கல்வியே கண் – கி. பாரதிதாசன்




தலைப்பு-கல்வியேகண்-கி.பாரதிதாசன் : thalaippu_kalviyekan_ki.bharathidasan

“கல்வியே கண்”



செல்லும் இடமெல்லாம் சீர்களைச் சேர்த்திட
வெல்லும் அடலேறாய் விஞ்சிட – தொல்லுலகில்
யாண்டும் புகழ்பரவத் தீண்டும் துயரகல
வேண்டுமே கல்வி விளக்கு!
சாதிச் சழக்குகளை மோதி மிதிக்கின்ற
நீதி நிலத்தில் நிலைத்திட! – ஆதியிலே
ஆண்ட அறநெறிகள் மீண்டும் அரங்கேற
வேண்டுமே கல்வி விதை!
கல்வி உடையவரே கண்ணுடையர் என்றழகாய்ச்
சொல்லி மகிழும் சுடர்க்குறளே! – முல்லைமலர்க்
காடொளிரும் வண்ணம் கருத்தொளிர, எப்பொழுதும்
ஏடொளிரும் வண்ணம் இரு!
நல்லோர் திருவடியை நாடி நலமெய்த!
வல்லோன் எனும்பெயர் வந்தெய்த! – அல்லல்
அகன்றோட! அன்பாம் அமுதூறக் கல்வி
புகுந்தொளிர வேண்டும் புலம்!
கற்க வயதேது? கற்ற நெறியேற்று
நிற்க குறையேது? நெஞ்சுற்ற – தற்செருக்கு
விண்ணொளி கண்ட வெண்பனி போல்மறையும்!
ஒண்மதி கல்வி உடைத்து!
உண்மை ஒளியினையும் ஓங்கும் வடலூரார்
வண்மை வழியினையும் மாண்பினையும் – வெண்மை
மலரொக்கும் நெஞ்சினையும் வாய்த்துமகிழ் வெய்த
மலையொக்கும் கல்வியுடன் வாழ்!
பிறப்பொக்கும் நன்னெறியைப் பேணி உலகோர்
சிறப்பொக்கும் வாழ்வில் செழிக்க! – நிறைகல்வி
ஒன்றே உயர்மருந்தாம்! நன்றே இதைஉணர்ந்தால்
அன்றே அமையும் அரசு!
படத்தில் நடிக்கும் நடிகரைப் பார்த்துக்
கிடக்கும் செயலொழிய! கீர்த்தி – படைக்கும்
நிலைகாண! நீண்ட நெடும்பார்வை காண
கலைகாண கல்வியே கண்!
எல்லாம் இழந்தாலும் என்றும் உடனிருக்கும்!
கொல்ஆள் வினைக்கும் குழிபறிக்கும்! – சொல்லாலும்
தீயாலும் போகா! தெளிந்து படித்திட்டால்
ஓயா தொளிரும் உயிர்த்து!
பெருஞ்செல்வம் பேரரணிகள் பெற்றாலும், ஈடில்
அருஞ்செல்வம் கல்வி அறிக! – வருஞ்செல்வம்
குன்றிக் குறைந்திடலாம்! கற்றவை நம்முயிரோடு
ஒன்றி இருக்கும் ஒளிர்ந்து!




Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்