Skip to main content

அறிவியல் பூக்கள் நிறைந்த தொல்காப்பியம்போல் எம்மொழியிலும் நூலில்லை! – கருமலைத்தமிழாழன்




தலைப்பு-தொல்காப்பியம்போல்நூலில்லை :thalaippu_tholkappiyampoal_nuul illai

அறிவியல் பூக்கள் நிறைந்த

தொல்காப்பியம்போல்

எம்மொழியிலும் நூலில்லை!

[தொல்காப்பியர்  சிலை  திறப்பு  விழா கவியரங்கம்
இடம் –  காப்பிக்காடு (நாகர்கோவில்)  
நாள்: 26.06.2047 10-07 -2016
தலைமை –  கவிஞர் குமரிச்செழியன்]

தமிழ்த்தாய்  வணக்கம்
கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும்
            களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில்
இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும்
            இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம்
கடலுக்குள் கல்கட்டிப் போட்ட போதும்
            காளவாய்க்குள் உடல்வேக நுழைத்த போதும்
விடவாயால் கரையான்கள் அரித்த போதும்
            வீழாத   தமிழன்னையை   வணங்கு  கின்றேன் !
அணியாகக் காப்பியங்கள் இருந்த போதும்
            அறநூல்கள் நுதல்பொட்டாய்த் திகழ்ந்த போதும்
மணியாக இலக்கணங்கள் ஒளிர்ந்த போதும்
            மணிப்பிரவாள நடையினில் எழுதி யுள்ளே
பிணியாக வடமொழியை நுழைய வைத்துப்
            பீடுடைய வேதமொழி என்றே போற்றித்
தனித்தமிழை அழிப்பதற்கே முயன்றபோதும்
            தழல்பொன்னாய்த்  திகழ்தமிழை  வணங்கு கின்றேன் !
அயலவரின் அடிமையாலே ஆங்கி லந்தான்
            அறிவியலைத் தருமென்றும் வேலை வாய்ப்பைப்
பன்னாட்டில் கொடுக்குமென்றும் மாயை தோற்றிப்
            பசுந்தமிழைச் சிறாரிடத்தில் மறைத்த போதும்
எந்நாடும் போற்றிடவே கணினிக் குள்ளும்
            ஏற்றமுடன் இணையத்தில் தலைமை யேற்றே
தன்னிறைவாய்ப் பல்துறையின் வளங்கள் பெற்ற
            தமிழன்னை  நின்தாளை  வணங்கு  கின்றேன் !  (1)
தலைமை வணக்கம்
முக்கடலும்   இணைகின்ற  குமரி   மண்ணின்
            மூத்ததமிழ்க்   கவிஞர்தாம்   குமரிச்  செழியன்
தக்கபடி   சிலம்போடு   மேகலையை  ஆய்ந்தே
            தமிழ்முனைவர்  பட்டம்பெற்ற   உளவிய  லாளர்
சிக்கெனவே   தவறுகாணும்   தணிக்கை   யாளர்
            சீர்பாரதி   கலைக்கழகத்   தலைவ   ராவார்
எக்காலம்   விலைக்கும்பத்   திரண்டு   நூல்கள்
            எழுதிட்ட   கவியரங்கத்   தலைவர்  தம்மை   வணங்குகின்றேன் !
அவையடக்கம்
தொடங்கிவைக்கும்   சிதம்பரனார்   கவிதை  பாடும்
            தொன்மைத்தமிழ்க்   கவிஞர்கள்   அனைவ  ரையும்
இடமிந்த   நல்காப்பிக்   காடு   தன்னில்
            இலக்கணத்தை   தந்ததொல்  காப்பி  யர்க்குச்
சுடர்மிகு   சிலைதன்னை   அமைத்த  ளித்த
            சூழ்ந்திந்திய   தமிழ்ச்சங்கங்கள்  பேர   வையை
அடலேறாய்த்   தமிழ்காக்க   வந்தி  ருக்கும்
            அருந்தமிழர்   அனைவரையும்   வணங்கு   கின்றேன் !
தொல்காப்பியம்
உலகத்து   மொழிகளிலே   பழமை  வாய்ந்த
            உயர்வான   நூல்களிலே   முதன்மை  நூலாம்
பலவான   கடற்கோள்கள்   அழித்த   போதும்
            பாரினிலே   நிலைத்திருக்கும்   தொன்மை   நூலாம்
நிலவுமதக்   காழ்ப்பாலே   எரித்த   போதும்
            நீளுலகில்   நின்றிருக்கும்   செம்மை   நூலாம்
புலமெல்லாம்   போற்றுதமிழ்   மொழியைக்   காத்து
            புகழ்சேர்க்கும்   தொல்காப்பி   யமெனும்   நூலாம் ! (2)
பதஞ்சலியின்   திட்பத்தைத்   தன்னுள்   கொண்டும்
            பாணினியின்   செறிவுதனைத்   தன்னுள்   கொண்டும்
முதன்மையெனும்    அரித்தாட்டில்    தெளிவைக்   கொண்டும்
            மூவர்தம்   நூல்களிலே   இல்லா   நல்ல
பதமான   வளம்தன்னை   வனப்பு   தன்னைப்
            பயன்பாட்டின்    அளவுநூலின்   முறைய   மைப்பில்
விதந்தேத்தும்   வகையினிலே   விளங்கு   கின்ற
            விரிநூல்தாம்   தொல்காப்பி  யமெனும்   நூலாம் !
எழுத்துக்கும்   சொல்லுக்கும்   இலக்க  ணத்தை
          எடுத்தியம்பும்   நூல்கள்பல்  மொழிகளி   லுண்டு
ஒழுக்கத்தை   வாழ்வியலை   எடுத்துச்   சொல்லும்
          ஒப்பற்ற   பொருளென்னும்   இலக்க  ணத்தை
வழுவின்றி   சொல்லும்நூல்   தமிழி   லன்றி
          வாழுமெந்த   மொழிகளிலும்   இல்லை   யிங்கே
பழுதில்லாத்   தொல்காப்பி  யமெனும்   நூலே
          பார்தன்னில்   உள்ளஒரே   நூலாம்   இன்று !
அரித்தாட்டில்   எழுதியநூல்   உலக   மெல்லாம்
            அறிந்ததைப்போல்   தொல்காப்பி  யர்தம்   நூலை
விரிவாக   அவருரைத்த   மொழிக்கோட்   பாட்டை
            விளக்குகின்ற   வாழ்வியலின்   நறுங்கோட்   பாட்டை
சரியாக   உலகத்தார்   அறியு   மாறு
            சார்ந்தநாமோ   உணர்த்திடவே   தவறி  விட்டோம்
உரியதொரு   முதன்முயற்சி   காப்பியக்   காட்டில்
            ஊன்றியுள்ளார்   ஞாலமெல்லாம்   அறியும்   நாளை !
நன்னூலோ   எழுத்தோடு   சொல்லைக்   கூற
          நம்பிஇறை   தந்தநூலோ    அகத்தைக்   கூற
பன்னிரண்டு   படலமொடு   ஐயனா   ரிதனார்
          படைத்தளித்த   இருநூல்கள்   புறத்தைக்   கூற
தண்டிமாறன்   வடித்தநூல்கள்   அணியைக்   கூற
          தமிழ்ப்பாக்கள்   இயற்றயாப்பை   காரிகை   கூற
மண்மீதில்   ஐந்துவகை   இலக்க  ணத்தை
          மறையாகக்  கூறுகின்ற   ஒரேநூல்   இந்நூல் !  (3)
அதிகாரம்   மூன்றமைத்தும்   அதிகா   ரத்துள்
            அதைவிளக்க   ஒன்பதாக   இயல  மைத்தும்
விதியாக   நூற்பாக்கள்   பலவ   மைத்தும்
            விரிவாக   எழுத்துதனை  சொல்லை,   பொருளைக்
கதியாகத்   தமிழுக்குத்   தந்த  நூலாம்
            கற்றோரும்  சான்றோரும்   வியக்கும்   நூலாம்
புதிதாக   மொழிமாற்றம்   அடையும்   போதும்
            புதையாமல்   மொழிமரபைக்   காக்கும்   நூலாம் !
எழுத்துகளின்   பிறப்புகளை   எடுத்து  ரைக்கும்
            எழிலான   நூற்பாக்கள்   தம்மை  ஆய்ந்தோர்
பழுதின்றி   ஒலிநூலார்   ஆய்ந்து   ரைத்த
            படிநிலையில்   உள்ளதென்றே   சான்ற   ளித்தார்
வழுவாமல்   அறிவியலின்   நுட்பம்   தன்னை
            வடித்தன்றே   தந்திட்ட   காப்பி  யர்தம்
முழுதான   நுண்ணறிவை    புவியோர்   இன்று
            முன்வந்து   போற்றிடவே   திகழும்   நூலாம் !
உந்திமுதல்   எனத்தொடங்கும்   நூற்பா   தன்னில்
          உருபெற்றே   எழும்காற்று   சென்னி   மிடறு
நெஞ்சென்னும்   இடங்களிலே   நிலைத்தி   ருந்து
          நெகிழ்ந்தேபல்   உதடுநாக்கு   மூக்கு  அண்ணம்
அய்ந்துறுப்பின்    தொழிலாலே   வேறு   வேறாய்
          அக்காற்று   எழுத்தொலியாய்   பிறக்கு   மென்று
முந்துரைத்த   கருத்தைத்தான்   இற்றை   நாளில்
          முயன்றுரைத்தார்   உடற்கூறு   வல்லு  நர்கள் !
இக்கால   ஒலியியலார்   எழுத்தொ   லிக்க
            இயங்குகின்ற   காற்றறைகள்   துணையாய்  நிற்கும்
தக்கஒலி   எழுப்பிகளாய்க்   கண்டு   ரைத்த
            தகுஉறுப்பை   காப்பியனார்   அன்றே   சொன்னார்
தக்கபடி   ஒலிஇயக்க   அமைப்பை   ஆயும்
            தகுகருவி   ’சொற்பிறப்பாய்வி’   பிறக்கு   முன்பே
ஒக்கஒலி   பிறப்புரைத்தார்   மொழிப்பே   ரறிஞர்
            ஒப்பற்ற   நம்முடைய   காப்பி   யர்தாம் !   (4)
‘கடிசொல்இல்லை   காலத்துப்   படினே’   என்று
            கழறியசொல்   அதிகார   நூற்பா   தன்னில்
படிப்படியாய்க்   காலத்தால்   சொல்லும்   மாறிப்
            பட்டறிவால்   வரும்புதிய   மாற்றம்   தன்னை
அடிப்படைதாம்   சிதைக்காமல்   ஏற்கு   மாறு
            அன்றேதம்    நுண்ணறிவால்   எடுத்து   ரைத்த
விடிவெள்ளி   மொழியறிஞர்   காப்பி  யர்தாம்
            விளம்பிட்ட   கருத்தேற்று   மொழியைக்   காப்போம் !
அறிவியலின்   கூறுகளை    அதிக   மாக
            அடக்கியிருக்கும்   அதிகாரம்   பொருள   திகாரம்
செறிவான   மனிதவாழ்வின்   பரிமா   ணத்தைச்
            செம்படமாய்க்   காட்டுகின்ற   நல்ல  திகாரம்
அறிவார்ந்த   தமிழர்தம்   வாழ்க்கை   முறையை
            அருந்தமிழர்   மரபுகளை   ஒழுக்கம்  பண்பை
நெறிகளினை   இயற்கையொடு   இயந்த  வாழ்வை
            நேராகக்    காட்டுகின்ற   சிறப்ப  திகாரம் !
எழுத்திற்கும்    சொல்லிற்கும்   நெறிவ   குத்தே
எழுதுகின்ற   உலகத்து   மொழிக   ளுக்குள்
எழுத்திற்குள்   அடங்காத   உணர்வை;  காதல்
எழுப்புகின்ற   மெய்ப்பாட்டை   இல்ல   றத்தை
தழுவுகின்ற   கூடலினை   ஊடல்   தன்னை
தாய்செவிலி   பாங்கிபாங்கன்    வாயில்   கூற்றை
வழுவாத   மறத்தைவாழ்வின்     பொருளைக்   கூறும்
வண்டமிழின்  நூலிந்த   காப்பி  யர்நூல் !
நிலம்ஐந்தாய்   பகுத்ததனைத்   திணைக   ளாக்கி
நிகழ்கின்ற   நிகழ்வுகளைத்   துறைக   ளாக்கிப்
புலப்பண்பைக்    கருஉரியாய்   அகத்தில்   வைத்தும்
புகழ்வீரம்   புறமாக்கிப்   பத்துப்   பாட்டாய்
நிலவிடும்எட்   டுத்தொகையாய்க்   கீழ்க்க  ணக்காய்
நின்றபெரும்    காப்பியமாய்    தொன்னூற்   றாறாய்ப்
பலப்பலவாய்   வாழ்வியலை   எதிரொ   லிக்கப்
பாதையினை   வகுத்தளித்த   நூல்தாம்   இந்நூல் !  (5)
போர்க்களத்தில்    அறம்பார்த்தும்   விழுப்புண்   மார்பைப்
பொருதுபெறப்   போட்டியிட்டும்   பிறர்இல்   நோக்கா
பேர்ஆண்மைக்    காளையரைக்   களவில்   பார்த்தும்
பெருங்காளை   அடக்கிவரக்   கற்பில்   சேர்ந்தும்
பார்சுற்றிக்    கடல்கடந்து    பொருளை    ஈட்டிப்
பகிர்ந்தளித்தும்   சாதியற்ற   சமத்து   வத்தில்
ஊர்இணைந்தும்    வாழ்ந்திருந்த  வாழ்க்கை   தன்னை
உலகிற்கே   காட்டும்நூல்   காப்பி  யர்நூல் !
அன்றில்போல்    அன்பிணைந்த   காதற்   பண்பை
அழகான   இல்லறத்தை    மக்கட்   பேற்றை,
துன்பத்தை    இன்முகமாய்    ஏற்கும்   நெஞ்சை
துவளாமல்   வினையாற்றும்   பக்கு   வத்தை
நன்மைதரும்    மக்களாட்சி    மாண்பை,    செங்கோல்
நடத்துகின்ற    அமைச்சர்தம்   மதியை  எல்லாம்
சின்னவடி  நூற்பாக்கள்   வழியே   சொல்லும்
சீர்நூல்தாம்   காப்பியர்தம்   இந்த  நூலாம் !
அறிவியலார்   உயிரினத்தை   நின்று   வாழ்தல்
          அசைந்தசைந்து   சென்றுவாழ்தல்  எனப்பி   ரித்தார்
அறிவார்ந்த   காப்பியரோ   உயிரி   னத்தை
          அறுவகையாய்   உயர்அஃறிணை   எனப்பி  ரித்தார்
விரிவாக   அவருரைத்த   உயிரின   வகையை
          வியந்தின்றும்   அறிவியலார்   போற்று   கின்றார்
அரிதாகக்   கிடைத்தயிந்த   நூலைப்   போன்று
          அகிலத்தில்   வேறெந்த   மொழியிலு   மில்லை !
ஓரறிவு   ஈரறிவு   மூவறி  வென்றே
            ஒன்றுமுதல்   ஆறறிவாய்   உயிரி  னத்தை
தேரறிவு   காப்பியர்தாம்   வகைப்ப   டுத்தித்
            தெளிவாக   உயிரினத்தின்   பெயரும்   சொல்லி
பேரறிவு   அறிவியலில்   கொண்ட  வர்தாம்
            பெருந்தமிழர்   என்பதற்குச்   சான்றாய்  இங்கே
ஊரறிய   உலகறிய  திகழு   மிந்த
            உயர்தொல்காப்   பியத்திற்கே   ஈடு   முண்டோ !  (6)
சார்லசொடு தார்வினும்   இன்று   ரைத்த
            சரியான   பரிணாமக்   கொள்கை   தன்னைப்
பார்வியக்கப்   படிப்படியாய்க்   காப்பி  யர்தாம்
            பட்டியலாய்   அன்றுரைத்த   பாங்கைக்   கண்டு
தேர்ந்திட்ட   உயிரியலின்   அறிஞ  ராகத்
            திகழ்ந்திருந்தார்  ஐயாயிரம்   ஆண்டு  முன்பே
சீர்தமிழன்   எனஉலகோர்   போற்று    மாறு
            சிறந்திருக்கும்   நூலிற்கே   ஈடு   முண்டோ !
கருத்தடைக்குப்   பலவகையில்   ஆய்வு  செய்து
            கருதங்கா   திருப்பதற்குச்   சாத  னங்கள்
உருவாக்கி   இக்கால   அறிவிய   லாளர்
            உயரறிவால்   தந்ததினைக்   காப்பி   யர்தாம்
திருவாகக்   கற்பியலின்   நூற்பா   தன்னில்
            திருத்தமுற   உடற்கூறின்   வழியில்   சொன்ன
கருத்துதனைப்   படித்தவர்கள்   வியந்து  போகக்
            காட்டாகும்   நூலிற்கே   ஈடு   முண்டோ !
மொழிதனுக்கு   மட்டுமிங்கே   இலக்க  ணத்தை
            மொழிந்திட்ட   நூலன்று !  காப்பி  யம்தாம்
வழிகூறி   வாழ்க்கைக்கு   நெறிவ   குத்து
            வழங்கிட்ட   வாழ்வியலின்  உயர்ந்த  நூலாம்
மொழியியலார்   அளவியலார்  உயிரிய   லாளர்
            மொழியுமுன்னே   நுண்மையாக   மொழிந்த  நூலாம்
அழியாமல்   தமிழ்மொழியைக்   காக்கும்   நூலாம்
            அறிவியலாய்   ஒளிர்கின்ற   அருமை  நூலாம் ! (7)
காப்பியர்தாம்   தம்நூலில்   மொழிப   என்ப
            கற்றுணர்ந்தோர்   என்மனார்  புலவ  ரென்றே
கூப்பிட்டே   அறிவியலில்   முன்னோர்   பெற்ற
            கூரறிவை   கண்முன்னே   காட்டு   கின்றார்
கோப்புகளில்   எழுதிவைத்த   கருத்தைக்   கூட
            கொள்ளாமல்   அறிவிலியாய்   உள்ளோ   மின்று
காப்பாகக்   காப்பியரை   ஏற்கா   விட்டால்
            காப்பின்றி   மொழிஇனமும்   மாயும்   நாளை !
ஆங்கிலத்தில்   மட்டுமிங்கே  அறி வியலை
            அறிவதற்கும்   கற்பதற்கும்   முடியு   மென்று
பாங்காக   உரைத்துத்தமிழ்   மொழியில்   ஏதும்
            படிப்பதற்கே   இல்லையென்று  பகரு  வோரே
பூங்காபோல்   தொல்காப்பி  யத்துள்  நன்றாய்
            பூத்துள்ள   அறிவியலின்  பூக்கள்   காணீர்
தீங்கான   கருத்தைவிட்டே   தமிழில்  கல்வி
            தித்திக்க   தித்திக்க  கற்க  வாரீர் ! (8)
  • பாவலர் கருமலைத்தமிழாழன்
  • தொல்காப்பியர் கவியரங்கம்-கருமலைத்தமிழாழன் : tholkappiyar_kaviyaranagam_karumalai01

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்