Skip to main content

தீவாக்கிய அலைபேசி – கருமலைத்தமிழாழன்





தலைப்பு-அலைபேசி,தமிழாழன் : thalaippu_theevaakkiya_alaipesi_thamizhaazhan

தீவாக்கிய   அலைபேசி

செல்லிடக்கை    அலைபேசி    என்றே    இன்று
செப்புகின்ற   அறிவியலின்    பேசி   யாலே
இல்லத்தில்    இருந்தபடி     உலகில்    எங்கோ
இருப்பவரைத்   தொடர்புகொண்டு    பேசு   கின்றோம்
செல்கின்ற     இடத்திருந்தே    வீட்டா    ரோடு
செய்திகளைப்    பரிமாறி    மகிழு    கின்றோம்
எல்லைகளை    நாடுகளைக்    கடந்தி   ருந்தும்
எதிர்நின்று   பேசுதல்போல்   பேசு   கின்றோம் !
எழுத்தாலே    அனுப்பிவைத்த    செய்தி   தம்மை
ஏற்றவகை    படங்களொடு    அனுப்ப   லானோம்
கழுத்துவலி   எடுக்கமேசை    முன்ன   மர்ந்து
கணிணியிலே    செய்கின்ற   பணியை  யெல்லாம்
அழுத்திவிரல்    படுத்தபடி   சாய்ந்த   மர்ந்தும்
அடுத்தஊர்க்குச்   செலும்போதும்   செய்ய   லானோம்
பழுதின்றி   முகநூலைக்   கூடக்   கையுள்
படமாகக்   காண்கின்ற   வசதி   பெற்றோம் !
கற்பனைக்கும்    எட்டாத   அற்பு   தங்கள்
கரத்திருக்கும்   பேசியிலே   செய்யும்   நாமோ
நற்காலம்   காட்டுகின்ற   கடிகா   ரத்தை
நாள்காட்டி   கணக்கியினைத்   துறந்து  விட்டோம்
பற்றியெங்கும்    எடுத்துச்சென்று   செய்தி   யோடு
பாடல்கேட்ட   வானொலியைத்   தொலைத்து  விட்டோம்
நற்றமிழில்   நலம்கேட்டு   எழுதி   வந்த
நற்கடிதப்   பழக்கத்தை   விட்டு  விட்டோம் !
பக்கத்தில்   பெற்றோர்கள்   அமர்ந்தி   ருக்கப்
பக்கத்தில்   உடன்பிறந்தோர்   அமர்ந்தி   ருக்கப்
பக்கத்தில்   சுற்றத்தார்   அமர்ந்தி   ருக்கப்
பக்கத்தில்   நின்றிருந்தும்   வாயால்   பேசித்
துக்கத்தை   இன்பத்தைப்   பகிர்ந்தி   டாமல்
தூரத்தே   யாரிடத்தோ   பேசிப்  பேசித்
திக்கில்லா   தீவினிலே    இருத்தல்   போன்று
திரிகின்றோம்   காதினிலே   பேசி   வைத்தே !
karumalai_thamizhaazhan
பாவலர் கருமலைத்தமிழாழன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்