இமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன்
இமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன்
தில்லித்தமிழ்ச்சங்கத்தில் கவியரங்கம்
நாள் – ஆடி 02, 2047 / 17-07 -2016
இடம் – தில்லித் தமிழ்ச்சங்கம்
தலைப்பு – இமயம் முதல் குமரி வரை
தலைமை – கவிஞர் காவிரிநாடன்
பாடும் கவிஞர் : கருமலைத்தமிழாழன்
தமிழ் வணக்கம்
முத்தமிழே ! ஞாலத்தில் முந்தி வந்தே
கன்னியென இலங்கு கின்றாய்
தித்திக்கும் அமுதமெனச் சுவையாய் நாவில்
திகழ்கின்றாய் ! முச்சங்கப் புலவ ராலே
எத்திக்கும் புகழ்மணக்கும் ஏற்றம் பெற்றாய் !
எழுந்துவந்தே கடற்கோள்கள் அழித்த போதும்
வித்தாக முளைத்துநின்றாய் ! மூவேந் தர்தம்
வளர்ப்பினிலே வளர்ந்ததாயே வணங்கு கின்றேன் !
தலைமை வணக்கம்
முப்பதிற்கும் மேற்பட்ட நூற்கள் தந்த
மூத்ததமிழ்க் கவிஞர்தாம் காவிரி நாடன்
எப்போதும் தமிழிங்கே வாழு தற்கே
எழுச்சியுடன் போராடும் பெரும்போ ராளி
ஒப்பில்லா பாவேந்தர் உடலைச் சுமந்த
ஓங்குதமிழ் கவிஞரிவர் ஒருவ ரேதான்
இப்பாவின் அரங்கிற்கே தலைவா உம்மை
இருகைகள் கூப்பித்தாள் வணங்கு கின்றேன் !
அவை வணக்கம்
கவியரங்கை அமைத்தெம்மைப் பாட வைத்த
கவின்தில்லித் தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர் தம்மை
கவிதைகளைச் செவிமடுத்து மகிழ வந்த
கற்றோரை சான்றோரை வணங்கு கின்றேன் ! ( 1 )
இமயம்முதல் குமரிவரை
இமயம்முதல் குமரிவரை நம்மின் நாடு
இதயத்தில் நாமிதனைப் பதித்தால் பீடு
தமயனாக தமக்கையாக மக்கள் தம்மை
தம்முடனே பிறந்தவராய் நினைக்க வேண்டும்
அமரராக வாழ்கின்ற காந்தி நேரு
ஆங்கிலேயர் கரத்திருந்து மீட்ட நாட்டை
கமழ்கின்ற தோட்டமாகக் காவல் காக்கும்
கடமையிலே ஒற்றுமையாய் இருக்க வேண்டும் !
மதங்களிலே வேறுவேறாய் நாக ரீகம்
மதிக்கின்ற பண்பாட்டில் வேறு வேறாய்
விதவிதமாய்க் கலையொழுக்கம் உணவும் வேறாய்
விளங்குகின்ற மொழிவேறாய் இருந்த போதும்
பதமாகக் கஞ்சிதனை வடித்துச் சோற்றைப்
பகிர்ந்தளிக்கும் தாயாக மக்கள் நாமும்
இதமாக நேயமுடன் பகைமை இன்றி
இந்நாட்டைக் காப்பதுவே பெருமை யாகும் !
கால்பாதம் தனில்குத்தும் முள்ளெ டுக்கக்
கரம்விரைந்து வருதல்போல் இந்தி யாவின்
வால்பகுதி குமரியிலே துயர மென்றால்
வந்தணைக்க இமயம்தான் குனிய வேண்டும்
வேல்போலக் குத்தபகை படைகள் வந்து
வேலிதாண்டி புகும்போது குமரி வாழ்வோன்
ஆல்விழுதாய்க் காக்கமுன்னே பாய வேண்டும்
அப்பொழுதே இந்நாடு நிமிர்ந்து நிற்கும் !
கங்கையினைக் காவிரியில் கலக்க வேண்டும்
கலத்தினிலே மக்களதில் செல்ல வேண்டும்
செங்கரும்பை நெல்மணியை விளைத்து மாற்றாய்
செழுமையான கோதுமைக்குக் கொடுக்க வேண்டும்
வங்கத்து நிலக்கரியின் மின்சா ரத்தை
வழங்கிதமிழ் நாடுதனை ஒளிர்க்க வேண்டும்
அங்கங்கள் போல்எல்லா மாநி லங்கள்
அரவணைத்தே இந்தியாவை உயர்த்த வேண்டும் !
நாற்கரமாய் ஒளிர்தங்க சாலை யாலே
நாட்டினெல்லாப் பகுதிகளும் இணைந்த போல
வேற்றுமையும் காழ்ப்புணர்வும் ஏது மின்றி
வெற்பிமயக் குமரிமக்கள் இணைய வேண்டும்
சோற்றுக்கு மட்டுமிங்கே வாழு கின்ற
சொரணையற்ற மக்களாக இருந்தி டாமல்
வேற்றுகரம் உள்நுழைய விட்டி டாமல்
வெல்கின்ற ஒற்றுமையில் திகழ வேண்டும் !
நற்குர்ரான் ஓதுகின்ற பள்ளி வாசல்
நடுவினிலே தேவாரம் ஓத வேண்டும்
பொற்புடைய பாசுரங்கள் தேவா லயத்துள்
பைபிளுடன் இனிமையாகப் பாட வேண்டும்
வெற்புயர்ந்த சிவதிருமால் கோயி லுக்குள்
ஏசுஅல்லா புகழ்பாடல் ஒலிக்க வேண்டும்
அற்புதமாய் மும்மதத்தார் மூவி டத்தும்
அனைத்துமதக் கடவுளரை வணங்க வேண்டும் !
காசிநகர் ஓடுகின்ற கங்கை யாற்றில்
காதருடன் அந்தோணி குளிக்க வேண்டும்
மாசியுடன் ராவுத்தர் வேளாங் கன்னி
மாதாமுன் மண்டியிட்டு வணங்க வேண்டும்
வாசுவுடன் மைக் கேலும் நாகூர் தர்கா
வலம்வந்தே தொழுகையினை நடத்த வேண்டும்
வீசுதென்றல் போலத்தீபா வளியும் இரம்சான்
வீடுதோறும் கிறித்துமசும் திகழ வேண்டும் !
சாதிமதப் பெயரினிலே மன்ற லின்றிச்
சருவமதக் கலப்பினிலே நடக்க வேண்டும்
நீதிகளில் மதத்திற்கோர் சட்ட மின்றி
நியாயங்கள் பொதுவாக இருக்க வேண்டும்
சாதிமதக் குறிப்பின்றி ஆண்பெண் என்ற
சமத்துவத்தில் இந்தியரென் றிருக்க வேண்டும்
ஏதிலியாய் பகையாகி மனிதம் என்னும்
ஏற்றத்தில் இந்தியாவும் விளங்க வேண்டும் !
வான்துளைக்கும் ஏவுகணைகள் ஏவி விட்டோம்
வளர்கின்ற அறிவியலில் அறிவு பெற்றே
வான்சுற்றும் கோள்களினை மிதக்க விட்டோம்
வல்லரசாய் அணுக்குண்டு வளர்ச்சி பெற்றோம்
கூன்நிமிர்ந்த உடலாகத் தொழிற்கூ டங்கள்
ஊர்தோறும் கட்டுவித்தே பொருள்கு வித்தோம்
தேன்அடையாய் ஆற்றிடையே அணைகள் கட்டித்
தேக்கிவைத்தே பசும்புரட்சி விளைய வைத்தோம் !
வேற்றுமையில் ஒற்றுமையைத் தளிர்க்கச் செய்தே
வேதனையைச் சாதனையாய் விளையச் செய்வோம்
மாற்றங்கள் பலப்பலவாய் மலரச் செய்தே
மண்மீதில் இந்தியாவை நிமிரச் செய்வோம்
நாற்றாகத் தம்முயிரை நட்டு வைத்தே
நம்முன்னோர் பெற்றளித்த சுதந்தி ரத்தைக்
கூற்றாக வரும்பகையை முறிய டித்தே
கூட்டுறவால் வாழவைப்போம் வளர்ப்போம் நாட்டை !
பாவலர் கருமலைத்தமிழாழன்
Comments
Post a Comment