வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.18 : புறஞ்சொல்லல் விலக்கல்
அகரமுதல 144, ஆடி 0 9 , 2047 / சூலை 24 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 24 சூலை 2016 கருத்திற்காக.. (வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.17. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 18. புறஞ்சொல்லல் விலக்கல் புறஞ்சொலல் பிறரைப் புறத்திழித் துரைத்தல். புறஞ்சொல்லல் என்பது ஒருவரை அவர் இல்லாதபோது இழிவாகப் பேசுதல் ஆகும். அறங்கொலு மறத்திற் புறஞ்சொலல் கொடிது. புறஞ்சொல்லல் அறத்தைக் கொல்லும் தீய செயல்களில் மிகக் கொடியது ஆகும். புறஞ்சொலல் பொய்முதற் புரையெலாம் வளர்க்கும். புறஞ்சொல்லல் பொய் முதலான குற்றங்களை வளர்க்கும் தன்மை உடையது. புறஞ்சொலல் புறனெலாம் பொருபகை யாக்கும். புறஞ்சொல்லல் ஒருவனுக்கு விரோதிகள் ஏற்படக் காரணமாக அமையும். புன்மகார் செயல்களுட் புறஞ்சொல லொன்று. புறஞ்சொல்லல் கீழ்மக்களின் குணங்களுள் ஒன்று ஆகும். புறஞ்சொலு நாவின ரறஞ்சொலல் வஞ்சம். புறஞ்சொல்லுபவர்கள் அறத்தினைப் பேசுவது ஏமாற்று வேலை ஆகும். புறஞ்சொலு நாவினர்க் கறஞ்சொலன் மடமை. புறஞ்சொல்லும் இயல்பு உடையவர்களுக்கு அறத்தினைப்பற்றி எட...