரலாற்று, சமய, இதிகாச, புராண நாடகங்களும் இத்தகைய நகைச்சுவை நாடகங்களுமே இன்று தமிழ் மக்களிடையே சனரஞ்சகப்படுத்தப்பட்டுள்ளன. வரலாற்றுப் புராண நாடகங்களை விட இந்நகைச்சுவை நாடகங்களில் கையாளப்படும் மொழி பார்ப்போாிடையேயும் ஓர் அன்னியோன்ய உறவை ஏற்படுத்துகிறது. நடிகர்கள் சொல்ல ரசிகர்கள் சிாிப்பதே இதன் பயன்பாடாகும். பார்ப்போரை வாய்விட்டுச் சிாிக்கப்பண்ணுவதே இவற்றின் நோக்கமாகும். ஒருவகையில் இவை நாடகங்களே அல்ல. நாடக எழுத்துப் பிரதி, மேடை ஒழுங்கு, பாத்திர வார்ப்பு என்பன எவையுமின்றி சம்பாசணையை மாத்திரமே கொண்டுள்ள இத்தகைய நாடகங்களே இன்று பெரும்பாலான தமிழ் மக்களால் நாடகம் என்று ஏற்கவும்படுகின்றன.
பேராசிாியர் கணபதிப்பிள்ளை அறிமுகம் செய்த பேச்சுத் தமிழையும், இயற்பண்பு நாடக நெறியையும் நன்கு புாிந்து கொண்டு நாடக நிலை நோக்குடனும், பிரக்ஞையுடனும் ஈழத்தில் தமிழ் நாடகத்தை வளர்த்தவர்கள் பல்கலைக்கழகத்தினரும் பல்கலைக்கழக வழிவந்தோருமே. அதிர்ட்டவசமாக அந்த வாய்ப்பும் வசதியும் அவர்களுக்கிருந்தன.
அ. முத்துலிங்கத்தின் சுவர்கள், பிாிவுப்பாதை, சொக்கனின் இரட்டை வேசம், அ. ந. கந்தசாமியின் மதமாற்றம் என்பன பேராசிாியர் மரபில் பல்கலைக்கழகம் மேடையேற்றிய நாடகங்களாகும். இவற்றுள் அ.ந. கந்தசாமியின் மதமாற்றம் குறிப்பிடத்தக்கது.
இவ்வியற்பண்பு நாடகங்கள் பேராசிாியாின் நாடகங்கள் போன்று மத்தியதர வருக்கத்து மக்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டன. அவர்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் போராட்டங்களையும் அவர்கள் மொழியில் உரையாடின.
ஆரம்பத்தில் மத்தியதர வருக்கத்தினரையும் அவர்தம் பிரச்சினைகளையும் எடுத்துக் காட்டிய இவ்வியற்பண்பு நாடக நெறி சமூக வளர்ச்சிப் போக்கினாலும் அரசியல் பொருளாதார மாற்றங்களினாலும் தொழிலாளர்களையும் அடிமட்டத்தில் வாழ்ந்த மக்களையும் அவர்தம் பிரச்சினைகளையும் பிரதிபலிக்கும் வகையில் பாிணமித்தது. 1969, 70 களிலே சமகால அரசியல் சமூகப் பிரச்சினைகளைக் கூறும் பண்புடைய நாடகப் போக்கு உருவாகியது. ஈழத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் இடதுசாாிச் சிந்தனை வளர்ச்சியுமே இப்போக்கினை உருவாக்கின. தொழிலாளர் தலைமை தாங்கும் சமூக மாற்றம் ஒன்றினாலேயே சமகால வாழ்க்கைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியும் என்பதை இந் நாடகங்கள் மறைமுகமாகவும் வௌிப்படையாகவும் வற்புறுத்தின. 1960 ஆம் ஆண்டுகளில் புனைகதைத் துறையில் இடம்பெற்ற இப்பண்பு 1970 களிலேதான் நாடகத் துறையில் இடம்பெறலாயிற்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இ. சிவானந்தனின் விடிவை நோக்கி, காலம் சிவக்கிறது ஆகிய நாடகங்களும், நா. சுந்தரலிங்கத்தின் விழிப்பும் மாத்தளைக் கார்த்திகேசுவின் போராட்டங்களும் இதற்கு உதாரணங்களாகும்.
இ.சிவானந்தனின் விடிவை நோக்கி என்ற நாடகம் தொழிலாள வருக்கப் பெண்ணொருத்தி டொக்டராக வந்து தன் வருக்க நிலையினின்று மாறுபட்டுச் செல்வத்தைச் சித்திாிக்கிறது. அவரது காலம் சிவக்கிறது என்ற நாடகம் தமிழ், சிங்களத் தொழிலாளர்கள் அனைவரும் தம்மைச் சுரண்டும் முதலாளிக்கு எதிராகத் திரள்வதைச் சித்தாிக்கிறது. நா. சுந்தரலிங்கத்தின் விழிப்பு வேலையில்லாப் பிரச்சினையால் தவிக்கின்ற இளைஞர், தொழிலாளர் நடத்தும் சமூக விடுதலைப் போாில் தம் விடுதலையும் இணைந்துள்ளது என்பதை உணர்வதைக் காட்டுகிறது. மாத்தளைக் கார்த்திகேசுவின் போராட்டங்கள் தமிழ் – சிங்கள தொழிலாளர் தோட்ட முதலாளிக்கு எதிராகச் செங்கொடியின் கீழ் அணிதிரள்வதைச் சித்தாிக்கிறது.
இத்தகைய பண்பு கொண்ட சிறு நாடகங்களை இக் காலகட்டத்தில் மேடையேற்றிய மாவை நித்தியானந்தன், தில்லைக்கூத்தன் ஆகியோரும் இங்கு குறிப்பிடத்தக்கவர்கள்.
அரசியல் ாீதியில் தீர்வு காட்டாதுவிடினும் சமகாலப் பிரச்சினைகளைக் காட்டிய நாடகங்களாக இக் காலகட்டத்தில் மேடையேறிய கலைச் செல்வனின் சிறுக்கியும் பொறுக்கியும், பௌசுல் அமீாின் தோட்டத்து இராணி ஆகிய நாடகங்களைக் குறிப்பிடலாம்.
சமகால சமூக அரசியற் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும் இப்பண்பு மரபு வழி நாடகங்களிலும் இக்காலக் கட்டத்தில் இடம்பெறுவதைக் காணகின்றோம். இப் பண்பினை மரபு வழி நாடகத்தில் புகுத்தியவர். சி. மௌனகுரு ஆவர். இவரது சங்காரம் பழைய கூத்து வடிவத்திற் சமகாலப் பிரச்சினையைப் பிரதிபலிக்கின்றது. காலம் காலமாகச் சமூகப் பிாிவுகளினாலும், ஏற்றத்தாழ்வுகளினாலும் பிளவுபட்டுக்கிடந்த சமூகத்தை பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு விடுதலை செய்வதே சங்காரத்தின் உள்ளடக்கமாகும். மட்டக்களப்புக் கூத்து மரபு சங்காரத்தினால் புதிய பாிமாணம் பெற்றது என்பர். அண்மையில், எம்.ஏ.நுஃமானின் நெடுங்கவிதை ஒன்றை அடிப்படையாகக் கொண்ட மௌனகுரு தயாாித்து மேடையேற்றிய அதிமானிடன் பலரது பாராட்டுதல்களையும் பெற்றது. மரபுவழி ஆட்டமுறைகளையும், அபிநயங்களையும் பயன்படுத்தி மனிதகுல வளர்ச்சிக் கட்டங்களையும் இன்றைய அதன் போராட்டத்தையும் இந் நாடகம் சித்தாித்தது.
3
ஈழத்துத் தமிழ் நாடகத்தில் சமகால அரசியற் பிரச்சினைகள் இடம்பெறத் தொடங்கிய இக்கால கட்டத்திலேதான் நாடகத்தின் உருவம் பற்றிய சிந்தனையும் நாடக எழுத்தாளர்களிடமும், தயாாிப்பாளர்களிடமும் உருவாவதைக் காணுகின்றோம். சிங்கள நாடக வளர்ச்சியினதும், உலக நாடகப்பரப்பினதும், மரபுவழி நாடக மரபினதும் தாக்கம் பெற்ற இவர்கள் புதுப்பாணி நாடக உரு ஒன்றினை ஈழத் தமிழ் நாடக உலகுக்கு அளிக்கின்றார்கள். ஈழத்துத் தமிழ் நாடக உலகில் நவீன நாடக அரங்கு (Modern Theatre) பற்றிய பிரக்ஞை வலுவாக வளர்ச்சியடையத் தொடங்கியது.
1970 களிலே தமிழ் நாடக உலகின் பிரதான பண்பாகக் காணப்பட்ட சமகால சமூக அரசியற் பிரச்சினைகளே இக்காலத்தெழுந்த பெரும்பாலான புதுப்பாணி நாடகங்களின் உள்ளடக்கமாகவும் அமைந்தன. இத்தகைய புதுப்பாணி நாடக நெறியின் முன்னோடியாக நா. சுந்தரலிங்கத்தைக் குறிப்பிடலாம். இவர் 1971 மார்ச்சில் முருகையனின் ‘கடூழியம்’ என்ற நாடகத்தை மேடையேற்றினார். கடூழியம் உலகளாவிய தொழிலாளர் பிரச்சினையையும் அவர்களின் விடுதலையையும் கருவாகக் கொண்டது. இவரது அபசுரம் அநர்த்த (absurd) நாடகத்தின் பாற்பட்டது. நா. சுந்தரலிங்கத்தின் பங்கு ஈழத்து நாடக உலகிற் குறிப்பிடத்தக்கது.
இவரைத் தொடர்ந்து அ. தாசீயசு, புதியதொரு வீடு, கோடை, காலம் சிவக்கிறது, பிச்சை வேண்டாம், கந்தன் கருணை ஆகியவற்றைப் புதுப்பாணியில் தயாாித்தார். இதே காலப் பகுதியில் சுகைர் அமீது தயாாித்த ஏணிப் படிகள், பிள்ளைப் பெத்த இராசா ஒரு நாயை வளர்த்தார், வேதாளம் சொன்ன கதை, பொம்மலாட்டம், நகரத்துக் கோமாளிகள் முதலியவையும், க. பாலேந்திராவின் தயாாிப்பான நட்சத்திரவாசி, மழை, பசி, கண்ணாடி வார்ப்புகள்,புதிய உலகம் பழைய இருவர் ஆகிய நாடகங்களும், மௌனகுருவின் அதி மானிடன், தலைவர் ஆகியவையும் ஈழத்தில் நவீன நாடக அரங்க வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளன. 1975, 1976 ஆம் ஆண்டுகளிலே கலாச்சாரப் பேரவை நடத்திய தமிழ் நாடகப் போட்டியில் பாிசு பெற்ற தமிழ் நாடகங்கள் புதுப்பாணியிலேயே அமைந்திருந்தன. இது நகர்ப்புற நாடக உலகில் இக்கால கட்டத்தில் இந்நாடக நெறி பெற்று வந்த செல்வாக்கினைக் காட்டுகின்றது.
1970 களிலே நாடக உருவ அமைப்பு பற்றிய பிரக்ஞை ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறந்த பல நாடகங்கள் அயல் மொழிகளினின்று மொழிபெயர்க்கப்பட்டு மேடையேற்றப்படும் ஒரு போக்கும் உருவாகின்றது.
ஈழத்தமிழ் நாடக உலகில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் முன்பும் நடைபெற்றுள்ளன. நவாலியூர் நடராசன் வட மொழியிலிருந்து காளிதாசனின் சாகுந்தலத்தை (1962)யும், மிருச்ச கடிகத்தை பொம்மை வண்டி (1964) என்ற பெயாிலும் மொழிபெயர்த்தார். இ. இரத்தினம் சோபோக்கிளிசின் ஈடிப்பசை ஈடிப்பசு மன்னன் (1969) என்ற பெயாில் மொழி பெயர்த்தார். இவை மேடைக்காக அன்றி வாசிப்புக்காகவே செய்யப்பட்டன.
எனினும் உணர்வு பூர்வமாகவும், நாடக உருவ அமைப்பு பற்றிக் காத்திரமான சிந்தனையுடனும் பிறமொழியின் சிறந்த நாடகங்களைத் தமிழில் தழுவியும் மொழி பெயர்த்தும் மேடை ஏற்றும் போக்கினை 60 களிலும் குறிப்பாக 1970 களிலும் காணுகிறோம். இப்சனின் Dolls House, பெண்பாவை என்ற பெயாிலும், அன்ரன் செகாவின் The Bear, கரடி என்ற பெயாிலும், சே. எம்.சிஞ்சு எழுதிய Riders to the Sea கடலின் அக்கரை போவோர் என்ற பெயாிலும், எல்மாறைசின் The Adding Machine பொம்மலாட்டம் என்ற பெயாிலும் தழுவலாக்கம் பெற்று மேடையேறின. அலெக்சி அருபுசோவின் It Happened In Irkutsk என்னும் நாடகம் ஞானம் இலம்பேட்டினால் 1970 இல் பிச்சை வேண்டாம் என்ற பெயாில் மொழி பெயர்க்கப்பட்டது. நிருமலா நித்தியானந்தன் இந்த நாடக ஆசிாியாின் Old World என்ற நாடகத்தை புதிய உலகம் பழைய இருவர் என்ற பெயாிலும், ரென்னசி வில்லியத்தின் Glass Menagerie என்ற நாடகத்தை கண்ணாடி வார்ப்புகள் என்ற பெயாிலும் மொழி பெயர்த்தார். இந்நாடகங்கள் மிக வெற்றிகரமாக மேடையேற்றப்பட்டமை நவீன ஈழத்துத் தமிழ் நாடக மரபு உலக நாடக மரபுடன் சங்கமிப்பதையே காட்டுகின்றது.
Comments
Post a Comment