மெய்யறம்
மாணவரியல்
18. புறஞ்சொல்லல் விலக்கல்
- புறஞ்சொலல் பிறரைப் புறத்திழித் துரைத்தல்.
புறஞ்சொல்லல் என்பது ஒருவரை அவர் இல்லாதபோது இழிவாகப் பேசுதல் ஆகும்.
- அறங்கொலு மறத்திற் புறஞ்சொலல் கொடிது.
புறஞ்சொல்லல் அறத்தைக் கொல்லும் தீய செயல்களில் மிகக் கொடியது ஆகும்.
- புறஞ்சொலல் பொய்முதற் புரையெலாம் வளர்க்கும்.
புறஞ்சொல்லல் பொய் முதலான குற்றங்களை வளர்க்கும் தன்மை உடையது.
- புறஞ்சொலல் புறனெலாம் பொருபகை யாக்கும்.
புறஞ்சொல்லல் ஒருவனுக்கு விரோதிகள் ஏற்படக் காரணமாக அமையும்.
- புன்மகார் செயல்களுட் புறஞ்சொல லொன்று.
புறஞ்சொல்லல் கீழ்மக்களின் குணங்களுள் ஒன்று ஆகும்.
- புறஞ்சொலு நாவின ரறஞ்சொலல் வஞ்சம்.
புறஞ்சொல்லுபவர்கள் அறத்தினைப் பேசுவது ஏமாற்று வேலை ஆகும்.
- புறஞ்சொலு நாவினர்க் கறஞ்சொலன் மடமை.
புறஞ்சொல்லும் இயல்பு உடையவர்களுக்கு அறத்தினைப்பற்றி எடுத்துக்கூறுவது அறிவற்ற செயல் ஆகும்.
- புறஞ்சொலல் கேட்டலும் புன்மையென் றறிக.
புறஞ்சொல்லலைக் காதால் கேட்பதும் இழிவான செயல் ஆகும்.
- புறஞ்சொலி வாழ்தலிற் பொன்றனன் றென்ப.
புறம் பேசி உயிர் வாழ்வதைவிட இறத்தல் சிறந்தது ஆகும்.
- ஆதலாற் புறஞ்சொல லடியொடு விடுக.
புறஞ்சொல்லலை முற்றிலுமாக விட்டுவிடுதல் வேண்டும்.
வ.உ.சிதம்பரனார்
Comments
Post a Comment