Skip to main content

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.16. மயக்குவ விலக்கல்




தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram
மெய்யறம்
மாணவரியல்

16. மயக்குவ விலக்கல்

(மயக்குவ-போதைப்பொருட்கள்)
  1. மயக்குவ வறிவினை மயக்கும் பொருள்கள்.
மயக்குவ என்பவை அறிவினை மயக்கும் பொருட்கள் ஆகும்.
  1. அவைகள் கஞ்சா வபின்முத லாயின.
அவை கஞ்சா, அபின் போன்றவை.
  1. அறிவுதம் முயிரே யாதியே யுலகே.
நம்முடைய உயிர், கடவுள், உலகம் எல்லாமாக அறிவுதான் உள்ளது.
  1. அறிவினை மயக்குத லவற்றை யழித்தலே.
அறிவினை மயக்குவது என்பது இம்மூன்றையும் அழிப்பது ஆகும்.
  1. அறிவினை மயக்குவா ரருமறம் புரிவர்.
அறிவினை மயக்கும் பொருட்களை உட்கொண்டவர் தீய செயல்களைச் செய்வார்.
  1. மயக்குவ சிலபிணி மாய்க்குமென் றுண்பர்.
இவ்வகைப் பொருட்கள் சில நோய்களைக் குணமாக்கும் என்று அதனை உண்பார்கள்.
  1. மயக்காத வுண்டவை மாய்த்தலே யுத்தமம்.
இவற்றை உண்ணாமல் அந்த நோய்களைக் குணமாக்குவதே மிகச் சிறந்தது ஆகும்.
  1. மயக்குவ வலியினை வழங்குமென் றுண்பர்.
இவை வலிமையைக் கொடுக்கும் என்று சிலர் உண்ணுவர்.
  1. வலியினை வழங்கல்போல் வலியெலாந் தொலைக்கும்.
இவை வலிமையைக் கொடுப்பது போல் வலிமையை எல்லாம் அழிக்கும்.
  1. ஆதலான் மயக்குவ வற்பமுங் கொண்டிடேல்.
ஆதலால் அறிவினை மயக்கும் பொருட்களை சிறிதளவு கூட உண்ணுதல் கூடாது.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
வ.உ.சிதம்பரனார்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்